யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 டிசம்பர், 2014

யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது

யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது

பூனை புலியினத்தைச் சேர்ந்ததே என்றாலும் பூனைக்கும் புலிக்கும் எத்துணை வேறுபாடுள்ளது! நெல் என்பது ஒரு வகையான புல் என்று கூறினால் அற்பமான புல்லுக்கும், உயிர்காக்கும் நெல்லுக்கும் எத்துணை வேறுபாடு! "உருவுகண்டு எள்ளாமை வேண்டும்" என்றார் வள்ளுவர்.

ஒரு மொழியின் வளர்ச்சியில் பண்டு வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருந்த சொற்கள் காலப்போக்கில் ஒரே வடிவத்தை ஏற்றுக்கொள்ளுதல் உண்டு. எடுத்துக்காட்டாக "அத்தம்" என்ற சொல் சங்க காலத்தில் "வழி" என்ற பொருளைப் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வடசொற்கள் வடவெழுத்து ஒரீஇத் தமிழில் அளவின்றிப் புகுந்தபோது ஹஸ்தம் (கை), அர்த்த (பாதி), அருத்தம் (பொருள்) என்ற மூன்று வடசொற்கள் தமிழில் "அத்தம்" என்ற ஒரே வடிவத்தைப் பெற்றுவிட்டன. நான்கு வெவ்வேறு பொருட்களைப் பெற்றுள்ள "அத்தம்" என்பது ஒரு சொல்லா? பல பொருள் ஒரு சொல்லா? எனில் நான்கு சொற்களின் திருந்திய வடிவமாதலின் பலபொருள் ஒரு சொல் (Homonym) எனப்படும். அகராதியில் நான்கு வெவ்வேறு சொற்களாக எண்கள் தரப்பட்டு வேர்கள் கூறப்பட்டிருக்கும்.

பிறமொழிச் சொற்கள் கலவாத போதுகூடத் தமிழிலேயே வெவ்வேறு பொருள்களையுடைய சொற்கள் ஒரே வடிவத்தைப் பெற்று விடுதலுமுண்டு. நந்து என்ற சொல் தழைத்தல், அழிவுறல் என்ற முற்றிலும் முரண்பட்ட பொருளைத் தருவது போலவே "படு" என்ற சொல்லும் "தோன்று, அழிவுறு" என்ற இருவேறு பொருள்களைத் தந்து நிற்கின்றது. ஒரு சொல் எப்பொருளில் வழங்கப் பெற்றுள்ளது என்பதை அச்சொல்லைச் சூழ்ந்துள்ள பிறசொற்களின் துணையால் அறிந்து கொள்ளலாம். இதிலிருந்த ஒரு சொல்லின் பொருள் காலத்துக்கேற்பவும், இடத்திற்கேற்பவும் வேறுபடும் என்பது பெறப்படும். சிலபோது உணர்த்துவான் (பேசுவான்) குறிப்பிற்கேற்பவும், உணர்வான் (கேட்போன்) குறப்பிற்கேற்பவும் கூடப்பொருள் மாற்றம் நிகழ்வதுண்டு. எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் எந்தச் சமயத்தில் ஏற்படும் என்று எவரும் எதிர்பார்த்துக் கூற முடியாது. இதனால்தான் மொழியியலில் எழுத்தியல், ஒலியியல் போலப் பொருளியல் ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்றிருக்கவில்லை என்று கூறுவர். ஒரு சொல்லுக்கு எக்காலத்திலும் ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும் என்று கூற முடியாதாகலின் ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருப்பதாகக் கருதமுடியாது. எனினும் காளிதாசர் தம் ரகுவம்சத்தில் கடவுள்வாழ்த்துப் பாடும்போது "சொல்லும் பொருளும் போல இணைபிரியாத மாதொரு பாகனை (அர்த்தநாரீசுவரனை) வணங்குகின்றேன்" என்று கூறியுள்ளார்.

இலங்கையின் ஒரு பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்று கூறுகின்றனர். யாழ்ப்பாணத் தமிழையும், தமிழகத் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போபது பல உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. கடலால் பிரிக்கப்பட்ட பகுதியாதலின் தமிழின் பல தொன்மைக் கூறுகளை யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் காப்பாற்றி வருகிறது. சங்ககாலச் சொற்களில் பல சொற்கள் இன்றும் யாழ்ப்பாணத் தமிழில் உலா வருகின்றன. அவன் இவன் என்ற இரு சொற்களுக்கும் இடைப்பட்ட உவன் என்பது தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் காணப்படுகிறது. அதைப் போலவே சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்ட பொருளைக் குறிக்கும் உது, உவர், உப்பால், உங்கை (உங்கே), உம்பர், உவண், உவள், உதை (அதை), உதுக்கு முதலிய பல சொற்கள் யாழ்பாணத் தமிழில் வழக்கில் உள்ளன. தமிழகத் தமிழில் அவை வழக்கு வீழ்ந்துவிட்டன மேலும் யாழ்த் தமிழில் வழங்கும் பல சொற்கள் அதே வடிவத்தில் தமிழகத் தமிழில் வேறு பொருள்களைப் பெற்று வழங்குகின்றன. இவ்வாறு பல்லாயிரம் சொற்கள் உள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் ஈண்டுக்காண்போம்.

சம்பல் என்பது கொங்குப் பகுதியில் விலை குறைந்தது. விலை மலிவானது என்ற பொருளைத் தரும். துணியின் விலை சம்பலாகி விட்டுது என்றால் விலை குறைந்துவிட்டது என்பது பொருள்.

யாழ்ப்பாணத்தில் சம்பல் என்பது வற மிளகாய்ச் சட்டினியைக் குறிக்கும்.

"நீ அவனோடு கதைக்காதே" என்றால் அவனோடு பேசாதே என்பது யாழ்ப்பாண வழக்கு. தமிழகத்தில் கதைக்காதே என்றால் கதைவிடாதே, பொய்யாகப் புனைந்து கூறாதே என்ற பொருள்தான் உண்டு.

வடிவு என்பது அழகு, நன்கு என்ற பொருளில் யாழில் (யாழ்ப்பாணத்தில் என்பதன் சுருக்கம்) வழங்குகிறது. அவள் வடிவாயிருக்கிறாள் என்றால் அழகாயிருக்கிறாள் என்றும் அதை வடிவாய்ச் செய்கிறான் என்றால் நன்றாகச் செய்கிறான் என்றும் பொருள் தமிழகத்தில் வடிவு என்பது உருவம் என்ற பொருளில் வழங்குகிறது. இலக்கியத்தில் மட்டும் வடிவு என்பது அழகு என்ற பொருளைப் பெற்றிருக்கும்.

யாழில் தாமசிக்கிறான் என்றால் ஓரிடத்தில் குடியிருக்கிறான் என்று பொருள். மலையாளத்திலும் இச்சொல் இப்பொருளில் வழங்குகிறது. தமிழகத்தில் காலந்தாழ்த்துகிறான் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒற்றை மாட்டு வண்டியைத் திருக்கல் வண்டில் என்று கூறுவர். வண்டில் என்பது பழஞ்சொல், தமிழில் வண்டி என்றும் தெலுங்கில் பண்டி என்றும் வழங்கும். தமிழ்நாட்டில் திருக்கல் என்பது குதர்க்கம், பிரச்சனை என்ற பொருளைத்தரும்.

யாழ் நாட்டில் திறப்பு என்பது சாவியைக் குறிக்கும். கொங்கு நாட்டில் சாவியைத் தொறப்புக் குச்சி என்பர். தமிழகத்தில் திறப்பு என்றால் சாவி என்ற பொருள் இல்லை. திறத்தல் என்ற பொருளே உள்ளது. திறப்புவிழா, படத்திறப்பு முதலிய தொடர்களைக் காண்க.

யாழ்ப் பேச்சு வழக்கில் "தீத்து" என்பது ஊட்டு என்று பொருள்படும். "நான் உனக்குச் சாப்பாடு தீத்தப் போறன். சோற்றைக் குழந்தைக்கு தீத்திவிடு" என்று கூறுவர். தமிழகத்தில் தீத்துதல் என்றால் ஒரு பொருளைக் கூர்மையாக்குதல் (தீட்டுதல்) என்று பொருள்படும்.

சாட்டு என்பது சாக்குப் போக்கு என்ற பொருளில் யாழில் வழங்கப்படுகிறது. "எல்லாவற்றிற்கும் விதியைச் சாட்டுச் சொல்லாதீர்கள்" என்பர். தமிழகத்தில் சாட்டு என்பது குற்றஞ்சாட்டு, பூச்சாட்டு (பூச்சாற்று) என்ற பொருளில் வழங்குகிறது.

யாழில் ஆறுதல் என்பது ஓய்வைக் குறிக்கும். "ஆறுதலாய்க் கதைக்கலாம்" என்றால் சாவகாசமாப் பேசிக் கொள்ளலாம் என்று பொருள். தமிழ்நாட்டில் ஆறுதல் என்பது தணிதல் (சினம் ஆறுதல்); தேறுதல் (ஆறுதல் கூறு), சூடு ஆறுதல் முதலிய பொருள்களில் வரும்.

அண்டாது என்ற சொல் யாழில் போதாது, பத்தாது என்ற பொருளில் வழங்குகிறது. "இதுகளுக்கு எப்படிக் குடுத்தாலும் அண்டாது" என்பர். தமிழகத்தில் அண்டாது என்றால் போய் ஒட்டாது என்று பொருள்படும்.

யாழில் அப்பு என்றால் அப்பாவைக் குறிக்கும். தமிழகத்தில் அறை, குழியை நிறை என்ற பொருளில் வரும். அவதானம் என்பது யாழில் கவனித்தல் என்ற பொருளில் வழங்குகிறது. அவதானமாகக் கேள் என்றால் கவனமாகக் கேள். அவதானிக்கத் தொடங்கு - கவனிக்கத் தொடங்கு. அவதானமாக - கவனமாக. அவதானமாக இரு, எச்சரிக்கையாக இரு. தமிழ்நாட்டில் அவதானம் என்பதை நினைவாற்றல் என்ற பொருளில் வழங்குகின்றனர். அட்டாவதானம், சதாவதானம் என்று கூறுவர். இப்போது எண்கவனகம், நூற்றுக் கவனகம் என்று கூறுகின்றனர். கரந்தை என்பது யாழில் மாட்டுவண்டியைக் குறிக்கும். தமிழகத்தில் கரந்தை பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கில் அது ஒரு திணையைக் குறிக்கும்.

மாராப்பு என்பது தமிழகத்தில் பெண்கள் மார்பின் மேல் அணியும் துணியைக் குறிக்கும். மார் + யாப்பு = மாராப்பு என்று வரும். யாழில் வண்ணாள் துவைப்பதற்காகக் கட்டி வைக்கும் அழுக்குத் துணிகளைக் குறிக்கும்.

குடிமை என்பது யாழில் அடிமையைக் குறிக்கும். தமிழகத்தில் குடிமக்களைப் பற்றிய அறிவு என்று பொருள்படும். பள்ளிகளில் ஒரு காலத்தில் குடிமைப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அணியம் என்பது யாழில் கப்பலின் முன்பகுதியைக் குறிக்கும். இக்காலத் தமிழகத்தில் "தயார்" என்ற இந்திச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக உள்ளது.

கெதி என்றால் அவசரம் என்பது யாழ்ப்பாணப் பொருள் கெதியா வா - விரைவாக வா.

தமிழகத்தில் கெதி என்ற பேச்சு வழக்குச் சொல் ஆதரவு, நற்பேறு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அவனுக்கு வேறு கெதியில்லை; அவன் ஒரு கெதி கெட்டவன் என்பவை பேச்சு வழக்கு.

எடுப்பு என்றால் யாழில் ஊதாரிச் செலவு என்று —‘பருள். "நானும் உந்த எடுப்பு வேண்டாமெண்டு எத்தினை அவனுக்குச் சொல்லியிருக்கிறன்".

தமிழகத்தில் எடுப்பு என்றால் எடுத்தல், கவர்ச்சி முதலிய பொருள்களைத் தரும். எடுப்புச் சாப்பாடு என்றால் சாப்பாட்டு விடுதியிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவு. இது எடுப்பாக இருக்குது என்றால் அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்று பொருள்.

எத்து என்றால் யாழில் பாத்திரத்திலிருந்து நீரைக் கொட்டு என்று பொருள். தமிழகத்தில் அச்சொல் ஏமாற்று என்ற பொருளைத் தருகிறது.

ஏத்தம் என்பது யாழில் பெருமை என்ற நல்ல பொருளைத் தருகிறது. தமிழகத்தில் ஏத்தம் என்பது ஏற்றம் (இறைத்தலைக்) குறிக்கும். திமிர் என்ற பொருளையும் தரும். "அவனுக்கு ரொம்ப ஏத்தம் இருக்குது" என்பது பேச்சு வழக்கு.

கறுப்பு என்பது யாழில் சாராயத்தைக் குறிக்கும். இங்கே கறுப்பு நிறத்தையும், பேயையும் குறிக்கும். இவ்வாறு ஒரே வடிவத்தைப் பெற்ற சொற்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு பொருளையும், தமிழகத்தில் வேறு பொருளையும் தருவதை அவதானிக்கலாம்.
___________________________________
யாழறிவன்... Yalarivan Jacksan

புதன், 3 டிசம்பர், 2014

10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம்..!

10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம்..............!

தமிழன் வாழ்விடங்களும் அழிவுகளின் தொடரும் கல்வெட்டு பதிகமும் ....

"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

கி பி 1478 சுபதிருஷ்டிமுனிவர்
(திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டு)

ஈழத்தின் தலைநகரம் மிகத் தொன்மையான திருக்கோணேசு(ஸ்)வரர் ஆலயம். இராவணன் காலத்துக்கு முன் சிவன் ஆதிசேடன் போர்களத்தின் களத்தில் ஏறக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம் . எழு பெருவள நாடுகளில் குமரி மலை முகட்டின் கிழக்கு எல்லையில் இந்த ஆலயம் அமைக்க பட்டு, தென் கயிலை என்று பெயர் பெற்றது .

பூமி சரிகின்றது என்று சிவன் அகத்தியரை அனுப்பி மிதிக்கச் சொன்னதாக புராணம் கூறும் மலை இந்த கோணேசுவரம். அங்கு உள்ள மலையில் கால் அடையாளம் போன்ற தடம் உள்ளது அதுவே அகத்தியர் கால் அடையாளம் என்று சொல்ல படுகின்றது..

மனுநிதி சோழன் புருசோத்தம முதலாம் குளக்கோட்டன் கி மு 200 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய தளம் . சிறப்பாக 5 கால பூசைகள் நடக்க கந்தளாய் குளத்தை நிறுவி, விவசாய வளம் பெருக்கி அவ்விவசாய நிலங்களை பராமரிக்கும் வகையில் சின்ன கோணேசுவரம், தம்பலகாமம் என்று ஒரு ஊரை நிறுவி தஞ்சையின் நகை பட்டின மக்களை குடியேற்றினார்.

அம்மக்கள் வணிகம் விவசாயம் என்று சிறப்பாக இங்கு வாழ்ந்தார்கள் . சிறப்பாக வாழ்ந்து திருகோணமலையின் சிறப்பை தமிழ்நாடு எங்கும் பரவச் செய்தார்கள் . கடல் தாண்டிய பயணம் என்பதால் ஒரு சிலரே துணிந்து தென்கயிலை நோக்கி வந்தார்கள் . அப்பரும் ஞானசம்பந்தரும் தமக்கு அந்த பாக்கியம் இல்லாதபோதும், இத்தளத்தின் மீது 7ம் நூற்றாண்டில் பதிகங்களைப் பாடி உள்ளார்கள்.

அதன் பின் இரண்டாம் குளக்கோட்டன் 1050 இல் இக்கோயிலை இன்னும் சிறப்பாகப் புனரமைத்து சிறப்பாக ஆக்கினான் . அதன் பின் பாண்டிய மன்னரக இருந்த குலசேகர பாண்டியன் மீண்டும் தனது திருப்பணிகளை செய்து மீன் பதித்த சிற்பங்களை கோயில் தூண்களில் செதுக்கி வைத்தான்.

அந்த மாபெரும் ஆலயத்தை 1500 இல் வந்த ஐரோப்பியர் இடித்து கற்களைப் பெயர்த்து திருகோணமலை கோட்டையைக் கட்டினர். கட்டியபோது கோட்டை வாசலில் நிறுவிய கல்லில் இரட்டை மீன் சின்னமும் கல்வெட்டின் ஒரு பகுதியும் உள்ளது. அதை இன்று சிங்களவர் மை பூசி அழித்து விட துடிக்கின்றனர்.

கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிசு(ஸ்)கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகண் என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். அவன் தஞ்சை மதுரை வழி வந்த குலசேகர பாண்டியனின் பேரன் . கண்டியை கடிசியாக ஆண்ட விக்கிரமா ராசசிங்கன் கண்ணுசாமியின் பூட்டன் தமிழன் .

போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். அக்காலத்தில் வளவ கங்கை வழியாக சென்று மலைக்காடுகளில் பெருமளவு வைரங்களை ஐரோப்பியர்கள் எடுத்து செல்லலாயினர். ஐரோப்பியர்கள் துருக்கி வழியாகவே இலங்கையை அடைந்தார்கள், அவ்வழியாக செல்லும் காலங்களில் துருக்கியின் கொள்ளையர்கள், ஐரோப்பியர்களிடம் இருந்து வைரங்களை திருடுவது வாடிக்கையாக இருந்ததது. எனவே ஐரோப்பியர்கள் பெரும் படைகளுடன் நகரவேண்டிய நிர்பந்தங்களுக்குள் தள்ளப்பட்டு, அதுவே பேராசையாக மாறி இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எண்ணத்தை அவர்களுக்குள் வலுவாகியது.

தர்மபராக்கிரமவாகண் ஐரோப்பியரின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு ஐரோப்பியர்களை தமது நண்பர்கள் என்று கருதி நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் அக்கறை கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றான் .

ஐரோப்பியர்களை தொடர்ந்த துருக்கிய கொள்ளைக்காரபடை ஒன்று அப்போது தெற்கு துறைமுகம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தர்மபராக்கிரமவாகண் படைகளிடம் தோற்றுப் போனது. அதற்க்கு ஐரோப்பியர்கள் பெரிதும் உதவினார்கள் என்றதால் அவர்களுக்கு தமது நாட்டில் வணிகம் செய்யும் உரிமைகளை வழங்கினான் . ஆனால் அவர்கள் செயல் திருப்தி இல்லாமையால் அவர்களை தனது பகுதிகளில் இருந்து வெளியேற்றினான் .

ஐரோப்பியர்கள் அன்று சிங்கள மன்னராக இருந்த மயாதுன்ன என்பவனிடம் நட்பைப் பேணி இருந்தார்கள். அதன் பலனாக சிலாபம் துறைமுக நிர்வாகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்புகளில் ஒரு பகுதியை சிங்கள மன்ன ன் ஒப்படைத்தான் . பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை துருக்கியர்கள் படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய சிலாபம் துறை தளங்களை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர். இவாறான படை எடுப்புகள் அடிக்கடி நிகழ பறங்கியர் தமது படை பலத்தை பெருக்கி இலங்கையின் சிங்கள நிர்வாகத்தை மெதுவாக கைப்பற்றினர்.

பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் இன்னுமொரு இராட்சியத்தின் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீசுத்(ஸ்)தவனாக்கி மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர். தம் எண்ணம் போல புவனேகபாகுவின் மகனை, தர்மபாலாவைக் கிறீசுத்தவனாக்கினர்.

அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீசுத்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர். முழுமையாக கைப்பற்ற பட்ட சிங்கள இராட்சியத்தில் இருந்து அடிபணிய மறுத்த தமிழர் இராச்சியங்கள் மீது பல படை எடுப்புகளை செய்து படிப்படியாக இலங்கை தீவின் தெற்கு தமிழர் தாயகங்களை கைப்பற்றினார்கள்.

இலங்கையின் மிக புராதன ஈசு(ஸ்)வரங்கள் எல்லாம் இடிக்க பட்டு கோட்டை களாக கட்டி எழுப்பபட்டன . இவ்வாறு கட்டப்பட்ட கோட்டைகள் திருகோணமலை , பூநகர் , யாழ்ப்பாணம் , கீர்மலை , முநேவரம் , தள்ளாடி , கோட்டை காலாறு , என்று பலவும் புரதான வழிபட்டு தளங்களின் இடுபாடுகளின் எச்சமாக இன்றும் இருகின்றன .

தமிழரின் யாழ்ப்பாண இராச்சியம் அன்று கனக சூரிய சிங்கையாரியான் ஆட்சியில் சிறப்பாக இருந்தது . அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராச சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான்.

நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராசசேகரன். இவன் மாமன்னன புருசோத்தமன் வாரிசாவான் . இவனை புருசோத்தமன் என்றும் சொல்வதுண்டு . போர் திறனும் கலைத்திறனும் கொண்ட சிங்கைப் பரராசசேகரன் பல குறு நில மன்னர்களின் படை எடுப்புக்களை அங்காங்கே சந்தித்து அவர்கள் பல அழிவுகளை செய்த போதும்,அழிவிலிருந்த ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு.

சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.

ஒரு இக்கட்டான கால சூழலில் பரங்கியர்கள் ஆக்கிரமிப்பும், சிங்களவரின் முறை அற்ற செயலும் தன் நாட்டையும் தாய் தமிழகத்தையும் பாதிக்கப் போகின்றது என்று பரராசசேகர மன்னன் பெரும் கவலை உற்றிருந்தான். தனக்கு பின் இந்த நாடு என்ன ஆகுமோ என்னும் கவலை அவனை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.

பரராசசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராசசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருட்(ஷ்)டிமுனிவர் என்பார் தமிழகத்தில் இருந்து அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்

"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் "
என வினவினான்.

புருசோத்தம நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியன் நாட்டுக்காக போராடி முடியாது.

பறங்கியர் கையிற் நாட்டை இழந்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர்.

அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு இனி ஒரு காலத்தில் மீள்வதாயின் உன் வாரிசுகள் மீண்டும் போராடியே பெறவேண்டும் என்றார்.

இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி

"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

இப்பாடலில் "புகைக்கண்ணர் போய்மாற மானே வடுகாய் விடும்".

இதுவே இன்று நடகின்றது...

புகைக்கண் அங்கிலேயர் 1947 போய் மாற மானே வடுகாய் விடும் ... இங்கு மானே வடுகாய் விடும் என்றால் என்ன..?! இங்கு பல குழப்பம உள்ளது. மானே வடு காய் விடும் ... மான் என்றால் இளமையான இனம் வடு என்றால் பிஞ்சு காயம். வடுகாய் காயங்கள் பட்டு ஆறும் காலம் தனில் விடும் தேர்ந்து விடும் ... என்று பல் பொருள் உண்டு .

ஆக பொன்னிறத்து மேனி கொண்ட பல் கண் அமைப்பை கொண்ட ஐரோப்பியர்கள் வந்து ஆண்டதன் பின்பு அவர்களின் பின் இளம் பிள்ளைகள் காயப்பட்டு வேதனைப் படுவார்கள் . அவர்கள் காயம் ஆறும் களத்தில் மீண்டும் காய்க்கும் பூக்கும் மாம் பிஞ்சுகள் விடும் ... உன் சந்ததிக்கு இந்த நாடு அந்த பொன்னிறத்து மேனி காரர் அவர்கள் போனாலும் உடனடியாக கிடைக்காது மாவடு போல பிஞ்சு விட்டு வரும் குழந்தைகளா காயப்பட்டு ஆறும் காலம் வரும் அப்போதுதான் உன் வாரிசுகளுக்கு உன் நாடு மீண்டும் கிடக்கும் ..!

இன்று மாணவர்கள், இளம் பிள்ளைகள் நடத்தும் இப்போராட்டமே தமிழனை மீண்டும் ஆட்சியில் ஏற்றும் என்கின்றது திருகோணமலைக் கல்வெட்டு .... என் பாட்டன் எழுதிய திருக்குறள் என்றும் காலத்துக்கு ஏற்புடைய நூலாக இருப்பது போல திருக்கோணமலைக் கல்வெட்டும் இருக்குமோ..?! பொறுத்து இருந்து பார்போம் ..!
___________________________________

யாழறிவன்... Yalarivan Jacksan