திங்கள், 20 அக்டோபர், 2014

தமிழனும் உலக வரலாறும்

தமிழனும் உலக வரலாறும்...

பகுதி-7

'எல் (EL)'...!!!

சுமேரியர்களும் பின்னர் யூதர்களும் வழிப்பட்டக் கடவுள்.

இந்தக் கடவுள் உலகினைப் படைத்தக் கதை தான்  'ஈனும் -மா - எல் - இசு' என்னும் நூலில் உள்ளது!!!

ஈனும் - படைத்த
இசு - இசைதல் - செய்தல்
மா - பெரிய

தன்னுடைய செயலால் உலகினைப் படைத்த மாபெரும் கடவுளான 'எல்'லின் கதை என்பதே 'ஈனும் -மா - எல் - இசு' என்ற சொல்லின் அர்த்தம் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் கதையினைப் பொறுத்த வரை இது சுமேரியர்களின் கதை என்ற ஒரு விடயத்தினைத் தவிர மற்ற அனைத்து விடயங்களும் நாம் முன்னர் கண்ட கதைகளை ஒத்தே இருக்கின்றன. முதல் மாந்தன்...வெள்ளம்...வெள்ளத்தில் இருந்து இறைவன் ஒருவனை காப்பாற்றுதல்... என நாம் முன்னர் பாபிலோனிய இலக்கியங்களில் கண்ட அதே நிகழ்வுகள் இதிலும் வருகின்றன. பெயர்கள் மாறி இருக்கின்றன...ஆனால் கதை அதே தான்...கூடவே அதே கேள்விகளும் தான்.

எவ்வாறு வெள்ளத்தினைக் கண்டிராத ஒரு பிரதேசத்தில் வெள்ளத்தினைப் பற்றிய கதைகள் வரலாறாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன?...அதுவும் அனைத்து இலக்கியங்களிலும்...!!! உண்மையிலையே இங்கே வெள்ளம் வந்ததா...இல்லையேல் இவை வெறும் கதைகளா?

மேலே உள்ள இந்தக் கேள்விக்கு இன்னும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் விடைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று நாம் கண்டோம் எனவே அவர்களின் உதவி இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது நமக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் நமது அறிஞர்கள் என்ன சொல்லுகின்றனர் என்பதனை சற்றுக் கண்டுக் கொண்டு வந்து விடுவோம்...!!!

அவர்களின் கூற்றுப் படி 'பெரு வெள்ளம்' என்று அக்கதைகள் குறிப்பிடுவது குமரிக்கண்டத்தின் அழிவையே ஆகும். குமரிக்கண்டத்தினை பெருங் கடல் கொள்ள பிழைத்து வெளியேறிய மக்கள் சிலர் மேற்க்கே சென்று குடி ஏறினர். அவ்வாறு குடியேறிய மக்கள் தங்களின் வரலாற்றினை தாங்கள் உணர்ந்தப் படி கதையாக பதிவு செய்து வைத்தனர். அக்கதைகள் தான் மேலே கூறிய அந்த இலக்கியங்கள். எனவே தான் வெள்ளமே அவ்விடத்தில் தோன்றியிராத பொழுதும், வெள்ளத்தில் இருந்து மக்கள் தாங்கள் மீண்டு வந்த செய்தியை அந்த இலக்கியங்கள் சுமந்துக் கொண்டு இருக்கின்றன என்று அந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.

"அட...இது என்னப்பா வம்பா போச்சி... வெள்ளத்தப் பத்தி அப்ப எவன் பேசுனாலும் அவன் குமரிக்கண்டத்துல இருந்து தப்பிச்சி வந்து இருப்பான் அப்படின்னு சொல்லுவீங்க போல இருக்கே!!!" என்று எண்ணுகின்றீர்களா...

சரி தான். அப்படி என்றால் நாம் மேலும் சில தகவல்களைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னால் ஒரு கேள்வி...!!!

உங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றீர்களா? அங்கே கல் வழிப்பாட்டினைக் கண்டு இருக்கின்றீர்களா? ... கல் வழிபாடு என்றால் சிலையினைச் சொல்லவில்லை... வெறும் கல்... அதனை நட்டி வைத்து வணங்குவார்கள்...அவற்றினைக் கண்டு இருக்கின்றீர்களா?... மேலும் 'நடுகல் வழிபாடு' என்ற ஒன்றையும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

இவை இரண்டும் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இதே பழக்கம் சுமேரியர்களிடமும் பாபிலோனியர்களிடமும் யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது....அதே முறையில்...அதே பெயரில்!!!

'நேர்கல் (Nergal)' - இவன் பாபிலோனியர்களின் போர்க் கடவுளாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். இங்கே தமிழர்கள் போரில் இறந்தவர்களுக்கு 'நடு கல்' நடும் பழக்கம் நம்மில் சிலருக்கு நினைவுக்கு வரலாம்.

மேலும் இதேக் கல் வழிபாடு 'கல்கால் (Gilgal)' என்று எபிரேயச் சமயத்திலும் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இங்கே கல்கால் என்பதும் நேர்கல் என்பதும் தூயத் தமிழ் சொற்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. கற்களை நட்டு வழிபடும் தமிழர் பழக்கங்கள் இதன் மூலம் பாபிலோநியர்களிடமும் சுமேரியர்களிடமும் பின்னர் யூதர்களிடமும் இருந்தது என்பது தெரிய வருகின்றது. இதே போல தமிழர்களின் வழக்கமான ஊர் காவல் தெய்வங்கள் முறையும் அவர்களிடேயே இருந்து இருப்பது அவர்களின் இலக்கியங்கள் மூலம் புலனாகின்றது.

மேலும் சுமேரியர்கள் வழிப்பட்ட சில கடவுள்களின் பெயர்களை நாம் காணும் பொழுது அவை தமிழ் சொற்களை ஒத்து இருப்பதை நாம் அறிய முடிகின்றது...உதாரணம்...அணு (Anu),மருது க(Maruduk), நேர்கல், நின்கல், இன்னானா(Innaana)...!!!

ஆனால் மேலே நாம் கண்ட அந்த பெயர்கள் அனைத்தையும் விட ஒரு பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது....சுமேரியர்கள் வழிப்பட்ட ஒரு இளைய கடவுளின் பெயர் தான் அது...... தமுழ்(Tammuzh) - இது தான் அந்தக் கடவுளின் பெயர்!!!

தமுழ் இளைஞனாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். அவனுக்காக சுமேரியர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் அனைத்தும் கிட்டத்தட்ட நாம் தை திருநாள் கொண்டாடும் காலத்தினை ஒட்டியே அமைந்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...!!! தமிழ் நாட்டில் தமிழை பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டாடிய தமிழர்கள், சுமேரியாவில் தமிழை இளைஞனாக உருவகப்படுத்தி கொண்டாடி இருக்கின்றார்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. அந்த பெயரினைத் தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் மொழிப் பெயர்க்க அறியாது தமுழ் என மாற்றி விட்டார்கள் எனவே தமிழ் கடவுள்....தமுழ் கடவுளாக மாறி விட்டான் என்பதும் அவர்கள் கூற்று.

சரி...இப்பொழுது நாம் 'எல்' என்று வழங்கப்படும் கடவுளினை பற்றி சற்றுப் பார்ப்போம். இந்த 'எல்' என்னும் கடவுள் மலை மேல் வீற்று இருக்கும் கடவுள் என்று அறியப்படுகின்றார். மேலும் இலக்கியங்களில் 'எல் சடை (El Shaddai)' என்றும் எல்லோன் (Elyon) என்றும் குறிக்கப்பட்டு இருக்கின்றார். எல்லோன் என்னும் சொல்லும் தமிழ் சொல்லாகவே இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்தக் கடவுளைத் தான் சுமேரியர்கள் சமயமும் எபிரேயச் சமயமும் வழிப்பட்டு இருக்கின்றன...!!!

சரி...இப்பொழுது ஒரு கேள்வி...'எல்' என்ற இந்தக் கடவுளின் பெயரை நீங்கள் இதற்கு முன்னால் கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா.

என்ன இல்லையா???... கொஞ்சம் யோசிங்க... இன்னும் இல்லையா... சரி அப்படி என்றால் இந்தப் பெயர்களையாவது கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா... மைகேல் (Michael) ,தானியல் (Daniel) ,இசுமாயில் (ismael) ,இசுரேல் (Israel) ,ராபல் (Raphael)...!!!

கேள்விப்பட்டு இருக்கின்றீர்கள் தானே...!!!சரி நல்லது.

இப்பொழுது இன்னொருக் கேள்வி...அருள் முருகன், வேல் முருகன், பால கணேசன், செந்தில் குமரன் போன்றப் பெயர்களைக் கேள்விப் பட்டு இருக்கின்றீர்கள் தானே. இந்தப் பெயர்கள் மக்கள் தாங்கள் வழிப்படும் இறைவனின் பெயரை தங்களின் குழந்தைகளுக்கு வைத்து அழகுப் பார்த்தவை. இறைவனின் பெயரால் குழந்தைகளை அழைப்பது வழக்கம். நம்மிடையே இருக்கும் இந்தப் பழக்கம் சுமேரியர்களிடமும் இருந்து இருக்கின்றது...யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது. எனவே தான் 'எல்' என்று தாங்கள் வழிப்பட்ட இறைவனின் பெயரை வைத்தே தங்களின் குழந்தைகளுக்கு பெயர் இட்டு இருக்கின்றார்கள்.

மைகேல் (மை - கா - எல்) - மை என்பது கருப்பினைக் குறிக்கும் தமிழ் சொல். மேலும் அது உருவமற்ற என்ற அர்த்தத்தினையும் தரும். எனவே உருவமற்ற கடவுள் 'எல்' என்ற அர்த்தத்தில் மைக்கேல் என்ற பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.

இரப்பேல் (இறப் - எல்) - இறத்தல் என்னும் சொல் தணிப்பது அல்லது குறைப்பது என்னும் அர்த்தத்தினையும் தரும். எனவே மக்களின் பிணியினையும் கவலைகளையும் குறைக்கும் கடவுள் 'எல்' என்னும் பொருளில் இப்பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.

மேலும் விவிலியத்தில் ஆதாமின் மகனான அபெல் என்றப் பெயரினையும் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

அபெல் (ஆப் - எல்) - தந்தையாகிய எல் என்னும் கடவுள் என்பதே இந்தப் பெயரின் அர்த்தம் என்கின்றனர் அறிஞர்கள். தன்னுடைய தந்தையான கடவுளின் பெயரையே ஆதி மனிதன் தனது மகனுக்கு வைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.

எனவே எல் என்னும் சொல் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும் அது அறியப்படாத நிலையில் இருக்கின்றது. காரணம் அந்தச் சமயம் இன்று உலகில் இல்லை... யூத மதமும் சுமேரிய மதமும் அழிந்து அதன் இடத்தில கிருத்துவமும் இசுலாமும் வளர்ந்து இருக்கின்றன. யூதப் பெயர்களும் சுமேரியப் பெயர்களும் கிருத்துவப் பெயர்களாகவும் இசுலாமியப் பெயர்களாகவும் மாறி இருக்கின்றன.

ஆனால் என்ன தான் மாறினாலும் சில வழக்கங்கள் மாறவில்லை... அவை கிருத்துவத்தையும் இசுலாமையும் தமிழுடன் இணைத்து கொண்டுத் தான் இருக்கின்றன...!!!
அவை என்ன... காண்போம்!!!!

கிருத்துவம்...!!!

ஆசிய கண்டத்திலே தோன்றிய மற்றுமொரு சமயம். இயேசு கிருத்துவினால் தோற்றுவிக்கப்பட்டு அவர்தம் பன்னிரு சீடர்களால் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட ஒரு சமயம். இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஏசுவும் சரி அவர்தம் பன்னிரு சீடர்களும் சரி ஆசியாவினைச் சார்ந்தவர்கள். ஆனால் அவ்வாறு ஆசியர்களால் ஆசியாவினில் தோற்றுவிக்கப்பட்ட அந்தச் சமயம் இன்று ஐரோப்பியர்களின் பிடியின் கீழ் உள்ளது. காரணம் எளிது ...அரசியல்!!!

ஆனால் அந்தக் கதைக்குள் நாம் இப்பொழுது செல்லப் போவதில்லை. இப்பொழுது நம்முடைய பயணம் கிருத்துவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொடர்புண்டா என்ற கேள்விக்கு விடையினைத் தேடியே. ஆனால் அதற்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டு இருந்த கேள்விக்கு பதில் கூற வேண்டி இருக்கின்றது.

"'எல் சடை (EL Shaddai)' என்ற சொல்லுக்கு மலையில் வாழும் கடவுள் என்பது தானே பொருள்... எல் சடை அல்லது யாகோவா (Jehovah) என்னும் அந்தக் கடவுளை யாருமே கண்டதில்லையே பின் எவ்வாறு சடை என்பதற்கு முடி என்றும் அக்கடவுள் சிவன் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள்" என்பதே அந்தக் கேள்வி.

இப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு விடையினைத் தேடுவோம்...!!! முதலில் 'எல் சடை' என்னும் பெயரில் இருந்தே தொடங்குவோம்.

'எல் சடை' என்பவர் மலையில் வாழும் கடவுள் என்ற அர்த்தமும் உண்டு. மேலும் எல்லா கதைகளிலும் இறைவன் மலையில் இருந்தே மக்களிடம் பேசியதாகவுமே வருகின்றது. ஏன் அவ்வாறு இருக்கின்றது?... உலகினை கடவுள் படைத்தான் என்றால் அனைத்திலும் அவன் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா... மாறாக அவனை ஏன் பெரும்பாலும் மலையில் இருப்பவனாகவே சித்தரித்து இருக்கின்றனர் என்று எண்ணுகின்றீர்களா? அதற்குரிய விடை தமிழில் இருக்கின்றது.

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி" என்னும் வாக்கியத்தில் இருக்கின்றது.

"அட அது எப்படிங்க மண்ணும் கல்லும் தோன்றுவதற்கு முன் ஒரு இனம் தோன்றி இருக்கும்... இது தமிழன் சும்மா அவன் சுய பெருமைய போற்றுவதற்காக சொன்ன ஒரு கூற்றுங்க அவ்வளவு தான்" என்று பெரும்பாலும் இந்த வாக்கியத்தின் அர்த்தம் தவறாகவே எடுக்கப்பட்டு உள்ளது. இதன் உண்மையான அர்த்தம் தமிழர்களின் வாழ்வின் படிநிலைகளை விளக்குவதாக உள்ளது.

தமிழர்கள் நிலத்தினை ஐந்து வகையாக பிரித்து வைத்து இருக்கின்றனர்.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்.
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - குறிஞ்சி நிலத்துக்கும் முல்லை நிலத்துக்கும் இடையில் தோன்றும் இடம்.

மேலே உள்ள இந்த நில அமைப்புகள் மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர் என்பதனை விளக்கிக் கொண்டு இருக்கின்றது. முதலில் கற்கள் சூழ்ந்த மலையினில் வாழத் தொடங்கிய மனிதன் பின்னர் காடுகளுக்குள் குடியேறி பின்னர் வயல்வெளிகள், கடற்கரை ஓரங்கள் என்று படிப்படியாக தங்களது வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர். மேலும் மனிதன் எவ்வாறு வயல்வெளிகளுக்கும் கடலோரங்களுக்கும் வந்து நகரங்களை அமைத்து வாழ ஆரம்பித்தானோ அன்று தான் பல நாகரீகங்களும் வளரத் தொடங்கின. இதைத் தான் தமிழர்கள் மேலே உள்ள அந்த வாக்கியத்தின் மூலம் விளக்குகின்றனர்.

அதாவது, மற்ற நாகரீகங்கள் வயல்வெளிகளிலும் நகரங்களிலும் மனிதன் வாழக் கற்றுக் கொண்டப் பின்பு தான் தோன்றின ஆனால் தமிழ் நாகரீகமோ, மண் பிரதேசங்களில் அந்த நாகரீகங்கள் தோன்றும் முன்னரே, மனிதன் முதன் முதலில் தோன்றிய மலைகளிலேயே தோன்றி விட்டது. இதைத் தான் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி' என்ற வாக்கியம் விளக்குகின்றது.

சரி...இப்பொழுது 'எல் சடை' என்ற பெயரில் சடை என்னும் சொல் எவ்வாறு முடியினைக் குறித்தது என்றுப் பார்ப்போம்.

சடை என்ற சொல் சல் + தை எனும் சொற்களின் தொகுப்பே ஆகும். அதாவது நீண்ட பகுதிகளை சேர்த்து தைப்பது என்னும் அர்த்தத்தில் நீண்டுக் கொண்டே செல்வது என்பதுப் பொருள். இதன் மூலம் இறைவன் முடிவற்றவன் என்பதனை விளக்கவே அவன் சடையன் என்றும் வழங்கப்பெற்றான்.

எனவே அச்சொல்லினைத் தான் சுமேரியாவிலும் மக்கள் பயன் படுத்தி இருக்கின்றார்கள் என்று நாம் கருத முடிகின்றது. ஆனால் சடை எனும் சொல்லுக்கு எபிரேயத்தில் நீண்டு கொண்டு இருக்கும் மலைத் தொடர் என்ற அர்த்தமும் வருகின்றது. எனவே தான் அதனை ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் மலை மேல் உள்ளக் கடவுள் என்று விளக்கம் தருகின்றனர். சரி இப்பொழுது நாம் யூதர்கள் எல் சடை என்னும் கடவுளுக்கு வழங்கிய மற்றுமொரு பெயரினைப் பற்றிப் பார்ப்போம்.

'செகொவா (Jehovah)' என்று இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் தான் அது. இசுரேலியர்கள் தங்களின் கடவுளுக்கு 'யாகோவா (yaahowah)' என்று இட்டப் பெயர் தான் 'செகொவா(Jehovah)' என்று ஆங்கிலத்தில் மருவி நிற்கின்றது. இப்பொழுது நாம் அந்தப் பெயர் எவ்வாறு தமிழ் பெயராக இருக்கின்றது என்பதனைக் காண்போம்.

'யாகோவா' என்றச் சொல்லினை 'யா-கோ-ஆ' என்றும் கொள்ளலாம்.

யா என்றால் தமிழில் நீண்ட நாள் வாழ்கின்ற என்றப் பொருளும் இருக்கின்றது.
கோ - அரசன்
ஆ - தொடக்கம்.

எனவே 'யாகோவா' என்றச் சொல் 'யா-கோ-ஆ' என்றப் பெயரின் திரிபே என்றும் அதன் அர்த்தம் 'தொடக்கத்தில் இருந்தே ஆண்டுக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் அல்லது 'தொடக்கத்தில் இருந்தே வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் கொள்ளலாம்.

மேலும் இந்த பெயர் தோன்றிய வரலாறும் மேலே நாம் கண்டுள்ள பொருளினை மெய்ப்பிப்பது போலவே உள்ளது.

விவிலியத்தில் இறைவனுக்கு யார் 'யாகோவா' என்று பெயர் இட்டது என்பது தெரியவில்லை. அநேகமாக மோசே இப்பெயரினை இட்டு இருக்கலாம் என்றே கருதப் படுகின்றது. விவிலியத்தின் படி மோசே என்பவன் இறைவனுடன் உரையாடும் பொழுது 'இசுரவேல் மக்கள் உங்களின் பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்வது' என்று வினவுகின்றான். அதற்கு இறைவன் 'நானே உனது முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு வழிப்பட்டக் கடவுள்' என்றும் 'நானே இருக்கின்றவன்' என்றும் கூறியதாக இருக்கின்றது.

எனவே மோசே, தன் மூதாதையர்கள் காலத்திலும் சரி தன் காலத்திலும் சரி இருப்பது ஒரே கடவுளே என்ற அர்த்தத்திலும் தொடக்கத்தில் இருந்து அவரே இருக்கின்றார் என்ற அர்த்தத்திலும் அவரை 'யா-கோ-ஆ' என்று பெயர் இட்டு அழைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.

எனவே விவிலியத்தில் வழங்கப்பெறும் இறைவனின் பெயர்களான எல் சடையும் சரி யாகோவா வும் சரி தமிழ் பெயர்களாகவே அமைந்து இருப்பது நமக்கு புலப்படுகின்றது.

சரி...விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள மக்கள் தமிழர்கள் என்றால் தமிழர்களின் வழிப்பாட்டு முறையான கல் வழிபாடு விவிலியத்தில் இருக்க வேண்டுமே?... இருக்கின்றதா என்கின்றீர்களா....!!!

ஆம்...விவிலியத்தில் கல் வழிபாடு/சிவலிங்க வழிபாடு இருக்கவே செய்கின்றது....

பி.கு:

ஒவ்வொரு சமயத்தினரும் அவர்கள் வழிபடும் இறைவன் தான் உலகின் முதல் கடவுள் அல்லது ஒரே கடவுள் என்றே கருதுவர். அந்நிலையிலேயே தான் நாம் யாகோவா என்றப் பெயரினைக் காண வேண்டி இருக்கின்றது. அப்பெயர் தமிழ் சொல்லில் இருந்தே வந்து இருக்கின்றது என்பதனைக் காணவே நாம் அதனை இங்கே கண்டு இருக்கின்றோம். அதைத் தவிர்த்து முழு முதற் கடவுளான உலகைப் படைத்த இறைவனுக்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அக்காலத்தில் குல தெய்வ வழிபாட்டு முறையே இருந்ததே அன்றி முழுமுதற் கடவுட் கொள்கை இருக்கவில்லை. யாகோவா என்பது யூதர்களின் குல தெய்வமே அன்றி முழு முதற் கடவுள் அல்ல. இயேசுவிற்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

பி.கு:

இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய மொழி அறிஞர் ம.சோ.விக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருடைய நூல்கள் தமிழர் சமயமும் , குமரிக்கண்டமும் தான் இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய நூல்கள்....

விவிலியம்...!!!

கிருத்துவர்களின வேத நூல் உலகின் தோற்றத்தில் தொடங்கி பின்னர் யூதர்களின் வரலாறாய் பயணித்து இறுதியில் இயேசு கிருத்துவின் வாழ்வினையும் கொள்கைகளையும் விளக்குவதாய் அமைந்த ஒரு நூல். கிருத்துவத்தினைப் பற்றி நாம் அறிய வேண்டுமானால் விவிலியத்தினை பற்றி முதலில் அறிய வேண்டும். எனவே தான் நாம் முன்னரே விவிலியத்தின் சில பகுதிகள் பற்றி பார்த்து இருந்தோம். அதன் அடிப்படையில்,

௧) ஆதாம் மற்றும் ஏவாள் என்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் என்றும் (ஆதாம்)
௨) வெள்ளத்தால் உலகம் அழிவது குமரிக்கண்ட அழிவு என்றும்
௩) நோவா என்பதும் தமிழர்களை குறித்த சொல் என்றும் கண்டு இருந்தோம். (நோவா)

சரிங்க...இது எல்லாம் நம்ம ஏற்கனவே பார்த்த செய்திகள் தான். விவிலியத்துல சிவலிங்க வழிபாடு/கல் வழிபாடு இருக்கு அப்படின்னு சொன்னீங்களே அதப் பத்தி சொல்லுங்க அப்படிங்கிறீங்களா... அதனை பார்ப்போம்...ஆனால் அதற்கு முன் நாம் இன்னொரு தகவலையும் கண்டு விட்டால் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்..விவிலியம் கூறும் கதையினை ஒத்த கதைகள் சுமேரிய இலக்கியத்திலும், பாபிலோனிய இலக்கியத்திலும் காணப்படுகின்றன என்று. அவ்விலக்கியங்களில் கதைகள் மட்டும் ஒரே மாதிரியாக அல்லாது சில பெயர்களும் கூட ஒரே மாதிரியாக இருக்கின்றன என்பதனையும் நாம் கண்டு இருக்கின்றோம். விவிலியத்தில் ஆதாம் என்றுக் கூறப்படும் மனிதன் சுமேரிய இலக்கியத்திலும் பாபிலோனிய இலக்கியத்திலும் ஆதப்பா என்று வழங்கப்படுகின்றான். விவிலியத்தில் நோவா என்று வழங்கப்படுபவன் சுமேரிய இலக்கியங்கள் மற்றும் பாபிலோனிய இலக்கியங்களில் 'ஊற்றுநாவிபித்தன்' என்று அழைக்கப்படுகின்றான்.

மேலும்,

ஆதாம் தொடங்கி நோவா வரை விவிலியம் பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.
அதேப் போல் சுமேரியக் கதைகளும் ஆதப்பா தொடங்கி ஊற்றுநாவிபித்தன் வரை பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது. அந்தக் கதைகள் கூறும் பத்து தலைமுறையினரில் ஏழாம் தலைமுறையினராக கூறப்படுபவனின் பெயர் அந்த இரண்டு கதைகளிலும் ஒன்றாகவே இருக்கின்றது.

'ஏனோக்கு' - அந்தக் கதைகளின் படி இவன் ஒருவன் தான் இறைவனை நேரில் கண்டு இறைவனோடு சென்றுக் கலந்தவன். இப்பொழுது இந்தப் பெயரைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

'ஏனோக்கு' என்பது 'யானோக்கு' என்ற சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

'யானோக்கு' என்னும் சொல் - யா + நோக்கு என்று பிரிந்து - யா என்னும் கடவுளை நோக்கியவன்/கண்டவன் என்னும் பொருளினைத் தருவதினை நாம் காணலாம். விவிலியமும் இவனை இறைவனை நேரில் கண்டவன் என்று கூறுவது இங்கே நோக்கத்தக்கது.

"ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)

இங்கே 'யா' என்பதும் 'நோக்கு என்பதும் தமிழ் சொற்கள் என்பது கவனிக்கத்தக்கது. இது விவிலியம் கூறும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்பதற்கும் முதல் மொழி தமிழ் என்பதற்கும் இன்னொரு சான்றாக நாம் எடுத்துக்கொள்ளத் தக்க ஒன்றாகும். சரி.. இனி விவிலியத்தில் கல் வழிபாடு இருந்ததா என்பதனைக் காண்போம். அதற்கு நாம் யாக்கோபுவை காண வேண்டி இருக்கின்றது.

அந்தக் கதையின்படி யாக்கோபு ஆரான் என்னும் இடத்துக்கு பயணம் செய்கின்றான். அவ்வாறு பயணிக்கும் பொழுது இரவு நெருங்கவே தலைக்கு ஒரு கல்லினை தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குகின்றான். அன்று இரவு அவன் கனவு காணுகின்றான். அக்கனவில் இறைவன் அவனிடம் உரையாடுகின்றார். தூக்கம் கலந்து எழுந்த யாக்கோபு 'இந்த இடத்தில இறைவன் உண்மையாகவே இருக்கின்றார்' என்றுக் கூறி தான் இறைவனை உணர்ந்த இடத்தில தான் தலைக்கு வைத்த கல்லினை எடுத்து நட்டி அதற்கு எண்ணெயினை ஊற்றி 'இக்கல் தேவனோட வீடாக' இருக்கும் என்றுக் கூறி அந்த இடத்துக்கு பெத்தேல் என்று பெயரிட்டான். (ஆதியாகமம் -28 : 10 - 12 )

மேலும் விவிலியத்தில் பல இடங்களில் இதே மாதிரியான வழிப்பாட்டு முறைகளை நாம் காண முடிகின்றது.

யாக்கோபு அவனுக்கும் லாபான் என்பவனுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படும் பொழுது சாட்சியாக ஒரு கல்லினை நட்டி வைத்து விட்டு அதனை சுற்றி கற்களைக் குவித்து வைத்துக் கொள்கின்றான். அதற்கு கலீடு என்றும் அவன் பெயரிடுகின்றான். (ஆதியாகமம் - 31 : 44 - 50 )

"மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்." - யாத்திராகமம் (24 - 4 )

"அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி," - யோசுவா (4 - 20 )

"அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்." - சாமுவேல் (7 - 12 )

இவ்வாறு விவிலியம் கூறும் பழைய ஏற்பாட்டில் கல்லினை நட்டி வைத்து அதனை வழிபடும் பழக்கம் மக்களிடம் இருந்து இருக்கின்றது என்பது நமக்கு தெரிய வருகின்றது. அவர்கள் கல்லினை இறைவனாக கருதவில்லை மாறாக இறைவன் இருப்பதற்கு ஒரு அடையாளமாகவே கருதினார்கள் என்றும் நாம் காண முடிகின்றது. மேலும் மற்றக் கல்லில் இருந்து இந்தக் கல்லினை வேறுப்படுத்திக் காட்டவே அதில் எண்ணெயும் ஊற்றினர் என்றும் அறிய முடிகின்றது.

சரிங்க... அவங்க கல்லினை வைத்து வழிப்பட்டாங்க. ஆனா அத எப்படி சிவலிங்க வழிப்பாடு அப்படின்னு சொல்றீங்கனு கேட்குறீங்களா...

சிவலிங்கம் என்பது இறைவனை அடையாளப்படுத்திய கல்லினைக் குறிக்க பயன்படுத்திய சொல்லே ஆகும். கிருத்துக்கு முன்பட்ட நூற்றாண்டுகளில் சிவலிங்கம் என்ற சொல் எந்த இலக்கியங்களிலும் கிடைக்கப்படவில்லை. கிருத்துக்கு பின்பட்ட நூற்றாண்டுகளில் தான் சிவலிங்கம் என்ற சொல் காணப்பெறுகின்றது. எனவே மக்களால் ஆதி இறைவனை குறிக்க பயன்பட்ட கல்லுக்கு பின்னாளில் சிவலிங்கம் என்று பெயர் வந்தது என்று நாம் கருத வேண்டியிருக்கின்றது.

மேலும் சிவலிங்க வழிப்பாட்டில் சிவலிங்கம் இருக்கும், அதன் முன்னர் நந்தி எனப்படும் சிவனின் வாகனமான காளை இருக்கும். ஆனால் காளை என்றால் கொம்புகள் இருக்க வேண்டும், ஆனால் சிவலிங்கத்தின் முன் இருக்கும் நந்திக்கோ முழுதாய் வளர்ந்த கொம்புகள் கிடையாது...கொம்புகள் வளர்ந்துக் கொண்டு இருக்கும் நிலையிலேயே நந்தியின் சிலைகள் காணப்படுகின்றன. எனவே நந்தி என்று சிவலிங்கத்தின் முன் வைக்கப்பட்டு இருப்பது காளை அல்ல என்றும் அது வளர்ந்துக் கொண்டு இருக்கும் கன்றுக்குட்டி தான் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே சிவலிங்கம்...அதன் முன்னர் ஒரு கன்றுக் குட்டி - இதுவே தான் சிவலிங்க வழிப்பாட்டு முறையின் தோற்றம் ஆகும்.

இதே மாதிரியான வழிபாடு விவிலியத்திலும் இருக்கின்றது.

எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )

மேலே உள்ள விவிலிய பகுதியின் மூலம் அதுவரை கல்லினை மட்டுமே பலி கொடுத்து வணங்கிக்கொண்டு இருந்த மக்களின் வழிப்பாட்டு முறையில் புதிதாக கன்றுக்குட்டியும் சேர்க்கப் பட்டது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளுகின்றோம்.

சரி இதுவரை நாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு உள்ள செய்திகளில் கல் வழிப்பாட்டினை பற்றிப் பார்த்தோம். தமிழர்களின் பழக்கமான கல் வழிபாடு சிந்து சமவெளியில் இருந்து மேற்கே சுமேரிய மற்றும் பாபிலோனிய வழிப்பாட்டு பழக்கமாக மாறி பின்னர் இசுரவேலர்களின் பழக்கமாகவும் மாறி இருப்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது புதிய ஏற்பாட்டில் இறைவனை கல்லினால் அடையாளப்படுத்தி இருக்கின்றார்களா என்பதனைக் காண்போம்.

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்," - (பேதுரு I - 2 : 4 )

மேலே உள்ள வாக்கியத்தில் பேதுரு, இயேசுவை உயிருள்ள கல் என்று குறிப்பிட்டு உள்ளார். இங்கே அவர் ஏன் கல் என்ற சொல்லினை பயன் படுத்த வேண்டும். அதுவும் உயிர் உள்ள கல் என்றுக் கூறி இருக்கின்றார். கல்லுக்கு தான் உயிர் கிடையாதே...பின்னர் ஏன் அவர் உயிருள்ள கல் என்று கூறி இருக்கின்றார்? விடையினைக் காண்போம்...

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...மக்கள் கல் நட்டி தங்களின் கடவுளை வழிப்பட்டு வந்தனர் என்று. கல் என்பது ஒரு அடையாளம். அவ்வளவே. தாங்கள் உயிரில்லாத கல்லின் மூலமாக வழிபட்டு வந்த இறைவன் உயிருள்ள மனிதனாக அவர்களுக்காக வந்ததை தெரிவிக்கவே உயிருள்ள கல் என்று பேதுரு கூறி இருக்கின்றார் என்கின்றனர் அறிஞர்கள்.

உயிரற்ற கல் வழிப்பாடு - அருவ நிலை - சிவலிங்கம்.
உயிருள்ள கல் - உருவ நிலை - இயேசு.

இவ்வாறே விவிலியத்தில் கல் வழிபாடு கூறப்பட்டு/பின்பற்றப்பட்டு உள்ளது. சரி...இதைப் போலவே இசுலாம் சமயத்திலும் கல் வழிப்பாட்டு முறை இருக்கின்றது. ஆனால் அதனை நாம் மற்றொரு பதிவில் பின்னர் காண்போம். இப்பொழுது தோமா நமக்காக தமிழகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

என்ன தோமாவா....தமிழகத்திலா??? என்கின்றீர்களா!!! ஆமாங்க... தோமா தான். அதுவும் நம்ம சென்னையில தான். அவரின் வரலாற்றின் கூடவே சாந்தோம்...பரங்கி மலை..ஆகியவற்றின் வரலாறும் காத்திருக்கின்றன ...பயணிப்போம்!!!

மேலும் சில தகவல்கள்:

நாம் மேலே இறைவனை நினைத்து நட்டப்பட்ட கற்களுக்கு எண்ணெய் ஊற்றி மக்கள் வேறு கற்களில் இருந்து அவற்றினை வேறுப்படுத்தினர் என்றுக் கண்டு இருந்தோம். அதன் அடிப்படையில் இரு தகவல்கள்.

மேசியா என்றால் 'எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்பது பொருள்.
கிருத்து என்றாலும் அபிசேகம் பண்ணப்பட்டவர் என்பதே பொருள்.

ஆனால் விவிலியத்தில் கிருத்துவினை எவரும் அபிசேகம் செய்ததாக செய்திகள் இல்லை. அது அப்படி இருக்க அவரை ஏன் அவ்வாறு அழைக்கின்றனர் என்றக் கேள்விக்கு 'அது வரை மக்கள் கல்லில் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டு வந்த இறைவன் இன்று மனித வடிவில் வந்து இருக்கின்றார். இவரைத் தான் நாம் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டோம். எனவே இவர் எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்று மக்கள் கருதி அவரை கிருத்து என்று அழைத்தனர்' என்றே விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்....

தொடரும்... பகுதி-8 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக