இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 டிசம்பர், 2014

போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த இலங்கையை..!

போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த இலங்கையை.............!

போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த இலங்கையை, டச்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கண்டி அரசனுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து, பிறகு அவனை ஏமாற்றி விட்டனர்.

டச்சுக்காரர்கள் வருகை

கி.பி. 1595-ம் ஆண்டு முதல், டச்சுக்காரர்கள் கீழ்த்திசை நாடுகளில் வணிகம் செய்யும் நோக்கத்தோடு கப்பல்களில் பயணம் செய்தனர். (இங்கிலாந்து நாட்டுக்கு கிழக்கே, யேர்மனிக்கு மேற்கே உள்ளது நெதர்லாந்து. இது, கொ(ஹா)லந்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். டச்சு மொழி பேசுவதால், டச்சுக்காரர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் "ஒல்லாந்தர்'' என்று குறிப்பிடுகிறார்கள்).

1602-ம் ஆண்டு, டச்சுக் கப்பல் ஒன்று மட்டக்களப்புக்கு வந்தது. அதில் இருந்த டச்சு வியாபாரிகள், கண்டி அரசனை சந்தித்து அந்தப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி கோரினர்.

கண்டி அரசனுக்கு போர்ச்சுக்கீசியர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. டச்சுக்காரர்களின் உதவியைப் பெற்று, போர்ச்சுக்கீசியர்களை விரட்டலாம் என்று கண்டி மன்னன் எண்ணினான்.

ஒப்பந்தம்

டச்சுக்காரர்களின் கோரிக்கைக்கு கண்டி அரசன் இணங்கி, அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ஒப்பந்தம் கி.பி. 1638-ம் ஆண்டில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, இருவரும் சேர்ந்து போர்ச்சுக்கீசியரை எதிர்த்தனர். அவர்களிடம் இருந்த பல பகுதிகளை மீட்டனர்.

அப்படி மீட்ட பகுதிகளை டச்சுக்காரர்கள் கண்டி அரசனிடம் கொடுக்காமல் அவனை ஏமாற்றி, தங்கள் வசம் வைத்துக் கொண்டனர் . போர்ச்சுக்கீசியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பல்வேறு இடங்களில் போர் நடந்தது.

அதில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்று, இலங்கை முழுவதையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீசியர் இலங்கையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.இலங்கையின் பொருளாதாரம் முழுவதும் டச்சுக்காரர்களின் கைக்கு வந்தது. காப்பித் தோட்டங்களை பெரும் அளவில் ஏற்படுத்தினர்.உற்பத்தியாகும் பொருள்களில் பெரும்பாலானவற்றை அவர்களே எடுத்துக் கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்

தொன்று தொட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது. டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது, அந்த வியாபாரம் குறைந்து போயிற்று. இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய, முதன் முதலாக 10 ஆயிரம் இந்தியர்களை இலங்கைக்கு டச்சுக்காரர்கள் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

தமிழர்களின் நாடு

டச்சுக்காரர்கள் அரசாண்டபோது, இலங்கைக்கு வந்திருந்த அடிரியன் ரேலண்ட் என்ற ஆராய்ச்சியாளர், தமிழ், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளை அறிந்தவர். அவர் எழுதிய குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:-

"இத்தீவை விட்டுப் போவதற்கு முன் தமிழர் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் சிறிது கூறவேண்டும்.இந்தத் தீவின் பெரும் பகுதியில் தமிழர்கள் வாழுகிறார்கள். இந்தப் பகுதி கைலாய வன்னியன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்படுகிறது.

இங்கு வாழும் மக்கள், சிங்களரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல. டச்சுக்காரர்களின் ஆட்சிக்கும் உட்பட்டவர்கள் அல்ல.கரை ஓரமாக உள்ள நிலம் அனைத்தும், இந்த மன்னனுக்கே உரித்தானது. கரை ஓரங்களில் வாழும் மக்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள்.

நீர்கொழும்பு பகுதிக்கு தெற்கே, தெய்வேந்திர முனைவரையுள்ள பகுதிகளில் சிங்கள மொழி பேசப்படுகிறது.'' இவ்வாறு அடிரியன் ரேலண்ட் கூறியுள்ளார்.

டச்சு ஆட்சியின்போது இலங்கை வந்த மற்றொரு ஆராய்ச்சியாளர் கிறிஸ்தோபர் சுவைட்சர். இவருடைய குறிப்புகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"மட்டக்களப்பு, காலி, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு, கற்பிட்டி, நீர்கொழும்பு முதலான பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
வன்னி நாட்டில் உள்ள தமிழர்கள், சுதந்திரமாக ஆட்சி நடத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் உள்ளனர்.''

இவ்வாறு சுவைட்சர் கூறியுள்ளார்.

வெள்ளையர் வருகை

"வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு'' என்பது போல, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளைக்காரர்கள் (இங்கிலாந்து) இலங்கைக்கு 1795-ம் ஆண்டு மத்தியில் வந்து சேர்ந்தார்கள்.

"கிழக்கு இந்திய கம்பெனி'' என்ற பெயரில், வியாபாரம் செய்ய இந்தியாவுக்கு வந்த வெள்ளையர்கள், பற்பல சூழ்ச்சிகள் செய்து, ராசதந்திரங்களைக் கையாண்டு ஆட்சியைப் பிடித்ததுபோல, இலங்கையிலும் வியாபாரம் செய்யவே முதலில் வந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில் டச்சுக்காரர்கள் போதிய பலத்துடன் இல்லை. வெள்ளையர்களிடம் பலம் வாய்ந்த ராணுவம் இருந்தது. எனவே, டச்சுக்காரர்களிடம் இருந்த பகுதிகளை அவர்கள் எளிதாக கைப்பற்றிக் கொண்டனர்.1798-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பு நகரை வெள்ளையர் கைப்பற்றியதுடன், இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
___________________________________

யாழறிவன்... Yalarivan Jacksan

10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம்..!

10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம்..............!

தமிழன் வாழ்விடங்களும் அழிவுகளின் தொடரும் கல்வெட்டு பதிகமும் ....

"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

கி பி 1478 சுபதிருஷ்டிமுனிவர்
(திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டு)

ஈழத்தின் தலைநகரம் மிகத் தொன்மையான திருக்கோணேசு(ஸ்)வரர் ஆலயம். இராவணன் காலத்துக்கு முன் சிவன் ஆதிசேடன் போர்களத்தின் களத்தில் ஏறக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம் . எழு பெருவள நாடுகளில் குமரி மலை முகட்டின் கிழக்கு எல்லையில் இந்த ஆலயம் அமைக்க பட்டு, தென் கயிலை என்று பெயர் பெற்றது .

பூமி சரிகின்றது என்று சிவன் அகத்தியரை அனுப்பி மிதிக்கச் சொன்னதாக புராணம் கூறும் மலை இந்த கோணேசுவரம். அங்கு உள்ள மலையில் கால் அடையாளம் போன்ற தடம் உள்ளது அதுவே அகத்தியர் கால் அடையாளம் என்று சொல்ல படுகின்றது..

மனுநிதி சோழன் புருசோத்தம முதலாம் குளக்கோட்டன் கி மு 200 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய தளம் . சிறப்பாக 5 கால பூசைகள் நடக்க கந்தளாய் குளத்தை நிறுவி, விவசாய வளம் பெருக்கி அவ்விவசாய நிலங்களை பராமரிக்கும் வகையில் சின்ன கோணேசுவரம், தம்பலகாமம் என்று ஒரு ஊரை நிறுவி தஞ்சையின் நகை பட்டின மக்களை குடியேற்றினார்.

அம்மக்கள் வணிகம் விவசாயம் என்று சிறப்பாக இங்கு வாழ்ந்தார்கள் . சிறப்பாக வாழ்ந்து திருகோணமலையின் சிறப்பை தமிழ்நாடு எங்கும் பரவச் செய்தார்கள் . கடல் தாண்டிய பயணம் என்பதால் ஒரு சிலரே துணிந்து தென்கயிலை நோக்கி வந்தார்கள் . அப்பரும் ஞானசம்பந்தரும் தமக்கு அந்த பாக்கியம் இல்லாதபோதும், இத்தளத்தின் மீது 7ம் நூற்றாண்டில் பதிகங்களைப் பாடி உள்ளார்கள்.

அதன் பின் இரண்டாம் குளக்கோட்டன் 1050 இல் இக்கோயிலை இன்னும் சிறப்பாகப் புனரமைத்து சிறப்பாக ஆக்கினான் . அதன் பின் பாண்டிய மன்னரக இருந்த குலசேகர பாண்டியன் மீண்டும் தனது திருப்பணிகளை செய்து மீன் பதித்த சிற்பங்களை கோயில் தூண்களில் செதுக்கி வைத்தான்.

அந்த மாபெரும் ஆலயத்தை 1500 இல் வந்த ஐரோப்பியர் இடித்து கற்களைப் பெயர்த்து திருகோணமலை கோட்டையைக் கட்டினர். கட்டியபோது கோட்டை வாசலில் நிறுவிய கல்லில் இரட்டை மீன் சின்னமும் கல்வெட்டின் ஒரு பகுதியும் உள்ளது. அதை இன்று சிங்களவர் மை பூசி அழித்து விட துடிக்கின்றனர்.

கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிசு(ஸ்)கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகண் என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். அவன் தஞ்சை மதுரை வழி வந்த குலசேகர பாண்டியனின் பேரன் . கண்டியை கடிசியாக ஆண்ட விக்கிரமா ராசசிங்கன் கண்ணுசாமியின் பூட்டன் தமிழன் .

போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். அக்காலத்தில் வளவ கங்கை வழியாக சென்று மலைக்காடுகளில் பெருமளவு வைரங்களை ஐரோப்பியர்கள் எடுத்து செல்லலாயினர். ஐரோப்பியர்கள் துருக்கி வழியாகவே இலங்கையை அடைந்தார்கள், அவ்வழியாக செல்லும் காலங்களில் துருக்கியின் கொள்ளையர்கள், ஐரோப்பியர்களிடம் இருந்து வைரங்களை திருடுவது வாடிக்கையாக இருந்ததது. எனவே ஐரோப்பியர்கள் பெரும் படைகளுடன் நகரவேண்டிய நிர்பந்தங்களுக்குள் தள்ளப்பட்டு, அதுவே பேராசையாக மாறி இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எண்ணத்தை அவர்களுக்குள் வலுவாகியது.

தர்மபராக்கிரமவாகண் ஐரோப்பியரின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு ஐரோப்பியர்களை தமது நண்பர்கள் என்று கருதி நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் அக்கறை கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றான் .

ஐரோப்பியர்களை தொடர்ந்த துருக்கிய கொள்ளைக்காரபடை ஒன்று அப்போது தெற்கு துறைமுகம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தர்மபராக்கிரமவாகண் படைகளிடம் தோற்றுப் போனது. அதற்க்கு ஐரோப்பியர்கள் பெரிதும் உதவினார்கள் என்றதால் அவர்களுக்கு தமது நாட்டில் வணிகம் செய்யும் உரிமைகளை வழங்கினான் . ஆனால் அவர்கள் செயல் திருப்தி இல்லாமையால் அவர்களை தனது பகுதிகளில் இருந்து வெளியேற்றினான் .

ஐரோப்பியர்கள் அன்று சிங்கள மன்னராக இருந்த மயாதுன்ன என்பவனிடம் நட்பைப் பேணி இருந்தார்கள். அதன் பலனாக சிலாபம் துறைமுக நிர்வாகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்புகளில் ஒரு பகுதியை சிங்கள மன்ன ன் ஒப்படைத்தான் . பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை துருக்கியர்கள் படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய சிலாபம் துறை தளங்களை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர். இவாறான படை எடுப்புகள் அடிக்கடி நிகழ பறங்கியர் தமது படை பலத்தை பெருக்கி இலங்கையின் சிங்கள நிர்வாகத்தை மெதுவாக கைப்பற்றினர்.

பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் இன்னுமொரு இராட்சியத்தின் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீசுத்(ஸ்)தவனாக்கி மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர். தம் எண்ணம் போல புவனேகபாகுவின் மகனை, தர்மபாலாவைக் கிறீசுத்தவனாக்கினர்.

அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீசுத்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர். முழுமையாக கைப்பற்ற பட்ட சிங்கள இராட்சியத்தில் இருந்து அடிபணிய மறுத்த தமிழர் இராச்சியங்கள் மீது பல படை எடுப்புகளை செய்து படிப்படியாக இலங்கை தீவின் தெற்கு தமிழர் தாயகங்களை கைப்பற்றினார்கள்.

இலங்கையின் மிக புராதன ஈசு(ஸ்)வரங்கள் எல்லாம் இடிக்க பட்டு கோட்டை களாக கட்டி எழுப்பபட்டன . இவ்வாறு கட்டப்பட்ட கோட்டைகள் திருகோணமலை , பூநகர் , யாழ்ப்பாணம் , கீர்மலை , முநேவரம் , தள்ளாடி , கோட்டை காலாறு , என்று பலவும் புரதான வழிபட்டு தளங்களின் இடுபாடுகளின் எச்சமாக இன்றும் இருகின்றன .

தமிழரின் யாழ்ப்பாண இராச்சியம் அன்று கனக சூரிய சிங்கையாரியான் ஆட்சியில் சிறப்பாக இருந்தது . அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராச சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான்.

நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராசசேகரன். இவன் மாமன்னன புருசோத்தமன் வாரிசாவான் . இவனை புருசோத்தமன் என்றும் சொல்வதுண்டு . போர் திறனும் கலைத்திறனும் கொண்ட சிங்கைப் பரராசசேகரன் பல குறு நில மன்னர்களின் படை எடுப்புக்களை அங்காங்கே சந்தித்து அவர்கள் பல அழிவுகளை செய்த போதும்,அழிவிலிருந்த ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு.

சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.

ஒரு இக்கட்டான கால சூழலில் பரங்கியர்கள் ஆக்கிரமிப்பும், சிங்களவரின் முறை அற்ற செயலும் தன் நாட்டையும் தாய் தமிழகத்தையும் பாதிக்கப் போகின்றது என்று பரராசசேகர மன்னன் பெரும் கவலை உற்றிருந்தான். தனக்கு பின் இந்த நாடு என்ன ஆகுமோ என்னும் கவலை அவனை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.

பரராசசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராசசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருட்(ஷ்)டிமுனிவர் என்பார் தமிழகத்தில் இருந்து அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்

"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் "
என வினவினான்.

புருசோத்தம நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியன் நாட்டுக்காக போராடி முடியாது.

பறங்கியர் கையிற் நாட்டை இழந்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர்.

அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு இனி ஒரு காலத்தில் மீள்வதாயின் உன் வாரிசுகள் மீண்டும் போராடியே பெறவேண்டும் என்றார்.

இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி

"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

இப்பாடலில் "புகைக்கண்ணர் போய்மாற மானே வடுகாய் விடும்".

இதுவே இன்று நடகின்றது...

புகைக்கண் அங்கிலேயர் 1947 போய் மாற மானே வடுகாய் விடும் ... இங்கு மானே வடுகாய் விடும் என்றால் என்ன..?! இங்கு பல குழப்பம உள்ளது. மானே வடு காய் விடும் ... மான் என்றால் இளமையான இனம் வடு என்றால் பிஞ்சு காயம். வடுகாய் காயங்கள் பட்டு ஆறும் காலம் தனில் விடும் தேர்ந்து விடும் ... என்று பல் பொருள் உண்டு .

ஆக பொன்னிறத்து மேனி கொண்ட பல் கண் அமைப்பை கொண்ட ஐரோப்பியர்கள் வந்து ஆண்டதன் பின்பு அவர்களின் பின் இளம் பிள்ளைகள் காயப்பட்டு வேதனைப் படுவார்கள் . அவர்கள் காயம் ஆறும் களத்தில் மீண்டும் காய்க்கும் பூக்கும் மாம் பிஞ்சுகள் விடும் ... உன் சந்ததிக்கு இந்த நாடு அந்த பொன்னிறத்து மேனி காரர் அவர்கள் போனாலும் உடனடியாக கிடைக்காது மாவடு போல பிஞ்சு விட்டு வரும் குழந்தைகளா காயப்பட்டு ஆறும் காலம் வரும் அப்போதுதான் உன் வாரிசுகளுக்கு உன் நாடு மீண்டும் கிடக்கும் ..!

இன்று மாணவர்கள், இளம் பிள்ளைகள் நடத்தும் இப்போராட்டமே தமிழனை மீண்டும் ஆட்சியில் ஏற்றும் என்கின்றது திருகோணமலைக் கல்வெட்டு .... என் பாட்டன் எழுதிய திருக்குறள் என்றும் காலத்துக்கு ஏற்புடைய நூலாக இருப்பது போல திருக்கோணமலைக் கல்வெட்டும் இருக்குமோ..?! பொறுத்து இருந்து பார்போம் ..!
___________________________________

யாழறிவன்... Yalarivan Jacksan

சனி, 8 நவம்பர், 2014

இலங்கை தமிழர் சிங்களவர்களின் “ப்ளாஷ்பேக்”

இலங்கை தமிழர் சிங்களவர்களின் “ப்ளாஷ்பேக்”

(((நான் இந்த பதிவு  எழுத முன்பு மகாவம்சம் சுருக்கம் (334 பக்கம்) படித்தேன்.
அதன்பிறகுதான் இது எழுவதற்கான எண்ணம் வந்தது. இதில் கூறப்பட்டவை மகாவம்சத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தவை))))
பிழைகள் இருந்தால் கட்டாயம் பின்னூட்டல் இடவும்.

இலங்கையில் என்னதான் பிரச்சனை? இரண்டு இனங்களுக்கு இடையில் ஆதிகார பிரச்சனை  இதில் மதங்களும் சம்பந்தபட்டுகொள்ளும்.
இனம் என்றால் என்ன ?ஒரு மொழி காலச்சாரத்தை கொண்ட மக்கள்.இலங்கையில் பிரச்சனைக்குரிய இரண்டு இனங்கள் தமிழர் சிங்களவர். சரி வாங்க இவங்கட ப்ளாஷ்பேக்க கொஞ்சம் சுருக்கமாக பார்போம் .. 
.இலங்கையில் ஆதிகுடிகள் இயக்கர் நாகர்(திராவிடர் ) இதை சொல்லுவது மகாவம்சம். அதன் பிறகு வடஇந்தியாவில் இருந்து தனது 700 நண்பர்களுடன் விஜயன் வருகை, அதன் பிறகுதான்  இலங்கையில் இன்னுமொரு புதிய இனம் உருவாக அத்திவாரம் இடப்படுகிறது .அதாவது குவேனி என்ற  பெண்ணை திராவிட(தமிழ்குடி) பெண்னை விஜயன் திருமணம் செய்வதன்  மூலம் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன.ஆனாலும் விஜயன் மறுபடியும் மதுரை பகுதியை ஆண்ட பாண்டு என்ற மன்னனின் மகளை திருமணம் செய்கிறான் அது மட்டும் இல்லாமல் தனது 700 நண்பர்களுக்கும் மதுரை பெண்களை திருமணம் செய்து வைக்கிறான்.
குவேனி விஜயனால் துரத்தபட்டு தனது இரு பிள்ளைகளோடு (ஆண்,பெண்) வாழ்கிறாள். குவேனி திராவிடர்களால் கொல்லப்படுகிறாள்.அதன் பிறகு விஜயனுடைய பிள்ளைகள் தங்களை தங்களே திருமணம் செய்து கொண்டு மலையா (malaya)(விஜயனின் சந்ததி) என்ற இனம் உருவாகிறது.
அதன் பிறகு மதுரை இளவரசிக்கும் விஜயனுக்கும் பிறந்த குழந்தைகள் மூலம் புலிந்தா (Pulinda) என்ற இனம் உருவாகிறது. அது மட்டும் அல்ல விஜனால் தனது மாமா மூலம் (மதுரை ராஜா) கலை குடும்பத்தினர் பிராமணர்கள் இலங்கைக்கு வருகின்றனர்.
இவை அனைத்தும் நடந்தாலும் இயக்கரும் நாகரும்(தமிழ் குடிகள்) இலங்கையில் வடகிழக்கு பகுதியை தங்கள் ஆட்சி செய்கின்றனர்.

ஆனால் இலங்கை பூராகவும் காலாச்சாரம் ஒன்றாக காணப்பட்டது
(இந்து).இதற்க்கு காரணம் இந்திய ஆதிக்கம்.
கிட்டதட்ட கி.பி நான்காம் நுற்றாண்டு தொடக்க காலப்பகுதி  விஜயனின் சந்ததிகள்(ஆரிய திராவிட கலப்பு ) மற்றும் மதுரை வம்சத்தினர்கள்,பிராமணர்கள் என்பவர்கள் மூலம் ஒரு புதிய இனம் உருவாகிறது.

மலையா இனம்+புலித்தா இனம்+பிராமணர்கள்+மதுரை வம்சத்தினர்

= சிங்களவர் என்ற இனம் உருவாக அடிப்படையான இனம்
 
ஆரிய திராவிடம் கலந்த இனம்தான் சிங்களஇனம். ஆனாலும் இம்மக்கள் தமிழ்,பாளி மொழிகளைதான் பேசி இருக்க வேண்டும்.ஏன் என்றால் அந்த இன மக்களின் தாய்மார்கள் தமிழர்கள்! தந்தையர் ஆரியர்.
அதன் பிறகு பௌத்த மதம் இலங்கை தீவுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பௌத்தம் இனம் (திராவிடர்,ஆரியர்)  பாராமல் பரவுகிறது.
இப்போதுதான் சிங்கள மொழிக்கு அடித்தளம் இடப்படுகிறது. இலங்கை தீவில் உள்ள பௌத்த மதத்தவர்களுக்கு பொதுவான மொழி ஒன்று தேவைபடுகிறது.ஏன் என்றால் தமிழ் பாளி சமஸ்கிதம் ஆகிய மொழிகளை கொண்டவர்கள் கானபடுவதால் மொழி பிரச்சனை ஏற்படுகிறது. அப்பொழுதான் சிங்களம் என்ற மொழி தமிழ் பாளி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கொண்டு உருவாக்கபடுகிறது.
*பழைய சிங்களம் -கி.பி 7 - 12ம்நூற்றாண்டு வரை காலப்பகுதியிலும்
புதிய சிங்களம் 12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை வரையிலும் உருவாக்கப்பட்டன.
தற்போதைய சிங்களமொழி உருவாக காரணமாக அமைந்த மொழிகள்  தமிழ்,வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம்,டச்,ஆங்கிலம்,அது மட்டும் அல்ல இந்திய மொழிகள் அனைத்தும் சிங்களத்தில் உள்ளன.
இப்பொழுது ஒரு தீவில் இரண்டு மொழிகள்......இரு இனம்.....
இரண்டு இனத்திற்கும் தென்இந்திய தொடர்புகள்.. திருமணங்கள், படையெடுப்புகள் ,ஆக்கிரமிப்பு,...என்பவை போர்த்துகீசியர் வருகை மட்டும் இடம் பெறுகிறது..பிறகு ஒல்லாந்தர், பிறகு ....பிரித்தானியர் எல்லோரையும் ஒன்றாக்கி “பிரிடிஷ் சிலோன் மக்கள்” ஆக்கினான்!
அதுக்கு பிறகு நமக்கு நாமே வைச்சிகிட்டம் ஆப்பு!
நாங்க ஒண்டா இருக்கிறம் சாமி எண்டு சொல்லி அவனிட்ட நாட்ட வாங்கி...... இண்டைக்கு வரைக்கும் மல்லுக்கட்ட வேண்டிஇருக்கு.....

(((நான் இந்த பதிவு  எழுத முன்பு மகாவம்சம் சுருக்கம் (334 பக்கம்) படித்தேன்.
அதன்பிறகுதான் இது எழுவதற்கான எண்ணம் வந்தது. இதில் கூறப்பட்டவை மகாவம்சத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தவை))))
பிழைகள் இருந்தால் கட்டாயம் பின்னூட்டல் இடவும்

யாழறிவன்... Yalarivan Jackson