ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஈழம்

ஈழம்: ஒரு பார்வை-
பகுதி-1

'நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்.'

வள்ளுவனின் அருமையானதொருக் கூற்று. ஒரு பிரச்சனையின் தோற்றத்தை முழுமையாக ஆராய்ந்துப் பார்த்தப் பின்னரே அப்பிரச்சனைக்குரிய தீர்வினை நாம் செயல்படுத்த வேண்டும். பிரச்சனையின் உண்மையான காரணத்தினை அறியாது நாம் மேற்கொள்ளும் யாதொரு செயலும் தக்க தீர்வாக அமையாது. இதுவே அக்குறளின் மையக்கருத்து. அதன் அடிப்படையிலேயே தான் நாம் இப்பொழுது ஈழத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஈழம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? தமிழர்கள் அங்கே தனி நாடு கேட்கின்றார்களே அது சரியா? என்ன தான் நடக்கின்றது/நடந்தது அங்கே? போன்ற கேள்விகள் அனைத்திற்கும் நாம் விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் ஒரு கற்பனை சம்பவத்தினை நாம் கண்டு விடுவது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

வேற்றுக் கிரகவாசிகள் பூமியின் மீது படையெடுத்து சீனம் மற்றும் இந்தியத் தேசங்களைக் கைப்பற்றி விட்டனர். இந்தியாவும் சீனாவும் முழுமையாக வேற்றுக் கிரகவாசிகளின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டன. வேற்றுக் கிரகவாசிகளுக்கு மாபெரும் வெற்றி தான். ஆனால் அந்த வெற்றியோடு சேர்த்து ஒரு கேள்வியும் புதிதாய் எழுந்து தான் நிற்கின்றது.

கைப்பற்றிய இந்தத் தேசங்களை எவ்வாறு ஆளுவது? இரு தேசங்களாகவே வைத்திருப்போமா அல்லது இரண்டையும் ஒன்றிணைத்து நாம் ஆள்வதற்குத் தோதாக ஒரே தேசமாக மாற்றிவிடலாமா?

இது தான் அந்தக் கேள்வி. இக்கேள்விக்கு விடையாய் வேற்றுக் கிரகவாசிகள் இரண்டு தேசங்களையும் இணைத்து ஒரே தேசமாக மாற்றி ஆள்வதையே தேர்ந்து எடுத்துக் கொள்கின்றனர். அதன் விளைவாக இந்தியா, சீனா என்று இரு தேசங்களாக இருந்த நிலப்பரப்பு ஒரே தேசமாக மாறுகின்றது. அவர்களிடையே எவ்வளவு பகைகள், வித்தியாசங்கள் இருப்பீனும் அந்தத் தேசங்களின் மக்கள் ஒரே தேசத்து மக்களாக ஆக்கப் படுகின்றனர்.

அதாவது இரண்டு தேசங்களாக இருந்த நிலை மாறி இப்பொழுது அங்கே ஒரே தேசம் மட்டுமே இருக்கின்றது...பகை நாடுகள் இரண்டையும் சேர்த்து ஒரு புதிய தேசம் உருவாகி இருக்கின்றது. அவ்வாறே காலங்கள் பல கடக்கின்றன. இந்நிலையில் சில நூற்றாண்டுகள் கழித்து வேற்றுக் கிரகவாசிகள் அந்தப் புதிய தேசத்திற்குச் சுதந்திரம் கொடுத்து விட்டுச் செல்ல எண்ணி, அவ்வண்ணமே செய்கின்றனர்....ஆட்சிப் பொறுப்பினை சீனர்களிடத்துக் கொடுத்து விட்டு. இந்நிலையைத் தான் நாம் சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இரண்டு தேசங்கள் ஒரே தேசமாக ஆக்கப்பட்டு இருக்கின்றன. அந்த நாடுகள்/மக்கள் ஆகியோரின் இடையில் பல்வேறு பகை உணர்ச்சிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருப்பீனும் அவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒரே தேசத்து மக்களாக மாற்றப்பட்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்குத் தான் இன்று சுதந்திரம் கிட்டி இருக்கின்றது.

நீண்டக் காலமாக இருந்துக் கொண்டிருந்த அடிமைத்தனத்தில் இருந்து மக்கள் அனைவரும் விடுதலைப் பெற்று விட்டனர். அனைவரும் கொண்டாட வேண்டியத் தருணம் தான்...ஆனால் அந்தத் தருணத்தில் தான் பழையப் பகை உணர்ச்சிகள் மேலோங்க பழையப் பிரச்சனைகள் மீண்டும் எழத் தொடங்குகின்றன.

புதிய தேசத்தில் பெருவாரியாக இருந்த சீனர்களிடம் ஆட்சிப் பொறுப்பினை தந்து விட்டு வேற்றுக் கிரகவாசிகள் வெளியேறி விட்டனர். ஆட்சிப் பொறுப்பினைப் பெற்ற சீனர்களோ புதிதாய் தோன்றி இருக்கின்ற அந்த தேசத்தில் அனைத்தையும் சீன மயமாக்க முயல்கின்றனர்...சீனக் கலாச்சாரமே அந்தப் புதிய தேசத்தின் கலாச்சாரமாக இருக்க வேண்டும்...சீன மொழியே அந்தத் தேசத்து மொழியாக இருக்க வேண்டும்...சீனர்களே ஆள வேண்டும்...!!!

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் அந்தப் புதிய தேசம் பழையச் சீனாவாகவே இருக்க வேண்டும். அங்கே இந்தியர்களோ அவர்களது கலாச்சாரமோ தேவை இல்லை...அவற்றிற்க்கு மதிப்பும் இல்லை.

இந்நிலையில் இந்தியர்கள் அந்நிலையினை எதிர்த்துக் குரல் கொடுப்பார்களா அல்லது மாட்டார்களா? அவர்களது உரிமைகளுக்காக போராடுவார்களா மாட்டார்களா?

போராடத்தானே செய்வார்கள்...அதையேத் தான் செய்கின்றார்கள். முதலில் அமைதியாகப் போராடுகின்றனர்...அவர்களின் போராட்டத்தினை வன்முறையால் அடக்குகின்றது சீன அரசு. தொடர்ந்துப் பல ஆண்டுகள் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெறுகின்றன...அவை அனைத்தும் வன்முறையால் நசுக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் கொல்லப்படுகின்றனர். இந்திய மக்கள் அவர்களது கலாச்சாரச் சின்னங்களாக கருதியவைகள் அழிக்கப்படுகின்றன. இந்திய மக்களின் அமைதியான குரல்கள் சீனர்களின் காதினில் நுழைய மறுக்கின்றன.

இந்நிலையில் இந்தப் பிரச்சனைக்கு உங்களுடைய தீர்வு என்னவாக இருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்?

'சீன நண்பர்களே...நம்முடைய வரலாறு பெரியது...நம் இருவருக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன...நாம் ஒன்றிணைந்து வாழ இனியும் இயலும் என்றுத் தோன்றவில்லை... போதும்...நடந்தவை அனைத்தும் போதும். நாம் அடிமைப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே இருந்து விடுவோம்... சீனாவாக இருந்த இடத்தினை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...இந்தியாவாக இருந்த இடத்தினை நாங்கள் வைத்துக் கொண்டு எங்கள் மக்களைப் பார்த்து கொள்கின்றோம்...நீங்களும் நன்றாக இருங்கள்...நாங்களும் நன்றாக இருக்கின்றோம்..."

மேலே உள்ளத் தீர்வே உங்களுடையத் தீர்வாக இருக்கும் என்றால் உங்களின் குரல் தான் ஈழத்தின் குரல்.
_____

"அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்"

இன்றைக்கு ஈழத்தினைக் குறித்து நாம் எந்த ஒரு விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டாலும் நாம் நிச்சயமாய் இந்தக் கூற்றினை எதிர்பார்க்கலாம். நிச்சயமாய் எமாற்றமடையமாட்டோம். காரணம் பெருவாரியான தமிழர்களின் சிந்தனையில் அந்தக் கருத்தே நிலைப்பெற்று இருக்கின்றது. தமிழர்களின் மத்தியிலேயே இப்படி என்றால் மற்றவர்களின் சிந்தனையினைக் குறித்து நாம் கூற வேண்டியதில்லை.

அவர்களின் பார்வையில் இலங்கை - ஒரு சிங்கள நாடு... தமிழர்கள் - அங்கே பிழைப்பிற்காக குடிப்பெயர்ந்தவர்கள். பிழைப்பிற்காக சென்றவர்கள் எங்ஙனம் அந்த நாட்டிற்கு சொந்தம் கொண்டாட இயலும்...வாடகைக்கு குடி இருப்பவன் அவ்வீட்டினில் சொந்தம் கொண்டாடுவது முறையற்ற செயல் அல்லவோ...திமிர் பிடித்த தமிழர்கள் சிங்களவனின் நாட்டினில் பங்குக் கேட்கின்றனர்...அதனால் அடி வாங்குகின்றனர். அவ்வளவே.

இது தான் இன்றைக்கு பெருவாரியான மக்களின் எண்ணம். அந்த எண்ணம் சரியானதொன்றா என்றே நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் தமிழர்கள் என்றால் யார்...சிங்களர்கள் என்றால் யார் என்றே காண வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் யார் அவர்களின் வரலாறு என்ன என்று நாம் நோக்கினோம் என்றால் அது ஒரு நீண்ட நெடியப் பயணமாகவே சென்றுக் கொண்டு இருக்கின்றது... குமரிக்கண்டம், பூம்புகார் அகழ்வாராய்ச்சிகள், சிந்து சமவெளி, சுமேரிய-எகிப்திய-பாபிலோனிய நாகரீகங்கள் என்றே நீளும் ஆராய்ச்சிகள் உலகின் முதல் மனிதன் தமிழனாக இருக்கலாம் என்றும் முதன் மொழி தமிழாக இருக்கலாம் என்றுமே கூறுகின்றன. இதனைப் பற்றி நம்முடைய பல்வேறுப் பதிவுகளில் நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் எனவே அதனை மீண்டும் விவரிக்கத் தேவை இல்லை என்றுக் கருதுகின்றேன். சுருக்கமாக கூற வேண்டும் எனில் குமரிக்கண்டத்தில் இருந்துப் பரவும் தமிழனே உலகின் பல்வேறுப் பகுதிகளில் சென்று இருக்கின்றான்.

சரி இப்பொழுது சிங்களவர்களின் வரலாற்றினைக் காணலாம். சிங்களவர்களின் வரலாறு இளவரசன் விஜய சிங்க என்ற ஒருவனிடம் இருந்து தான் தொடங்குகின்றது. அவனின் காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர் சிலர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவர். அது நமக்கு இங்கே முக்கியமானதொன்றில்லை. நமக்கு முக்கியமான விடயம் இங்கே என்னவென்றால் அந்த இளவரசன் இன்றைக்கு இலங்கை என்று அழைக்கப்படும் தீவில் என்று அவனது படையினரோடு காலடி எடுத்து வைக்கின்றானோ அதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தொடங்குகின்றது. அவ்வாறு தான் அவர்களின் நூலான மகாவம்சம் கூறுகின்றது. நாம் அந்தக் காலத்தினை கி.மு ஆறாம் நூற்றாண்டு என்றே வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது சில கேள்விகள் எழலாம்... இலங்கையின் பூர்வக் குடியினர் சிங்களவர்கள் என்றுக் கூறுகின்றனர்...ஆனால் அவர்களின் வரலாற்றினைப் பார்த்தால் எங்கிருந்தோ வந்த ஒரு இளவரசன் அவன் வந்திறங்கிய தீவில் ஏற்கனவே அரசாண்டுக் கொண்டிருந்த இளவரசியான ஒரு பெண்ணினை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தொடங்குகின்றது. இந்நிலையில் அந்த இளவரசன் யார்? அவன் எங்கிருந்து வந்தான்? அவன் வருவதற்கு முன்னர் அத்தீவினில் அரசாண்டுக் கொண்டிருந்த அந்த மக்கள் யார்? அவன் அத்தீவிற்கு வந்தக் காரணம் யாது? போன்ற பல கேள்விகள் நம் முன்னே வரிசையாக நின்றுக் கொண்டிருக்கின்றன.

அக்கேள்விகளுக்கு விடை... விஜய சிங்க என்ற இளவரசன் அன்றைக்கு கலிங்க நாட்டில் இருந்து (இன்றைக்கு வங்க நாடு/ஒரிசா) போரில் தோற்று ஓடிய ஒருவன் (அவன் நாடு கடத்தப்பட்டவன் என்ற கருத்தும் நிலவுகின்றது). அவனும் அவனைப் பின்பற்றியவர்களும் நாட்டில் இருந்து வெளியேறி வேறு இடம் செல்வதற்காக கப்பலின் மூலம் தெற்கே பயணிக்க ஆரம்பித்தனர். அவ்வாறு அவர்கள் பயணித்து வந்தடைந்த தீவு தான் இன்றைக்கு இலங்கை என்று வழங்கப்படும் தீவாகும் (அத்தீவிற்கு அன்று எந்தப் பெயர் வழங்கப்பட்டது என்று நான் இன்னும் படித்தறிய வேண்டி இருக்கின்றது...ஒரு வேளை அது நாகதீபத் தீவு என்று வழங்கப் பட்டு இருக்கலாம்).

அத்தீவினில் வந்து இறங்கிய விஜயனை வரவேற்கின்றனர் அங்கே ஏற்கனவே ஆண்டுக் கொண்டு இருந்த மக்கள்...அவர்களை இயக்கர்கள் என்றும் நாகர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அம்மக்கள் தமிழர்கள் என்றே வரலாறு நமக்கு காட்டுகின்றது. அவ்வாறு வரவேற்ற மக்களின் இளவரசியினை விஜயன் மணம் முடித்துக் கொள்வதில் இருந்து தான் சிங்கள இனமே தோற்றம் பெறுகின்றது. அந்த இளவரசியின் பெயர் குவேனி.நிற்க

விஜயனின் கதையினுள் நாம் மேற்கொண்டு செல்ல வேண்டியத் தேவை இல்லை. நமக்குத் தேவை சிங்களவர்கள் என்பவர்கள் விஜயனின் வம்சாவழியினர் என்பதும்...விஜயன் அன்றைக்கு கலிங்க நாட்டினில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இனக் குழுவின் இளவரசன் என்பதும்...அவன் இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் ஒரு தமிழ் பெண்ணினை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது என்பதும் தான். (விஜயனின் உடன் இருந்த வீரர்கள் பாண்டிய நாட்டுப் பெண்களை மணம் முடித்தனர் என்ற செய்தியும் இருக்கின்றது...ம்ம்ம்….வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் விஜய சிங்கனையும் வாழத்தான் வைத்து இருக்கின்றனர்.)

பின்னர் காலங்களில் விஜயனின் வம்சாவழியினர் வளருகின்றனர். ஆனால் காலங்கள் மாற மாற மனிதனும் மாறுவான் தானே...அதுவும் பல்வேறு இனக்குழுக்களாக இருப்போரின் மத்தியில் சண்டைகள் வருவதும் இயல்பு தானே. அது தான் அந்தத் தீவினிலும் நிகழ்கின்றது. தமிழர்கள் வடக்கேயும் கிழக்கேயும் வலுவாக இருக்க தெற்கில் சென்று தங்களது அரசுகளை அமைத்துக் கொள்கின்றனர் சிங்களர்கள்.

போர்கள்..வெற்றிகள்...தோல்விகள்...சமாதானம் என்று இரு தரப்புக்களும் மாறி மாறி மோதிக் கொண்டிருக்க காலமும் விரைவாகக் கடந்துக் கொண்டு இருக்கின்றது. இராச இராச சோழனின் காலத்திலும் அச்சண்டைகள் நீடித்துக் கொண்டு தான் இருந்தன என்பதனை நம்மில் பலர் அறிந்து இருப்போம்.

ஆயிரம் சண்டைகள் வந்த பொழுதிலும் இலங்கை என்றைக்குமே முழுமையாக சிங்களவர்களின் நாடாக நீடித்து இருந்ததேக் கிடையாது. தமிழர்கள் அங்கே ஆண்டுக் கொண்டு தான் இருந்தனர். இலங்கை ஐரோப்பியர்களின் வருகை வரை இந்தியாவினைப் போல் பல நாடுகள் கொண்ட ஒரு நிலப்பகுதியாகவே இருந்தது.

ஆனால் ஐரோப்பியர்களின் வருகை அதுவரை இருந்த வரலாற்றினை முற்றிலுமாக மாற்றிப் போடுகின்றது...!!!

எவ்வாறு...அதோ தொலைவில் போர்துகீசியர்களின் கப்பல் ஒன்று தென்படுகின்றது. விடை ஒருவேளை அதனில் இருந்தாலும் இருக்கலாம்...காண்போம்!!!

தொடரும்...!!!

குறிப்பு:

கீழே உள்ளப் படம் இலங்கை அரசு வெளியிட்ட ஒரு தபால் தலையாகும். அதனில் விஜய சிங்கன் இலங்கைக்கு முதல் முதலாக வரும் பொழுது அவனை அங்கே இருந்த தமிழ் இளவரசி பார்த்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கின்றது. இதிலேயே அறிந்துக் கொண்டு விட முடியாதா இலங்கையின் பூர்வீகக் குடியினர் யார் என்று?
________

ஒரு கேள்வி...!!!

ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இங்கே இந்தியா என்று ஒரே ஒரு தேசம் இருந்ததா அல்லது பல்வேறு தேசங்கள் இன்று இந்தியா என்றிருக்கும் நிலப்பரப்பில் இருந்துக் கொண்டு வந்தனவா?

வடக்கே சிலரின் ஆட்சி...தெற்கே வேறு சிலரின் ஆட்சி...கிழக்கிலும் சரி மேற்கிலும் சரி பல்வேறு மன்னர்கள்/இனங்களின் ஆட்சி என்று தானே இருந்தது. அவை அனைத்தையும் வென்ற பின்னர், அத்தேசங்கள் அனைத்தையும் இணைத்து ஐரோப்பியர்கள் உருவாக்கியது தானே இன்றிருக்கும் ஒன்றிணைந்த இந்தியா. நிற்க

அதே வரலாறு தான் இன்றிருக்கும் இலங்கைக்கும் இருக்கின்றது. அந்த வரலாற்றினைக் காண நாம் இப்பொழுது கி.பி 16 ஆம் நூற்றாண்டிற்கு செல்ல வேண்டி இருக்கின்றது. காரணம் அக்காலத்தில் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவினைத் தேடி வர ஆரம்பிக்கின்றனர்.

அவ்வாறு இந்தியாவினைத் தேடிக் கிளம்பிய ஐரோப்பியர்களுள் முதன் முதலாக இந்தியாவினை வந்தடைந்தது போர்துகேசியர்கள் என்றும் அவர்கள் இன்றைக்கு இந்தியாவின் தென் மேற்குப் பகுதியான கேரளத்தில் வந்திறங்கினர் என்றும் நாம் நம்முடைய வரலாற்றுப் பாடங்களில் படித்து இருக்கின்றோம்.

அதே போர்துகேசியர்கள் தான் இலங்கையிலும் முதன் முதலாக காலினை வைக்கின்றனர். அதுவும் குறிப்பாக மேற்கு இலங்கையிலேயே அவர்கள் காலினை ஊன்றுகின்றார்கள். (இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி அவர்கள் மேற்குப் பகுதியிலேயே வந்திறங்கியதற்கு காரணம் அவர்கள் பயணித்த வழித்தடம் அவ்வாறு இருந்தது தான்... தென் ஆப்பிரிக்காவினை சுற்றிக் கொண்டு கடலில் அவர்கள் பயணித்த வழி அவர்களை இந்தியாவின் மேற்கில் தான் கொண்டு வந்து சேர்த்தது...சரி இது இருக்கட்டும்).

இலங்கையில் இறங்கிய போர்துகீசியர்கள் பார்கின்றனர். சிறியத் தீவு தான்...ஆனால் பல்வேறு மக்கள் இருக்கின்றனர்...பல்வேறு ஆட்சிகள் நடக்கின்றன...மக்கள்களுக்குள் பழக்கவழக்கங்கள், மொழி, வழிபாட்டு முறைகள் போன்றனவைகளில் மாற்றங்கள் பல காணப்படுகின்றன. அனைத்தையும் குறித்துக் கொள்கின்றனர். பின்னர் அது ஒருவேளை அவர்களுக்கு பயன்படலாம்...ஒருவேளை அம்மக்களை அவர்கள் ஆள வேண்டி இருந்தால்...நிச்சயமாக அந்த விடயங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தேவைப்படும் தானே...!!!

போர்துகீசியர்கள் இலங்கையில் இறங்கியப் பொழுது இலங்கையில் பல்வேறு ஆட்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன.

மேற்கில் - கோட்டை (Kottai) அரசு (சிங்களம்)
தெற்கில் - கண்டி (Kandi) அரசு (சிங்களம்)
கிழக்கில்/வடக்கில் - யாழ்ப்பாண அரசு (தமிழ்)
மேலும் 'மூர்கள்' எனப்படும் அரேபியர்களும் சிறிய அளவு இருக்கின்றனர். நிற்க

மேற்கில் வந்திறங்கிய போர்துகீசியர்களை அன்புடன் வரவேற்றது கோட்டை அரசு. "வணிகம் செய்ய விரும்புகின்றீர்களா...நல்லது நல்லது...தாராளமாகச் செய்யலாமே.." என்றவாறே போர்துகீசியர்களுக்கு தாராளமான வரவேற்பினை வழங்குகின்றார் அன்றைய கோட்டை அரசர்.

போர்துகீசியர்கள் பார்கின்றனர்...'நல்ல அரசராகத் தோன்றுகின்றது...ஆனால் பாவம் வாரிசு இல்லை...அதனால் என்ன, அரச பதவிக்காக பல ஓநாய்கள் காத்துக் கொண்டு இருக்கின்றன...நல்லது...மிகவும் நல்லது...ஓநாய்கள் என்றைக்குமே நமக்கு நட்பு மிருகங்கள் தானே...' புன்னகைக்கின்றனர்... "தங்களின் ஆதரவிற்கு நன்றி அரசே...நாங்கள் வேண்டியவனவற்றை செய்ய ஆரம்பிக்கின்றோம்..." என்றவாறே விடைப் பெற்றுக் கொள்கின்றனர்.

விரைவில் கோட்டை அரசில் நல்ல செல்வாக்கினைப்  பெற்று விடுகின்றனர் போர்துகீசியர்கள்...ஆனால் செல்வாக்கு மட்டும் போதுமா நமக்குத் தேவை ஆட்சி என்ற வண்ணமே அவர்கள் செயலாற்ற ஆரம்பிக்க விரைவில் கோட்டை அரசு போர்துகீசியர்களின் கைகளுக்கு வருகின்றது. அதனை எதிர்த்து கிளர்ச்சி செய்வோர் தோற்கடிக்கப்படுகின்றனர். கோட்டை... போர்துகீசியர்களின் கோட்டை ஆகின்றது.

சரி கோட்டையைப் பிடித்தாயிற்று...அடுத்து என்ன என்று அவர்கள் பார்க்கும் பொழுது தான் எதிர்த்து நிற்கின்றன கண்டியும் யாழ்ப்பாண அரசும்.

போர்துகீசியர்கள் சிந்திக்கின்றனர்... 'கண்டி தற்பொழுது வலுவாக இருக்கின்றது...அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்...முதலில் அந்த யாழ்ப்பாண அரசினை ஒரு கை பார்த்து விட்டு வந்து விடலாம்...நாம் மதம் மாற்ற அனுப்பிய நபர்களை கொலை செய்து இருக்கின்றான் யாழ்ப்பாண அரசன் சங்கிலி... மேலும் அவர்களை விட்டு வைத்தால் இந்தியாவில் இருந்து கடல்வழி மார்கமாக உதவியினைப் பெற்றுக் கொண்டு கண்டிக்கும் உதவிக் கொண்டே இருப்பர்....இவை போதாதென்று சில நேரம் ஒலாந்தியரும் அங்கே வந்து சேரும் அபாயமும் இருக்கின்றது. ஏன் வீண் பிரச்சனைகள்...பேசாமல் யாழ்ப்பாண அரசினை பிடித்து விட வேண்டியது தான்.'

போர்துகீசியர்கள் யாழ்ப்பாணத்தின் மீது படை எடுக்கின்றனர். சில வெற்றிகள் சில தோல்விகள் என்று போராடி இறுதியில் யாழ்ப்பாணம் வீழ்கின்றது. அதன் அரசன் இரண்டாம் சங்கிலி கோவாவில் தூக்கில் இடப்படுகின்றான். யாழ்ப்பாணமும் போர்துகீசியரின் செல்வாக்குக்கு உட்படுகின்றது. மிஞ்சி இருப்பது கண்டி மட்டுமே. இது நடந்தது கி.பி 17 ஆம் நூற்றாண்டு.

ஆனால் கண்டிக்கு ஏற்கனவே புரிந்து விட்டது. தனித்து நின்று போரிட்டால் இந்தப் போரினை நாம் நிச்சயம் வெல்ல முடியாது. நமக்குத் தேவை உதவி...அதுவும் எதிரியைப் போன்றே பலம் வாய்ந்த உதவி. அப்பொழுது தான் அங்கே ஒலாந்தியர்கள் வருகின்றனர்.

ஏற்கனவே ஐரோப்பியாவில் போர்துகீசியர்களுக்கும் (Portuguese) ஒலாந்தியர்களுக்கும் (dutch/Holland people) பிரச்சனை நிலவி வந்தது (அங்கே யாருக்குத் தான் யார் கூடத் தான் பிரச்சனை இல்லாமல் இருந்தது)...அப்பிரச்சனை இலங்கையிலும் தொடர ஆரம்பித்தது. சிறிதுக் காலம் நிகழ்ந்தப் போரினில் ஒலாந்தியர்கள் வெற்றிப் பெற இலங்கையில் போர்துகீசியர்களின் செல்வாக்கு ஒரு முடிவிற்கு வந்தது.

ஆனால் போர்துகீசியர்களுக்கு பதிலாக இப்பொழுது அங்கே ஒலாந்தியர்களின் செல்வாக்கு ஓங்கி இருக்கின்றது...இதன் காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு. (போர்கள் என்றால் ஒப்பந்தங்கள் இருக்கும்...துரோகங்கள் இருக்கும்...அரசியல் இருக்கும்...இன்னும் பல பல விடயங்கள் இருக்கும். இவை அனைத்தும் இலங்கையின் வரலாற்றிலும் இருக்கின்றது...ஆனால் நம்முடையப் பயணத்தில் அவை தேவை இல்லை என்பதால் அவற்றைச் சுருக்கமாகக் கண்டுக் கொண்டே சென்றுக் கொண்டு இருக்கின்றோம்.)

கிட்டத்தட்ட 130 வருடங்கள் இலங்கை ஒலாந்தியர்களின் செல்வாக்கிலேயே இருக்கின்றது. ஆனால் பொடியன்களே பயங்கர ஆட்டம் ஆடும் பொழுது அன்றைய பெரிய அண்ணன் சும்மா இருப்பாரா என்ன?

"மிகப்பெரிய இந்தியாவினையையே பிடித்தாயிற்று...பின்னர் ஏன் அதன் காலுக்கு கீழ் இருக்கும் தீவினை மட்டும் விட்டு வைக்க வேண்டும்? சில நேரம் பிரெஞ்ச் வீரர்கள் அதனைக் கைப்பற்றிக் கொண்டால் தேவை இல்லாத தலைவலியே மிஞ்சும்...ஏனப்பா நமக்குத் தலைவலி... விடு அத்தீவையும் தான் பிடித்து விடலாமே...என்னத் தான் குறைந்துப் போய் விடும்...அப்பா...தீவில் யார் இருக்கின்றீர்கள்...ஓ..ஒலாந்தியரா...அண்ணன் வருகின்றேன்...மரியாதையாக வழி விடுகின்றீர்களா...நன்றிகள் ஆயிரம்" என்றவாறே இலங்கைக்குள் நுழைகின்றது இங்கிலாந்து. அக்காலம் கி.பி 18 ஆம் நூற்றாண்டு.

இலங்கையின் இன்றையப் பிரச்சனைகளுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்து வைத்த ஒரு நூற்றாண்டு...!!!

தொடரும்... பகுதி-2 பார்க்கவும்.
__________________________________
யாழறிவன்.... Yalarivan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக