இந்தோனேசியாவில் 9ம் நூற்றாண்டு பழமையான இந்துக் கோயில்.....
சோழரின் வரலாற்று படைப்புகள்
இந்தோனேசியாவில் 9ம் நூற்றாண்டு பழமையான இந்துக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது
இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரண்டு இந்துக் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன
இந்தோனேசியாவில் இசுலாமியப் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது இக்கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் உள்ள இந்தோனேசிய இசுலாமியப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, வேலைகள் துவங்கின. அத்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு சிறிய கோவில்கள் வெளிப்பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இந்துக் கோவிலில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்களும் உள்ளன. விநாயகர் சிலை, லிங்கம், யோனி பீடம், பலிபீடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் சேதம் அதிகமில்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், "இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது," என்கிறார்.
இந்த சிலைகள் அனைத்தும் தொல்பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. "இக்கோவில் எல்லாரும் பார்க்கும்படியாக கண்காட்சிக்கு வைக்கப்படும்," பல்கலைக்கழக அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.
தொல்பொருள் ஆய்வாளர்களின் தகவல்களின்படி ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, “கடாரம் கொண்டான்’ என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு.
ஒரு காலத்தில் பெளத்தம், இந்து மதங்கள் இந்தோனேசியாவில் பிரபல்யமாக விளங்கின. இன்று 90 வீதம் முஸ்லிம்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இசுலாம் பிந்திய காலங்களில் பரவியது...
யாழறிவன்.... Yalarivan Jackson Jackie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக