வெள்ளி, 24 அக்டோபர், 2014

இலங்கை தமிழர் வரலாற்று சான்றுகள்..

இலங்கை தமிழர் வரலாற்று சான்றுகள்..

இலங்கைத் தமிழர்கள் தமிழ் பேசும் மக்களாக தமிழகத்திலிருந்து புலம்பெயர முன்னரே அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்தனர்:

நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நாடுகளுள்; இலங்கையும் ஒன்றாகும். வரலாற்று எழுத்து மரபு தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்தே அது கட்டமைக்கப்பட்டிருந்தது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து இலக்கிய வழியிலான வரலாற்றைப் பெற்றிருக்கும் இந்நாடானது, அதிகளவில் பெரும்பான்மையினர் வரலாற்றைப் பேணும் நடைமுறையைக் கைக்; கொண்டுள்ளது. அதன்படி சிங்களவர் மட்டுமே இந்நாட்டின் பூர்வீக, நாகரீக நிலையடைந்த குடிகள். அவர்களுக்கு மட்டுமே இத்தீவும், அதன் அரசியலும், வரலாறும் உரித்துடையது எனும் தோரணையில் வரலாறு கட்டமைப்பு பெற்றிருக்கின்றது. ஆனால் ஏனைய இனங்களான தமிழர்கள்;, படையெடுப்பாளர்கள், வணிகர்கள், தற்காலிகமாக வந்து குடியேறியவர்கள், அக்கரையிலிருந்து வந்தோர் என மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதுவும் பிற்பட்ட காலங்களில் நிகழ்ந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அண்மைக் காலத்தில் விருத்தியடைந்து வரும் தொல்லியல் ஆய்வுகள் அதற்கு மாறான ஒரு எண்ணக்கருவை இலங்கை வரலாற்றுப் பார்வையில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இலங்கையில் தமிழர்கள் தமிழ் பேசும் மக்களாக தமிழகத்திலிருந்து புலம்பெயர முன்னரே அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்துள்ளனர் என்பதை கண்டைந்துள்ளது. அதற்குப் பலநிலைப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இலங்கையில் இதுவரை அறியப்பட்ட தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இங்கு வாழந்த காலத்தால் முந்திய மக்கள் இடைக்கற்காலப் பண்பாட்டிற்கு உரியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மக்கள் மலைநாடு தொடக்கம் தாழ்நிலப்பகுதி வரையுள்ள நீர் நிலைகளையும். கடற்கரைப்பகுதிகளையும் அண்டி ஓரளவு செறிவாக வாழ்ந்துள்ளனர் என்பதை இரத்தினபுரி, பலாங்கொடை, கித்துள் கொட, அனுராதபுரம், இரணைமடு, திருகோணமலை, மாங்குளம், முல்லைத்தீவு, மாதோட்டம், பூநகரி ஆகிய இடங்களில் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றது. இலங்கையில் இப்பண்பாட்டின் தோற்றம் 28000 ஆண்டுகள் என காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இரத்தினபுரி, இரணைமடு போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இற்றைக்கு 125000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேலைப்பழங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளமைக்கான சான்றகள் கிடைத்துள்ளன. புல்மோட்டையில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இற்றைக்கு 500000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதப் படிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிரான் தொணியகல குறிப்படுகின்றார். ஆயினும் இன்றைய நிலையில் இலங்கையில் மனிதர் வாழத் தொடங்கியது இற்றைக்கு 28000 வருடங்களுக்கு முற்பட்ட இடைப்பழங்கற்காலத்திலிருந்தே வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகியிருக்கின்றது.

இப்பண்பாட்டு மக்களைத் தொடர்ந்து பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிட மக்கள் கி.மு.1000 தொடக்கம் வாழ்ந்ததற்கான தடயங்கள் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பொம்பதிப்பு, புத்தளம், அனுராதபுரம், பெரியபுளியங்குளம், திசமகாரகம, கதிரவெளி, கந்தரோடை, வல்லிபுரம், ஆனைக்கோட்டை, பூநகரி ஆகிய இடங்களில் இப்பண்பாட்டின் முக்கிய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் இப்பண்பாட்டுடன் தான் அரசதோற்றம், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்புச் சிவப்பு மட்பாண்டப் பயன்பாடு என்பன தோற்றம் பெற்றுள்ளன. இலங்கையிற்; பரவலாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள இப்பண்பாடு பற்றிய சான்றுகள், இலங்கையில் நாகரீக வரலாறும், சிங்கள மக்களின் மூதாதையினரும் வடஇந்தியத் தொடர்பால் ஏற்பட்டதென்ற பாரம்பரிய பருத்தை முற்றாக நிராகரித்துள்ளன. இப்பண்பாடு தொல்லியல், மானுடவியல், சமூகவியல் ரீதியாகத் தென்னிந்தியாவுடன் குறிப்பாக தமிழ்நாட்டுடன் நெருங்கிய ஒற்றுமைத்தன்மையைக் கொண்டுள்ளது. இவ் இரு வகையான பண்பாடுகளும் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வகையில் காணப்படுவதால், திராவிட பண்பாடுகளுடன்; ஒப்பிட்டு நோக்கக் கூடியளவிலான பண்பாடுகள் இலங்கையில் முனைப்புக் கொள்ளத் தொடங்கி விட்டது.

பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்து முறையை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர். அது அப்பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் உருவான பிராமி எழுத்திற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்ததாகக் காணப்படுகின்றது. அவைகளில் தமிழ் பிராமி மற்றும் தமிழ் சொற்கள் இருந்துள்ளமைக்கு சான்றுகளுண்டு. இவற்றை இக்கால மக்கள் பயன்படுத்திய மட்பாண்டக் குறியீடுகளில் இருந்து அறியலாம். இவ்வகை எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் தமிழகத்திலும், இலங்கையிலுமே அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் ஆரிச்ச நல்லூரிலும், இலங்கையின் அனுராதபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் நவீன காலக்கணிப்பிற்குட்படுத்திய போது அவற்றின் தோற்ற காலம் கி.மு.1500க்கு முற்பட்டதென காலவரையறை செய்யப்பட்டுள்ளது. இக்காலக்கணிப்பு பௌத்த மதத்தோடு தமிழகத்திற்கு பிராமி எழுத்து வருவதற்கு முன்னர் தமிழகத்திலும் இலங்கையிலும் எழுத்தின் பயன்பாடு இருந்தமைக்கு ஆதாரமாக அமைகின்றது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எழுத்து வடிவங்கள் வடபிராமியுடனும், தமிழகப் பிராமியுடனும் பெருமளவு ஒத்ததாக காணப்படுகின்றது. ஆயினும் கூடியளவு தமிழ் மொழியின் செல்வாக்கை காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் வரும்                    (புழைத்தி முறி) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமை தமிழ் மொழி பற்றிய ஆய்வில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இதே போல் அனுராதபுரத்ததிலும், கந்தரோடையிலும், பூநகரியிலும், மாதோட்டத்திலும் அபிசிதன், ஈழ, ஈழவூர் போன்ற பெயர் பொறிப்புக்கள் மட்பாண்டங்களில் வருகின்றன. எனவே தமிழ் இனக்குழு வருவதற்கு முன்பே இங்கு வாழ்ந்துள்ளனர்.

சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் தம்து பெயர்களை முத்திரைகளில் பொறித்தமைக்கு கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து ஆதாரங்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டகளில் தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பல முத்திரைகள் கிடைத்துள்ளன. இலங்கையில்; ஆனைக்கோட்டை, பூநகரி, அனுராதபுரம் போன்ற இடங்களில் இவ்வகையான முத்திரைகள் கிடைத்துள்ளன. அனுராதபுரத்தில் கிடைத்த சுடுமண் முத்திரைகளில் பெருமகன் என்ற தமிழ் பெயர் பிராகிருதத்தில் பருமகன என எழுதப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டையில் கிடைத்த முத்திரையொன்று கோவேர என்ற சிற்றரசன் பற்றி குறிப்பிடுகின்றது. இது தமிழ் மொழி மரபில் கூறப்படுவதால் சிந்துவெளி குறியிடுகளையொத்த முற்பட்ட இப்பராமி எழுத்து வடிவம், தமிழ் மக்களின் வரலாற்றை பெருங்கற்காலத்திற்கு முன்; வரை நீடித்துச் செல்கின்றது. முத்திரை பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில் தமிழ் சிற்றரசன் ஒருவனை முத்திரை குறிப்பிடவதால் இக்காலத்திலேயே தமிழர்கள் இங்கு நிலைபெற்றுவிட்டனர் எனலாம்.

இலங்கையைப் பொறுத்தவரை இங்கு பயன்பாட்டிலிருந்த தொடக்க கால இனங்களை, அம்மக்கள் பயன்படுத்திய மொழிகளை ஆராய்வதற்கு தென்னாசியாவில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டுக்கு வந்த பிராமி எழுத்துப்பொறித்த கல்வெட்டுக்கள் முக்கியமானவை. அப்பிராமி எழுத்து முறை இலங்கைக்கு அறிமுகமானவிதம் தொடர்பாக பின்வரும் வரலாறு சொல்லப்படுவதுண்டு.

அசோகன்; ஆட்சியில் பௌத்தமதம் பரவியபோது அம்மதம் பற்றிய செய்திகளை கூறுவதற்கு முதன்முறையாக வட இந்தியாவிலிருந்து பிராமி எழுத்தும் பிராகிருத மொழியும் அறிமுகமாகியதாகக் கூறப்படுகின்றது. அப்பிராமி எழுத்துப் பொறித்த சாசனங்களே கி.மு.3ஆம்; நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தலிருந்துள்ளன. ஆயினும் அந்தம் பிராமி சாசனங்களில்; தமிழுக்குரிய அல்லது தமிழ் நாட்டுக்கு உரிய, அல்லது அவ்வகையையொத்த தனித்துவமான சில பண்புகள் காணப்படுகின்றது என தொல்லியலாளர்களான சந்தமங்கல கருணாரத்ன, ஆரிய சந்தமவச போன்றோர் குறிப்பிடகின்றனர். அவ் அம்சங்களில் முதலாவதாக அமைவது தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் ஆகும். இலங்கையில் காணப்பட்ட பிராமி சாசனங்களில் ள,ழ,ன போன்ற தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பிராமி சாசனங்களில் எச்சாசனங்கள் மிகத்தொன்மையானதென அடையாளம் காணப்பட்டனவோ அச்சாசனங்களில் பெரும்பாலும் தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் காணப்பகின்றன. இதிலிருந்து அசோக பிராமி இங்கு அறிமுகமாவதற்கு முன்னரே தமிழ் எழுத்து வாசனையுடைய மக்கள் குழுமம் ஒன்று வழத் தொடங்கி விட்டதை அறியலாம்.

இலங்கையில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மொழி பயன்பாட்டிலிருந்தது என்பதற்கு பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ் பிராமி சான்றாகும். தமிழ்நாடு தவிர்ந்த இந்திய நிலப்பரப்பில் கர்நாடகம், தெலுங்கு, மராட்டி எனப்பல மொழிகள் பேச்சு வழக்கிலிருந்தும் கி.பி 4ஆம், 5ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. இலங்கை பிராமி கல்வெட்டில் பிராகிருதமாக இருந்த போதிலும்; கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்களும், பிராகிருத மயப்பட்ட தமிழ்ப் பெயர்களும் பரவலாக காணப்படகின்றது. அப்பெயர்கள் பின்வருகின்ற நிலைகளில் தமிழர்கள் இலங்கையில் அக்காலத்திலேயே நிலை பெற்றுவிட்டமைக்கு சான்றாதாரங்களாக விளங்குகின்றன.
தனிநபர் பெயர்கள் தமிழ் மொழியில் அமைந்திருக்கின்றன. உதாரணமாக மல்லன், சுமண், பூதன், கசபன், நாகராசன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பெயரின் பின்னொட்டுச் சொல் 'அன்' என்ற விகுதியுடன் முடிவடைவதனால் இவை தமிழுக்குரிய பெயர்களென்பது உறுதியாகின்றது.
அடுத்து பிராமிக்கல் வெட்டுக்களில் தமிழுக்குரிய உறவுப்பெயர்கள் வருகின்றன. குறிப்பாக மருமகன், மருமகள், மறுமகன், மகள், பருமகள், பருமகன் போன்ற உறவுப் பெயர்களைக் குறிப்பிடலாம். பெரியபுளியங்குளம், அனுராதபுரம் போன்ற இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களில் இப்பெயர்கள் வருகின்றன. மேலும் தமிழ்; அரச உருவாக்கத்தின் தொடக்கத்தில் அதனை அழைக்கப் பயன்பட்ட சொற்களும் பிராமி கல்வெட்டுக்களில் வருகின்றது. ஆய், வேள் போன்றன அவ்வாறானவை. இச் சொற்கள் சங்க இலக்கியங்களில் குறுநில அரசர்களைக் குறிக்க பயன்பட்டதாகும். இது ராஜா என்ற பதத்திற்கு சமமானது என்பர். ரோமிலா தார்பர் அடுத்து தமிழ் இடப்பெயர்களும் கல்வெட்டுக்களில்; வருவதைக் காணலாம். நகர், மலை, ஊர், குளம், ஆவி, புரம், வாஷ போன்றன அவ்வாறானவை. எனவே இவை தமிழ் மக்கள் இங்கிருந்தே உருவாகியுள்ளனர்.

சமூகத்தில் செல்வாக்குடைய நபர்களால் மட்டும் வெளியிடப்படும் நாணயங்கள் கி.மு.3ஆம் நுற்றாண்டுக்கு முன்பே இலங்கையில் தமிழ்; அரச உருவாக்க பின்னணியில் வெளியிடப்பட்டுள்ளமைக்கு சான்றுகளுண்டு. பிராகிருத, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த நாணயங்கள் அக்குறு கொட, அனுராதபுரம், கந்தரோடை, பூநகரி போன்ற இடங்களில் மீட்கப்பட்டள்ளன. இவற்றில் உதிரன், மகாசாத்தன், கபதிகஜபன், கஜசென், திசபுர சடநாகராசன் ஆகிய தமிழ்; பெயர்கள் பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன. இதில் திச புரத்தை ஆண்ட கடதாக அரசனால் வெளியிடப்பட்ட நாணயங்களும் வருகின்றன. எனவே கி.மு.3ஆம். 2ஆம் நூற்றாண்டுகளில் தென்னிலங்கையில் தமிழ் இன குழும சிற்றரசுகள் உருவாகி விட்டன. இதனை மகாவம்சமும் உறுதிப்படுத்துகின்றது. துட்டகாமினி – எல்லாள போரில் 32 தமிழ் சிற்றரசுகளை அவன் தெற்கில் தோற்கடிக்க நேரிட்டதாக கூறுகின்றது.

இலங்கைக்கு தமிழர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும் முன்னமே இங்கு நிலை பெற்று விட்டனர் என்பதை பல்வேறு தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றது. இந்த முடிவானது இலங்கையின் உத்தியோகபூர்வமான வரலாற்று எழுத்தியலில் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக இருக்கின்றது...

யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக