வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை.

தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை.....!.

குமரிக்கண்டத்து இசை!
உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே. தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்.
___________________________________
யாழறிவன்... Yalarivan Jacksan

1 கருத்து: