ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-9

விசயன் வருகை....
விசயன் வருகையும், ஸ்ரீலங்காவும்.
ஈழநாட்டில் பூர்வகாலம் குவேனி காலத்தில் விசயன் வருகை ஆரம்பிக்கிறது. விசயன் வருகை இலங்கை வரலாற்றில் ஓர் தனிச் சிறப்புடையது. தற்கால இலங்கைக்கு அடிகோலியவன் அவனே. விசயனும் அவனுடைய நண்பர்களுமாக இலங்கைக்கு அகதிகளாக வந்து சேர்ந்தார்கள் என மகாவம்ச வரலாறு கூறுகின்றது. விசயனும் கூட்டாளிகளும் புத்தளத்துக்கணித்தாகவுள்ள தம்பண்ணை என்னும் இடத்திலேயே முதல் வந்து இறங்கினார்கள் என்றும் அவ் வரலாறே கூறுகின்றது. தட்சிண கைலாயபுராணம் புத்தளங் கரையில் தம்பன் (தம்பண்ணா) என்னும் பட்டணத்தைக் கட்டி, கோட்டையையும் கட்டினான் எனக் கூறும். தண கைலாயபுராணம் பாடப்பட்டது. யாழ்ப்பாண அரசர்காலம் மகாவம்சக் கூற்றும் தணகைலாயக் கூற்றும் ஒன்றாகவே அமைகின்றன. எனவே அவன் இறங்கிய இடத்தின் பெயர் தம்பண்ணை என்றும் அவ்விடத்திலேயே தம்பன் நகரை அமைத்தான் என்றும் அறியலாம்.

இனி யாழ்ப்பாண வைபவமாலை விசயன் வரலாறு கூறும்போது அவன் வந்திறங்கிய இடம் மாந்தை அல்லது கீரிமலை அல்லது சிங்கை நகர்என வழங்கும் வல்லிபுரத்திலுமாய் இருக்கலாம் எனக் கூறுகின்றது. அவ்வாறானால் சிங்கபுரத்திற்குத் தெற்கே 2, 2½ கல் தொலைவில் வரணிக் கிராமத்தில் தம்பான் என அழைக்கப்படும் ஒரு வட்டாரம் உண்டு. வல்லிபுரத்துக்கணித்தாயுள்ள சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இடமே விசயனுடன் வந்த ஏனையோர் தமக்கு உறைவிடமாக அமைத்துக்கொண்ட இடமாகும். இச் சிங்கைநகர் ஆட்சியும், பிரபல்யமும் கி. பி. 8ம் நூற்றாண்டுவரை இருந்திருக்கிறது. பின்னர் கலிங்க மாநகரில் இருந்து உச்சநிலையடைகிறது. எனவே சிங்கை நகர் ஆட்சி கலிங்கநாட்டுத் தமிழருடையது. அவர்கள் தமது தாய்நாட்டின் தலைநகர் சிங்கபுரத்தை நினைவுகூர்ந்து அமைந்த இடமே அதுவாகும். இதனால் விசயனும் கூட்டாளிமாரும் சிங்கபுரத்துக்கு மிகவும் அணித்தான துறைமுகமாகவுள்ள கற்கோவளக்கரையில் இறங்கியிருக்கலாம் என்பது பலவற்றானும் பொருத்தமுடைய தாகும். அன்றேல் வல்லிபுரத்துக்கணித்தாகச் சிங்கை நகரை அமைத்தமைக்கு வேறோர் காரணமும் கூறமுடியாது. புத்தளக்கரையில் இறங்கியது உண்மையானால் பல நூறு மைல்களுக்கப்பால் மேல் கரையினின்றும் கீழ்க்கரைக்கு வரவேண்டியதேன்? அங்கே சிங்கை நகரை அமைக்கவேண்டியதன் காரணம் என்ன? ஆதலின் புத்தளத்துக்கணித்தாய் இறங்கினர் என்;;பது அவர்களின் பின் உள்ள அவர்கள் வரலாற்றுக்கு முரண்பாடாகிறது. அன்றி விசயன் மாதோட்டப் பகுதியில் தம்பன்னா நகரைக் கட்டி ஆட்சி புரிந்தான் என்பதினாலும் அவ்வுண்மை புலப்படுகின்றது.

இனி வரணிக்கிராமத்திலுள்ள தம்பான் என்ற இடம் இன்றுபாரிய மேடாகவும், செம்மண்ணாகவும் இருக்கிறது. இவ்விடம் பிற்காலத்தில் சன்னாரிக்காடு என்றும், சங்கிலியாதிடல், சங்கிலித் தோட்டம் என்றும் வழங்கப்படுகின்றது. இவ்விடம் வரணிக் கிராமத்தில் ஓர் தனி வேறுபாடான இயற்கை அமைப்பைக் கொண்டுள்ளது. விஸ்தீரணம் சுமார் 15 ஏக்கர் வரையில் இருக்கும். ஆகையால் விசயன் அமைத்த நகர் இத் தம்பானோ எனவும் எண்ண இடமுண்டு சிங்கை நகருக்குத் தென்புறமாக 2, 2½ கல்தொலைவில் இத்தம்பான் என்ற இடம் உள்ளதால் விசயன் தனது ஆட்சி நகரை அங்கே அமைத்திருக்கலாம் அல்லவா? ஆதலின் இத் ‘தம்பான்’ என்ற பெயர் விசயன் தான் அமைத்த நகருக்குச் சூட்டிய பெயர் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

இத் தம்பானின் மேற்குப்புறம் பரந்த வயல்வெளி, வயல் நிலப்பகுதியைப் பண்ணை என வழங்குதலும் உண்டு. ஆதலின் தம்பாணின் அயலில் உள்ள பண்ணை தம்பண்ணை எனப்படலாம். அத் தம்பாண்ணை என்னும் சொல் அக்காலத்தில் தம்பணை, தம்பளை என மருவி வழக்கில் வந்திருக்கலாம் தற்போது அவ் வயல்வெளி தம்பளை என்றே அழைக்கப்படுகின்றது.

ஆதலின் விசயனும் கூட்டாளிகளும் கற்கோவளத்தில் இறங்கி முதல் எல்லோரும் சிங்கை நகரை உறைவிடமாகக்கொண்டார்கள் என்றும் பின்னர் விசயன் தான் நகர் அமைத்தற்குரிய இடத்தைத் தெரிவு செய்து தம்பான் நகரை அமைத்தான் என்பதுமே பொருத்தமான வரலாறாகும். அன்றியும் விசயன் மணம்முடித்த பின்னரே, அரசுரிமை பெற்ற பின்னரே நகரமைத்தல் சாலும் எனவேதாம் முதற்றங்கிய வதிவிடமான சிங்கபுரத்துக்கு அண்மையிலேயே இவ்விடம் இருத்தல் அக்கொள்கைக்குச் சாலவும் பொருத்தமானதன்றோ?

இனி வரணியில் உள்ள தம்பான் என்ற இடமே விசயன் உறைவிடமாகக்கொண்டு அரசதானி அமைந்த இடம் என்பதற்கு இன்னும் பிற ஆதாரங்கள் உள.

இவ்வரணிக்கிராமத்துக்கு வடக்கேயும், தெற்கு தென்கிழக்கேயும் இயக்கர் எனப்படும் கிளையினர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் உள. வடக்கே தற்போது அல்வாய் என அழைக்கப்படும் இடத்தில் ‘மாயக்கை’ என அழைக்கப்படும் ஓர் குறிப்பிட்ட இடம் உண்டு. மா – யக்கா – மாயக்கா. அது காலத்தில் மாயக்கை என வழங்கலாயிற்று. இவ்விடத்துக்கும் தம்பான் என்ற இடத்துக்கும் 4 கல் தொலைவு இருக்கும். மகாயக்கா என்பான் ஒருவன் அப்பகுதியில் ஓர் சிற்றரசனாய் இருந்திருக்கலாம். அங்கேஷ மகாயக்கா வாழ்ந்தமைக்குப் பல அறிகுறிகள் இன்றும் உள. வெள்ளம் தேங்கி நிற்கும் ஓர் பாரிய அகழி அது கடலைச் சென்றடைகிறது. அஃது தற்பொழுது தூர்ந்த நிலையில் தரிசாய்க் கிடக்கின்றது. மாரியில் வெள்ளம் தேங்கி நிற்கும். அவ்வகழியின் தென் அந்தம் பாரிய மலைப் பாறைகள் உள்ளே மேடையும், அம்மேட்டுப்பகுதியின் கீழ் ஒர் குகை வழியும் சிதைவுற்ற நிலையில் காணக் கிடக்கின்றன. இக் குகைவழி கீரிமலையைச் சென்றடைவதாகப் பேசிக்கொள்கிறார்கள். அம் மேட்டுப் பகுதியில் பல காவல் தெய்வங்களின் இருக்கைகள் பல இன்றும் காணக் கிடக்கின்றன. அவற்றிற்கு இன்றும் தீபமேற்றி தூபமிட்டு வணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. இனி அந்த அகழியின் ஓரமாக கிழக்குப் பாகமாக ஆச்சரியப்படத்தக்க கிணறு ஒன்று இருக்கிறது. அதன் மேற்பகுதி தற்காலம் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. எவ்வளவு நீர் வெளியே இருந்து உட்சென்றாலும் நீர்மட்டம் அணுவளவேனும் வேறுபடாது. இறைத்தாலும் அப்படியே. இத்தகைய பழமையை உணர்த்தும் இயல்புகள் பல அம்மாயக்கை என்னும் இடத்தில் இன்றும் காணலாம். அகழியின் ஓரத்தில் ஒர் விநாயகர் ஆலயமும் உள்ளது. அது மாயக்கைப் பிள்ளையார் கோயில் என்றே வழங்கப்பட்டு வருகிறது. இம் மாயக்கை என்னும் இடம் சிங்கை நகருக்கு மிக அண்மையில் உள்ளது.

இனித் தம்பான் என்ற இடத்துக்கு சுமார் 10 கல் தொலைவில் தென் கிழக்கே பளைக்கு அண்மையில் கண்டிறோட்டு ஊடறுத்துச் செல்கின்ற இயக்கச்சி என்னும் ஓர் இடம் இருக்கின்றது. மேற்கூறிய மாயக்கைக்கும் இயக்கச்சிக்கும் இடையில் தான் தம்பான் என்ற இடம் இருக்கின்றது. இயக்கச்சி என்பது ஓர் இயக்கர் குலப் பெண்ணரசியின் ஆட்சிக்குட்பட்ட உறைவிடமாக இருக்கலாம். அப்பெண்ணரசி குவேனி தானோ எனவும் இடமுண்டு. எனவே தம்பான் என்ற இடமே விசயன் நிருமாணித்த நகராகலாம் என எண்ண இடம் உண்டாகிறது. மற்று அவ்விடத்துக்கு தம்பான் என்று வருவதற்கு காரணம் காண முடியவில்லை.

எவ்வாறாயினும் விசயன் புத்தளத்துக்கணித்தாகவோ அன்றி வல்லிபுரத்துக் கணித்தாகவோ இறங்கிக் கரைசேர்ந்தான் என்பதும், இயக்கர் குல அரச கன்னிகையாகிய குவேனியை மணம் முடித்தாள் என்பதும், அதனால் ஈழநாட்டை ஆளும் அரசுரிமையைப் பெற்றான் என்பதும் அதன்பின் தம்பான் நகரை ஆட்சி நகராக அமைத்துக்கொண்டான் என்பதும், இங்குவாழ்ந்த இயக்கர், நாகர் எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்ட தமிழர்களோடு தானும் தமிழனாய் வாழ்ந்தான் என்பதும், அவர்கள் பண்பாடுகளையும், சமயக் கோட்பாடுகளையும் வேறுபாடின்றிக்கைக்கொண்டு வாழ்ந்தான் என்பதும் நாம் சந்தேக விபரீதமறத் தெரிந்து கொள்ளும் வரலாற்று உண்மைகளாகும் விசயனும் கலிங்க நாட்டுத் தமிழனும் சிவனெறிக் கோட்பாடுகளை உடையவனும் என்பதை மறுக்கமுடியாது. அன்றேல் விசயன் நாடாளும் உரிமை பெறுதற்கும் இங்குள்ளவரோடு கலந்து உறவாடி ஒரே சமயத்தினராய் வாழ்ந்து ஒரே கிளையினராய் வாழ்வதற்கும் வேறெந்தக் காரணமோ தொடர்போ கூறமுடியாது. போர் செய்து ஆளும் உரிமை பெற்றான் என்பதற்கு யாதுமொரு சான்றும் இல்லை. அப்படியொரு வரலாறே இல்லை. அன்றியும் அகதியாய் வந்த விசயனுக்கு ஆற்றல் ஏது?

விசயன் இலங்கைக்கு வந்த காலம் கி. மு. 543, 483, 445 எனப் பலபடக் கூறுவர். மகாவமிச வரலாறு கி. மு. 453 என்றே கூறும். ஆனால் அவனது வருகை ஆண்டும், ஆட்சியாண்டும் ஒரே ஆண்டாக இருப்பது பொருத்தம் அற்றதே அஃது 543 எனக் கொண்டால் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னாகும். சரியாகச் சொன்னால் இற்றைக்கு 2531 ஆண்டுகளாகும். கலியாண்டு 2533ம் ஆண்டாகும்.

இக்காலத்தைத் தென்இந்திய தமிழ்ச் சங்கங்களோடு இணைத்து ஒப்புநோக்கும்போது அது கடைச்சங்கம் இருந்த காலமாகும். கடைச்சங்கம் முடிபெய்தியது கி. பி 250. விசயன் வந்தது கி. மு. 543 ஆகவே கடைச்சங்கம் முடிவதற்கு முன் 793 வருடங்களுக்கு முன் வந்தவனாகும். ஆனால் கடைச்சங்கம் நிலவிய காலம் 1850 ஆண்டுகள் ஆகும். குவேனி வாழ்ந்த காலமும் அதுவேயாகும்.

இனிக் குவேனி என்ற பெயர் பற்றிச் சிந்திப்பாம். இவர்கள் பரம்பரையில் முன்னோன் ஒருவன் குபேரன் என்னும் பெயரோடு பேரரசனாய் ஆட்சி புரிந்தான் என்பது அப் பெயர்பற்றியும் முன்னர் விளக்கப்பட்டது. குவேனி என்னும் சொல் கு – வேனி எனப் பிரியும். ‘கு’ என்றால் பூமி. வேன் என்பது அதிகம் என்ற பொருளில் வரும். எனவே பூமியை அதிகம் உடையவள் குவேனி என்றாகும். அதனால் பூமி ஆளும் அரச பரம்பரையினள் குவேனி என்பது பெற்றாம். ஆதலின் அவள் ஈழநாட்டு அரசகன்னிகையே என்பது சங்கையறத் தெளிவாகிறது. இதற்குச் சான்றாக ‘வெனன்’ என ஒர் ஆண்பாற் பெயர் உள்ளது. அவன் ஒர் அரச பரம்பரையைச் சேர்ந்த அரசன் ஆவான். அவன் யார்? பிருது சக்கரவர்த்தியின் தந்தையாவான். எனவே வேனன் என்ற ஆண்பாற் சொல்லுக்குரிய பெண்பாற் சொல் ‘வேனி’ அல்லவா? ஆதலின் வேனன், வேனி என்ற பெயர்கள் அக்காலத்தில் அரச பரம்பரையினரிடத்தே வழக்கில் இருந்த பெயர்கள் என அறியக்கிடக்கின்றது. இச் சொற்கள் தற்போது வழக்கொழிந்தன.

குவேனி அரச பரம்பரையில் உள்ளவள் என்பது அகதியாக வந்த விசயனுக்கு அரசனாகும் உரிமை கிடைத் மையே சான்றாகுமன்றோ? அன்றியும் விசயன் ஓர் அரசிளங் குமாரன். விசயன் வந்த காலத்தில் ஈழநாட்டில் அரசும் இருந்தே ஆகவேண்டும். அரச பரம்பரையினரின் உறவும் உதவியும் இன்றி விசயன் அரசனாகவோ ஒரு முதல்வனாகவோ முன்னுக்கு வருதல் நிகழக்கூடியதா? அன்றியும் விசயன் ஓர் சாதாரண குடும்பத்தில், ஓர் ஏழைக்குடும்பத்தில், ஓர் அநாகரிகமான குடும்பத்தில் பெண்கொள்ள விரும்புவானா? அப்படியானால் அவன் பிரசைகள் குடும்பத்தில் ஒருவனாகவன்றோ இருப்பான். அவன் அரசனாவது எப்படி? சிந்தியுங்கள்.

அக்காலத்தில் இலங்கையின் சரித்திர கருத்தாக்களாக இருந்த பிக்குகள் ஈழநாட்டுத் தமிழரையும், அவர்கள் குல முறைகளையும், குவேனி ஆகிய பெண்மணியையும் இழித்துரைக்க வேண்டி அவர்கள் பெருமைகளை எல்லாம் மறைத்துரைக்கலாயினர் என்றே கொள்ளலாம். அல்லாமலும் விசயன் இலங்கைக்கு வந்து சுமார் 250 ஆண்டுகளின் பின்னரே பிக்குகள் முதன் முதல் இலங்கைக்கு வரலாயினர். இனி அவர்கள் மகாவமிச சரித்திரம் எழுதிய காலமும் மிகப் பிற்பட்டதே. அதனால் விசயன் வரலாறு அவர்களுக்குப் பழமையானதே. அதனாலும் வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டிருத்தல் கூடும். இனி அவர்கள் வரலாற்றையும் செவி வழிச் செய்தியாகவே அறிந்திருப்பார்கள் அன்றோ? அதில் மாற்றங்கள் ஏற்படுதல் சாதாரணம்.

ஆதலின் ஈழநாட்டு அரச பரம்பரையினள் ஆகிய குவேனியை அரசிளங் குமாரனாகிய விசயன் மணம் முடித்தே அவர்களோடு உறவாடிக் கலந்தே ஈழநாட்டு அரசுரிமையைப் பெற்றான் என்பதே வரலாற்றுக்குப் பொருத்தமான நிகழக்கூடிய உண்மையாகும்...

இனி ஈழநாடும் இந்தியாவும் பூர்வகாலம் தொடக்கம் கலை, கலாசாரம், பண்பாடு கடவுட்கொள்கை என்பவற்றில் ஒரே தன்மையாகவே, ஒன்றாகவே இருந்து வருவதை வரலாறு கூறுகின்றது. நிகழ்காலமும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அதுவும் புத்தம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையும் இந்தியாவும் ஒரே இனம், ஒரே மொழி, ஒரேமதம் உடையதாகவே இருந்தன. ஆகவே தமிழர் கலை, கலாச்சாரம் சிறந்தோங்கிய நாகரீகம் படைத்த கடைச்சங்கத்தில் அதுவும் பிற்கூறாகிய கி. மு. 543ல் தென்னாட்டில் அண்டை நாடாகிய ஈழநாட்டில் அநாகரீகமான காட்டுமுராண்டிகளாகவோ, வேறு மொழி பேசிய மக்களாகவோ இருக்கமுடியுமா? ஈழத்துப் பூதந்தேவனார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் கடைச்சங்க காலத்தில் இருந்தவர் அன்றோ? அவர் பாடிய பாடல்கள் இன்றும் உள்ளன. ஈழநாட்டுப் புலவர் தமிழ்ச்சங்கததில் இருந்து செய்யுள் செய்தார் என்றால் அவர் எந்த இனத்தவரோ? இயக்கர், நாகர் என அழைக்கப்பட்ட ஈழநாட்டுத் தமிழர்களின் வேறானவரா? உண்மை அறிமின்!

இப்புலவர் பாண்டியன் பசும்பூட்சேய் என்பவனைப் பாடியுள்ளார். இப்பாண்டியன் கி. மு. 180 – 125 வரையில் இருந்தவன் இக்காலம் இலங்கையில் எல்லாளன் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான். எனவே விசயன் வந்த காலத்தில் ஈழநாட்டு மக்கள் நாகரீகம் படைத்தவர்களும், அறிவுடைச் சான்றோரும், கவி பாடும் புலவர் பெருமக்களும், நாடாளும் அரசபரம்பரையினரும் ஆகச் சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்பது பெறப்படும். கல்வீடு கட்டி உப்பரிகைகளில் சகல சுகபோகங்களையும் அலுபவிக்கின்ற இக்காலத்திலும் குடிசைவீட்டில் வாழும் அநாகரீகமான அறிவில் குறைந்த மக்களும் இருக்கிறார்கள் அல்லவா?

ஈழநாட்டு மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரதத்தில் நாகரீகம் படைத்த மக்களாகவே இருந்தார்கள் என்பதைப் பாரத வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. அருச்சுனன் ஈழநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த நாக கன்னிகை சித்திராங்கதை (அல்லிராணி)யைக் கண்டதும் அவள்மீது காதல்கொண்டு மணம் முடித்தான். அவள் வயிற்றில் பிறந்த மகன் சித்திராங்கதன். இவன்; ஈழநாட்டில் அரசனாயிருக்கும் போது அருச்சுனன் திக்கு விசயம் செய்கிறான். அப்பொழுது ஒருவரை ஒருவர் அறியாது போர் தொடுத்தனர். அப் போரில் சித்திராங்கதனே வெற்றி யீட்டுகிறான். இது ஈழநாட்டின் பாரதகால நிகழ்ச்சி. இது விசயன் வருகைக்குப் பலநூறு வருடங்களுக்கு முன்னாகும். இராவணன் காலத்துப் பின்னாகும். பாரதப்போர் நடைபெற்ற காலம் கி. மு. 1400 – 1500 இற்கும் இடையிலென ஆராய்ச்சியாளர் கூறுவர். இக்காலம் கடைச்சங்கத்தின் ஆரம்பகாலமாகும் எனலாம். விசயன் வருகைக்கு 1000 ஆண்டுகள் முன்னாகும்.

எனவே அக்காலத்தில் ஈழநாட்டு நாககன்னியை நாகரீகத்தில் சிறந்த வில்வீரனாகிய புருடோத்தமன் அருச்சுனன் கண்டு காதல் கொண்டு மணம் முடித்தான் என்றால் ஈழநாட்டு அருச்சுனனையே கவரத்தக்க உயர்நிலையில் இருந்ததென்பது அங்கை நெல்லி. அவள் ஓர் அரச கன்னிகை. அவள் பெயர் அல்லி என்பது. வடமொழியாளரால் பெயர்கள் உருத்திரிந்தன.

இவ்வாறு விசயன் வருவதற்கு 1000 ஆண்டுகள் முன்னதாக இத்துணைச் சிறப்புடன் வாழ்ந்த ஈழநாட்டு மக்கள் விசயன் வந்த காலத்தில் நாட்டு வேடரிலும் கேவலமாக வாழ்ந்தார்கள் எனக் கூறுவது உண்மையாகுமா? ஆதலின் அக்காலத்து வரலாறு எழுதிய புத்த பிக்குகள் இழித்துரைக்கும் நோக்கமாகவோ, அன்றி உண்மை அறியாமலோ கேள்வி மூலம் எழுதினார் என்றே கொள்ள வேண்டும்.

இயக்கர் என்றும் நாகர் என்றும் அழைக்கப்பட்ட தமிழ்ப் பழங்குடி மக்கள் ஈழநாடு முழுமையும், ஈழநாட்டின் வடமுனை தொடக்கம், தென்முனை ஈறாக வாழ்ந்த ஒரே இனத்தவர்களே ஆவர். அவர்களைத்தவிர அக்காலத்தில் வேறு எந்த இனமோ வாழவில்லை என்பது துணிபு. வடபகுதியில் வாழ்ந்தவர்கள் நாகர் எனப்பட்டார்கள். ஏனைய பகுதியில் வாழ்ந்தவர்கள் மிகுதியும் இயக்கர் எனப்பட்டார்கள்.

இனி இதற்கு ஆதாரமாக இருக்கிறது முஸ்லீம்கள் வரலாறு முதன் முதல் பந்துகாபயன் காலத்தில் அராபியர் ஆகிய முஸ்லீம்கள் வியாபார நோக்கமாக வந்து ஈழநாட்டில் குடியேறினார்கள். பின் தொடர்ந்து அராபியர் ஈழநாட்டில் குடியேறுவாராயினர். அவர்கள் தமது வியாபாரப் போக்குவரத்துக்கு வசதியாக ஈழநாட்டின் கரையோரப் பகுதிகளில் குடியேறினார்கள். மிகுதியும் யாழ்ப்பாணம், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை ஆதியாம் இடங்களில் குடியேறினார்கள். இவர்களுடைய சொந்தப் பேச்சு மொழி ‘அராபிக்’ ஆகும். ஆனால் இலங்கையில் குடியேறிய முஸ்லீம்கள் இன்று பேசும்மொழி தமிழ். இன்று அவர்களது தாய்மொழி தமிழே. என்ன காரணம்? ஈழநாடு முழுமையும் அவர்கள் வந்த காலத்தில் வழக்கில் இருந்த மொழி தமிழே. ஆதலின் அதனையே கற்று பேச ஆரம்பித்தனர் அல்லவா? அக்காலத்தில் சிங்களம் என்ற சொல்லே பிறக்கவில்லையன்றோ?

ஆதலின் சிங்களவர் என்ற ஓர் இனம் தோற்றுவதற்குரியவர்களாய் இருந்தவர்கள் இயக்கர். நாகர் எனப்பட்ட ஈழநாட்டுத் தமிழர்களேயாவர். விசயனும் அவனோடு வந்த 700 கூட்டாளிகள் மாத்திரம் அல்லர். அவர்கள் மணமுடித்துக் கொண்டது ஈழநாட்டுத் தமிழ்ப் பெண்மணிகளையே. சுருங்கக்கூறின் விசயனும் கூட்டாளிளும் ஈழநாட்டு மக்களோடு சங்கமமாயினர்.

இனி விசயன் காலம் தொடக்கம் சேர, சோழ, பாண்டி நாட்டு மக்களின் மணமுறைக் கலப்பும் குடியேற்றமும் நடைபெற்றமைக்கு வரலாறு உண்டு. இலங்கையின் கண்டி இரச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ வி;க்கிரம இராசசிங்கன் சேரநாட்டுப் பரம்பரையைச் சேர்ந்த தமிழனே. 1ம் கசபாகுவால் கி. பி. 2ம் நூற்றாண்டில் சிறையாகப் பிடிக்கப்பட்டு அழுத்தூர்க் கோறளை, அரிஸ்பற்று ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்டவர்கள் 12000 சோழநாட்டுத் தமிழர்கள். அன்றிக் காலத்துக்குக்காலம் இந்தியாவில் இருந்து தமிழர்கள் படையெடுப்புக் காலங்களில் ஈழநாட்டில் வந்து குடியேறியுள்ளார்கள். எனவே ஈழநாட்டில் இருந்த தமிழர்களும் கலிங்க நாட்டுத் தமிழர்களும், சேர, சோழ, பாண்டி நாட்டுத் தமிழர்களுமே இலங்கைவாழ் தமிழர்களாவர். முஸ்லீம்களை விட வேறு இனத்தினர் இலங்கையில் வாழ்ந்ததில்லை. ஆதலின் வட கீழ் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இருந்த தமிழர்களே சிங்களவர் என அழைக்கப்பட்டார்கள். வரலாறு இதுவே.

எனவே சிங்களம் என்றோர் மொழியையும், அது காரணமாகச் சிங்களவர் என்றோர் இனத்தையும் தோற்றுவித்ததற்குக் காரணமாய் இருந்தது புத்த மதமேயாகும். புத்த மதம் இலங்கையில் வேரூன்றாது இருந்தால் இன்று இலங்கை முழுமையும் ஒரே தமிழ்இனமும், ஒரே இந்துமதமுமே இருக்கும். உதாரணமாகப் புத்த மதம் நிலை பெறாத வட கீழ்ப் பகுதியை எடுத்துக்கொள்வோம். இன்றும் தமிழும் சைவசமயமுமே நிலவுகின்றதன்றோ?

சிங்கள மொழியின் சொற்கள் யாவும் தமிழும் பாளி மொழிச் சொற்களுமேயாகும். பிற்காலத்தில் வேறுமொழிச் சொற்களும் அற்பமாக விரவியிருக்கலாம். சிங்களம் ஓர் கலப்புமொழி. ஓர் தனித்துவமான இயற்கை மொழியன்று. இடையில் ஆக்கப்பட்டமொழி. அஃது இருபாஷையாளரின் பேச்சுக் கலப்பால் ஏற்பட்ட மொழியாகும். உலகில் சிங்களம் என ஓர் மொழியோ, இனமோ கிடையாது. இலங்கையிலும் புத்த சமயம் வந்துசில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தோன்றி வழக்கில் வரலாயிற்று. இம் மொழியின் ஆக்கத்துக்குக் காரணகருத்தாக்கள் புத்தபிக்குகளே யாவர்...

தொடரும்... பகுதி-10 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக