திங்கள், 10 நவம்பர், 2014

தமிழர்களின் சுவடுகள் தென் கிழக்காசியாவில்

தமிழர்களின் சுவடுகள் தென் கிழக்காசியாவில்

பகுதி-1

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு.அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா,ஜாவா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது.உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) ஸ்வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.
பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராஜ சூய யாகமொன்றை இந்திரப்பிரஸ்தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் ஜாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட ஸ்வர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார்.ஸ்வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் ,பாரத் என்றால் நாடாகும்

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம். பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா,கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள்.மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார். பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள்.வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள்,நாளாடைவில் இங்கு குடியிருபுக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்.

சோழ பாண்டிய நாடுகளின் வாணிகம் திரையர் வசம் இருந்தது. பாண்டிய நாட்டு மக்கள் வாரலாற்றுக் காலத்திற்குமுன் தொட்டே கடலோடிகளாக இருந்தனர். அவர்களின் தலைநகரம் இராமயணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் தலைநகரமாகிய கபாடபுரத்தின் வாயிற் கதவுகள் பொன்னாலும் இரத்தினக் கற்களலும் அலங்கரிக்ப்பட்டன என்று இரமாயணம் கூறுகிறது. குமரி, கொற்கை, காயல், பாம்பன் முதலியவை பாண்டியர்களின் துறைமுகப்பட்டினங்களாக இருந்தன. கடல் கடந்து கடாரம்,சாவகம்.கம்போஜம்,இந்திரபுரம்.சீனம் வரை வாணிகம் நடத்தினார்கள். உருத்திர கண்ணனார் என்னும் புலவர் இளம்திரையனைப் பற்றிப் பாடியுள்ளார். வேங்கடத்தை தலைநகராக உடைய திரையனைப் பற்றி அகநானுறு (85,340) கூறுகின்றது.இறையானரகப் பொருளுரை இளந்திரையம் என்னும் நூலையும் திரையன் மாறன் என்னும் அரசனையும் குறிக்கிறது.

சோழ மன்னர்கள் கெடாவையும், சயாமையும் ஆண்ட செய்தியும், முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட குறிப்பும், சோழன் கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட வரலாறும் நம் பழம்பெரும் இலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் உணரமுடிகிறது. பர்மியர்களிடையே விஷ்ணு வழிபாடு பரவலாகக் காணப்படுகிறது. பல கல்வெட்டுகளில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பர்மாவின் பழங்கால தலைநகரமான புரோம் வைணவ வழிபாட்டின் மையமாகத் திகழ்கிறது. புரோம் நகருக்கு "புகநாம்யோம்" என்ற பர்மியப் பெயரும் உண்டு. இதற்கு பொருள் "விஷ்ணுபுரம்" என்றாகும். மாறன் என்ற சொல் - இந்திய மண்னர்களில் குறிப்பாக தமிழ் நாட்டு பாண்டிய மன்னர்களில் புகழ் மிக்க ஒரு சொல்லாக தெரிகிறது.பாண்டியர்களின் ஆளுமைக்குட்பட்ட மாறன்மார் தேசம்தான் இன்றைய மயன்மார் நாடா என்பது ஆராயவேண்டிய விஷயம். மாறன் மகா வம்சம் என்பது பண்டைய கெடாவின் சரித்திர நூல். மாறன் மகா வம்சன் கடாரத்தின் முதல் மண்னன் ஆவான். ஆனால் அவர்களின் புனைவு கதைகளில் ரோம் ராஜியத்தின் இளவரசியை சீன இளவரசனுக்கு மணமுடிக்க அனுப்பி வைகப்படும் ஒரு கடற்படையின் தலைவானாகவும் இன்றைய இந்திய கோவாவில் இருந்து புறப்படும் படை சில கருட இனத்தவரின் தாக்குதலை முறியடித்து கெடாவில் இந்திய சாராஜ்ஜியத்தை நிறுவிய முதல் மன்னாக மாறன் மகாவம்சனின் கதை சொல்லப்பட்டிருகின்றது.

மதுரையை ஆண்ட பாண்டியன் ஒருவன் சாவகம் என்னும் சாலித் தீவை கைப்பற்றி, அதன் கடற் கரையில் அலைநீர் அலசுமாறு ஒரு பாறையில் தன் அடிச்சுவட்டைப் பொறித்து வைத்தக் காரணமாக வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டார். இவருடைய காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு. சாலி என்பது சாவகத்தின் பழையப்பெயர். சாவகம் ஒரு காலத்தில் தமிழாட்சிக்குட்பட்டிருந்தமைக்கு சான்றாக இன்றும் சில பட்டிணங்கள் பாண்டியன்,மதியன்,புகார்,பாண்டிவாசம், மலையன்கோ,கந்தழி செம் பூட்செய்,மீனன் காப்பு என்று தமிழ்ப்பெயர்களில் வழங்கி வருகிறது. சாவகத்தின் அருகில் மதுரா (மதுரை) என்ற தீவும் உண்டு. கி.பி. 114ல் ஜாவாவை ஆபுத்திரன் என்ற அரசன் ஆண்டதாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஜாவாவை “ஆபுத்திரநாடு” என அழைக்கப்பட்டது. மனிமேகலை ஜாவா நாட்டிற்கு சென்ற சமயம் அங்கு தமிழ் மொழிப்பேசப்பட்டது என கூறப்படுகிறது.

வால்மீகி முனிவர் இராமயனாத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஸ்வர்ண தீபத்தைற்கு ராஜ சுக்கிரவன் தூதுவர்களை அனுப்பி சீதையை தேடும்படி அனுப்பியிருகின்றார். கி.மு. 200ல் சுமத்திராவை ‘’ இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “ புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள். சுமத்திராவில் “மலையு” என்ற ஊர் உண்டு. இது மலையூர் மறுவி மலையுவுக மாற்றம் பெற்று இருக்கலாம். இங்கிருந்து மலாய் மொழி பரவியதாகவும் சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. ஸ்ரீவிஜயா என்ற ராஜியம் இப்பொழுது சுமத்திரா என்ற தீவில்தான் அமைந்திருந்தது. இதி ஸிங் என்ற சீன தூதர் கெடாவிலிருந்து நாகப்பட்டிணம் நாவாய் மூலம் முப்பது நாட்களில் சேரலாம் என்று எழுதியுள்ளார்.

கடாரம் என்பது அக்காலத்தில் ராஜேந்திர சோழனால் அமைக்கப் பட்ட வியாபார மையமாகவும், ஆட்சிப் பீடமாகவும் இருந்தது, இதற்கன சான்றுகள் ‘பட்டிணபாலை’ என்ற தமிழ் கவிதையில் இருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமிற்றி அப்பொழுது வியாபாரத்திற்கு வந்து சென்ற அரபு மற்றும் சீன நூல்களிலும் பூஜாங் பள்ளத்தாக்கை பற்றி நிறைய தகவல்கள் இருபதாக Braddly மற்றும் Wheatly-யின் ஆராய்சியில் கூறியிருக்கிறார்கள்

கண்டெடுக்கப்பட்ட ஐம்பதுக்கு மேற்ப்பட்ட கோவில்கள் அல்லது புத்த வழிப்பாட்டு தளங்கள் மலேசியா நாட்டின் வடப்பகுதியான கடாரம் மலேசியாவின் நாகரிக தொட்டில்லாகவும் இருந்துள்ளது அதே சமயம் இந்து சமயமும் காலச்சாரமும் இந்த நாட்டில் ஆதி பண்பாட்டுக் கூறுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
____
கி.பி 1014 சோழ மன்னர் இராஜ ராஜன் சீன சக்ரவத்திக்கு வர்த்தக தூதுவர்களை அனுப்பினார். கி.பி 1077ல் சோழ மன்னர் குலோத்துங்கன் 70 வர்த்தக தூதுவர்களை கெடா வழியாக சீனாவிற்கு அனுப்பினார். பழங்காலத்திலிருந்து தமிழக வர்த்தகர்கள் கெடாவுடன் வர்த்தக தொடர்பு கொண்டிருத்தார்கள்.. மாறன் மாஹா வங்ச ஆட்சியில் போது அநோகர் கெடாவில் வந்து இறங்கி பூலோ செராயில் பாய்மரக்கலங்களுக்கு தண்ணீர், விறகு கட்டைகள் வாங்கியிருகிறார்கள்.

சீன வரலாறு கூறுகிறது கெடா மன்னர் ஸ்ரீ விஜய கி.பி 1003,1008ல் தூதுவர்களை சீனாவுக்கு அனுப்பியுள்ளார். கி.பி 1886ல் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஜமாலிதின் தலைமையில் வர்த்தக குழுவை கெடா வழியாக சீனாவுக்கு அனுப்பியுள்ளார். கி.பி1008ல் உள்ள தமிழ் வடமொழி நூல்கள் கூறுகிறது புத்த கோவில்கள் கட்டுவதற்கு சில கிராமங்களை கொடுத்தாகவும்,இரண்டு புத்த ஆலயங்கள் பலம்பாங்கிலும் கெடாவிலும் கட்டியதாய் காணப்படுகிறது. கி.பி 1006ல் இராஜ சோழர் ஸ்ரீ விஜியாவிற்கு நாகப்பட்டினத்தில் புத்த கோவில்கள் கட்டுவதற்கு நிலமும் கோவில் செலவுக்கு இரண்டு கிராமங்களீன் நில வரியை கொடுத்திருகின்றார்.

ஸ்ரீ விஜய பல்லவ ராஜா மார விஜயத்தோமவர்மன் கெடா ராஜா சோதமணிவர்மன், கெடா ராஜா மகன் சங்கிரிமா விஜயங்க வர்மன் இவர்களும் கோவில் கட்டினார்கள். சோதமணி வர்மன் கோயிலில் உள்ள புத்தர் சிலைக்கு அதிக தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டது, இதற்கு அதிக மானியம் குலோத்துங்க மன்னன் கொடுத்தான்.

கடல் வழி வாணிகம் பரவியிருந்தவிடமெல்லாம் இக்குழுக்கள் இயங்கி வந்துள்ளனர். கடல் கடந்த நாடுகளிலும் தான். ஸ¤மத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்று கி.பி. 1010-ல் பொறிக்கப்பட்டது. அதில் ஆயிரத்து ஐந்நூற்றுவர் கொடுத்த கொடை பற்றி சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது இதன் பொருள், சுமத்ரா தீவில் தமிழர் வணிகர் குழு ஒரு முக்கிய இடத்தைத் தம் இடமாகக் கொண்டு அங்கு இறங்கும் கப்பல் தலைவனும், மரக்காயர் எனும் முஸ்லீம் வணிகர்களும் எவ்வளவு தங்கம், கஸ்தூரி செலுத்திய பிறகே தரை இறங்கவேண்டும் என்ற வரி வசூலைப்பற்றிய கொடை இது. இது வணிக மேலாண்மையையும், அவர்கள் செயல்படும் விதிமுறைகளையும் சொல்கிறது. சீன நாட்டிலும் 1281-ல் சம்பந்தப் பெருமாள் என்னும் தமிழ் வணிகன் அந்நாட்டு அரசன் செக்கா சைக்கான் (குப்ளே கான்) அனுமதியுடன் சிவ பெருமானின் உருவத்தை பிரதிஷ்டை செய்கிறான், அரசனின் நன்மையை முன்னிட்டு. இக்கோவிலின் பெயர் திருக்கானேஸ்வரம். இதற்கு முன்னோடிகளுண்டு. கி.மு. 140-86-ல் ஹ¥வாங் சு (காஞ்சீபுரம்) வோடு வணிக தொடர்புகள் இருந்தன. கியோ தங்க் சு என்ற சீன நூல், சீன வணிகர்களுக்காக, பல்லவர்கள் கோவில் கட்டித் தந்ததாகச் சொல்கிறது. இம்மாதிரியான பரிமாறல்கள் மனித உறவுகளுக்கும், நாடுகளிடையே உறவுக்கும், கடைசியாக வணிக வளர்ச்சிக்கும் உதவுகின்றன மேலும் இவ்வணிகர் குழுக்கள் (அக்காலத்திய Chambers of Commerce) தம் விதிமுறைகளையும் வரிகளையும் தாமே நிர்ணயித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான குழுக்கள் கி.பி. ஓன்றாம் நூற்றாண்டிலிருந்து 9ம் - நூற்றாண்டு வரை தொடர்ந்து பின் படிப்படியாக குறைந்துள்ளதாகத் தெரிகிறது இவையெல்லாம் பழங்கால இடைக்கால கடல்வழி வாணிகம், தமிழ் வணிகக் குழுக்களும் வணிகப் பெருமக்களின் இமலய சாதனையை இன்றைய தமிழ் மக்கள் சாதிக்கமுடியுமா என்ற ஒரு கேள்வி எழுகின்றது.

தாய்லந்தில் கிராபி மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டு கி.பி.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் 'பெரும்பட்டன் கல்' என்று பொறிக்கப் பட்டுள்ளது. இக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்ட இடம் மணிக்குன்று. இன்னொன்று டாகுவா பா என்ற இடம். இதை தாலமி தக்கோலா என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒன்பதாவது நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டு. இங்கு ஒரு ஏரி கட்டப்பட்டதெனவும் அதை சேனாமுகத்தார், மணிகிராமத்தார் என்னும் தமிழ் வணிகக் குழுக்கள் காத்து வந்தனர் என்பதும் தெரிகிறது. இப்படி நிறைய செய்திகள் சுவாரஸ்யமானவை. தமிழ் நாட்டு நகரத்தார் தம் வணிக வரலாற்றுப் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தால், அது மிக பழமையானதும் பிரும்மாண்டமானதுமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
___

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் வர்த்தகம் சீறும் சிறப்புமாய் இருந்த 11ம் நூற்றாண்டில் இங்குள்ள மக்களால் சில தொல்லைகள் எற்படலாயின. இக் கஷ்டங்கள் இராஜ ராஜன் பார்வைக்கு வந்தவுடன் இராஜ சோழன் பலம் வாய்ந்த கடற்படையை அனுப்பினார். கி.பி 1017ல் சோழ மன்னர் ஸ்ரீ விஜியா மீது போர்த்தொடுக்க எண்ணினார். இதற்கு நாகப்பட்டினத்தில் இருந்து அனுப்புவதைக்காட்டிலும் கலிங்க துறைமுகத்தில் இருந்து அனுப்புவது இலகுவாக தெரிந்த்தது.அப்பொழுது கலிங்க நாடும் ஸ்ரீ விஜியாவும் நட்பு நாடுகளாய் இருந்தன. அதனால் கலிங்க மன்னன் தடுத்தான். கலிங்க மன்னனோடு போர் தொடுத்த வெற்றிக்கொண்ட இராஜேந்திர சோழன் பிறகு வங்க தேசத்தின் மீதும் போர்த்தொடுத்து மகிபால அரசரையும் தோற்கடித்தார்.ஜாவா, சுமத்திரா ஜெயித்தார். கி.பி 1025ல் ஸ்ரீ விஜியா செய்வேந்திர மன்னரை தோற்கடித்தார். கி.பி 1030 நிக்கோபர், கெடா “மேலயுர்” கோட்டையும் வெற்றிக்கொண்டார். இந்த விவரம் தஞ்சாவூரில் கண்டெடுக்கப்பட்ட கி.பி 1030ம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது.

இராஜேந்திர சோழனின் போர் யானை ஐரவதியை பார்மாவின் ஒரு நதிக்கரையில் குளிப்பாட்டியதனால் அந்த நதி தீரம் ஐரவதி என்று அழைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அக்காலத்தில் இராஜேந்திர சோழன் எப்படி ஒரு பெரும் படையை அலைக்கடலுக்கு அப்பால் நகர்தினார்கள் என்று பெரும் வியப்பாக இருக்கிறது.அதுவும் பெரும் யானை படையை எப்படிப் பட்ட கப்பல் மூலம் லொஜிஸ்திக் ( logistics ) என்று சொல்லப்படுகின்ற சிந்தனை எப்படி அக்காலத்தில் செயல் வடிவம் பெற்றது என்பது ஒரு வியப்புக்குரிய செய்திதான்.
இத் தமிழ் மன்னர் இலங்கா சுக ,தலைபு கொளம், பெரிய தாம்பர லிங்கம், மெய்ரித் திங்கம், மாம்பலம் மேவலிம் பங்கம்,பாஹாங் என்னும் இந்த நாடுகளையும் வென்றார். இம் மன்னன் பேரா மாநிலத்தில் டிண்டிங்க்ஸ் புருவாஸில் கங்கை நகரம் என்னும் நாட்டையும் வெற்றிக் கொண்டார் என்று சரித்திரம் பகர்கிறது.

துமாசிக் என்று கூறப்படும் இன்றைய சிங்கையும் இராஜேத்திர சோழனால் வெற்றிக்கொள்ளப்பட்டுயிருகிறது. ஸ்ரீவிஜிய மன்னன் சைலேந்த்திரன் சீன சக்கரவர்த்திக்கு அனுப்பிய ஓலையில் தென் இந்திய மன்னர்கள் தங்கள் நாடுகளை கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கெடாவை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் தான் கைப்பற்றிய கெடாவை பழைய மன்னனுக்கே திரும்ப கொடுத்தார்.இந்த விவரம் கி.பி 1068ல் கிடைத்த கல்வெட்டில் தெரிய வருகிறது. “ அலைக்கடலுக்கு அப்பால் வெகுதூரத்திலிருந்த நாடுகளை வென்றேன் .அதில் ஒரு மன்னரை பார்க்க பரிதாதபமாக இருந்தது.ஆகவே அவர் ஆண்ட கெடாவை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று கூறுகின்றார். கி.பி 1012-1120 வரைக்கும் ஸ்ரீ விஜிய பேரரசு, இந்த காலக் கட்டத்தில் மிகவும் பரந்துவிரிந்த சோழப் பேரராசின் ஆட்சிக்குட்பட்டப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்திய அரசர்களுள் கடல் கடந்து கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களின் தமிழ்ப் படை மட்டும் தான்..
_____

இராஜேந்திர சோழர் கெடா நாட்டின் ஞாபகார்த்தமாய் நாகப்பட்டினம் அருகிலுள்ள கங்கை கொண்ட சோழ புரத்தில் கோவில் ஒன்றை கட்டினார். இக்கோவிலில் கம்போடிய மன்னர் அனுப்பிய கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளது.கி.பி 1068ல் சோழ மன்னர் ராஜ கரிகாலன் வீர ரஜேந்திர குலோத்துங்கன் 1 .கெடாவிற்கு விஜயம் செய்திருகின்றார். இவர்தான் போரிலே தோற்ற ஸ்ரீ விஜய மன்னர் சங்ராம விஜய துங்கவர்மனை விடுதலை செய்துயிருகின்றார் கி.பி. 1273 யிலும் சோழ மன்னர் கெடாவிற்கு விஜயம் செய்திருகின்றார்.

கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார். "இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 6 அல்லது 7 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.

இராஜேந்திரனின் படை வீரரை ஏற்றிச் சென்ற "எண்ணிலடங்காக் கப்பல்கள்" கடல் கடந்து ஸ்ரீவிஜயத்தையும் அதைச் சார்ந்த தீவுகளையும் கைப்பற்றியது ஒரு திடீர் சாதனை அல்ல; சோழர்கள் கடைபிடித்த திட்டவட்டமான கடற்படைக் கொள்கையின் விளைவேயாகும். சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா(மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது.

9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலத்தீவு(Sri Lanka and Maldives) ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது. இவையெல்லாம் இம்முயற்சியால் சோழர் கண்ட வெற்றிகளாகும்...
_____

மாலத்தீவுக்கூட்டங்கள். கங்கை சமவெளிதீரம், அந்தமான், நீக்கோர்பர் தீவுகூட்டங்கள், தென் பர்மா,சுமத்திரா,ஜாவா, போர்னியயோவின் சில பகுதிகள்,இந்தோ- சீனா, மலேயா,முதலிய பகுதிகளிலும் வர்த்தகம், கலை மற்றும் விவசயம் பரப்பியும் குடியிருப்புக்களையும் அமைத்து பேரரசுகளை நிறுவி பெரும் வாழ்வுக்கண்டனர் தமிழர்கள். தமிழர்களின் வியபாரக் கப்பல்கள் அஸ்தேரலியா மற்றும் நியுஸ்லாந்து வரைக்கும் சென்று இருகின்றன.அது மட்டும் அன்று உலகெங்கும் தமிழர்களின் வியாபாரக்கப்பல் கொடிகள் பட்டொளி வீசி பறந்தன. எகிப்து.கிரேகம்,ரோம்.பாபிலோன், அரேபியம் மலேயா.இண்டோனேசியா, இண்டோ-சீனா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் வியபார நிமிர்த்தமாய் செண்ற தமிழர்கள் வெற்றிக்கொடி செலுத்தினர். திறைக்கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள்.

டாலமி, பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.

தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.

‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.

(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.

தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.

மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன. அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ் மணி என்று சொல்லப்டுகின்ற கப்பல் மணி ஒன்று 1836 நியுஸ்லாந்து நாட்டில் கண்டெடுக்கப்பபட்டுள்ளது. முகைதீன் கப்பல் மணி என்று தமிழிலே எழுதப்பட்ட அந்த 500 வருடத்திற்கு மேல் பழ‌மையான அந்த மணி எப்படி நியுஸ்லாந்து நாட்டில் கண்டேடுக்கப்பட்டன என்பது பெரிய ஒரு கேள்விக்குறியாக‌ உள்ளது.தமிழர்களின் கடற்பயணங்கள் வியபாரமும் வெகு காலத்திற்கு முன்பே கண்டங்களையும் தான்டி நடைப்பெற்றுள்ளன என்பதற்கு இதுவே நல்ல சாட்சி. தமிழர்கள் வீரர்கள் மட்டும் அல்ல கடற் தீரர்கள். அவர்கள் நல்ல வியாபாரிகளாகவும் இருந்துள்ளார்கள். சிறந்த கடற்கலங்களை கட்டும் விற்பனர்களாகவும் இருந்துள்ளனர்.

தமிழ் மக்கள் பண்டைய காலத்தில் தாங்கள் வாழ்கிற பகுதியை ஐந்து திணைகளாகப் பிரித்திருந்தார்கள். அதில் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் எனப்பட்டது. தமிழ் மக்கள் கடலோடிகள். கடல் காற்றையும், அலையையும், நீரோட்டத்தையும், பருவ காலங்களைப் பற்றியும் நட்சத்திர மண்டலங்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். பலதரப்பட்ட படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு மேற்கு நாடுகளுக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் சென்று விற்றார்கள். அங்கே கிடைத்த பொருட்களை வாங்கி வந்தார்கள் என்று கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் இருந்தும் - தமிழ்ச் சங்க இலக்கியத்தின் வாயிலாகவும் தெரிகிறது. அதுதான் தமிழர் கடல் வாணிகம்...
_______

தமிழர்கள் மேற்கு உலகோடும் கிழக்கு உலகோடும் தொடர்பு வைத்திருந்தாலும் கடற்பயணங்கள் பிறர் உதவியின்றி தமிழ் மக்களாளே அவை செலுத்தப்பட்டன.பாய், பாய்மரம் முதலியன தமிழ்ப் பெயர்களே.நங்கூரம் என்பதும் தமிழ்ப் பெயரே. ஓடம்,ஓதி, தோணி,தெப்பம்,கலம், கப்பல் முதலிய சொற்கள் வெவ்வேறு வகையான மரக்கலங்களை சுட்டுகின்றன.”தமிழகத்தில் கரையை அடுத்து செல்லும் மரகலங்களும் உண்டு. மரங்களை சேர்த்துவைத்து கட்டி செய்யப்பட்ட கட்டுமரம் உண்டு”என்று பிளினி கூறியுள்ளார்.

முற்காலத்தில் அறியப்பட்ட மரக்கலங்கள் இன்னும் மலையாளக் கரையில் காணலாம். கட்டுமரம் அல்லது kattumara என்பது தமிழர் கடற் ஆதிக்கத்தின் ஆங்கில வெளிப்பாடுதான்.
பஞ்சாப்பிலும் சிந்துவெளியிலும் நடத்திய புதைப்பொருள் ஆராய்ச்சியில் பழம்பொருள்கள் பல கிடைத்துள்ளன.அவை சூசா,பாபிலோன் முதலிய இடங்களிற் கிடைத்த பழம்பொருள்களை ஒத்து இருகின்றன. அப் பழம்மொருள்களின் காலம் கி.மு 3000 வரையிலாகும். மண்பாண்டங்கள்,கண்ணாடி வளைகள்,எழுத்துக்கள் வெட்டப்பட்ட முத்திரைகள் என்பன அவைகளாகும். சில ஆண்டுகளின் முன் டாக்டர் ஆர்நெர் (Dr Hornell) சூசா, இலகாஷ் என்னும் இடங்களிற் கிடைத்த கிண்ணங்கள்,கைவளைகள் இந்திய பொருள்களே எனசுட்டிக்காட்டியுள்ளார்.

எகிப்தில் கண்டுபிடிக்பட்டுள்ள பக்குவம் செய்யப்பட்டுள்ள பிணங்கள்(mummies)இந்திய அவுரி நீலத்தால் சாயமூட்டப்பட்டன.எபிரேய மொழியில் காணப்படும் துகிம்,அகலிம் என்பன தோகை அகில் என்னும் தமிழ்ச் சொற்களே என நீண்ட நாட்களுக்குமுன்பே டாக்டர் கால்டுவெல் என்னும் ஆராச்சியாளார் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாலமன் நாட்டிற்கு கி.மு1000 கப்பல்களில் தமிழகத்து பொருள்கள் சென்றன எனவும், கி.மு 3000த்தில் தெக்கு மரத் துண்டங்கள் அரேபிய நாட்டிற்கு தமிழக்த்தில் இருந்து அனுப்பப்பட்டன என்பது தமிழகத்து கடற்வாணிகம் பழமையை உணர்த்தும் சான்றுகளாகும்

கி.மு 9ஆம் நூற்றாண்டில் அசீரிய அரசனாகிய மூண்றம் சாலமன் சர் நாட்டிய தூணில் இந்திய குரங்குகளும் யானைகளும் வெட்டப்பட்டுள்ளன. இந்தியாவினிலிருந்தும் வெளி நாடுகளுக்கு அனுப்பபட்ட துணிகள் பலவகை சாயங்கள் ஊட்டப்பட்டிருந்தன என்று அரிஸ்தோபலுஸ்(Aristobulus) என்பவரின் கூற்றுகளால் விளங்குகின்றது. மகாவம்சம் என்னும் சிங்கள நூல் ஐந்து நிறங்கள் ஊட்டப்பட்ட உடைகளைப் பற்றியும், மஞ்சள் நிற ஆடைகளைப் பற்றியும் கூறுகிறது.

அரிசி என்னும் தமிழ் சொல் அராபி மொழியில் அல்ராஸ் என்றும் கிரேக்கில் அரிசா என்றும் வழங்கும். அரிசிக்கு வடமொழிப் பெயர் விரீகி, பாரசீகப் பெயர் விரிசினசி, இதனால் கிரேக்கரும் உரோமனியரும் அராபியர் மூலம்தான் அரிசியை பெற்றார்கள் எனத் தெரிகிறது. பாரசீகர் அரிசியை வட இந்தியாவில் இருந்து பெற்றனர்.கிரேக்கர்கள் அரிசியை வட இந்தியாவில் இருந்து பெற்று இருந்தார்கள் என்றால். அரிசியை குறிக்கும் சொல் அரிசா என்று இருக்காது.அது விரீகி என்று இருக்கும்.. அரிசி இந்திய பர்மா சீனா என்னும் நாடுகளுக்கு உரியது. கி.மு 2.800 இல் சீனாவில் அரிசி அறியப்பட்டிருந்தது. தென் கிழக்காசியவின் முக்கிய உணவு சோறு...
______
வரலாற்றுக் காலம் தொட்டு தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மேற்குத் தேசங்களோடும் கிழக்கு தேசங்களோடும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள். வாணிக சங்கம் வைத்தும் மற்ற தேசங்களுடன் உறவுகளை பேணியுள்ளனர்.

பல்லவர்களுடைய ஆதிக்கப் வளர்சியின் ஒரு முக்கிய விளைவு கடல் வணிகம் முன்னேற்றம் அடைந்து வணிகக் குழுக்கள் நடமாட்டம் வங்காள விரிகுடாவில் தெனிந்தியாவுக்கும் தென் கிழக்காசியாவுக்கும் இடையில் பெருகியமையாகும். இதன் ஒரு கூறாக இலங்கையுடன் நடைபெற்ற வணிகம் அமைந்தது.இலங்கையில் தமிழ் இனக் குழு மேலும் வலுப் பெறுவதற்க்கு உதவிய காரணங்களில் ஒன்று

ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் பல்லவப் பேரரசு எழுச்சி பெறத் தொடங்கியதும் தமிழ்னாட்டின் கடல் கடந்த வர்த்தகம் செழுப்புற்றது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாகத் தென்கிழக்காசிய வர்த்தகத்தில் தமிழ்னாட்டு வர்த்தகர் முக்கிய பங்கெடுத்தனர்.அவர்கள் செயல்களால் வர்த்தகம் வளர்ச்சியுற்றது மட்டுமன்றித் தென் கிழக்காசியாவிலும் இலங்கைலும் பல்லவர் பண்பாட்டுக் கூறுகளும் பவுத்த சைவ சமயங்களின் செல்வாக்கும் பரவின.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து கவனிக்கக் கூடிய ஒரு விடயமாக வணிகக் குழுக்களின் வளர்ச்சி அமைகின்றது.பல்லவ அரசின் எழுச்சி கடல் கடந்த வர்த்தகதுக்குத் துணையாக இருந்த சூழ் நிலையில் வணிகக் பெருமக்கள் தமிழ் நாட்டுத் துறைகளில் இருந்தும் இலங்கைக்கும் தென்கிழக்காசியாவிற்க்கும் கூடுதலாகச் செல்லும் அளவுக்கு வலுப் பெற்றன.இதனை வெளிப்படுத்தும் தொல்லியல் சன்றுகள் தமிழ் நாடு,இலங்கை,மற்றும் தென்கிழக்காசிய நாடுகளாகிய தாய்லாந்து,வியட் நாம் அகிய இடங்களில் கிடைதுள்ளன.இவ்விடங்களில் தென்னிந்திய வணிகக் குழுக்கள் மேற் கொண்ட நடவடிக்கைகளில் பவுத்த சங்கத்தார்,பிராமணர்கள்,மற்றும் சிற்பிகள் ஆகியோரும் பங்கு கொண்டனர்.கிழக்கு கரைத் துறைகள் குறிப்பாக நாகபட்டினம்,மாமல்லபுரமும் வங்காள விரிகுடாவுக்கு அப்பால் கிழக்கு இலங்கயின் துறைகளாகிய பல்லவ வங்கம்,திருகோணமலை ஆகிய துறைகளுடன் தென் கிழக்காசியாவில் தாய்வான் தங்குவா பா, வியட் நாமின் ஒகியோ ஆகிய துறைகளுடனும் வர்த்தக மார்க்கங்களால் தொடுக்கப்படிருந்தன.

பல்வ ஆதிக்கத்தின் ஒரு கூறாக மன்னர் பெயர்கள் பல அரசுகளில் பல்லவ மன்னர் பெயர்கள் போன்று வர்மன் என்ற இறுதிச் சொல்லைக் கொண்டிருந்தன.தென்கிழக்காசிய அரசுகளில் இந்திரவர்மன்,ஜயவர்மன் ஈசானவர்மன் யசோவர்மன் பூர்ணவர்மன் போன்ற பெயர்கள் அய்ந்தாம் நூற்றாண்டில் பரவலாக வழங்கின.

ஒன்பதாம் நூற்றாண்டில் மணிக்கிராமத்தவர் தாய்லாந்தின் தக்குவாபா என்னும் துறையில் பல வகைப்பட்ட முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு அவ்விடத்தில் கிடைத்த தமிழ் கல்வெட்டு ஒன்று சான்று பகருகின்றது.இதே நூற்றாண்டில் இவ் வணிகக்குழுக்கள் கேரளக் கரையோரத்திலும் பல முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சோழராட்ச்சியின் போது ஐஞ்ஞாற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் முக்கியமானவர்கள்.இவர்கள் தொடர்ந்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை செல்வாக்குப் பெற்றிருந்தனர்.பல இடங்களில் எறிவீர பட்டணம் என்ற நிறுவனங்களையும் வர்த்தக மையங்களையும் நிறுவினர்

இந்த வணிக குழுக்கள் பற்றி ஆவணங்கள் ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக தெனிந்தியா,இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.பத்தாம் நூற்றாண்டில் இலங்கையில் உள்ளூர்ப் பகுதியாகிய மகியங்கனைக்கு அருகாமையில் ஹோபிடிகம என்ற இடத்தில் மணிக்கிராமத்தவர் வர்த்தகம் நடத்தினர் என்பதற்க்குக் கல்வெட்டுச் சான்றுண்டு.இப்படியான உள்ளூர் வர்த்தக மையம் ஒன்றில் தம் முயற்சிகளில் ஈடுபட்ட மணிக்கிராமத்தவர் முதலில் கரையோர மையங்களாகிய திருகோணமலை, மாதோட்டம் போன்ற இடங்களில் தங்கள் நிலையங்களை நிறுவியிருப்பர்.
லஞ்சியர்,நானா தேசிகன்,நகரம்,வைசிய வாணிய நகரத்தார்,வைசியர்,செட்டியார்,மணிகிராமம் நானா தேசிய திரையாயிரத்து ஐந்நூற்றுனர். முதலிய பெயர்களில் வணிக சங்கள் பணியாற்றின. இவைகளை போலவே குதிரை செட்டிகள் சங்கம், சாலியர் சங்கம் என சில சங்களும் இருந்தன.குதிரைச் செட்டிகள் மலைநாட்டில் இருந்து வந்தவர்களாம். கி.பி 13-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கொபோலொ என்ற மேலை நாட்டார், ஒருவகை வணிகரைப்பற்றி பின்வருமாறு வியந்து கூறுகின்றார். “இவ் வணிகர்கள் பொய்யுரையாதவர்; களவு செய்யாதவர்; அடுத்தவரை கெடுக்காதவர்;குடியும் இறைச்சியும் உட்கொள்ளாதவர்; தூய வாழ்க்கை நடத்துபவர்; பூணூல் அணிபவர்; உருவ வழிப்பாடு செய்பவர்; சகுணம் பார்ப்பவர்” என்று. திருமாணிக்க வாசகருக்காக வந்த குதிரைகள் மலைநாட்டில் (சேர நாடு) இருந்து வந்தது என வாரலாறு கூறிகிறது.

தமிழர்களின் சரித்திர குறிப்புக்க‌ளை குறித்து வைக்காமை ஒரு மாபெரும் குறையாகவே உள்ளது. வைத்த குறிப்புக்களை பாதுக்காக்காமை இன்னோரு குறையாகவே தெரிகிறது. தமிழர்களின் சாதனை சரித்திரம் மறைக்கப்ப‌டுவதற்கும் மறுக்கப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம்...
___________
தொடரும்... பகுதி-2
யாழறிவன்... Yalarivan Jackson

1 கருத்து:

  1. இந்தியா 100 ஆண்டுகளுக்கு இடையே உருவான ஒரு நாடுகளின் கூட்டம். இந்த கட்டுரையை எழுதியவர் குழப்ப நிலையில் இதை எழுதியுள்ளார். தமிழர்களின் பெருமையை இந்தியர்களின் பெருமை என்று கொண்டுள்ளார். அது தவறு. தவறை திருத்தி சரியான பதிவை பதிவிட வேண்டும்

    பதிலளிநீக்கு