சனி, 15 நவம்பர், 2014

மேற்கத்திய ஆதிக்கமும் உலக வரைபடமும்

மேற்கத்திய ஆதிக்கமும்
உலக வரைபடமும்

உலக வரைபடமும் காலனி ஆதிக்கமும்:

1492 ம் வருடம் அக்டோபர் 12 ம் நாள் மேற்கத்திய காலனி ஆதிக்கத்தின் தொடக்க நாள்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்னும் இத்தாலி நாட்டுக்காரன், ஸ்பானிய அரசு சார்பாக அன்றைய நாளில், உலகின் மிக செல்வந்த நாடாக விளங்கிய இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கக் கிளம்பி, மேற்கிந்திய கரீபிய தீவுகளில் காலடி வைத்த ஆக்கிரமிப்பின் நாள். இவனைப்பற்றி இப்போது விளக்கமாகப்  பேசப்போவதில்லை. உலக வரைபடத்திற்கு செல்வோம்.

1569 ல் மெர்காடெர் (Mercator) என்பவன் இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு வசதியாக ஒரு நில வரைபடத்தை வரைந்தான். மேற்கத்திய நாடுகளை பெரிய அளவீடுகளுடனும் தெற்கத்திய நாடுகளின் பரப்பளவை குறுக்கியும் ஒரு வரைபடத்தை உருவாக்கினான். அதைத்தான் இன்றளவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அப்படி என்ன அந்த வரைபடத்தில் வல்லாதிக்கத்திணிப்பு இருக்கு?

100 வார்த்தைகளில் சொல்லவேண்டிய விசயங்களை ஒரு படம் எளிதாக சொல்லிவிடும் என்பார்கள். 100 படங்கள் சொல்லவேண்டிய விசயங்களை ஒரு நில வரைபடம் எளிதாகச் சொல்லிவிடும் என்று சொல்லலாம். மெர்காடெர்உருவாக்கிய நிலப்படம் எந்த அளவிற்கு மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கத்தை நிறுவ, பிற உலக நாடுகளிடம் தாங்கள் சிறிய நாடுகளைக் கொண்டவர்கள் தான் என்ற அடிமைத்தன தாழ்வுக்கண்னோட்டத்தை உருவாக்க, மேற்கத்திய நாடுகளிடம் மன ரீதியாகவும் அடிமைப்பட்டுக்கிடக்க, உதவி இருக்கிறது, அது இன்றளவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் ஆய்வுக்குட்படுத்தவேண்டியது அவசியம்.

நேரடியாக களத்தில் இறங்குவோம்.

1. அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் அலாஸ்காவும் ஒன்று. இந்த அலாஸ்காவையும் மெக்சிகோ நாட்டையும் வரைபடத்தில் பார்த்தால் அலாஸ்கா மிகப்பெரியதாய் தோன்றும். உண்மையில் அலாஸ்கா 0.6 மில்லியன் சதுர மைல்கள்தான். ஆனால் மெக்சிகோ 0.7 மில்லியன் சதுர மைல்கள். படத்தைப்பார்த்தால் எளிதாய் நமக்குப்புரியும். என்னவொரு ஏமாற்று வேலை மெர்காடெர் செய்திருக்கிறான்.

2. இரண்டாவதாக கிரீன்லாந்து நாட்டையும், சீனாவையும் ஒப்புமைப்படுத்திப்பார்க்கலாம். இதில் ஊதா நிற கிரீன்லாந்து, பச்சை நிற சீனாவைவிட மிகப்பெரிதாகத் தோன்றும். கிரீன்லாந்தின் பரப்பளவு 0.8 மில்லியன் சதுர மைல்கள்தான். சீனாவோ 3.7 மில்லியன் சதுர மைல்கள்  பரப்பு கொண்டது.

3. மூன்றாவதாக இன்றைய ரஷ்யாவான முன்னாள் சோவியத் யூனியன். ஊதா நிறத்தில் காட்டப்பட்டுள்ள அந்த நாட்டின் பரப்பளவு 8.7 மில்லியன் சதுர மைல்கள் மட்டுமே. ஆனால் ஆப்ரிக்கா கண்டத்தின் பரப்பளவு 11.6 மில்லியன் சதுர மைல்கள் கொண்டது. எவ்வளவு பெரிய வித்தியாசம் இந்த 21 ம் நூற்றாண்டிலும் மூடி மறைக்கப்படுகிறது.

இதை விடக்கொடுமை ஆப்ரிக்கா என்றாலே எதோ ஒரு சிறிய நாடு அல்லது சிறு நாடுகளைக்கொண்ட ஒரு பரிதாபக்கண்டம் என்ற வகையில்தான் ஒரு கண்ணோட்டம் தரப்படுகிறது, அல்லது உருவாக்கப்படுகிறது. உண்மையில் அந்த ஒரு கண்டத்திற்குள் எத்தனை நாடுகளை உள்ளடக்கலாம் என்றால் மிகவும்  வியப்பைத்  தரக்கூடியது.
கீழே காணப்படும் ஆப்ரிக்க நிலப்படமும் அதனுள் உள்ளடக்கப் படக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையும், நிலப்படங்களையும் தெளிவாக்குகிறது.

4. ஐரோப்பாவையும் தென் அமெரிக்காவையும் ஒப்பிட்டுப்பார்த்தால் ஐரோப்பாவின் பரப்பளவு 9.7 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் தான். தென் அமெரிக்காவோ 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள்.

5. நம்ம இந்தியாவையும் நோர்வே, சுவீடன், பின்லாந்து உள்ளடக்கிய ஸ்கண்டிநேவிய நாடுகளையும் ஒப்பீட்டோமேன்றால் ஸ்கண்டிநேவிய நாடுகளின் பரப்பளவு 1.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆனால் இந்தியாவின் பரப்பளவு 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள்.

6. நாம்  வாழும் இந்த பூமியின் வரைபடத்தில் நடுவில் இருக்கவேண்டிய நிலநடுக்கோடு நடுவில் இருக்கிறதா என்றால் மெர்கடெர் வரைபடத்தில் நடுவில் இல்லை. அதாவது நடுவில் உள்ள நிலநடுக்கோட்டிற்கு கீழே உள்ள நாடுகளின் பகுதிகள் குறுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கோட்டுக்கு மேல உள்ள நாடுகளின் பரப்பு விரிக்கப்பட்டுள்ளது. இந்த குறுக்கப்பட்டதும், விரிக்கப்பட்டதற்குமான அளவீடுகள் கொண்ட வரைபடமும் கீழே தரப்பட்டிருக்கிறது.

7.  ஒட்டுமொத்த வடக்கத்திய உலக நாடுகளின் பரப்பளவு 49.03 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் தான். ஆனால் தெற்கத்திய ஏழை நாடுகளின் பரப்பளவு 100.26 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். என்னவொரு பாரபட்சமான வரைபடம். இந்த வல்லாதிக்கக்கொடுமை என்னைக்குத்தான் முடிவுக்கு வரும்?

மெர்கடெர் வரைபடத்தில் உள்ள இந்த குளறுபடிகளையெல்லாம் களைவதற்கு பீட்டர் என்ற அமெரிக்கர் முயன்று சரியான அளவீடுகளோடு ஒரு உலக நிலப் படத்தைத் தந்துள்ளார். இந்த அவருடைய வரைபடத்திற்கு சமூக விழிப்பாளர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், சர்வதேச அளவிலான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்பட்டே வருகிறது. இரு நிலபடங்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது, வித்தியாசத்தைக் காணலாம்.

நாடுகளுக்கிடையேயான பரப்பளவு வித்தியாச விளக்கங்களோடு அவரது நிலப்படம்

இதேபோல ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு அமைப்பு எதற்கு மேற்கத்திய நாடுகளை மேலே வைத்து நாம் பார்க்கவேண்டும். அவ்வாறே பார்க்க நம்மைப் பழக்கப்படுத்திவிட்டார்கள். இதை மாற்றவேண்டும் என்று சொல்லி தெற்கத்திய நாடுகள் மேல்நிலையில் உள்ளவாறு நிலபடத்தினை ஏற்பாடு செய்து, இது வலியுறுத்தும் கண்ணோட்டத்தை உணரச்செய்திருக்கிறார்கள்.
__________________________________

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக