சனி, 18 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-2

இனி குமரி என்பது மலையைக் குறித்ததா? அன்றி ஆற்றைக் குறித்ததா? என்னும் ஐயப்பாடும் உண்டாகலாம். சிலப்பதிகாரம், குமரிக்கோடு (மலை) என்றே கூறுகின்றது. இக்கூற்றைச் சிகனடியார் கூற்றும் வலியுறுத்துகின்றது. என்னை?

“வேங்கடங்குமரி தீம்புனற் பௌவம் என்றும்
இந்நான் கெல்லை தமிழது வழக்கே”

என்பது வடக்கு வேங்கடமும் தெற்கு குமரி இரண்டையும் ஒரே இயல்பாக “வேங்கடம்குமரி” வேங்கட மலையோடு குமரியைச் சேர்த்துக் கூறி மேற்கும் கிழக்கும் “தீம்புனற் பௌவம்” என விதந்து கடலைக் கூறுதலின் குமரிமலை என்பதே ஆசிரியர் கருத்தாகும்.

ஆசிரியர் காலத்துக் குமரிமலை இருக்கவில்லையேயெனின் ஆம், குமரிமலை கடல்வாய்ப்பட்ட பின் அதனின் முனைப்பாகிய எஞ்சிய பகுதியை ஆசிரியர் குறித்தனர் ஆதல் வேண்டும். எனவே குமரிமுனையைக் குறிப்பதாகும் என்க. எனவே குமரி என ஒர் மலையிருந்து, அது கடல் வாய்ப்பட்டபின் அதன் ஞாபகார்த்தமாக தென்கோடி முனையை குமரி முனையென வழங்கி வரலாயினர் என்பதே வரலாற்றுண்மையாகும். குமரி என்பது ஆற்றைக் குறித்தது என உரையாசிரியர்கள் கூறுவதற்கு அவர்கள் கூற்றேயன்றி வேறு சான்றுகள் கிடைத்தில. தொல்காப்பிச் சிறப்புப் பாயிரச் செய்யுளும் “வடவேங்கடம் தென் குமரி” என்றே கூறும். கடல் என்றோ யாறென்றோ சுட்டவில்லை. இதனாலும் குமரி மலையைக் குறிக்கிறது என்பதே வலியுறுத்தல் காண்க.

இனி இந்தியாவும் இலங்கையும் குமரிமலைத் தொடரை உடையதாய் ஒன்றாய் இருந்துபின் கடல் கோளினால் இடையே 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்றால் எஞ்சியிருந்த இன்றைய இலங்கையே (ஈழம்) ஐம்பதாவது நாடாம் என்பது துணிபாம். இக்கடல் கோள் எப்போது நடைபெற்றிருக்கலாம் என்பது பற்றிப் பின்னர் கூறுவாம்.

ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் தமிழ் மக்களைத் தென்பக்கம் நோக்கிக் குடிபெயரச்செய்தும், அவர்களுள் ஒரு பகுதியாரோடு உறவாடிக் கலந்தும் இந்தியாவின் வடபகுதியில் குடியேறி வாழ்ந்து வரலாயினர்.

தற்போது உள்ள இந்தியாவில் சங்கம் ஆரம்பித்த காலத்தில் தெற்கே குமரியும், வடக்கே வேங்கடமும் ஆகிய எல்லைக்குட்பட்ட இடம் தமிழ் மொழி வழங்கிய செந்தமிழ் நாடாம். பண்டைய சங்க காலத் தமிழ் நூல்கள் யாவும் அதனைவலியுறுத்துகின்றன. இன்றுள்ள தமிழ் நூல்களுள் மிகவும் பழமையானதும், யாவற்றுக்கும் முதனூலாக விளங்கும் பெருமையுடையதுமான ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்தின் பாயிரத்திலே பனம்பாரனார் என்பவர் தமிழ் வழங்கும் நாட்டின் எல்லையை வரையறுத்து “வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து” எனக் கூறுகின்றார். காக்கை பாடினியாரும்,

“வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்று
அந்நான் கெல்லை ஆவயிற் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்”

எனக் கூறியிருப்பது காண்க சிகண்டியார் கூற்று முற்கூறப்பட்டது. இவைகள் மாற்றவோ மறைக்கவோ முடியாத பெருஞ் சாசனங்களாகும்.

தெற்கே குறிப்பிட்ட எல்லை குமரி. அக் குமரிக்குத் தெற்கே உள்ளது பாக்கு நீரிணை. ஆகவே வடக்கே வேங்கடம் தொடக்கம் தெற்கே கடல் எல்லையாகத் தமிழ் வழங்கிய நாடாகும். இவ்வெல்லை சங்ககாலத்திலே தொல்காப்பியர் காலத்துத் தமிழ் நாட்டின் விரிவை எடுத்துக்காட்டுகின்றது. சங்க காலமாவது மூன்று சங்கங்களும் நிலவிய காலமாகும். இவ்வெல்லை வேங்கடம் வரையும் வரையறுக்கப்பட்டமையினால் தொல்காப்பியர் காலத்தில் ஆரியர் வேங்கடத்துக்கு வடக்கே குடியமர்ந்திருந்தமை புலப்படுவதாகும். எனவே ஆரியர் வருகை தொல்காப்பியர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதாக வேண்டும் என்பது தெளிவு.

இக்காலத்தில் வேங்கடத்துக்கு அப்பாலும் பரந்த நிலப்பரப்பும் மக்கள் சமுதாயமும் இருக்கவும் வட வேங்கடத்தை எல்லையாக வரையறுத்தமை, அப்பால் வேற்று மொழி மக்கள் வசித்தனர் என்பதை எடுத்துக் காட்டுவதன்றோ? இங்கே நாம் ஒருவரலாற்று உண்மையை அறிய முடிகின்றது. என்னை?

தொல்காப்பியனார் தொல்காப்பியம் செய்கின்ற காலத்தில் ஆரியர் வடபகுதியில் குடியமர்ந்து வாழ்ந்தனர் என்பதேயாகும். எனவே ஆரியர் வருகை கி. மு. 1600 – 2000 என வரலாற்றாசிரியர் கூறுவதினால் தொல்காப்பியம் செய்யப்பட்ட காலம் கி. மு. 1600 க்கும் சில நூற்றாண்டுகள் பின்னாகக் கொள்ளலாம்.

இனி தென்குமரியை எல்லையாகக் கூறுவதினால் தெற்கே அதற்கு அப்பாலும் வேற்று மொழிநாடாம் எனின்? அற்றன்று. ஏன்? குமரிக்குத் தெற்கே கடல் இருந்து இந்தியாவையும், இலங்கையையும் வேறு வேறு நாடாகப் பரித்தலின் அது கடாவன்மை அறிக. தெற்கே கடலால் வரையறுக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்த இந்தியாவின் தென் பகுதியை முக்குலத் தமிழ் மன்னர் ஆட்சி புரிந்து வரலாயினர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் ஆவர். அம் மூவரும் தமிழ் மொழியை வளர்ப்பான் கருதியும் கற்று வல்ல பெரியோரை ஒன்று கூட்டிச் சங்கம் அமைத்து, சங்கத்தில் தாமும் அங்கம் வகித்து சங்கத்தை வளர்த்த தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் வளம் படுத்தினர் ஆதலின் அம்மூவர் நாடும் அகப்படத் தமிழ் வழங்கிய இடத்துக்கு எல்லை கூறுவாராயினர். அதனால் குமரிக்குத் தெற்கே கடலுக்கு அப்பாலுள்ள நாடாகிய இலங்கை வேற்று மொழி நாடெனப்படாமை காண்க.

எனவே, இலங்கை இந்தியாவினின்றும் பிரிபட்ட பின்னர் ஆரியர் வருகைக்குப் பின்னர், தமிழ் வழங்கிய எல்லை இதுவானால் இரு நாடுகளும் ஒன்றாய் இருந்த காலத்தில் இலங்கையும் அகப்படத் தமிழ் நாடே என அறிக. அன்றியும் பிரிபட்ட பின்னும், ஆரியர் வருகைக்கு முன் இலங்கையும் சேர இமயமலை பரியந்தம் தமிழ் வழங்கிய தமிழ் மக்கள் வாழ்ந்த இடமேயாகும்.

இனி, குமரிக்குத் தெற்கேயும் கடல் இன்றி நிலப்பரப்பும் மக்கள் கூட்டமும் இருக்க அதனை வேறு பிரித்து குமரியையே தமிழ் நாட்டின் எல்லையாக வரையறுத்திருந்தால் வேங்கடத்துக்கு அப்பாலுள்ள வடபகுதியே போன்று இலங்கையும் வேற்று மொழி நாடாம் எனக் கோடல் தகும். ஆதலின், கடல் தோன்றுவதற்கு முன் இரு நாடுகளும் ஒன்றாய் இருந்த காலத்தில் இலங்கையின் தென்கோடி அம்பாந்தோட்டை தொடக்கம் இமயமலை பரியந்தம் தமிழ் வழங்கிய தமிழ் நாடே என்பது தெளிவு. இதுபற்றி முன்னரும் கூறியுள்ளாம்.

இதுவரை யாம் கூறியவற்றில் இருந்து பிறிதோர் வரலாற்றுண்மை வலியுறுத்தப்படுகின்றது. என்னை? சங்க கால எல்லை வடவேங்கடம்@ அதற்கப்பால் உள்ளது. சிந்துவெளி, அங்குள்ள மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பது ஆய்வாளர் கருத்து என்பதனை முன் உணர்த்தியுள்ளேன். எனவே சங்ககாலத்துக்கு முன்னர் தமிழர்கள் இலங்கை அகப்பட இமயமலை பரியந்தம் வாழ்ந்தார்கள் என்பதும், வேறு எந்த ஒரு இன மக்களோ வாழவில்லை என்பதும் ஆகும்.

ஆரியர் வருகைக்குப்பின்னரே இடைச்சங்கம் இருந்த காலமாகும். அதனாலேயே தொல்காப்பியர் வடஎல்லை வேங்டமாகக் கூறியதுமன்றி, வடமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் வந்து விரிவாதிருத்தற் பொருட்டும் பொது எழுத்தாலாய வடமொழிகள் தமிழில் வழங்குதற்கும் வரையறுத்து இலக்கண வரம்பும் செய்துள்ளார்.

இனி, தென் எல்லையாகக் கூறப்பட்ட குமரி என்பது மலையன்று@ யாறும் அன்று@ கடலும் அன்று@. அஃது குமரி மலை கடல் வாய்ப்பட்டபோது எஞ்சிய குமரிமலையின் முனைப்பே என்பதை முன் கூறியவற்றில் இருந்து நாம் உணருகிறோம். இவ்வுண்மையை இன்னும் அகல நோக்கித் துணிவாம்.

“வடா அத பனிப்படு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடா அது தோன்று முதிர் பௌத்தின் குடக்கும்”

எனப் புறநானூறு கூறுவதில் இருந்தும் அவ்வுண்மையை அறியலாம். இப்பாட்டு பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி மேற் பாடப்பட்டது. பாடியவர் புலவர் காரிகிழார் என்பவர். இவ்வரசன் புகழ் தமிழ்நாட்டில் மாத்திரமன்று. அதற்கப்பாலும் பரவியது என்பதைப் புலவர் எடுத்துக் காட்டுகின்றார். இப் பாட்டில் கிழக்கும், மேற்கும் கடல் என விதந்து கூறி, குமரியை வாளா உருகெழு குமரி எனக் கூறுதலினால் அஃது கடலும் அன்று மலையும் அன்று என்பது பெற்றாம். எனவே குமரி என்னும் பெயர் குமரிமலையின் நினைவுச் சின்னமாக இந்தியாவின் தென்கோடி முனையைச் சுட்டி உணர்த்துவதாகும். புறம் 17வது செய்யுளில்,

“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

குமரியாற்றைக் குறிப்பதென வைத்துக்கொண்டு அதுபற்றிச் சிந்திப்போம். குமரிநாடு கடல்வாய்ப்பட்டு அழிவெய்திய பின்னர் தமிழ்நாட்டின் தென்எல்லை குமரி என்பது இது யாறானால் இப்போதும் அப்படி ஓர்யாறு ஓடிக் கொண்டிருக்கிறதா? அழிவெய்த முன்னர் குமரி என்பது யாறு எனக் கூறின் அதற்கு எவ்வித ஆதாரமும் இன்று.

புறம் 67ஆவது செய்யுள் குமரி கடற்கரையிலுள்ள ஓர் இடம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. அது “குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்பதுஇதில் துறை என்பது கடற்றுறை எனக்கோடலே பெரு வழக்கும் இயல்பாய பொருள் கோளுமாம். அன்றி வலிந்து யாதொரு ஆதாரமும் இன்றி யாற்றுத்துறை எனக் கொள்வார் சிலர். அங்கேயோர் யாற்று முகத்துவாரம் இல்லாமையே அவர் கூற்றுப் பொருந்தாமையை வலியுறுத்துவதாகும்.

எனவே சிலப்பதிகாரம் தெளிவாக “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” எனக் கூறியிருப்பதனால் கடல்கோள்ப்பட்ட பின்னர் குமரிமலையின் நினைவாக இன்றும் அழிவின்றி நிற்கும் அம்மலைப் பகுதியின் முனைப்பையே குமரிமுனை, குமரி எனக் கூறிவரலாயினர் எனத் தொல்லாசிரியர் கூற்றில் இருந்து நாம் அறியக்கூடிய உண்மையாகும்.

குமரிகோடு என்பது குமரி மலையின்உச்சி என்று கொள்ளலாம். ஏன்? “பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடு” என்றலின் அஃது பல மலை அடுக்குகளைக் கொண்ட குமரி மலையின் உச்சி எனப்பொருள்படும்.

இக் குமரிக்கோடு அக்காலத்தில் தற்போது இமயமலை இருப்பது போன்று தெய்வீகம் நிறைந்த பலவகையான பெருமைகளை உடையதாக அக்கால மக்களால் போற்றப்பட்டு வந்திருக்க வேண்டும். அக் குமரிக்கோட்டின் உச்சியில் குமரித்தெய்வம் வீற்றிருந்து அருள்பாலித்திருக்க வேண்டும். அதனால் அம்மலை குமரிமலை என மக்களால் போற்றப்பட்டதாக வேண்டும். அதனாலேயே அம்மலை கடல்வாய்ப்பட்ட பின்னும் அவ்விடத்திலே குமரிக் கோயிலும், அம்பாள் தரிசனமும் தீர்த்தமாடுதலும் பண்டுதொட்டு இன்று காறும் நடந்துவருகின்றது.

இத்தகைய தெய்வீகம் நிறைந்த குமரிமலை இமயமலைக்குக் கங்காநதி போன்ற பஃறுளியாற்றைக் கொண்டிருந்தது எனக் கொள்ள இடமுண்டு. இவ்வாற்றையே குமரி ஆறு என வழங்கி இருக்கலாம். ஏன் குமரிமலையினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த காரணத்தால் அவ்வாறு அழைத்தலும் சாலும். அன்றிப் பிறிதோர் குமரியாறு இருந்தமைக்கு எவ்வித ஆதாரமும் இன்று. அக்காலத்தில் குமரி மலை கொண்டிருந்த சிறப்பால் அம்மலையுடைய நாட்டையும் குமரிநாடென அழைக்கலாயினர் என்பது போதரும். குமரிமலை முழுமையும் கடல்வாய்ப்பட்டதன்று. வடக்குத் தெற்காக நீண்டிருந்த குமரிமலைத் தொடரின் வடபகுதியாகிய குமரிக்கோடும், பஃறுளியாறும், அவற்றைச்சார்ந்த இடங்களுமே கடல்வாய்ப்பட்டன. அப்பகுதியே தற்காலம் பாக்குநீரிணை எனக் கூறப்படும் கடற் பகுதியும் மன்னார்க் குடாக்கடலுமாகும்.

இனி, குமரி மலையை மொழியாளர் மகேந்திரமலை என்பர். சைவ உபாகமமாகிய சிவதருமோத்திரத்தில் பெரியமலைக்குத் தெற்கே மகேந்திரமலை உண்டென்றும். அது தெற்கு வடக்காக நீண்டு பரந்து உயர்ந்திருந்ததென்றும், அதன் அடிவாரத்தில் கனகமயமான இலங்கை உள்ள தென்றும் கூறப்படுகிறது. அன்றியும் அஃது ‘உன்னதத் தென்மகேந்திரம்’ எனவும் கூறப்படுகிறது. இம் மகேந்திரமலையின் தென்கோடியிலேயே (ஈழம்) சூரனுடைய இராசதானியாகிய வீரமகேந்திரம் இருந்திருக்கிறது.

எனவே மகேந்திர மலையின் அடிவாரத்தில் கனக மயமான இலங்கை உள்ளது எனக் கூறப்படுவதாலும் இலங்கையின் தென்கோடியில் மகேந்திர மலையில் சூரனது இராசதானி வீர மகேந்திரம் இருந்ததாகக் கூறப்படுவதாலும், குமரிமலைத் தொடர் (மகேந்திரம்) தற்போதுள்ள இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஆரம்பமாகி பாக்கு நீரிணை மன்னார்க் குடாக்கடலை உள்ளடக்கித் தெற்கு நோக்கிச் சென்று இலங்கையின் மத்தியில் மலை அடுக்குகளாய்ப் பரந்து உயர்ந்து இருக்கும் காலத்தில் அம்மலையின் மத்திய பகுதியே ஈழமாகும். (இலங்கை) இம் மகேந்திரமலை பலவிதமான அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இம் மகேந்திரமலையிலேயே (குமரிமலை) இறைவன் எழுந்தருளியிருந்து நான்கு தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களை உபதேசஞ் செய்தருளினார் என்பது புராண வரலாறு. அம்மலை தற்போது தெய்வீகம் நிறைந்த இடமாகக் காணப்படுவதும் சிவன் நாமத்தினால் அழைக்கப்படுவதுமான சிவனொளிபாதமலை என்றே கருத இடமுண்டு.

“மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்”

எனக் கீர்த்தித் திருஅகவலிலும் “மந்திர மாமலை மேவினாய் போற்றி” எனப் போற்றித் திரு அகவலிலும் மாணிக்கவாசக சுவாமிகள் கூறியிருப்பது காண்க. மந்திரமாமலை எனக் கூறப்படுவது மகேந்திரமலையே. மகேந்திரமலையின் அடிவாரத்தில் உள்ள இலங்கையைத் திருமூலநாயனார் சிவ பூமி எனக் கூறுவர். அவர் கூறுவதற்கு ஆதாரமாக இன்றும் நின்று காட்சி அளிப்பது சிவனொளி மலையே இது பிற்காலம் சிவனொளிபாதமலை என வழங்குவதாயிற்று. இஃது எல்லா மதத்தினராலும் போற்றப்பட்டுவரும் தெய்வீகச் சக்தி நிறைந்தது இம் மலை பண்டைக்காலம் தொட்டு சிவனின் உறைவிடமாக மக்களால் போற்றப்பட்டு வருகிறது. அதனாலேயே பின் வந்தவர்களான புத்தர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் அம் மலையைத் தத்தம் கடவுளின் இருப்பிடமாகக் கருதி வழிபட்டு வருகின்றார்கள். வழிபடுவது மாத்திரமல்ல, தத்தம் சமய கோட்பாட்டுக்கும், மொழிக்கும் ஏற்ப வேறுவேறு பெயர் சூட்டியும் வணங்குவாராயினர்.

எனவே இலங்கையின் மத்தியில் அதன் தென்கோடி வரை பரந்து உயர்ந்திருக்கும் மலைத்தொடர்கள் யாவும் மகேந்திர மலையின் பகுதிகளேயாகும். இதனை சிவதருமோத்திரத்தில் “மகேந்திர மலையின் அடிவாரத்தில் கனக மயமான இலங்கை இருக்கிறது” எனக்கூறப்பட்டிருத்தலினாலும் தென்கோடியில் சூரன் ஆட்சி நகர் வீரமகேந்திரம் இருந்ததெனக் கூறப்படுவதாலும் அறியலாம். எனவே மகேந்திரமலை இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஈழநாட்டை ஊடறுத்துத் தெற்கு நோக்கிச் சென்றது என்பது புலனாகும். அம் மலையின் அடிவாரமே ஈழம். எனவே இந்தியாவோடு இணைந்து தென்புறமாகப் பரந்திருந்த நாடே குமரிநாடென்பதும், அந்நாட்டில் கடல்கோட்பட்டவை போக எஞ்சியுள்ள குமரி நாடே ஈழம் என்பதும், குமரி நாடு இருந்த காலத்தில் வழங்கி வரப்பட்ட ஒரு உள்நாட்டின் பெயரே ஈழம் என்பதும், எனவே ஈழம் என்னும் பெயர்குமரி நாடு இருந்த காலத்தில் வழக்கில் இருந்த தென்பதும் அவ்வீழமே தற்போது இலங்கை என அழைக்கப்படும் தீவு என்பதும் குமரி நாட்டில் உள்நாடாய் இருந்த ஈழம் குமரி நாட்டைக் கடல்கொண்டதால் தீவானது என்பதும் நாம் தெளிவாக அறியும் உண்மைகளாகும்.

இனிக் குமரிமலை பல அடுக்க மலைகளைக் கொண்ட ஒருதொடர் என்பதனை இளங்கோவடிகள் கூற்று உறுதிப்படுத்துகின்றது. “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என்கிறார். ஆதலின் குமரிமலைத் தொடரின் வடபால் உள்ள உயர்ந்த மலையும் அதனின்று ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாறு கடல்வாய்ப்பட்டன என்பது உண்மையாகும்...

சங்ககால ஆரம்பம்...
இனிச் சங்ககாலத்துக்கு வருவாம். இலங்கையும், இந்தியாவும் இரு வேறு நாடுகளாகப் பிரிந்த பின்னர் நாம் அறியக்கூடிய மிகப் பழைய வரலாறு சூரனது ஆட்சிக் கால வரலாறேயாகும். சூரன் ஆட்சிக்காலத்தில் சங்கம் பற்றிய செய்திகள் அறியக் கூடியதாய் இல்லை. ஆனால் அகத்தியர் பேசப்படுகிறார். அவர் அக்காலத்தில் தென்னாடு போந்தமை பற்றிய வரலாறே கூறப்படுகின்றது. அகத்தியர் வருகைக்கு முன் சங்கம் இருந்ததில்லை. அகத்தியரே முதற் சங்கத்துக்கு முதன்மையானவராய் விளங்கினார். அகத்தியர் தென்னாடு போந்தமை தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவவேண்டும் என்ற நோக்குடன் அன்று என்பதை வரலாறு காட்டுகின்றது. ஆகவே அகத்தியர் வந்தார் பொதிய மலையில் இருந்தார். அப்படியானால் முதற் சங்கம் ஏன்தொடங்கப்பட்டது? யார் தொடக்கினார்? எப்பொழுது தொடங்கப்பட்டது? என்னும் வினாக்கள் எழுகின்றன. அதற்கு உய்த்துணர்ந்து விடைகள் காண்பாம்.

கடல்கோள் காரணமாக நாடு பல வழியிலும் அழிவெய்தியதனால் அதனைச் சீர் செய்வான் கருதியே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக வேண்டும். எனவே அகத்தியர் வருகைக்குப் பின் ஒர் பெருங் கடல் கோள் நடந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட அழிவைச் சீர் செய்வான் கருதியே முதன் முதலாக தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அப்பெருங்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளாக இருக்கலாம். சூரன் ஆட்சிக்காலத்தில் அகத்தியர் தென்னாடு வருகின்றார்@ பொதிய மலையில் வசிக்கின்றார். சூரன் ஆட்சி முடிவடைகிறது. கடல் கோள் ஒன்றுநடைபெறுகிறது. அதனால் சங்கம் ஒன்று நிறுவப்படுகிறது. எனவே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளின் பின்னர் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே அகத்தியனாரை முதன்மையாக வைத்துத் தலைச்சங்கம் தொடங்கப்பட்டதென்றே கொள்ள வேண்டும். வரலாற்றுண்மை அதுவேயாகும். ஆதலின் சங்ககால ஆரம்பம் சூரன் காலத்துக்குப் பிற்பட்ட தென்பது துணி பொருள்.

இனி, தொடங்கப்பட்ட சங்கம் தொடர்ந்து எக்காலமும் இருக்கலாமே. அவ்வாறன்றி இடையீடுபட்டு முதற்சங்கம், இடைச் சங்கம் கடைச்சங்கம் என வரவேண்டிய காரணம் என்னையோ? காரணம் இடையிடையே ஏற்பட்ட கடல் கோள்களன்றிப் பிறிதில்லை. கடல் கோள்களினால் நாடு ஒரு பகுதி கடலாகலாம் மக்கட் கூட்டம் ஒரு பகுதி அழியலாம் அதனால் மக்கள் பண்பாடு, நாகரீகம் சிதையலாம் நூற் சுவடிகள் அழியலாம். அப்போது நாடாளும் அரசன் மனம் கனன்று தமிழ் மொழி, அம்மொழியிலுள்ள நூல்கள் தமிழ் மரபு, பண்பாடு, நாகரிகம், கடவுட்கொள்கை இவற்றை மேலும் பேணி வளர்க்க வேண்டியே அறிவுடைப் பெரியோரைக் கூட்டி சங்கத்தை அமைப்பான். ஆதலின் அவ்வக் கால அரசர் கடல் கோள்களுக்குப் பின்னர் சங்கங்களைத் தாபித்தனர். இவ்வாறாகவே சங்கங்கள் மூன்றாயின. அவ்வாறானால் முதற்சங்கம் எப்போது ஆரம்பித்திருக்கலாம் என அறிவோம். சூரன் ஆட்சி முடிவில் ஓர் பெருங்கடல் கோள் நடைபெற்றதெனஅறிவோம். அக்காலம் அகத்தியர் பொதிய மலையில் இருக்கிறார் என வரலாறு கூறுகின்றது. அக் கடல் கோளினால் நாட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம். அதனைச் சீர்செய்வதற்கு அறிவுடைப் பெரியோர் பலரின் ஆலோசனை அவசியமாயிற்று. எனவே யாவரினதும் மேலான அறிவும். அறிவாற்றலும் படைத்தவர் அகத்தியரேயாவர். ஆதலின் அவரின் தலைமையிலே முதற் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலம் சூரன் ஆட்சி முடிவெய்திய சில நூற்றாண்டுகளின் பின்னர் ஆரியர் வருகைக்கு முன்னராதல் வேண்டும். எனவே சூரன் ஆட்சி முடிவுக்கும் ஆரியர் வருகைக்கும் இடைப்பட்ட காலத்திலேயே சங்க காலம் ஆரம்பித்ததாக வேண்டும்.

அத்திலாந்திக் சரித்திரம் எழுதிய எல்லியட் என்னும் ஆங்கில பண்டிதர் இற்றைக்கு 11481 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் கடல் கோள் நடைபெற்றதாகவும் அதனால் பல தீவுகள், கடற்கரை நாடுகள் சிதைவுற்றன என்றும் கூறுவர் இக்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் நிகழ்ந்த கடல்கோளாக அமையலாம். அவர் கூற்றின்படி இக்கடல் கோள் துவாபர யுகத்தின் இறுதியில் நடைபெற்றிருக்கிறது. அப்போது துவாபர யுகத்துக்கு அடுத்த யுகமாகிய கலியுகம் பிறந்துஇன்று 5088 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. எலியட் இற்றைக்கு எனக் குறிப்பதுதான் நூல் எழுதிய காலம் ஆகும். எனவே கலியில் நிகழும் ஆண்டாகிய 5088ல் 88ஐக்கழித் மிருதி 5000 ஆண்டுகளை 11581இல் கழிக்க வருவது துவாபரயுகத்தில் நின்ற இறுதிக்காலம் 6481 ஆண்டுகளாகும். இக்காலமே சூரன் ஆட்சி நடைபெற்று முடிவுற்ற காலம் எனக் கொள்ளலாம். (இனி ஒரு யுகம் முடிந்து பிறிதோர் யுகம் தோன்றும்போது முன் யுகத்தின் இறுதி 500 ஆண்டும் பின் யுகத்தின் தொடக்கம் 500 ஆண்டுமாக 1000 ஆண்டுகள் யுகசந்தி எனப்படும். இக் காலம் அழிவும் ஆக்கமுமான காலமாகும். ஆதலின் 6481 இல் 1000 போக மிகுதியான 5481 ஆண்டுக்குள்ளேயே சூரன் ஆட்சி முடிபு இருந்திருக்கலாம்.

ஆனால் குமரிக்கோடும் பஃறுளியாறும் கடல்வாய்ப்பட்டு அழிவெய்தி இலங்கையும் இந்தியாவும் பிரிந்தது சூரன் ஆட்சிக்காலத்துக்கு முன்னாகும்.

“முந்தொரு காலந் தன்னில் மூவுலகந் தன்னில்
வந்திடும் உயிர் செய்த வல்வினை யதனாலே
அந்தமில் மறை எல்லாம் அடிதலை தடுமாறிச்
சிந்திட முனிவோரும் தேவரும் மருளுற்றார்”

என்பது கந்தபுராணம் பாயிரப் படலத்திலுள்ள செய்யுளாகும். இச் செய்யுளில் உள்ள
”முந்தொரு காலம்” என்பதற்கு ஆதி கற்பத்தில் துவாபர யுகத்தில் என நாவலர் பெருமான் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது கலியுகம் பிறந்து 5088ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலியுகத்துக்கு முன்னுள்ள யுகமே துவாபரயுகம். எனவே துவாபரயுகம் அதற்கு முன்னுள்ள யுகங்களின் வரலாறுகளே கலியுகத்துக்கு வந்தனவாதல் வேண்டும். கந்தபுராணம் சூரனது வரலாறு கூறும் நூல். இவ்வரலாறு இறைவனால் நந்திக்கு உபதேசிக்கப்பட்டு, அவரால் வாதநாராயணருக்கு உணர்த்தப்பட்டு அவரால் அவர் மகன் சூத முனிவருக்கு உபதேசிக்கப்பட்டு சூத முனிவர் யாவரும் அறியக் கூறினார் எனக் கந்தபுராணம் பாயிரப் படலம் கூறுகின்றது.

எனவே சூரன் ஆட்சிக்காலம் முடிவுற்று பல நாடுகள் கடல்கோளினால் அழிவுற்று அதனால் பல நூற்றாண்டு காலம்மறை நெறிகளும் முன்னிருந்த தெய்வீக வழிபாட்டு முறைகளும், மக்கள் வாழ்க்கை நெறியும் மறைந்து போன ஓர் நிலைமை ஏற்படுவதாயிற்று என்பது புலனாகின்றது. ஆதலின் சூரன் ஆட்சிக் காலம் துவாபரயுகத்தின் பிற்பகுதியாக வேண்டும். துவாபரயுகம் 865000 ஆண்டுகள் கொண்டது. இதில் இறுதிக்காலமாகிய எஞ்சியிருந்த 6481 ஆண்டுகளுக்குள்ளேயே தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அஃதாவது எலியட் பண்டிதர் கூறும் கடல் கோளுக்குப் பின்னரே ஆக வேண்டும்.

இறையனார் களவியலுரையின்படி மூன்று சங்கங்களும் இருந்த காலம் முறையே 4440, 3700, 1850 ஆண்டுகளாகும். இவற்றில் தலைச்சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி 6481 ஆண்டுகளுக்குள்ளேயே அமையவேண்டும் . இடைச்சங்கமும் துவாபரயுக இறுதியில் தொடங்கிக் கலியுகத்தில் முடிபெய்தியது. கடைச்சங்கம் கலியுகத்தில் ஆரம்பித்து கி. பி. 3ம் நூற்றாண்டில் முடிவெய்தியது. கி. பி.3ம் நூற்றாண்டு ஏறக்குறைய 250 ஆண்டு எனக் கொண்டால் கடைச் சங்கம் முடிவெய்திய காலம் இற்றைக்கு 1738 ஆண்டுகளுக்கு முன்னாகும். எனவே இப்பொழுது கலி 5088ம் ஆண்டு நிகழ்வதால் கடைச்சங்கம் முடிவெய்திய காலம் கலி (5088 – 1738) 3350ம் ஆண்டாகும் என்க. ஆகவே கடைச்சங்கம் தொடங்கிய காலம் கலி (3350 – 1850) 1500ம் ஆண்டாகும்.

எனவே இடைச்சங்கம் முடிபெய்திய காலம் கலி 1500க்கு முன்னாக வேண்டும். இடைச் சங்கம் நிலவிய காலம் 3700 ஆண்டுகளாகும். ஆதலின் இடைச்சங்கம் தொடங்கிய காலம் (3700 – 1500) துவாபரயுக இறுதியிலுள்ள 2200 – 2300 ஆண்டுகளுக்குள் அமைய வேண்டும். எனவே தலைச் சங்கம் முடிபெய்திய காலம் துவாபரயுக இறுதி 2200 – 2300 ஆண்டுகளுக்கு முன்னாக வேண்டும். ஆதலின் தலைச் சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி (2200 + 4440) 6640, 6740 வரையிலாகலாம்.

இனி வேதகாலம் ஆரியர் வருகை பற்றி ஆராய்வாம். வேதகாலம் கி. மு. 1500க்கு முன் என்றும் அது தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800 என்றும் ஆய்வாளர் கூறுவர். வேதகாலம்; கி.மு. 1500 க்கு முன். எனவே அக்காலம் இற்றைக்கு 3488 ஆண்டுகளுக்கு முன்னாகும். ஆகவே கலி வருடம் (5088 – 3488) 1600 ஆகும். தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800. எனவே அஃது இற்றைக்கு 2788 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி வருடம் 2300 ஆகும்.

இனி ஆரியர் இந்தியாவுட் புகுந்த காலம் கி. மு. 1600 – 2000 வரையில் என்பர். அஃது இற்றைக்கு 3588 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி 1500 ஆகும். எனவே ஆரியர் வருகை இடைச்சங்க கால இறுதியில் நடைபெற்றிருத்தல் சாலும். தொகுக்கப்பட்டது கடைச்சங்க காலமாதல் வேண்டும்.

இவ் வரலாற்றின்படி நாம் அறியக்கூடிய இலங்கை வரலாறு துவாபரயுகத்திறுதிக் காலத்தே எலியட் பண்டிதர்கூறும் 11481 ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டைச் சூரன் ஆட்சி புரிந்தான் என்பதும், அதனால் ஈழ நாட்டில் துவாபரயுகத்தில் தமிழினம் வாழ்ந்து வந்தனர் என்பதும் வேத காலம் வியாசர் காலம் ஆரியர் வருகைக்கு முன்னரே ஈழ நாட்டில் தமிழர்கள் வாழ்ந்து உலகறியப் பேரரசு செலுத்தினர் என்பதுமாகும்.

இனி, சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையும், இந்தியாவும் வேறு நாடாக வேறு வேறு அரசர் நாடாக இடையே கடல்கொண்டதாக வரலாறு கூறுதலின் குமரி நாடு கடல் கோளினால் சிதைவுற்ற காலம் சூரன் ஆட்சிக்கு முற்பட்ட காலமாகும் என்பது தெளிவு. எனவே குமரி நாடு அழிவுற்ற காலம் திரேத துவாபர சந்தியாதல் வேண்டும் என ஊகிக்க இடண்முடு.

இனித் தமிழ் மறை 3 சங்கத்திலும் நிலவியதாகக் கருத இடமுண்டு. தொல்காப்பியம் செய்யுளியலில் தமிழ் நூல் இலக்கணம் கூறுமிடத்து அவற்றை 7 வகையாக வகுத்துக் கூறும் போது வாய்மொழி (மந்திரம்) என்பதனை ஒரு வகை நூலாகக் கூறியிருப்பதினாலும் தொல்காப்பியர் பாயிரத்தில் பனம்பாரனார் “முந்து நூல்கண்டு” எனக்கூறுவதினாலும், மறை என்னும் சொல் மூன்று சங்க காலத்திலும் வழக்கில் இருந்தமையாலும் வேதம் என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு அன்று மறையாகையாலும் வேதகாலத்துக்கு முன்னரே மறை நூல்கள் இருந்தன என்பதும் வெளிப்படை.

இனி சூரன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே அகத்தியர் தென்னாடு போந்தனர் என்பது வரலாறு. அவரது வருகை முன்னாகவும் இருக்கலாம். சங்கம் பற்றிய செய்திகள் ஒன்றும் சூரன் ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படவில்லை ஆதலின் சூரன் ஆட்சி முடிந்த பின்னரே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதென்பது உறுதியாகிறது.

கற்று வல்ல பெரியோரும், அரசனுமே சங்கத்தில் அங்கம் வகித்தனர். இலங்கை இந்தியாவினின்றும் கடலால் பிரிக்கப்பட்டு வேறு வேறு நாடாகி வேறு வேறு அரசர் ஆட்சிக்குட்பட்டமையால் இலங்கை தமிழ் நாடாய் இருந்தும் அதனை வேறுபடுத்தி தமிழ்ச் சங்கம் தாபித்த இடமாகிய இந்தியாவை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எல்லை கூறுவாராயினர். அவ்வாறிருந்தும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அறிவுடைப் பெரியோர் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அங்கம் வகித்து வரலாயினர்.

அவருள் இன்று எம்மால் அறியத்தக்கவராய் இருப்பவர் ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர். இவர் சங்கத்தில் ஓர் உறுப்புடைப் புலவராய் இருந்த காரணத்தினால் ஈழநாட்டினின்றும் போந்து மதுரையிலே தங்கி வாழ்ந்தவராகத் தெரிகின்றது. அதனால் இவர் “மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்” எனவும் அழைக்கப்பட்டார் இவரால் பாடப்பெற்ற பாண்டியன் பசும்பூற் பாண்டியன் என்பவன். இவர் பாடிய பாடல்கள் அகநாநூற்றில் மூன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றுமாகும். இவர்கடைச்சங்க காலத்தவர் என்பார்.

எனவே இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கை என்னும் பெயரா? ஈழம் என்னும் பெயரா? எது முற்பட்ட வழக்கு என்பதே. ஈழத்துப் பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார் ஆதலின் ஈழம் என்பதே இலங்கையின் பூர்வீக நாமம் என்பதும் தெளிவாகின்றது. கடைச்சங்க காலத்தில் இலங்கை ஈழம் என்றே வழங்கப்பட்டிருந்ததால் முதலாம். இரண்டாம் சங்க கால வழக்கும் அதுவே என்பதில் ஐயத்துக்கே இடமில்லை என்றோ? முற்பட்ட வழக்கே தொடர்ந்து பின்வருவதன்றோ?...

தொடரும்... பகுதி-3 பார்க்கவும்...
யாழறிவன்.. Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக