வெள்ளி, 19 டிசம்பர், 2014

யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது

யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது

பூனை புலியினத்தைச் சேர்ந்ததே என்றாலும் பூனைக்கும் புலிக்கும் எத்துணை வேறுபாடுள்ளது! நெல் என்பது ஒரு வகையான புல் என்று கூறினால் அற்பமான புல்லுக்கும், உயிர்காக்கும் நெல்லுக்கும் எத்துணை வேறுபாடு! "உருவுகண்டு எள்ளாமை வேண்டும்" என்றார் வள்ளுவர்.

ஒரு மொழியின் வளர்ச்சியில் பண்டு வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருந்த சொற்கள் காலப்போக்கில் ஒரே வடிவத்தை ஏற்றுக்கொள்ளுதல் உண்டு. எடுத்துக்காட்டாக "அத்தம்" என்ற சொல் சங்க காலத்தில் "வழி" என்ற பொருளைப் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வடசொற்கள் வடவெழுத்து ஒரீஇத் தமிழில் அளவின்றிப் புகுந்தபோது ஹஸ்தம் (கை), அர்த்த (பாதி), அருத்தம் (பொருள்) என்ற மூன்று வடசொற்கள் தமிழில் "அத்தம்" என்ற ஒரே வடிவத்தைப் பெற்றுவிட்டன. நான்கு வெவ்வேறு பொருட்களைப் பெற்றுள்ள "அத்தம்" என்பது ஒரு சொல்லா? பல பொருள் ஒரு சொல்லா? எனில் நான்கு சொற்களின் திருந்திய வடிவமாதலின் பலபொருள் ஒரு சொல் (Homonym) எனப்படும். அகராதியில் நான்கு வெவ்வேறு சொற்களாக எண்கள் தரப்பட்டு வேர்கள் கூறப்பட்டிருக்கும்.

பிறமொழிச் சொற்கள் கலவாத போதுகூடத் தமிழிலேயே வெவ்வேறு பொருள்களையுடைய சொற்கள் ஒரே வடிவத்தைப் பெற்று விடுதலுமுண்டு. நந்து என்ற சொல் தழைத்தல், அழிவுறல் என்ற முற்றிலும் முரண்பட்ட பொருளைத் தருவது போலவே "படு" என்ற சொல்லும் "தோன்று, அழிவுறு" என்ற இருவேறு பொருள்களைத் தந்து நிற்கின்றது. ஒரு சொல் எப்பொருளில் வழங்கப் பெற்றுள்ளது என்பதை அச்சொல்லைச் சூழ்ந்துள்ள பிறசொற்களின் துணையால் அறிந்து கொள்ளலாம். இதிலிருந்த ஒரு சொல்லின் பொருள் காலத்துக்கேற்பவும், இடத்திற்கேற்பவும் வேறுபடும் என்பது பெறப்படும். சிலபோது உணர்த்துவான் (பேசுவான்) குறிப்பிற்கேற்பவும், உணர்வான் (கேட்போன்) குறப்பிற்கேற்பவும் கூடப்பொருள் மாற்றம் நிகழ்வதுண்டு. எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் எந்தச் சமயத்தில் ஏற்படும் என்று எவரும் எதிர்பார்த்துக் கூற முடியாது. இதனால்தான் மொழியியலில் எழுத்தியல், ஒலியியல் போலப் பொருளியல் ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்றிருக்கவில்லை என்று கூறுவர். ஒரு சொல்லுக்கு எக்காலத்திலும் ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும் என்று கூற முடியாதாகலின் ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருப்பதாகக் கருதமுடியாது. எனினும் காளிதாசர் தம் ரகுவம்சத்தில் கடவுள்வாழ்த்துப் பாடும்போது "சொல்லும் பொருளும் போல இணைபிரியாத மாதொரு பாகனை (அர்த்தநாரீசுவரனை) வணங்குகின்றேன்" என்று கூறியுள்ளார்.

இலங்கையின் ஒரு பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்று கூறுகின்றனர். யாழ்ப்பாணத் தமிழையும், தமிழகத் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போபது பல உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. கடலால் பிரிக்கப்பட்ட பகுதியாதலின் தமிழின் பல தொன்மைக் கூறுகளை யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் காப்பாற்றி வருகிறது. சங்ககாலச் சொற்களில் பல சொற்கள் இன்றும் யாழ்ப்பாணத் தமிழில் உலா வருகின்றன. அவன் இவன் என்ற இரு சொற்களுக்கும் இடைப்பட்ட உவன் என்பது தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் காணப்படுகிறது. அதைப் போலவே சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்ட பொருளைக் குறிக்கும் உது, உவர், உப்பால், உங்கை (உங்கே), உம்பர், உவண், உவள், உதை (அதை), உதுக்கு முதலிய பல சொற்கள் யாழ்பாணத் தமிழில் வழக்கில் உள்ளன. தமிழகத் தமிழில் அவை வழக்கு வீழ்ந்துவிட்டன மேலும் யாழ்த் தமிழில் வழங்கும் பல சொற்கள் அதே வடிவத்தில் தமிழகத் தமிழில் வேறு பொருள்களைப் பெற்று வழங்குகின்றன. இவ்வாறு பல்லாயிரம் சொற்கள் உள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் ஈண்டுக்காண்போம்.

சம்பல் என்பது கொங்குப் பகுதியில் விலை குறைந்தது. விலை மலிவானது என்ற பொருளைத் தரும். துணியின் விலை சம்பலாகி விட்டுது என்றால் விலை குறைந்துவிட்டது என்பது பொருள்.

யாழ்ப்பாணத்தில் சம்பல் என்பது வற மிளகாய்ச் சட்டினியைக் குறிக்கும்.

"நீ அவனோடு கதைக்காதே" என்றால் அவனோடு பேசாதே என்பது யாழ்ப்பாண வழக்கு. தமிழகத்தில் கதைக்காதே என்றால் கதைவிடாதே, பொய்யாகப் புனைந்து கூறாதே என்ற பொருள்தான் உண்டு.

வடிவு என்பது அழகு, நன்கு என்ற பொருளில் யாழில் (யாழ்ப்பாணத்தில் என்பதன் சுருக்கம்) வழங்குகிறது. அவள் வடிவாயிருக்கிறாள் என்றால் அழகாயிருக்கிறாள் என்றும் அதை வடிவாய்ச் செய்கிறான் என்றால் நன்றாகச் செய்கிறான் என்றும் பொருள் தமிழகத்தில் வடிவு என்பது உருவம் என்ற பொருளில் வழங்குகிறது. இலக்கியத்தில் மட்டும் வடிவு என்பது அழகு என்ற பொருளைப் பெற்றிருக்கும்.

யாழில் தாமசிக்கிறான் என்றால் ஓரிடத்தில் குடியிருக்கிறான் என்று பொருள். மலையாளத்திலும் இச்சொல் இப்பொருளில் வழங்குகிறது. தமிழகத்தில் காலந்தாழ்த்துகிறான் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒற்றை மாட்டு வண்டியைத் திருக்கல் வண்டில் என்று கூறுவர். வண்டில் என்பது பழஞ்சொல், தமிழில் வண்டி என்றும் தெலுங்கில் பண்டி என்றும் வழங்கும். தமிழ்நாட்டில் திருக்கல் என்பது குதர்க்கம், பிரச்சனை என்ற பொருளைத்தரும்.

யாழ் நாட்டில் திறப்பு என்பது சாவியைக் குறிக்கும். கொங்கு நாட்டில் சாவியைத் தொறப்புக் குச்சி என்பர். தமிழகத்தில் திறப்பு என்றால் சாவி என்ற பொருள் இல்லை. திறத்தல் என்ற பொருளே உள்ளது. திறப்புவிழா, படத்திறப்பு முதலிய தொடர்களைக் காண்க.

யாழ்ப் பேச்சு வழக்கில் "தீத்து" என்பது ஊட்டு என்று பொருள்படும். "நான் உனக்குச் சாப்பாடு தீத்தப் போறன். சோற்றைக் குழந்தைக்கு தீத்திவிடு" என்று கூறுவர். தமிழகத்தில் தீத்துதல் என்றால் ஒரு பொருளைக் கூர்மையாக்குதல் (தீட்டுதல்) என்று பொருள்படும்.

சாட்டு என்பது சாக்குப் போக்கு என்ற பொருளில் யாழில் வழங்கப்படுகிறது. "எல்லாவற்றிற்கும் விதியைச் சாட்டுச் சொல்லாதீர்கள்" என்பர். தமிழகத்தில் சாட்டு என்பது குற்றஞ்சாட்டு, பூச்சாட்டு (பூச்சாற்று) என்ற பொருளில் வழங்குகிறது.

யாழில் ஆறுதல் என்பது ஓய்வைக் குறிக்கும். "ஆறுதலாய்க் கதைக்கலாம்" என்றால் சாவகாசமாப் பேசிக் கொள்ளலாம் என்று பொருள். தமிழ்நாட்டில் ஆறுதல் என்பது தணிதல் (சினம் ஆறுதல்); தேறுதல் (ஆறுதல் கூறு), சூடு ஆறுதல் முதலிய பொருள்களில் வரும்.

அண்டாது என்ற சொல் யாழில் போதாது, பத்தாது என்ற பொருளில் வழங்குகிறது. "இதுகளுக்கு எப்படிக் குடுத்தாலும் அண்டாது" என்பர். தமிழகத்தில் அண்டாது என்றால் போய் ஒட்டாது என்று பொருள்படும்.

யாழில் அப்பு என்றால் அப்பாவைக் குறிக்கும். தமிழகத்தில் அறை, குழியை நிறை என்ற பொருளில் வரும். அவதானம் என்பது யாழில் கவனித்தல் என்ற பொருளில் வழங்குகிறது. அவதானமாகக் கேள் என்றால் கவனமாகக் கேள். அவதானிக்கத் தொடங்கு - கவனிக்கத் தொடங்கு. அவதானமாக - கவனமாக. அவதானமாக இரு, எச்சரிக்கையாக இரு. தமிழ்நாட்டில் அவதானம் என்பதை நினைவாற்றல் என்ற பொருளில் வழங்குகின்றனர். அட்டாவதானம், சதாவதானம் என்று கூறுவர். இப்போது எண்கவனகம், நூற்றுக் கவனகம் என்று கூறுகின்றனர். கரந்தை என்பது யாழில் மாட்டுவண்டியைக் குறிக்கும். தமிழகத்தில் கரந்தை பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கில் அது ஒரு திணையைக் குறிக்கும்.

மாராப்பு என்பது தமிழகத்தில் பெண்கள் மார்பின் மேல் அணியும் துணியைக் குறிக்கும். மார் + யாப்பு = மாராப்பு என்று வரும். யாழில் வண்ணாள் துவைப்பதற்காகக் கட்டி வைக்கும் அழுக்குத் துணிகளைக் குறிக்கும்.

குடிமை என்பது யாழில் அடிமையைக் குறிக்கும். தமிழகத்தில் குடிமக்களைப் பற்றிய அறிவு என்று பொருள்படும். பள்ளிகளில் ஒரு காலத்தில் குடிமைப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அணியம் என்பது யாழில் கப்பலின் முன்பகுதியைக் குறிக்கும். இக்காலத் தமிழகத்தில் "தயார்" என்ற இந்திச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக உள்ளது.

கெதி என்றால் அவசரம் என்பது யாழ்ப்பாணப் பொருள் கெதியா வா - விரைவாக வா.

தமிழகத்தில் கெதி என்ற பேச்சு வழக்குச் சொல் ஆதரவு, நற்பேறு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அவனுக்கு வேறு கெதியில்லை; அவன் ஒரு கெதி கெட்டவன் என்பவை பேச்சு வழக்கு.

எடுப்பு என்றால் யாழில் ஊதாரிச் செலவு என்று —‘பருள். "நானும் உந்த எடுப்பு வேண்டாமெண்டு எத்தினை அவனுக்குச் சொல்லியிருக்கிறன்".

தமிழகத்தில் எடுப்பு என்றால் எடுத்தல், கவர்ச்சி முதலிய பொருள்களைத் தரும். எடுப்புச் சாப்பாடு என்றால் சாப்பாட்டு விடுதியிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவு. இது எடுப்பாக இருக்குது என்றால் அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்று பொருள்.

எத்து என்றால் யாழில் பாத்திரத்திலிருந்து நீரைக் கொட்டு என்று பொருள். தமிழகத்தில் அச்சொல் ஏமாற்று என்ற பொருளைத் தருகிறது.

ஏத்தம் என்பது யாழில் பெருமை என்ற நல்ல பொருளைத் தருகிறது. தமிழகத்தில் ஏத்தம் என்பது ஏற்றம் (இறைத்தலைக்) குறிக்கும். திமிர் என்ற பொருளையும் தரும். "அவனுக்கு ரொம்ப ஏத்தம் இருக்குது" என்பது பேச்சு வழக்கு.

கறுப்பு என்பது யாழில் சாராயத்தைக் குறிக்கும். இங்கே கறுப்பு நிறத்தையும், பேயையும் குறிக்கும். இவ்வாறு ஒரே வடிவத்தைப் பெற்ற சொற்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு பொருளையும், தமிழகத்தில் வேறு பொருளையும் தருவதை அவதானிக்கலாம்.
___________________________________
யாழறிவன்... Yalarivan Jacksan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக