செவ்வாய், 11 நவம்பர், 2014

தமிழர்களின் சுவடுகள் தென் கிழக்காசியாவில்

தமிழர்களின் சுவடுகள் தென் கிழக்காசியாவில் 

பகுதி-2

தென்கிழக்காசிய அரசுகளில் ஆட்சியாளாராக இருந்தோர் மகயான பவுத்தையும் சைவ வைணவ மதங்களையும் ஆதரித்துப் பல்லவப் பேரரசிலிருந்து பரவிய செல்வாக்கு வளர்வதற்கு உதவினர்.

நாகபட்டினத்தில் 1867 வரை அங்குப் புத்தவிகாரை இருந்ததாகத் தெரிகிறது. இங்கு நரசிங்கப் போத்தரையர் காலத்தில் சீன அரசன் கட்டிய
சீனக் கோயிலை மார்க்கோபோலோ கண்டதாகக் கூறுகிறார். 1477ல் இதனைப் பர்மிய அரசர் தமது கல்வெட்டில் குறிக்கின்றார். திருமங்கை மன்னர் இங்கிருந்த புத்தரது பொற்சிலை ஒன்றை எடுத்துப் போனார் என்று 'குரு பரம்பரை பிரபாவம், என்னும் வைணவ நூல் கூறுகிறது. இராசராச சோழரும் அவர் மகனார் இராசேந்திர சோழரும் தங்கள் காலத்தில் சுமத்திரா தீவில் அரசாண்ட ஸ்ரீ விஜய அரசர்களில் ஒருவர்க்கு நாகபட்டினத்தில் பெளத்தப் பள்ளி கட்ட உரிமை தந்தமையை லேடன் பட்டயத்தின் வழியே அறிகின்றோம்.

விகாரையைப்பாதிரிமார் 1867−ல் இடித்துக் கிறிஸ்தவக் கோயில்
கட்டியபோது பல புத்தச் சிலைகள் அங்குக் கிடைத்தன. நாகபட்டினம் தமிழ்ப் புத்தப் பெருவணிக நிலையமாகவும் பிறநாட்டுத் தொடர்பின் விளக்கமாகவும் விளங்குகிறது.
பண்டைக் காலத்தில் காஞ்சிமாநகரத்தில் ஒரு சிறந்த தமிழ்ப் பல்கலைக் கழகம்
இருந்தது. பெளத்தப் பள்ளிகள் பல இருந்தன. காஞ்சியில் பிறந்து நாளந்தரப்
பல்கலைக் கழகத்தின் தலைவரான திங்நாகரும் தமிழரே. அவருக்கு மாணவராகி, அந்தப்
பல்கலைக் கழகத்தில் தலைவராக விளங்கிய தருமபாலரும் தமிழரே. இவர் காஞ்சியில்
மந்திரியாயிருந்த ஒருவரின் புதல்வர் இவர் கையாண்ட தருக்க முறை தமிழ் நாட்டில்
வளர்ந்ததென்றும் . இதனால் இவரே மணிமேகலையில் வரும்
தருமபாலர் என முடிவுசெய்வோரும் உளர். மணிமேகலையின் காலம் 2ஆம் நூற்றாண்டானால், 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் அவராவதற்கில்லை. எனினும், காஞ்சிமா நகர் பெளத்தப் பேரறிஞர்களது அறிவுக் களஞ்சியமாகப் பேர் பெற்றிருந்தது என்பதில்
ஐயமில்லை. நாளந்தாப் பல்கலைக்கழகம் ஒருபுறமிருக்க உலகம் போற்றும் சென்பெளத்தம்
அல்லது தியான பெளத்தம் ஜப்பானிலும் பேரும் புகழும் பெற்று விளங்குவதான இது
பெளத்தமதப் பெரும்பிரிவேயாம். அந்த நாடுகளில் இதை நிலைநாட்டியவர்

அங்குக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சென்ற காஞ்சியரசரின் பிள்ளைகளில் ஒருவரான போதி
தருமராவர். பல சான்றுக் குறிப்புக்கள் போதி தருமர்(Bodhidharma) சென்(zen) என்ற புத்தப்பள்ளியை சீனா தேசத்தில் நிறுவியதாக பகர்கிறது.சீனாவில் உள்ள சவோலின் கோயிலில், புத்தமதத் துறவியாக மாறிய தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதிதர்மர் என்பவரால் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவர், சொற்களில் தங்கியிராத, மத நூல்களுக்கு அப்பாற்பட்ட அறிவு பற்றிக் கற்பிப்பதற்காக சீனாவுக்கு வந்ததாக அறியப்படுகின்றது. சென் புத்தமதம், ஒரு தனியான புத்தமதப் பிரிவாக உருவானது குறித்து முதன்முதலாக கிபி 7ம் நூற்றாண்டில் பதிவுகள் காணப்படுகின்றன. மகாயான புத்தமதத்தில் காணப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளின் கலப்பினாலேயே சென் புத்தமதம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. சீனாவிலிருந்து சென் புத்தமதம், தெற்கே வியட்நாமுக்கும், கிழக்கே கொரியாவுக்கும் ஜாப்பானுக்கும் பரவியது.6'ம் நூற்றாண்டில் தியானத்தைச் சீனாவுக்குக் கொண்டுபோன நம் காஞ்சிபுரத்தார் போதிதருமர் நிறுவிய வழி சான் என்று சீனத்திலும் பின்னர் ஜென் என்று சூரியன் உதிக்கும் நாட்டிலும் மருவியதும்.

த்)யானம் > ஜான என்று இந்தியாவின் கிழக்கு பாஷைகளில் ஆகி,
அதுவே Zen. இந்த ஜானித்தல் சானித்தல் என்று தமிழ் எழுத்தில்
உள்ளது. துவைத சித்தாந்தம் - அத்வைதம் இரண்டுக்கும் ஒப்புமை
எழுதினோர் சிவ-அத்வைதம், சுத்த-அத்வைதம் என்று இரண்டையும்
பொருத்துவர்.சானம் என்பதும் தமிழ்ச்சொல்தான். 'ஒண்கருட *சானத்தில்* தீர்விடம் போற்றான்' என்று ஆன்மாவில் ஒளிந்த அண்டனைப் பாடுகிறார் மெய்கண்டதேவர்.

தென் கிழக்காசியவின் சரித்திர குறிப்பின் வழி போதி தருமர் தன்னுடைய கடல் பயணத்தில் தென் கிழக்காசியவில் சில நாடுகளில் குறிப்பாக இண்டோனேசியவில் உள்ள சுமத்திரா பலம்பாங்கிலும், மலேசியா தாய்லாந்து ,வியாட்னாமிலும் தன்னுடைய புதிய நுட்பங்களை தாங்கிய தற்காப்பு கலையை சீனாவிற்கு செல்லும் முன் அறிமுகப்டுத்தியுள்ளார்.
போதி தருமர் சீன ஹான் ராஜியத்தின் முதல் ஷோலின் கூம்ப் பூவின் தந்தை என்று போற்றப்படுகின்றார். மலாய்க்காரர்கள் தங்களுக்கு போதி தருமர் சிலாட் என்று சொல்ப்படுகின்ற மலாய் தற்காப்பு கலையில் சில நூட்பங்களை சொல்லித்தந்துள்ளார் என்று கூறுகின்றனர்.இங்கு நாம் ஒன்றை கவணிக்க வேண்டும் தமிழிலே சிலம்பம், அதுவே மலாய் மொழியில் சீலாட்.. தென் கிழக்காசியாவின் தற்காப்பு கலையின் மூலம் தமிழகம் தான்.

இந்த மதத்தினைச் சீனாவில் மேலும் வளர்த்தவர் நரசிங்க வன்மபல்லவன்
காலத்தவரான மற்றொரு தமிழர்; இவர் பெயர் வச்சிரபோதி (661/730) −வரும் காஞ்சியில் பெளத்தர்களின் தலைவராக விளங்கினார். இவர்களுக்கு முன்பே 5 ஆம் நூற்றாண்டில் புத்த தத்ததேரர் காஞ்சியில் பெளத்தமதத் தலைவராக வீற்றிருந்துள்ளார். இவர் காவிரிப்பூம்பட்டினத்தைத் தமது காலத்தில் வாழ்ந்த அச்சு தகளப்பிரனோடு சேர்த்துப் புனைத்து அபிதம்மாவதாரம் என்ற நூலில் இதை குறிப்பிட்டுள்ளார்.

பெளத்த மதம் தமிழ் நாட்டில் மறைந்தபோதிலும் அக்கொள்கை தமிழ் மணம் பரப்பும் கொள்கையாய் உலகெங்கும் பரவி இருக்கிறது. தமிழ்க் கூறும் நல்லூலகம் உலகிற்கு அளித்த கொடை இது.
________

தமிழகத்தின் ஒரு காலத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்த ஊஞ்சல் திருவிழா தாய்லாந்தில் மிகவும் அண்மைக்காலம் வரைக்கும் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஈசுவென் (ஈசன்) தெய்வத்தை முன்னிட்டு கொண்டாடப் பட்டு வந்த இவ்விழாவில் பாவித்த ஊஞ்சல் கட்டிய பெரு மரங்கள் இன்றும் இங்குள்ள வட்ட சுதாத் ஆலய முன்றலில் காணப்படுகின்றன.தாய்லாந்து மன்னர் முடி சூட்டும் விழாக்களிலும் ‘ திரியம் பாவே’ - திரிபாவே’ திருவிழா { தேலோத்சவம்} விலும் மாணிக்க வாசக பெருமாளின் “ ஆதியும் அந்தமுமில்லா” எனத் தொடங்கும் திருவாசம், இராமேஸ்வரத்திலிருந்து சென்ற சைவ சந்ததியினரால் இன்றும் பாடப்பட்டு வருகிறது. இந்த நாட்டின் தென்கரையிலுள்ள தக்கூபா ( தக்கோலம்) என்ற துறைமுகப் பட்டினத்தில் கிடைத்த தமிழ்க் கல் வெட்டு கி.பி. 5 – ஆம் நூற்றாண்டில் பூம்புகாரிலிருந்து அங்கு சென்று குடியேறிய தமிழ் வணிகர் நகர் ஒன்றினை நிறுவி திருமால் கோவிலோன்றினையுங் கட்டி எழுப்பியதாகக் கூறுகிறது. திருமால் சிலை உட்பட ஏராளமான தெய்வச் சிலைகள் இங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் என்னும் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி &இரா கனகரத்தினம்

இப்படியான தொல்லியல் ஆதாரங்களுக்கு மிக முற்பட்ட ஒன்றாக லாவோஸ் நாட்டில் சம்பஸ்ஸக் என்னும் இடத்தில் கிடைத்த சான்றினைக் குறிப்பிடலாம்.சம்பஸ்ஸக் என்னும் நகரத்தில் உயரிய தூண் ஒன்றில் ஐய்ந்தாம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தென் பிராமி எழுத்தில் ஒரு சமஸ்கிரதக் கல்வெட்டு உள்ளது.சிவன்,விஸ்ணு,பிரம்மா ஆகிய தெய்வக்களுக்கு அமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய கல்வெட்டாக அது இருந்தது.சம்பஸ்ஸக் நகரதுக்கு அருகாமையில் ஏழாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட வேறு இரு சமஸ்கிரதக் கல்வெட்டுக்கள் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாக் கண்டு பிடிக்கப்படுள்ளன.லவோஸ் நாட்டுக்கு அருகில் உள்ள வியட் நாமில் பழைய பு-நான் அரசு இருந்த தென் பகுதியில் இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் ஒரு முக்கிய துறையாக விளங்கிய ஒக் இயோ என்ற இடத்தில் இன்னொரு சமஸ்கிரதக் கல்வெட்டு கிடைதுள்ளது.தென் பிராமி எழுத்தில் உள்ள இக் கல்வெட்டு வர்த்தமானர் என்ற தெய்வத்துக்குக் கட்டப்பட்ட ஒரு கோவில் பற்றிக் குறிப்பிடுகின்றது.இவை போல மேலும் பல கல்வெட்டுக்கள் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாக தாய்லாந்திலும் மலேசியாவிலும் கிடைத்துள்ளன.

வங்காள விரிகுடாவைச் சுற்றி உள்ள நாடுகளில் தென்னிந்திய வணிக குழுக்கள் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கூடவே பல்லவப் பேரரசின் பண்பாடும் பரவியதுஅரசியலில் காணப்பட்ட செல்வாக்கைப் வெளிப்படுத்தும் ஒரு கூறாக மன்னர் பெயர்கள் பல அரசுகளில் பல்லவ மன்னர் பெயர்கள் போன்று வர்மன் என்ற இறுதிச் சொல்லைக் கொண்டிருந்தன.தெங்கிழக்காசிய அரசுகளில் இந்திரவர்மன்,ஜயவர்மன் ஈசானவர்மன் யசோவர்மன் பூர்ணவர்மன் போன்ற பெயர்கள் அய்ந்தாம் நூற்றாண்டில் பரவலாக வழங்கின.சமயத்தை பொறுத்த மட்டில் சைவ வைணவ மதங்களுடன் பவுத்த மதமும் பெருமளவில் செல்வாக்கைப் பெற்றிருந்தன.இலங்கையில் மணிக்கிராமம் மற்றும் நால்கு நாடு போன்ற வணிக வணிக குழுக்கள் இச் செல்வாக்கைப் பரப்புவதில் முக்கிய பங்கு கொண்டிருந்தன எனலாம்.

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல் கடந்து இந்து சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப் பேரரசர் பலர் தாமே கலைஞராக இருந்து ஓவியம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்த்தார்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டிட சிற்பக்கலை புதிய பரிமாணம் பெற்று விளங்கியது. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்து மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்களும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதர் ஆலயமும் பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பைச் சான்று பகிர்கின்றன.

இந்திய இந்து கலைச்சார அலையின் தாக்கம் கி.பி 550-750 நடைப் பெற்றது. கெடா பல்வர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளது.பல்லவர்களின் ஆதிக்கம் கிழக்குகரை மலேசியா வரைக்கும் பரவி இருந்தது.4-9 சிவன் கோவில்கள் பூஜாங் பள்ளாத்தாக்கில் அமைந்த்திருந்த்தது. கி.பி 750-900 ஆண்டு வரைக்கும் தென் இந்திய பவுத்த மத பிரிவான மாஹாயன இவ் வாட்டாரத்தில் மேன்மையுற்று விளங்கியுள்ளது.
இன்றையா கிழக்கு கலிமந்தானிலும் மேற்கு ஜாவாவில்ம் கண்டு எடுக்கப்பட்ட சில கல்வெட்டுகள் தென் இந்திய மன்னர்களான மூலவர்மனும் மற்றும் பூர்ணவர்மன் ஆகியோரால் வெளியிடப்பட்டவை என கூறப்படுகிறது.

ஜாவானியர்களின் பரம்பரை செய்திகள் சொல்லும் விஷயம் என்னவேன்றால் மார்கண்டேயன் என்னும் முனிவர் பாலி தீவுக்குள் சென்று மத பிரச்சாரத்தை ஆராம்பித்தார் எனவும் அவரின் சீடர்கள் அங்கு விவசாயத்தை அறிமுகப்படுத்தினார்கள் எனவும் சொல்லப்படுகிறது. மார்கண்டேய முனிவர் பாலி தீவில் பஞ்ச லோக சிலைகளை நிருவியதாக நரேந்திர பண்டிட் சாஷ்த்திரி(1957) கூறுகிறார். மார்கண்டேய முனிவர் சைவ சமயத்தை போதித்த்தாகவும் சைவ சித்தாந்தம் இன்று வரை பாலி தீவில் நிலைப்பெற்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.ஆனால் இவர்கள் எந்த மார்க்கண்டேய முனிவரை சொல்கின்றார்கள் என்றுதான் தெரியவில்லை.
___________

சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் வணிகர்களும் தங்கிச் செல்கிற இடமாக இருந்தது இன்றைய கம்போடியாவின் கடற்கரை. சீன யாத்ரிகர்கள் எழுதி வைத்த குறிப்புகளில் குறிக்கப்பட்டிருக்கிற நாடுதான் கம்போடியா.

உலகிலேயே மிகப் பிரமாண்டமான அளவில் 200 சதுர கி.மீ.,பரப்பில் அமைந்த அங்கோர்வாட் கோவில் வளாகம் உட்பட, பல அரிய அபூர்வ பொக்கிஷங்கள் புதையுண்ட நாடு இது

காம்போஜம் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட் கம்போடியா தென்கிழக்காசியாவிலேயே ஆக அதிக இந்து தாக்கமுள்ள நாடு. அங்கு வைணமும் சைவமும் கை கோர்த்து தழைத்தன.சிவபெருமானை வணங்கியது போலவே விஷ்ணுவையும் கம்போடிய மன்னர்கள் வழிபட்டனர்.முதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை, இந்திய அரசுகளான புன்னன், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் கிமர் பேரரசை நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து. இவ்வரசுகள் சீனாவுடனும், தாய்லாந்துடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர். இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய கிமர் பேரரசு , ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.

கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான அங்கூர் நகரம் உருவானது. அங்கூர் நகரின், அங்கூர் வாட் கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது

கம்போடியாவில் கி.பி.1122-ஆம் முதலாம் நூற்றாண்டில் அமைந்த சிவன் கோயில் அங்கோர் வாட்டில் (Angkor wat) இன்றும் இருக்கிறது. உலக நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் அங்கோர் வாட்டில் இரண்டாவது மன்னன் சூர்ய வர்மன் அந்தக் கோயிலைக் கட்டினான். வைணவத்துடன் இந்த வட்டாரத்தில் சைவ சமயம் கைகோர்த்து வளர்ந்தது என்பது வரலாற்று வல்லுநர்களின் கருத்து. இவ்வட்டாரத்தில் காணப்படும் சிதைந்த நகரங்களும், கோயில்களும் இதர சமயச் சின்னங்களுமே இதற்குச் சான்று. உலகப் பாரம்பரியச் சின்னங்களாக (World Hertiage Monuments) ஐக்கிய நாட்டுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது கம்போடியா என்று அழைக்கப்படும் காம்போஜ அரசு முன்னர் பூனானின் (Funan) (வியட்னாமிய மொழியில் Phù Nam) ஆட்சியில் இருந்தது. காம்போஜ அரசகுலத்தினை நிறுவியோர் கம்பு முனிவர் மரபினர் எனக்கூறுவர். காம்போஜ நாட்டில் சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்தன. பவவர்மன் என்ற அரசர் தன் தம்பி சித்திரசேனர் உதவியால் சுமார் கி.பி.590 இல் பூனான் (Funan) அரசனைப் போரில் முறியடித்தார். பவமன்னர், சித்திரசேனர் ஆகியோரது கல்வெட்டுக்களும், கி.பி ஏழாம் நூற்றாண்டிலுள்ள பல்லவ மன்னர்களது கல்வெட்டுக்களும் பலவகையிலும் ஒத்திருக்கின்றன. பவமன்னர் சிவபக்தர் என்ற காரணத்தினால் நாட்டில் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்தது மட்டுமன்றி நாட்டிலுள்ள பல கோயில்களிலும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்து மதப்பாடல்களைப் பாடும் படியும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் பண்ணும்படியுமான வழக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பின் வந்த அவர் தம்பி மகேந்திர வர்மன் அண்மையில் இருந்த இந்து நாடான சம்பாவோடு (now southern and central Vietnam) நட்புக் கொண்டிருந்தார்.

கி.பி 968 இல் ஐந்தாம் ஜெயவர்மனது ஆட்சிக்காலத்திலுள்ள கல்வெட்டு தஷிணாபதம் அல்லது தக்காணம் சைவசமயத்தின் நடுநிலையாக விளங்கியதைத் தெரிவிக்கின்றது.
கீழைத்தேய நாடுகளில் உள்ள மக்களிடையே தென்னிந்தியப் பழக்கவழக்கங்களும் , கொள்கைகளும் மிகுதியாகப் பரவியிருந்தன. காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களையும், தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சாரியாரையும் பற்றி அங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிட்டிருக்கின்றன.எனவே இந்த தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறிய ஆட்சியாளர்களும் சரி, மதத்தலைவர்களும் சரி நமது தாய் நாடு நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டுருந்தனர் என்பது இவற்றின் மூலம் புலனாகின்றது.

நாட்டின் பிற்கால அரசராகிய இரண்டாம் சூர்யவர்மனது ஆட்சியில் (கி.பி 1112- 53)அங்கோர் வாட் என்னும் சிறப்புமிக்க கோயிற்கட்டடப் பணி நடைபெற்றது. தென் இந்திய முறைப்படி கட்டப்பட்ட அவ்வாலயம் திருமால் கோயிலாகும். அதில் மகாபாரதம், இராமாயணம், ஹரிவம்சம் முதலான உருவச்சிலைகள் உள்ளன. அங்கோர் வாட் சிற்பப்பணிகள் போராபுதூர் சிற்பங்களை விட மேலானவை என்பது ஆய்வாளர் கூற்று.

கமீர் வம்சத்தினர், வான சாஸ்திரம் உட்பட சகல கலைகளையும் அறிந்தவர்கள்; அவர்கள் கலை , கலாசார பொக்கிஷங்களை உருவாக் கியதுடன், ஆறுகளை திருப்பிவிட்டது, நீர்த்தேக் கங்களை அமைத்தது, பெரிய பாலங்களை உருவாக்கியது போன்ற கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றியிருப்பதில் இருந்து அவர்களின் மகத்தான திறமை வெளிப்பட்டுள்ளது. இந்து, புத்த அரச பரம்பரையினராக இவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். காஞ்சியில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.அவர் வம்சத்தை சேர்ந்தவர்கள் எல்லாரும் தங்கள் பெயருடன் வர்மன் என்ற பட்டத்தை வைத்துக்கொண் டுள்ளனர். 12 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டாவது சூரியவர்மன் தான் அங்கோர் வாட் கோவிலைக் கட்டினார். மொத்தம் 200 சதுர கிலோ மீட்டர் பரப்பில், 54 கோபுரங்களுடன் நடுவில் ஐந்து பெரிய தாமரை வடிவ கோபுரங்களுடன் பெரிய கோவில் வளாகம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை கட்டி முடிக்க, 30 வருட காலம் ஆனதாக வரலாற்று சான்றுகள் உள்ளன..
___________

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்து ராஜ்ஜியமான சம்பா கி.பி.159 ஆம் ஆண்டுக்கும் 200-க்கும் இடையில் தோற்றுவிக்கப் பட்டது.சம்பா மன்னன் ஸ்ரீ பத்ரவர்மா இரண்டாம் நூற்றாண்டில் மைசோன் எனும் இடத்தில்,பெரும் இந்துக்கோயிலை எழுப்பியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.சம்பா அரசில் சமஸ்கிருதம் அதிகாரத்துவ மொழியாகவும் இருந்தது. தென்கிழக்காசியாவில் வியட்நாமில் செயல்பட்டு வந்தது சம்பா பேரரசு.

வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-

. .. . . ... ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . ..
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . .. ன. . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. ..ச . . . . . . . .. .. ..

இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்து (ஸ்தாவர, ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான். எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான். இது வீரனுக்கு தெரியட்டும். . .. . . .. . . .. .. . .என்று பாதியில் முடுகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல” என்பதாகும். இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது. ஆனால் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது.

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY) சீனாவை ண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘சம்பா’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர். சம்பா (CHAMPA) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும். மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN) என்றும் எழுதிவைத்துள்ளனர். இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO) புதல்வன் என்றும் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர். கி.பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது. ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது.

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை. எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN) என்று முடிவதால் இதை ‘வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர். ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் ஸ்ரீமாறன், வர்மன் என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன.

வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:-

இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.

வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது. அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி), ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி) ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம். பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க கால மன்னன் நிலந்தரு திருவில் பாண்டியன் என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது. பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்து முறை ‘மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் முடித்திருமாறன். நற்றிணை 105, 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன்.

.புறநானூற்றுப் பாடல் (புறம் 182) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி. இவன் வெளிநாடு செல்லும்போதோ, வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்...
_________

தென்னிந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக இணைப்புகள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9 ஆவது, 13 ஆவது நூற்றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் "சுன்வுகாங்" என்ற புராண பாத்திரம் அனுமாரைத்தான் உருவகித்தது என்று சொல்வார்களும் உண்டு. சீன அரசியல் மாற்றங்கள் இந்து சமய வளர்ச்சியை அங்கு மட்டுப் படுத்தியது. சீனத்தின் ஒரு பகுதியான திபெத்தில் இந்து சமயம் அதிகமாகவே இருக்கிறது. புத்தமதத்தைப் பின்பற்றுபவர்கள் கூட, இந்துசமய நெறிகளைப் பின்பற்றுவதும் இந்து சமய விழாக்களில் பங்கு கொள்வதும் அங்கு அதிகம்.

கி.பி 1298-ம் ஆண்டு சீனத்தை ஆண்ட மன்னன் ஒருவன் சோழ மண்டலத்தைற்கு தங்கமும் வெள்ளியும் எராளமாக தன் நாட்டில் இருந்து ஏற்றுமதியாவதை தடுத்தான் என்கிறது வாரலாறு.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன் செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்தத் துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகஙகளிலும் தங்கி பிறகு வியட்னாம் சென்று அங்கிருந்து சீன நாட்டை அடைந்துள்ளனர்.

இத்தோடு கடல் வழி வணிகம் என்றால் கப்பல் கட்டும் தொழிலிருந்து தூரப்படுமா என்ன?. சீனத் துறைமுகங்களில் இந்தியக் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சிக் காத்திருந்ததைப் பற்றி மார்க்கோ போலோ சொல்லியிருக்கிறார். கப்பல்கள் எத்தனை வகைப்பட்டவை, அவற்றின் பாகங்கள் என்னென்ன, எத்தகைய அலங்கார முகப்புகள் அவற்றிற்கு இருந்தன என்றெல்லாம் விரிவாகச் சொல்கிறார் ஆசிரியர். மட்பாண்ட சில்லுகளில் கப்பல் படம் வரையப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில எகிப்துப் பெண்மணியின் சித்திரம் போல வரையப்பட்டிருக்கின்றன.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமல்ல வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் - புகழ்பெற்ற வணிகக் குழமான திசை ஆயிரத்து ஐய்நூற்றுவர் எனும் குழுவினர் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், சித்திரமேழிப் பெரியநாட்டவர், மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார் போன்றோர் அவ்வகையில் முக்கியமானவர்கள்.சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச் சக்கரவர்த்திகள் சம்பந்த பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது.

இதை குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் சோழர்கால சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமானத் தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

யுவான் சுவாங், பாகியான், முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் தமிழர்களின் கடல் வணிபத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. 1344-ஆம் ஆண்டு நம் கடலோரப் பகுதிகளுக்கு வருகை புரிந்த இப்னு பதூதா நம்மவர்களின் கடல் வணிபத்தைப் பற்றிய குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். டாலமி (Ptolemy – 79 A.D.), பெரிப்ளஸ் (Periplus – 86 A.D.) பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகளிலும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

2000 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டில் வாழ்ந்த பான்கோ என்ற சீன அறிஞர் தமது வரலாற்று நூலில் ஹுவாங்சே ( காஞ்சி) நாட்டுக்குத் தம் நாட்டு சீன வணிகர்கள் அடிக்கடி செல்வார்கள் எனவும் அப்படி செல்லும் போது அவர்கள் தமிழர்களுக்குச் சொந்தமான கலங்களிலேயே பிரயாணச் செய்வார்கள் எனவும் தமிழ் மக்கள் அவர்களை அன்போடு வரவேற்ரு உபசரிப்பார்களெனவும், முத்து, வைடூரியம்,துகில் முதலியவற்றை அவர்கள் வாங்கிக் கொண்டு சீனா செல்வார்கள்ளெனவும் குறிப்பிடுகின்றார்.

கி.பி. 1300 ம் நூற்றாண்டை சேர்ந்த யுவான்ச் வாங் என்ற சீன அறிஞர் தமிழக மக்கள் வீரம் மிக்கவர்கள், நம்பிக்கைகுப் பாத்திரமானவர்கள், சிறந்த அறிஞர்களாக திகழ்பவர்கள் எனப் போற்றிப் புகழ்கிறார்...
_________
தொடரும்-பகுதி-3

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக