செவ்வாய், 2 டிசம்பர், 2014

மாதகல் மயில்வாகனப் புலவர்

மாதகல் மயில்வாகனப் புலவர்

யாழ்ப்பாணம்  மதகற்கிராமத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். கண்டியரசன் மீது கிள்ளைவிடு தூது பாடிய மாதகல் சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையிலே தம்மாமனாரிடம் கல்விகற்று சிறந்த பாண்டித்தியமடையலானார். இவர் வையா எனும் புலவர் மரபிலே உதித்தவர். அது

    நெய்யார்ந்த வாட்கைப் பரராச சேகரன் பேர்நிறுவி
    மெய்யாக நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரித்துரைத்த
    வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன் மாதவங்கள்
    பொய்யாத வாய்மைப் புலியூரந்தாதி புகன்றனனே

என்னும் புலியூரந்தாதிச் சிறப்புப்பாயிரச் செய்யுளாலறியப்படுகின்றது. இச்செய்யுள் வரதபண்டிதர் பாடியதெனப்பொதுவாக நம்மப்படுகின்றது, வையா எனும் புலவர், சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் காலத்தில் (கி.பி 1380-1414) சமஸ்தானப் புலவராய் கீர்த்தியுடன் விளங்கினார். இவர் வையாபாடல், பரராசசேகன் உலா, பரராசசேகரன் இராச முறை என்னும் நூல்களின் ஆசிரியர்.

மயில்வாகனப் புலவருடைய வரலாறு திரு. அ. சதாசிவப்பிள்ளையவர்கள் எழுதிய “பாவலர் சரித்திர தீபகம்” எனும் நூலிலும், திரு. அ. குமாரசாமிப்புலவர் அவர்கள் எழுதிய ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்’ எனும் நூலிலும், வயாவிளான் திரு. க. வேலுப்பிள்ளையவர்கள் வெளியிட்ட ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’யிலும், வித்துவான் பிரம்மசிறீ சி. கணேசையர் அவர்கள் எழுதிய ‘ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் எனும் நூலிலும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது,

யாழ்ப்பாணம், வண்ணை வைத்தீஸ்வரசுவாமி கோயிலைக் கிபி 1787 இல் கட்ட ஆரம்பித்து 1791 இல் திருப்பணியை முடித்து கும்பாபிடேகம் செய்வித்த தர்மப்பிரபுவாகிய வைண்ணை வைத்திலிங்கச் செட்டியாரும், மயில்வாகனப்புலவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இவ்விருவரும், இந்தியாவினின்று யாழ்ப்பாணத்தில் வந்திருந்த கூழங்கைத்தம்பிரானிடம் ஒருங்கு கற்றனர். கூழங்கைத்தம்பிரான் ஒரு பாடத்தை ஒரே முறையன்றி இரண்டாம்முறை சொல்லிக்கொடாரென்றும், வைத்திலிங்கச்செட்டியர் ஒரே முறையிற் கிரகிக்கத்தக்கவரல்லரென்றும், மயில்வாகனப் புலவர் ஒரே முறையிற் கிரகிக்கத்தக்க, சிறந்த ஞாபகசகத்தியுடையவரென்றும், அதனால் தம்பிரான் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை மயில்வாகனப்புலவர் ஒரேமுறையிற் கிரகித்து வைத்திலிங்கச்செட்டியாருக்கு மீளச்சொல்லிக்கொடுப்பாரென்றும் சரித்திராசிரியர் சிலர் கூறுவர். இதனால், மயில்வாகனப்புலவர் சிறந்த ஞாபகசகத்தியுடையவர் என்பது புலனாகின்றது.

மயில்வாகனப் புலவர் காலம்

கல்வளையந்தாதி, மறைசையந்தாதி, பறாளை விநாயகர் பள்ளு, கரவை வேலன் கோவை முதலிய நூல்களை இயற்றிய நல்லூர் சின்னத்தம்பிப் புலவரும், சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம், பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிய வரதபண்டிதரும், மயில்வாகனப்புலவரும் ஒரே காலத்தினர் எனச் சரித்திராசிரியர் சிலர் கருதுகின்றனர். மயில்வாகனப்புலவர் இயற்றிய யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுளில், மேக்கறூண் எனும் ஒல்லாந்து தேச மன்னன் பெயர் குறிப்பிடப்படுதலால், அது கிபி 1736ல் கொம்மந்தோராயிருந்த இயன் மக்காராவையே குறிக்குமெனக் கருதி, இப்புலவர் காலமும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகுமென யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காலஞ்சென்ற பிறக்ரர் திரு. வ. குமாரசுவாமி அவர்கள் ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையில், 1934ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் இக்கொள்கையை விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

மயில்வாகனப் புலவர் அவர்களின் பிற்காலச் சீவியத்தையும் அவரது காலத்தையும் கரவை வேலன் கோவை பதிப்பித்த பிரம்மசிறீ தி. சதாசிவஐயர் அவர்கள் அரிதில் முயன்று ஆராய்ந்து, அப்பதிப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். அதனை ஈண்டெடுத்துக் காட்டுதல் பொருத்தமுடையதாகும் என நம்புகின்றோம்.

கிபி 1805 ஆம் ஆண்டில் வைத்திலிங்கச் செட்டியார் தம் ஆஸ்திகளைப்பற்றி மரணசாதனப்பத்திரம் பிறப்பித்தார் என்பது அப்பத்திர வாயிலாகவே இன்றும் நாமறியக்கிடக்கின்றது. அங்ஙனம் பத்திரம் பிறப்பித்த பின்னர், செட்டியார் பெரும்பொருள் எடுத்துக்கொண்டு, வேண்டிய பரிசனங்களுடன் தம் தோழராகிய மயில்வாகனப்புலவரையும் அழைத்துக்கொண்டு காசிக்கு பிரயாணமானார். வழியிலும் காசிப்பதியிலும், பல தரும தாபனங்கள் செய்து, அங்கு சிறிது காலத்திற் செட்டியர் கால கதியடைய, மயில்வாகனப்புலவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, மேலும் சிலகாலம் வாழ்ந்திருந்தனர். அப்போது அவரால் எழுதப்பட்ட கந்தபுராண ஓலைச்சுவடி ஒன்று இப்பொழுதும் மாதகலில் அவர் வழித்தோன்றலாகிய ஒருவரிடம் இருக்கின்றது. அவ்வேட்டின் இறுதியில் முந்தின கையெழுத்திலேயே,

    ஈசன் மைந்தன் புராண மெழுதினோன்
    தேசு லாவு திருவளர் மாதையூர்
    மாசி லாமணி மாமகன் மைந்தனாம்
    காசி காண்மயில் வாகன யோகனே

எனும் செய்யுள் எழுதப்பட்டிருக்கின்றது. இச்செய்யுளால் மயில்வாகனப் புலவர் காசிக்குச் சென்று மீண்ட சம்பவம் நன்கு தாபிக்கப்படுகின்றது, 1814ம் ஆண்டில் மாதகற் பகுதியல் பெருவெள்ளம் ஒன்று நிகழ்ந்ததென்றும், அவ்வெள்ளத்தையும் அதனால் நிகழ்ந்த சேதத்தையுங்குறித்து ஓர் அம்மானை மயில்வாகனப் புலவராற் பாடப்பட்டதென்றும் அவர் வழித்தோன்றலாயுள்ளோர் கூறக்கேட்டலின், மயில்வாகனப் புலவர் கிபி 1814ம் ஆண்டில் வாழ்ந்திருந்தாகல் வேண்டும். ஆகவே, அவர் செய்த ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னுஞ் சரித்திர நூல் கிபி 1736ம் ஆண்டில் இயற்றப்பட்டதென்னுங் கொள்கை எவ்வாறு பொருந்தும் என்பது அறிஞர்கள் ஆராயத்தக்கது. 1736இல் மயில்வாகனப் புலவரும், சின்னத்தம்பிப் புலவரும், பத்து வயதுக்குட்பட்ட சின்னஞ் சிறுவர்களாகவே இருந்திருப்பார்கள். இவ்வறிஞருடைய கொள்கைப்படி மயில்வாகனப்புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியென கருத இடமுண்டு. மயில்வாகனப் புலவர் வண்ணை வைத்திலிங்கச்செட்டியார் காலத்தில் வாழ்ந்தவராதலின், இப்புலவர் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இருந்திருக்க வேண்டும் என முதலியார் இராசநாயகம் அவர்கள் கருதி அவ்விடயம் பற்றி ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையில் (29-10-34) ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார்கள். சதாசிவ ஐயர் அவர்கள் கொள்கையும் இதற்கு ஆதரவளிக்கின்றது. அதனை மேலே காட்டியுள்ளோம். ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்’ என்னும் நூலினை 1916ம் ஆண்டில் வெளியிட்ட சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களும், “காலம் ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் என்பர்’ எனக் கூறியிருத்தலும் இக்கொள்கைக்கு ஆதரவளிக்கின்றது. இன்னும் ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ என்னும் நூலில், இப்புலவர் காலத்தை விபரிக்குமிடத்து, ‘மயில்வாகனப் புலவர் வைபவ மாலையை இயற்றிய காலம், 1736 வரையிலென மெஸ். விருத்துரை (Britto) கூறிப்போந்தார். ஆயின் வைத்திலிங்கச்செட்டியாரோடு அவரைக் கூழங்கைத்தம்பிரானிடம் பாடங்கேட்டவராகச் சொல்லும் ஐதீகத்தின்படி அந்நூலியற்றிய காலம் இன்னும் ஐம்பது வருடம் வரையிலென்றாலும் பிற்பட்டதேயாகவேண்டும்.” எனக்கூறப்பட்டிருத்தலும் ஈண்டு ஒப்பிட்டு நோக்கற்பாற்று. ஆயின், அரசாங்க சாசன பாதுகாப்பு நிலையத்திலுள்ள (Archives) டச்சு காலத்துப் பத்திரங்களில் 1706-ஆம் ஆண்டில் பீற்றர் மக்காரா என்பவர் பிசுக்கால் அதிகாரியாக யாழ்ப்பாணத்தில் இருந்தார். (Pieter Macare – Independent Fiscal of the Jaffna Pattam in 1706) என்னுங் குறிப்புக் காணப்படுதலால், இவருடைய கேள்விப்படியே மயில்வாகனப்புலவர் 1706ல் வைபவமாலையை இயற்றினார் எனத் திரு. வ. குமாரசுவாமியவர்கள் இந்து சாதனப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றிற் குறிப்பிட்டுள்ளார் (A Peep into Dutch Archives in Ceylon by V. Coomaraswamy B.A – Hindu Organ of 3-2-1936). காலியில் கொம்மாந்தராயிருந்த இயன் மாக்காரா யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தில் நாட்டமுடையவராய் இருந்தார் என்பது பொருத்தமற்ற கூற்று என்பதைப் பிள்ளையவர்கள் ஒத்துக்கொண்டு, மயில்வாகனப் புலவர் வைபவமாலையை இயற்றிய காலம் 1706ம் ஆண்டென்றெ கொள்கின்றார். ஆனால், பிசுக்கால் அதிகாரியாயிருந்த ஒருவனை உலாந்தேசு மன்னன் என மயில்வாகன்ப் புலவர் குறிப்பிட்டிருப்பாரோ என்பது ஐயத்துக்கிடமானது. எனினும் அவ்வதிகாரியையே உலாந்தேசு மன்னன் எனப் புனைந்துரையாகப் பாடியிருத்தல் கூடுமெனக்கொள்ளலாம். அங்ஙனமாயின், மயில்வாகனப்புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியென கொள்ள வேண்டும்.

எனவே, மயில்வாகனப் புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியெனக்கொள்ளுவார் ஒரு சாரார். 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக்கொள்வர் பிறிதொரு சாரார். சிறப்புப்பாயிரத்திற் கூறப்பட்டுள்ள, மேக்கறூன் என்பவர் யார் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளும் வரை, மயில்வாகனப்புலவர் காலத்தையும் திட்டமாகக் கூறல் கஷ்டமானது. எனினும், வண்ணை வைத்திலிங்கச்செட்டியாரும் மயில்வாகனப்புலவரும் கூழங்கைத்தம்பிரானிடம் பாடங்கேட்டதாக கூறப்பட்டாலும், செட்டியாருடன் காசியாத்திரை செய்த மயில்வாகனப்புலவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து மேலும் சிலகாலம் வாழ்ந்திருந்தனர் என திரு. தி. சதாசிவஐயர் அவர்கள் தக்க சான்றுடன் நிறுவியிருத்தலாலும், மயில்வாகனப்புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக்கொள்வதே சாலப்பொருத்தமுடையது.
___________________________________

யாழறிவன்... Yalarivan Jacksan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக