திங்கள், 1 டிசம்பர், 2014

பழையாறையில் தமிழ் பிராமி எழுத்துடன் பானை ஓடு கண்டெடுப்பு

பழையாறையில் தமிழ் பிராமி எழுத்துடன் பானை ஓடு கண்டெடுப்பு

    பழையாறையில் கண்டெடுக்கபட்ட தமிழ் பிராமி எழுத்து பொறிப்புள்ள பானை ஓடு.
    பழையாறையில் கண்டெடுக்கபட்ட தமிழ் பிராமி எழுத்து பொறிப்புள்ள பானை ஓடு.

கும்பகோணம் அருகேயுள்ள பழையாறையில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர் மா. சைலேஷ் தனது ஆய்வுக்காக கும்பகோணம் பகுதியில் உள்ள பழையாறை சோமநாதசுவாமி கோயில் அருகே அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சங்க காலத்தைச் சேர்ந்த தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார்.

இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. புலிமான் கோம்பை, தாதப்பட்டி (தேனி மாவட்டம்), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) ஆகிய இடங்களில் இந்தியாவிலேயே மிகப் பழமையான தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள நடுகற்களைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டெடுத்தனர்.

தற்போது கண்டெடுக்கப்பட்ட இந்தப் பானை ஓட்டில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளன எனக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைப் பேராசிரியர் சு. ராசவேலு, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் வீ. செல்வகுமார் கூறினர்.

இந்தப் பானையில் இருந்த எழுத்துப் பொறிப்பு தொடங்கும் மற்றும் முடியும் பகுதிகள் உடைந்துவிட்டன. எனவே, இதை முழுமையாகப் படிக்க முடியவில்லை. நல்ல நிலையில் உள்ள மூன்று எழுத்துகள் இசாய் ஆகும்.

பழையாறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1964-லிலும், தமிழக அரசு தொல்லியல் துறை 1984-லிலும் அகழாய்வு செய்தன. அப்போது, கருப்பு - சிவப்புப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டெடுக்கப்படவில்லை. இந்தக் கண்டெடுப்பின் மூலம் பழையாறை சங்க காலத்தில் சிறந்த ஊராக இருந்தது என்பதும், அங்குள்ள மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதும் தெளிவாகிறது. மேலும் பழையாறை சோழர்களின் தலைநகரமாகவும் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.
___________________________________

யாழறிவன்.... Yalarivan Jacksan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக