வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக...

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக...

திராவிடக்கொள்கை ஓர் வரலாற்று விளக்கம். அதனுடைய எதிர்மறையே ஆரியக்கொள்கை. ஆடு மேய்க்க வந்த ஆரிய அநாகரிகர்கள் ஆண்டைகளாகி, தமிழரினத்தை அடிமைப்படுத்திச் சாதிகளையும், வர்ணங்களையும் அதன்மேல் சுமத்திக்கெடுத்து குட்டிச்சுவராக்கியதாலேயே திராவிடர்கள் வீழ்ந்தனர் என்பதும், அடிமைப்பட்டனர் என்பதுமே திராவிடக் கொள்கை. ஆரியக்கொள்கையின் மறுபக்கமே திராவிடக்கொள்கை. ஆரியமும் திராவிடமும் சியாமிய ஒட்டுப் பிறவிகள். ஆரியக்கொள்கை திராவிடக்கொள்கை ஆகிய இரண்டுமே இனவெறிக்கொள்கைகள் ஆகும். தமிழரில் அறிவரும் அரசியலாளரும் இந்தத் திராவிடக் கொள்கைக்கு ஏதோ ஒரு வகையில் ஆட்பட்டு நம்முடைய உண்மை வரலாற்றை நாம் மேலும் இழக்கவும் கெடுக்கவும் காரணமாயினர்.

கடைச்சங்க காலத்திலிருந்த மாலிக்காபூரின் படையெடுப்புக்கு முன்னால் வரை எந்த வடவரும் தமிழகத்தை வெற்றி கொண்டதும் இல்லை அதன் மீது படையெடுத்ததும் இல்லை. மாறாக தமிழ்ப் பேரரசர்களே வடக்கு நோக்கி படை செலுத்தி வெற்றிக்கொடி நாட்டிய வரலாறுகள் உண்டு. ஆனால் வடஇந்தியாவில் விந்தியமலைக்கு மிகவும் அப்பால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்து அந்த வடஇந்திய வரலாற்றைச் சென்ற இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழக வரலாற்றின் மீது கண்மூடித் தனமாகத் திணிப்பது பெருந்தவறு. தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஆரிய-திராவிடக் கொள்கை இங்குதான் தனது முதல் அடியை வாங்குகின்றது.

ஆரியர்களோ, தங்களை ஆரிய வழியினரெனச் சொல்லிக் கொண்ட வடவரோ தமிழகத்தின் மீது படைகொண்டு, படையெடுத்த வரலாறே இல்லை. ஆனால், சைனம்,பௌவுத்தம் ஆகிய ஆரிய மயமான சமயங்களின் வழியாக மட்டுமே ஆரியக் கொள்கையும், பண்பாடும் தமிழகத்தற்குள் புகுந்தன. வள்ளுவத்திடமிருந்து வடவர்கள் செய்த அறிவுக் களவாடலின் விளைவாக வந்த சைனம், புத்தம் ஆகிய ஆரியச் சமய நெறிகள் வள்ளுவ மெய்யியலைக் கெடுத்துக் குறைபடுத்தி அழித்ததுடன் அதை தன்வயமாக்கிக் கொள்ளவும் செய்தனவென்பது வரலாறு. ஆரிய மதங்களெனச் சொல்லி வந்த சைனமும், புத்தமும் பார்ப்பனியத்தை அவ்வப்போது எதிர்த்தனர் என்பது உண்மை. ஆனால் பார்ப்பனியம் வேறு, ஆரியம் வேறு எனும் வேற்றுமை தெரியாத திராவிடக் கொள்கையர் அவ்விரண்டும் ஒன்றே எனக் கருதி மயங்கியது இங்கு பெரும் கேட்டை விளைவித்துள்ளது.

தென்னிந்திய மக்கள் கழகம் என்னும் பெயரில் பார்ப்பனரல்லாதாரின் முதல் அரசியல் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இதன் பெயர் தென்னிந்திய நலவுரிமைக் கழகம் எனத் திரிந்தது. இஃது 1917 பிப்ரவரி 16 தொடங்கி ஜஸ்டிஸ் என்னும் பெயரில் ஓர் ஆங்கில ஏட்டை நடத்திவந்தமையால் நயன்மைக் கட்சி அல்லது நீதிக்கட்சி என்றழைக்கப்பட்டுவந்தது. இந் நயன்மைக் கட்சியின் முன்னோடியாக 1912 ஆம் ஆண்டில் டாக்டர்.சி. நடேசன் தொடங்கிய சென்னை திராவிடர் கழகம் இருந்தது. பின்னர் இத்திராவிடக் கொள்கைக்குக் கடைவிரித்த தமிழர் யாவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உண்மையான திராவிடர்களான தெலுங்கர்கள் முன்னுக்கு வந்தனர்.

நயன்மைக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் இருவர். ஒருவர் பிட்டி தியாகராயச் செட்டியார் (1852 - 1925), மற்றவர் டி.எம் நாயர் எனும் மருத்துவர். இவர்களில் தியாகராய செட்டியார் தேவாங்குச் செட்டியார் சாதியைச் சேர்ந்த தெலுங்கரும் பெருநிலவுடைமையாளரும் பெரிய முதலாளியும் ஆவார். வட்டித் தொழில், வைப்பகத் தொழில், கைத்தறித் தொழில் ஆகியவற்றில் முன்னணி வகித்து வந்தவர். தனி ஆந்திரம் கேட்டு பட்டிணி கிடந்து உயிர் நீத்திட்ட பொட்டி சீராமுலு இவருடைய மருமகனாவார். தெலுங்கரின் இனமீட்சியில் அயராத ஆர்வம் காட்டியவர் இத் தியாகராய செட்டியார். டாக்டர். டி.எம் நாயரோ ஒரு மலையாளி. சென்னைத் திருவல்லிக்கேணியில் பணிபுரிந்தவர். எல்லாவற்றிலும் ஆங்கில மயமாக்கத்தை போற்றி வந்தவர்.

1948 ல் சென்னை உயர் வழக்கு (நீதி) மன்றத்தின் ஆங்கிலேயரல்லா நடுவராக வந்திருக்க வேண்டியது ஒரு தமிழ்ப் பார்ப்பனரே. ஆனால் தெலுங்கரான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் அமைச்சரவை பார்ப்பன எதிர்ப்புப் பூச்சாண்டி காட்டி தன் இனத்தவரான பி.வி. இராசமன்னார் எனும் தெலுங்கரை அப்பதவியில் அமர்த்தியது.

350 ஆண்டுகளுக்கும் மேலான சென்னை மாநகராட்சியின் தலைவர் (மேயர்) பதவிக்கு வந்த இந்தியரில் ஒரு சிலர் தவிர மற்ற எல்லோருமே தெலுங்கராவர். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும். நயன்மைக் கட்சியின் உறுப்பினராகவும், திராவிட இயக்கத்தின் தோற்றுனருமான டாக்டர்.சி. நடேசன் தமிழர் என்னும் ஒரே காரணத்தினால் அவர் நகரத் தந்தையாக ஆகமுடியவில்லை. அம்மாநகராட்சியில் வந்தேறித் தெலுங்கர் நலன்கள் கோலோச்சியதே அதற்கான காரணமாகும்.

1920 ஆம் ஆண்டுத் தேர்தலில் பல ஆந்திரர்களும் தமிழகத் தெலுங்கர்களும் சென்னை மாகாணச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1921, 1922 என ஆண்டுக்கு ஒரு முறையாக ஆந்திரருக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் எனவும் என்.சூரியநாராயணர் எனும் தெலுங்கு பார்ப்பனரால் தனி ஆந்திரம் மாநிலம் வேண்டும் என்றும் பல தீர்மானங்களை சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் கொண்டு வந்தனர். அப்போதே நீதிக் கட்சி விற்றுவந்த பார்ப்பனரல்லாதாரின் ஒற்றுமை பின்னுக்குப் போய் தெலுங்கரின் தேசிய ,இனநலன்களே மேலோங்கின.

1922 ஆம் ஆண்டில் ஆந்திரருக்கென தனிப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டத்தை முன் வைத்த போது, அன்றைய அரசின் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தெலுங்கருமான கூர்மவேங்கட ரெட்டி நாயுடு அதற்கு தெலுங்கு பல்கலைக்கழக வரைவுச் சட்டம் என பெயரை மாற்றி வைக்க வேண்டும் எனக் கூறினர். இதற்கு நேர்மாறாக நயன்மைக் கட்சியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.நடேச முதலியார் அத் தனிப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டம்

"பார்ப்பனரல்லாக் குமுகத்தின் உறுப்பினருக் கிடையே வேற்றுமை நெடியைக் கிளப்புகிறது என்றும், தெலுங்கர்களைத் தமிழர்களிடமிருந்து பிரிக்கவே முடியாது. நாம் திராவிடர்கள் நாம் பிரியவே மாட்டோம்" எனச் சொல்லி ஒப்பாரி வைத்த தமிழனின் இளிச்சவாய்த் தனத்தை என்னவெனச் சொல்வது. 1916 ஆம் ஆண்டில் நீதிக் கட்சி துவங்கியது முதல் 1937 ஆம் ஆண்டில் அது மறைந்தது வரை இந்நீதிக்கட்சியின் தலைவராக தமிழர் ஒருவரும் வர முடியவில்லை.

பழைய சென்னை மாகாணத்தில் தமிழர் இழந்த தமிழ்ப் பகுதிகளில் மட்டுமே நீதிக் கட்சியால் வளர முடிந்தது. கன்னட, ஆந்திர, மலையாளப் பகுதிகளிலோ பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனும் திராவிட அரசியலை கன்னடத், தெலுங்கு, மலையாளித் தலைவர்கள் வேண்டுமென்றே பரப்பவில்லை. அவர்கள் தமிழரை மட்டுமே ஒன்றுபட விடாமல் தடுத்தனர்.

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக உண்மையில் தமிழ்ப் பார்ப்பனரையெல்லாம் அரசுப் பதவிகளிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா தெலுங்கர்களும், மலையாளிகளும் அந்த இடங்களில் தாங்கள் போய் அமர்வதற்கான ஒரு நொணடிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.

இதனால் தங்களை திராவிடர் என்பதை ஒப்புக்குக் கூட ஏற்றுக் கொள்ளாத தமிழ் இனமும், தமிழ் நாடும் திராவிடரின் வேட்டைக் காடாகியது. தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசி வந்த இருமொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக்கொண்டனரேயன்றி ஆந்திரர்களோ, மலையாளிகலோ, கன்னடர்களோ என்றுமே தங்களைத் திராவிடர்கள் என விரும்பி அழைத்துக்கொண்டதுமில்லை தங்களை திராவிடர்களாக கருதியதும் இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான். தெலுங்கர், மலையாளி,கன்னடர்கள் தேசிய இன உணர்வை முன்னால் வைத்து சாதி உணர்வைப் பின் வைத்து இனவழியில் ஒன்றுபட்டனர். தமிழரோ சாதியாலும் கட்சியாலும் சுக்குநூறாகினர். இத்திராவிடத்தால் தான் தமிழினம் இன்று சாதிக்கொரு மாநாடு நடத்தி கெட்டழிந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் மட்டுமே உணர்வாலும் செயலாலும் திராவிடர் ஆக்கப்பெற்றனர். தமிழ் பேசும் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ அவ்வாறு திராவிடராகவில்லை. அவர்கள் திராவிடர் என்னும் சொல்லைக் கூட ஆள்வதில்லை. உதாரணமாக தென்னிந்திய நல உரிமைக் கழகம் 1917 பிப்ரவரி 16 அன்று ஜஸ்டிஸ் ஏட்டை தொடங்கியது. அது தமிழில் திராவிடன் எனும் ஏட்டை 1917க்கு இடையில் கொண்டு வந்தது. ஆனால் தெலுங்கிலோ ஆந்திரப் பிரகாசிகா எனும் ஏட்டை வாங்கி அதை திராவிடன் எனும் பெயர் மாற்றாமலேயே ஆந்திரப் பெயர் ஒலிக்க அந்த ஏட்டை ஆந்திரப் பிரகாசிகா எனும் பெயரிலேயே நடத்தி வந்தது. மலையாளிகளும் கேரள சஞ்சாரி. கேரளோதயம் மலையாளி எனும் பெயர்களில்தாம் ஏடுளை நடத்தினரேயன்றி திராவிடன் என்னும் பெயரை என்றும் சூட்டிக் கொண்டதேயில்லை. இந் நயன்மை (நீதி) கட்சி தமிழில் கொணர்ந்த ஏட்டிற்கு மட்டுமே "திராவிடன்" எனப் பெயர் சூட்டியது.

ஏடுகளுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, கன்னட, மலையாள சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டு வந்த போதிலும் தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய நலிந்த சாதியினர் எனப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மட்டும் ஆதி தமிழர் ஆகாமல் ஆதிதிராவிடர் என்றழைக்கப்பட்டனர்.

ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் நலிந்தோர் யாரும் ஆதிதிராவிடர் என்னும் பட்டத்தை ஏற்க முன்வராததை அன்றைய மக்கள் கணக்கெடுப்பு அதிகாரியான ஈட்சு (M.W.M. Yeats) சுட்டிக் காட்டினார். ஆயினும் சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் 63,70,074 பேர் தொல்தமிழராக (தாழ்த்தப்பட்டோர்) இருந்தும் அவர்களில் 15,025 பேர் மட்டுமே ஆதிதிராவிடர் எனும் பெயரில் தங்களின் பெயர்களைப் பதிந்து கொள்ள முன்ந்தனர். தொல்தமிழரில் பெரும்பாலோர் அவர்களின் மீது திணிக்கப்பட்ட ஆதிதிராவிடர் என்னும் பெயரொட்டியை (இழிவை) ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டும்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைவரான இரட்டை மலை சினிவாசனார் ஆதிதிராவிடர் எனும் பெயருக்கு மாற்றாக பழந்தமிழர் என்னும் பெயரையே பயன்படுத்தி வந்த நிலையில், அந்த ஆதி தமிழரை ஆதிதிராவிடர் என்றும் பார்ப்பனரல்லாத பிறரை (பிற்படுத்தப்பட்டோரை) "சாதி இந்துக்கள்" என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும் சாதி இந்துக்கள் என்ற சொல்லை உருவாக்கி அறிமுகப்படுத்தியும், தமிழர்களைச் சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக் கட்சியின் ஏடான "திராவிடன்" ஏடுதான் என்பதை நினைவில் கொள்க.

இதன் விளைவாக தமிழர்கள் தாங்கள் ஓர் தனி இனம் எனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர். தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டுவிட்டதனால் சாதிகளாய் கட்சிகளாய் பிரிந்து சொந்த இனப்பற்றும், இனநலனும், இனமானமும் இழந்து சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.

.... யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக