ஞாயிறு, 9 நவம்பர், 2014

தமிழரும், தமிழும் பற்றிய மிகச்சிறு கட்டுரை

தமிழரும், தமிழும் பற்றிய மிகச்சிறு  கட்டுரை

-----------------------------------

தமிழராய்ப் பிறந்தோம் ஆனால் டமிளராய்த்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதரில் முதல் மனிதன் ஆதாம் என்பது ஒரு கருத்தென்றாலும் அந்த ஆதமைப் படைத்தவன் எந்த கடவுள் என்பதில் இந்த மனிதன் பிரிந்துதான் இருக்கின்றான். "மனிதன் என்றுமே ஏதோவொரு பிரிவினைக்கு உட்பட்டவன் போலும்". அப்படி ஏதோ ஒரு விளைவின் காரணமாகப் பிறந்து இன்று "தமிழர்" என்று இருக்கும் நம்மைப்பற்றிய நாம் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை.

நாம்தான் தென்னிந்தியாவின் முதல் மக்கள் ஆனால் நாம் மத்திய ஆசியா, வட ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து தென்னிந்தியா வந்ததாகவும் கருதப்படுகிறோம். என்பதில் அறியலாம். நம்மையே நாம் அறியமுடியாத பழமைச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று. மேலும் நாம் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றோம். அதென்ன திராவிடர்கள்??? நமது தாய்மொழியாம் தமிழுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு இந்த மொழிகள் பேசுபவர்களையே திராவிடர்கள் என்றும் விளிக்கப்படுகிறது.

மேலும் சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் அல்லது தமிழர்கள்தான் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இக்கருத்து இன்னும் சர்ச்சையில்தான் இருக்கிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

மேலும், இந்த மொழிக்குடும்பத்தில் மட்டும் மொத்தம் 85 மொழிகளாம். இதில் விந்தை என்னவென்றால் ராபர்ட் கார்டுவெல் என்ற அயர்லாந்துக்காரர் இந்த திராவிட மொழிகளின் ஒப்புமையைப் பற்றி ஆராய்ச்சி செய்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை 1856 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இவரே "திராவிட மொழி நூலின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார். நமது மொழியின் சிறப்பை நம்மைவிட மற்றவர்களுக்குத்தான் அதிகம் தெரிந்துள்ளது என்பது வேதனையான செய்தி.

கி.மு.6000 ஆண்டுகள் பழைமையான சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றியேதும் உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் அங்குள்ள இலிங்க வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் கிடைத்துள்ள சான்றுகளின்படி இன்றைய இந்து சமய வழிபட்டு நாகரீகம் அப்பொழுதே தோன்றியிருப்பது வெளிச்சமாகிறது. மேலும் ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் உள்ள குறியீடுகள், நமது தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரியது.

நமது தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. நாம்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பதில் அனைவரும் பெருமைபடுதலுடன் ஒற்றுமையுடன் பெருமை சேர்க்கவும் வேண்டியது அவசியம்.

இதைவிட இது நமது மண்தான் என்பதற்கான ஆதாரங்களும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. கி.மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மண்ணில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களும் நமது இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புக்களும் ஒத்துப்போகிறது என்பது இது நமது மண்தான் என்பதை ஆணித்தரமாய் பறைசாற்றுகிறது. ஆனால் நமக்குத்தான் நமது நாடு என்றால் இளக்காரம்.

ஒரு காலத்தில் நமது தமிழ்நாடு மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது. இன்றும் சிலர் அப்படித்தான் அழைக்கின்றனர் என்பது கொடுமையானது. இதனை தமிழ் நாடு என்று மாற்றுவதற்காக 1956 ஜூலை 27 ல் உண்ணாவிரமிருந்து உயிர்துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார் என்பவர். இவரது கொள்கையை அப்போதைய காங்கிரசும் ஏற்கவில்லை. தொடர்ச்சியாக 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த பின்னரே 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. ஒரு உயிரை பலிகொடுத்தே நாம் நமது உரிமையை நிலை நாட்டியிருக்கிறோம். ஆனால் இதனை டமிள் நாடு என்று கூறும் தமிழராய்ப் பிறந்த சில தமிழை கெடுக்கும் கோடாரிக்காம்புகளும் இருக்கின்றனர்.

இது நமது நாடு, நமது மண், நமது மொழி என்ற பெருமையைக் கட்டிக்காப்பது நமது கடமையேயாம். கல் தோன்றா காலத்தே முந்தோன்றிய மூத்தகுடி நாம். பலவகை சிறப்புக்கள் வாய்ந்தது நமது மொழி. தமிழராய் பிறந்த நாம் ஏன் தமிழில் பேசுவதற்கு மட்டும் கூச்சப்படவேண்டும். நாலு பொண்ணுங்களை பார்த்தா நாக்குல தமிழ் வரமாட்டேங்குது. நாக்கு சிக்கிக்கிது. அப்டி என்னங்க கூச்சம்? இந்தப் பைந்தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் பெருமைப்படவேண்டும்

ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே இந்த சமுதாயம் நம்மை மதிக்குமாம். என்ன ஒரு அபத்தமான கருத்து இது. நாம்தான் சமுதாயம் என்பதை ஏன் மறந்துவிடுகிறோம். தோழர்களே, ஒன்று மட்டும் நாம் மறந்துவிடவேண்டாம். இது நமது தாய்மொழி. தாயை மதிப்பது போலவே இதனையும் நாம் மதிக்கவேண்டும். இங்கு உள்ளவர் எவர் தம் தாயை பழிப்பர்?! எவருமில்லை. ஆனால், தாய் மொழியில் பேசுவது மட்டும் கேவலம் என்று நினைக்கிறோம். நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். தமிழிலேயே பேசுவோம். தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம். நமது பெருமையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.

யாழறிவன்.. Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக