திங்கள், 20 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-12

கலிங்கமாகன் படை எழுச்சி...
கலிங்கநாட்டு அரசகுமாரனான மாகன் என்பவன் 20000பேர் கொண்ட ஓர்பெரும் படையோடு ஈழநாட்டை அடைந்தான். அப்பொழுது ஈழநாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தவன் பராக்கிரமபண்டு என்பவன். மாகன் படை பராக்கிரமபண்டுவைக் கொன்று அரசைக் கைப்பற்றியது. இது நிகழ்ந்தது 1225 ஆகும். அதன்பின் மாகன் 1246 வரை யப்பாகு, தம்பதெனியா தவிர்ந்த இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். வட கீழ்ப்பகுதியும் அவனது ஆட்சியே நடைபெற்றது. ஆதலின் 1225 தொடக்கம் யாழ்ப்பாண அரசனும் அவனே என்பதைக் கருத்தில் பதித்தல் வேண்டும். புத்த மதத்தினர் பலரைச் சிவ மதத்தவர் ஆக்கினான். புத்த மதத்தினருக்குப் பல விதமான இடையூறுகளையும் விளைத்தான். மாகனால் கொல்லப்பட்டவனான பராக்கிரமபண்டு என்பவனும் பாண்டிய வம்ச வழியினன் ஆவான். இவன் முன் ஆட்சியில் இருந்த லீலாவதி என்பவளைத் துரத்திவிட்டு அரசைக் கைப்பற்றி 1222 – 1225 வரை ஆட்சி புரிந்தான். இனி கலிங்கநாடு தமிழ்நாடே என்பதும், அந்நாட்டினர் சிவமதத்தினர் என்பதும் மாகன் தமிழனே என்பதும், அவன் சிவநெறிக் கோட்பாடு உடையவன் என்பதும் மாகன் வரலாறு காட்டும் உண்மை.

மாகன் ஆட்சிக்குப்பின்னர் கி.பி. 1246ல் 3ம் விசயபாகு என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவனது அரசதானி தம்பதெனியா. இவன் காலத்தில் பாண்டி நாட்டை ஆட்சி புரிந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பான் இலங்கை மீது படையெடுத்து 3ம் விசயபாகுவை வென்று கப்பங்கட்டுமாறு செய்தான் என இந்திய வரலாறு கூறும். இலங்கை வரலாற்றிலும் 3ம் விசயபாகு வடபகுதியில் தமிழர் பெரும்பான்மையினராய். அவர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருந்த காரணத்தினால் அவர்களை எதிர்த்து வெல்லுதல் வல்லை என்று அஞ்சித் திறைகொடுப்பதற்குச் சம்மதித்து உடன்படிக்கை செய்துகொண்டான் என இலங்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. எனவே சுந்தரபாண்டியனால் வென்று அடக்கப்பட்டு கப்பங்கட்டுமாறு செய்யப்பட்ட இலங்கை அரசன் 3ம் விசயபாகுவே என்பது தெளிவு. 3ம் விசயபாகு வடபகுதித் தமிழருக்கு அஞ்சிக் கப்பங் கட்டச் சம்மதித்தான். எனவே சுந்தரபாண்டியன் படை எழுச்சி ஈழநாட்டுத் தமிழருக்குச் சாதகமாகவும், புத்த சிங்கள மதத்தினருக்குப் பாதகமாகவுமே நடைபெற்றதென்பதை வாசகர்கள் உய்த்துணர வேண்டும்.

3ம் விசயபாகுவுக்குப்பின் அரசுக்கு வந்தவன் 2ம் பராக்கிரமபாகு என்பவன். இவன் தமிழருக்குத் திறைகட்டுவதை நிற்பாட்டி ஆட்சி புரிந்தான். எனவே வடபகுதித்தமிழருக்கு அஞ்சிக் கப்பம் செலுத்திய காலம் கி.பி. 1246 – 1250 வரையாகும். 1246க்குப் பின் மாகன் வட பகுதியில் இருந்து ஆட்சி புரிகின்றான் என்பது கவனத்திற்குரியது.

2ம் பராக்கிரமபாகுவுக்குப் பின் 1ம் புவனேகபாகு என்பான் ஆட்சிக்கு வருகிறான். 450 வருடகாலமாக அரசதானியாக இருந்த பொலநறுவையின் காலமும் அதன் புகழும் அவ்வரசனோடு முடிபெய்தியது. இவன் குருநாகலை அரசதானியாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இந்நகர் இடைக்காலத்தில் அத்திசைபுரம் எனவும் அழைக்கப்பட்டது. பொதுவாக பொலநறுவையை முதன் முதல் அரசதானி ஆக்கியவன் 7ம் அக்கிரபோதி என்பவன். காரணம் வடபகுதித் தமிழர்மீது கொண்ட அச்சமே. எனவே கி.பி. 781 தொடக்கம் கி.பி. 1303 வரையும் பொலநறுவை இலங்கையின் அரசதானியாகப் பெரும்புகழ் பெற்று விளங்கியது. இக்காலத்தில் 69 வருட காலம் தமிழ் அரசர் ஆணைக்குரிய அரசதானியாக விளங்கியது. விளக்கம் இராசராசசோழன் பொலநறுவையை அரசதானியாக்கியது. 991ல் சோழர் ஆட்சி முடிபு 1060 க்கு இடைப்பட்ட காலம் 69 ஆண்டுகள்.

1ம் புவனேகபாகுவுக்கு 68 ஆண்டுகளின் பின்னர் ஆட்சிக்கு வந்தவன் 3ம் பராக்கிரமபாகு என்பவன். இவன் மலையில்இருந்து ஆட்சி புரிந்தான். இது கங்காஸ்ரீபுரம் எனவும் அழைக்கப்பட்டது. இவன் மந்திரியாக இருந்தவன் அழகோன் நரன் என்பவன். இவனை அழகேஸ்வரன் எனவும் அழைப்பர். இவன் 5ம் புவனேகபாகு என்னும் பெயரோடு கோட்டைக்காட்டை அரசதானி ஆக்கினான்.

இவ்வாறு சிங்கள மன்னர்கள் தமிழருக்கு அஞ்சி அனுராதபுரத்தை விடுத்து தெற்கு, தென்மேற்கு நோக்கித் தமக்குப் பாதுகாப்புத்தேடி மலைநாட்டுப் பகுதிகளில் இராசதானிகளைக் காலத்துக்குக்காலம் மாற்றியமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடபகுதியாகிய இராசரட்டைப் பகுதி முழுமையையும் சுமார் 3ம் விக்கிரமபாகுவரை தமிழர் குடிப்பரம்பலும் தமிழர் ஆதிக்கமும் நிலவியதென்பது அங்கை நெல்லி.

ஏழாவது படையெழுச்சியில்இருந்து மாகன் படையெழுச்சியைத் தொடர்ந்து யாழ்ப்பாண அரசு சங்கிலியன் ஆட்சி முடிபு வரையும் வடகீழ்ப் பகுதியில் முக்கியமாக இராசரட்டைப்பகுதியின் பெரும் பகுதி தமிழர் குடிப் பரம்பலும் ஆதிக்கமுமே நிலவிய காலமாகும்.

3ம் பராக்கிரமவாகு காலத்தில் கி.பி. 1371 – 1378ல் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தமிழரசன் ஆரியச் சக்கரவர்த்தி என்பான் தென்முகமாகப் படை திரட்டிச் சென்று கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய இடங்களைக் கைப்பற்றி சிங்கள அரசனைத் தமக்குக் கப்பம் கட்டுமாறு செய்தனன் என இலங்கை வரலாறே கூறும். இதனாலும் 14ம் நூற்றாண்டிலும் இராசரட்டைப் பகுதி தமிழர் ஆதிக்கத்தில் இருந்தமை புலனாகிறது. ஏன் ஆரியச் சக்கரவர்த்தி போர் தொடுத்துக் கைப்பற்றிய இடம் மாயரட்டைப் பகுதியாகும். இராசரட்டைப் பகுதி சிங்களவர் ஆதிக்கத்துள் இருந்திருக்குமானால் ஆரியச் சக்கரவர்த்தியின் படைகள் மாயரட்டைக்குப் போகும் வழியில் அனுராதபுரச் சூழலில் எதிர்ப்புக்கு ஆளாயிருப்பர். ஆதலின் இராசரட்டைப் பகுதியைக் கடந்து மாயரட்டைப் பகுதிக்கு ஆரியச் சக்கரவர்த்தி படைநடத்திச் சேறலும் திரும்ப வெற்றியோடு மீளுதலும் முடியாத காரியம்.

இனி அழகோன்நரன் ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களை எதித்துப் போராடி அவர்களை வடபகுதிக்குப் பின்வாங்கச் செய்தான். கப்பங் கட்டுதலையும் நிறுத்தி விட்டான் என இலங்கை வரலாறு கூறுகின்றது. இங்கே வட பகுதியென இலங்கை வரலாறு குறிப்பிடுவது இராசராட்டைப் பகுதியே என உணரலாம். அழகேஸ்வரன் ஆட்;;சி;க்காலம் கி. பி. 1378 – 1398 ஆகும். இவனது பட்டப் பெயர்புவனேகபாகு.

3ம் விக்கிரமவாகுவோடு போர்தொடுத்த ஆரியச் சக்கரவர்த்தி செயவீரசிங்கையாரியனாவான். இலங்கை வரலாற்றில் செயவீரசிங்கையாரியன் இலங்கையின் தென்பகுதியைத் திறைகொடுத்து ஆளும்படி பராக்கிரமபாகுவுக்குக் கொடுத்தான் என்றும் செயவீரசிங்காரியனோடு சண்டைசெய்த சிங்கள அரசன் புவனேகவாகு என்றும் கூறப்பட்டுள்ளது. செயவீரசிங்காரியன் என்பான் சிங்களவரோடு சமர் புரிந்துசில கிராமங்களைப் பறித்தெடுத்து அவற்றிலே தமிழரைக் குடியேற்றினான் எனவும் இலங்கை வரலாறே கூறுகின்றது.

இலங்கை வரலாற்றில் 3ம் பராக்கிரமவாகு காலத்திலேயே செயவிக்கிரமசிங்காரியன் போர் தொடுத்து வெற்றியீட்டினான் என்றும் கூறப்பட்டிருப்பதினாலும் 3ம் விக்கிரமபாகுவின் மந்திரியாய் இருந்த அழகோன்நரன் என்பவனே புவனேகவாகு எனப் பெயர் சூட்டி அவனுக்குப்பின் அரசனாக ஆட்சி புரிந்தமையினாலும் இலங்கை வரலாற்றில் செயவீரசிங்காரியன் போர் தொடுத்த சிங்கள அரசன் புவனேகவாகு எனக் கூறப்படுவது மேற்போந்த புவனேகவாகுவேயாகும். இவன் 5ம் புவனேகவாகு.

இனி, 6ம் வி;க்கிரமவாகு வடபகுதியில் உள்ள தமிழரை அடக்கி ஒடுக்கக் கருதி தனது மகன் சபூளவன் அல்லது சம்பூமளவன் தலைமையில் ஓர் படையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தான். 6ம் விக்கிரமபாகுவின் ஆட்சிக்காலம் கி.பி. 1410 – 1462 ஆகும்.

சம்பூமளவன் வட பகுதிக்குச் சென்று அங்கு ஆட்சி புரிந்துகொண்டிருந்த அப்பகுதியில் அரசனைக் கொன்று பலரைச் சிறைப்படுத்தி அப்பகுதியை ஆட்சி புரிந்தான் என இலங்கை வரலாறு கூறுகின்றது. இந் நிகழ்ச்சி கி.பி. 1410 – 1462 க்கு இடையில் நடந்திருக்கலாம்.

இக்காலத்தில் வடபகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் கனகசூரியசிங்காரியன் என்பவன். இவன் போரில் பின்வாங்கி மனைவி இரு பி;ள்ளைகளுடனும் ஒளித்து இந்தியாவுக்கு ஓடினான் என இலங்கை வரலாறே கூறுகிறது. 17 வருடகாலம் இந்தியாவிலேயே வாழ்ந்தான். பின் தனது இரு மக்களாகிய பரராசசேகரம், செகராசசேகரம் என்பவர்களோடு மதுரையரசனின் படை உதவி பெற்று யாழ்ப்பாணம் வந்து சிங்கள அரசனோடு போர் தொடுத்தான். அப்போரில் சிங்கள தேசப் படைத்தலைவன் விசயபாகுவைக் கொன்று அரசைக் கைப்பற்றினான். இலங்கை வரலாறே கூறுகின்றது. ஆதலின் சம்பூமளவன் யாழ்ப்பாண அரசனைக் கொன்றான் என்பது, வரலாறு எழுதியோரின் தவறாகும்.

ஆதலின் சம்பூமளவனின் யாழ்ப்பாண ஆட்சிக்காலம் கனகசூரியசிங்காரியன் இந்தியாவில் வசித்தது 17 வருட காலமேயாகும். சம்பூமளவனின் தந்தை 6ம் பராக்கிரமவாகு 1410 – 1462 வரை தென் இலங்கை அரசனாக ஆட்சி புரிந்துள்ளான். இக்கால இடைவெளியின் பிற்பகுதியே சம்பூமளவனும் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தவன் ஆவான். சம்பூமளவன் தென்னிலங்கை அரசனாக ஒரு போதும் இருக்கவில்லை@ வரலாறில்லை. ஆதலின் 17வருடம் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தான் என்பதே வரலாற்றுண்மை 6ம் பராக்கிரமவாகுவின் மகன் இருக்கப் பேரன் அரசனாக வந்தமைக்குக் காரணம் இருக்கவேண்டும். ஆம் அச்சமயம் சம்பூமளவன் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்தமையே காரணம் ஆக வேண்டும். ஜயபாகு சம்பூமளவனின் மகனாக இருத்தல் கூடும்.

ஜயபாகு தென்னிலங்கை அரசனாக இருக்க சம்பூமளவன் யாழ்ப்பாண அரசனாக இருக்கிறான். இக்கால கட்டத்திலேயே கனகசூரிய சிங்காரியன் படையெடுப்பு நிகழ்கின்றது. இப்போரில் சம்பூமளவன் பின்வாங்க கனகசூரியன் அரசைக் கைப்பற்றுகிறான்.

ஜயவாகு ஆட்சிக்கு வந்து 2 வருடத்தால் அவனை 6ம் புவனேகபாகு என்பவன் கொன்று தென்னிலங்கை அரசன் ஆகின்றான் எனவே யாழ்ப்பாணப் போரும் தென்னிலங்கை ஜயபாகு போரும் ஒரே காலத்தில் நடைபெற்றதாகக் கருத இடமுண்டு. ஏனெனில் சம்பூமளவனும், ஜயபாகுவும் ஒருவருக்கொருவர் உதவி புரிய முடியாத நிலையில் இரு போர்களும் நடைபெற்றிருப்பதனால் அவ்வாறு கருத இடமுண்டு ஜயவாகு ஆட்சிக்காலம் 1462 – 1464ஆகும். எனவே ஜயபாகுவைப்போரிற் கொன்று அரசு கைப்பற்றியது 1764ல். அப்பொழுதே சம்பூமளவன் போரும் நடைபெற்றிருந்தால் சம்பூமளவன் அரசு கைப்பற்றிய காலம் (1464 – 17) 1447ல் ஆகும். எனவே கனகசூரிய சிங்காரியன் படை எடுத்து சம்பூமளவனை வென்று ஆட்சி கைப்பற்றிய காலம் 1463 – 1464 ஆகும்.

பின்னர் 6ம் புவனேகபாகுவின் சகோதரன் ஆட்சி புரிந்தான். இவனது அரசதானி கோட்டைக்காடு. இவனுக்கு தர்ம பராக்கிரமபாகு, விசயபாகு, றைகம்பண்டாரம், இராசசிங்கன் என்போர் மக்களாவர். இவனுக்குப்பின் அரசுக்கு வந்தவனே மூத்த மகனாகிய தர்மபராக்கிரமவாகு என்பவன். இவன் ஆட்சிக்கு வர இவன் காலத்தில் இலங்கைக்கு ஓர் புதுயுகம் உதயமானது. இவனது ஆட்சிக்காலம் 1505 – 1527 ஆகும். கி.பி. 1505ம் ஆண்டு மேலைத் தேசத்தவர்களாகிய போர்த்துக்கீசர் இலங்கை மண்ணில் காலடி வைத்த ஆண்டாகும். அவர்கள் வருகையோடு சிங்களவர் ஆட்சியும், யாழ்ப்பாணத் தமிழர் ஆட்சியும், இலங்கை அரசியலும் ஒர் புதிய திருப்பம் பெற்றது.

அனுராதபுரத்தை இராசதானி ஆக்கியவன் பந்துகாபயன். கி.மு 437 ஆகும். அன்று தொட்டு தொடர்ந்தும் இடையீடுபட்டும் 1250 ஆண்டுகள் அனுராதபுரி இராசதானியாக விளங்கியது. என்றாலும் மகாவமிசகாலமே அதன் உச்சமான காலமாகும். மகாவமிசத்தில் தமிழும், இந்துமதமும் ஈழநாட்டு மக்களிடையே அற்றுப்போகவில்லை சிங்கள இனம் என ஒன்று தோன்றி வலுவடைந்த காலத்திலும் தர்ம பராக்கிரமபாகு காலம்வரையில் இராசரட்டைப் பகுதி பெரும்பாலும் தமிழர்கள் பெருக்கமாகவும் வலுவுடனும் வாழ்ந்தார்கள்.

எக்காலத்திலாயினும் வடபகுதியில் சிங்கள மன்னர் ஆட்சி தொடர்ந்து செவ்வனே நடைபெற்றதெனக் கூறமுடியாது. நாகர் பரம்பரையினரே ஆட்சி புரிந்து வரலாயினர். அவர்கள் பேரரசோடு இணைந்தும் எதிர்த்தும் ஆட்சிபுரிந்து வந்தனர். கி.பி. 785 வரை ஈழநாட்டு அரசபரம்பரையினர் வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் ஆட்சி புரிந்துவந்தனர். இராசரட்டைப் பகுதியில் மேலும்மேலும் தமிழர்களின் குடிப்பரம்பல் அதிகரிக்கப்பட்டமைக்குக் காரணம் இந்தியப்படை எழுச்சிகளே மகாவமிச காலம் 847 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் இந்தியத் தமிழ் மன்னர்களே ஆட்சி செய்துள்ளார்கள். எனவே இந்திய மக்களின் குடியேற்றம் கி. மு. 237 க்கும் கி. மு. 84 க்கும் இடைப்பட்ட இந்தியர் ஆட்சியில் மிகுதியும் நடைபெறுவது சகசமே...

ஈழமும் தமிழர் ஆதிக்கமும்...
இப்போது நாம் அறியக்கூடிய உண்மைகள் பல. விசயன் வருவதற்கு முன்னர் ஈழநாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே. அவர்கள் வடமொழியாளரால் இயக்கர், நாகர் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிவநெறிக் கோட்பாடு உடையவர்கள். தமது நாடாகிய ஈழத்தைத் தாமே ஆட்சிபுரிந்து வந்தனர். விசயன் அவர்கள் பரம்பரையில் மணம் செய்து உறவாடியே அரசுரிமை பெற்றான். விசன் முதலியோர் கலிங்கநாட்டுத் தமிழர்களே. ஆரிய வகுப்பினர் அல்லர். புத்த பிக்கு மிகுந்தன் ஈழநாட்டில் காலடி வைக்கும் வரையும் ஈழநாட்டில் வாழ்ந்த மக்கள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, கலாச்சாரம் உடையவர்களாகவே இருந்தார்கள். வேறோர் இனம், வேறோர் மதம் இருந்ததா? கூறுமின்!

இனி விசயன் முதல் அபயன் ஆட்சி முடியும்வரை அவர்களது இராசதானி ஈழநாட்டின் வடபகுதியிலேயே இருந்தது. தமிழர் நெருக்கமாகக் குடியமர்ந்து நாகரீகமாக வாழ்ந்த பகுதி அதுவே. விசயனின் இராசதானி தம் பன்னா. பந்துவாசன் இராசதானி உபத்தீசநுவரை. இவை மாதோட்டத்துக்கு அணித்தாக இருந்தன. எனவே விசயன் ஆட்சி தொடக்கம் (கி. மு. 543) கி. மு. 454 வரை 89 ஆண்டுகள் வடபகுதியில் விசயன் பரம்பரையினரின் ஆட்சி நிலவிய காலமாகும்.

அக்காலத்தில் ஈழநாடு மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை இராசரட்டை, மாயரட்டை, உறுகுணை என்பன. இராசரட்டை மகாவலிகங்கைக்கும், தெதுறுஓயாவுக்கும் வடபால் உள்ள பகுதியாகும். மாயரட்டை வடக்கே தெதுறுஓயாவையும், கிழக்கே மகாவலி கங்கையையும், தெற்கே கலுகங்கையையும், மேற்கே கடலையும் எல்லையாக உடைய பகுதியாகும். உறுகுணை கிழக்கேயும், தெற்கேயும் எஞ்சிக்கிடந்த கரை நாட்டை அடக்கிய பகுதியாகும். வரலாற்றுக் கண்கொண்டு நோக்கும்போது அக்காலத்தில் இராசட்டைப் பகுதியே குடிப்பரம்பல் உள்ள பகுதியாகவும், நாகரீக வளர்ச்சியுடைய பகுதியாகவும், அரச பரம்பரையினர் வாழ்ந்த, ஆட்சி புரிந்த இடமாகவும் இருந்தமை புலனாகும்.

அனுராதபுரத்தை இராசதானி ஆக்கியவன் பந்துகாபயன். கி. மு. 437 ஆகும். அபயனுக்குப்பின் கி; மு. 454 தொடக்கம் 17 வருடம் அரசின்றி இருந்த காலமாகும். அன்றுதொட்டு தொடர்ந்தும் இடையீடுபட்டும் 1250 ஆண்டுகள் இராசதானியாக விளங்கியது. என்றாலும் மகாவமிச காலமே அதன் உச்சமான காலமாகும். மகாவமிச காலத்தில் தமிழும், இந்துமதமும்; ஈழநாட்டு மக்களிடையே அற்றுப் போகவில்லை. சிங்கள இனம் என ஒன்று தோன்றி வலுவடைந்த காலத்திலும் தர்மபராக்கிரமவாகு காலம் வரையில் இராசரட்டைப் பகுதி பெரும்பாலும் தமிழர்கள் பெருக்கமாகவும் வலுவுடனும் வாழ்ந்தார்கள்.

எக்காலத்திலாயினும் வடபகுதியில் சிங்கள மன்னர் ஆட்சி செவ்வனே நடைபெற்றதெனக் கூறமுடியாது. நாகர் பரம்பரையினரே ஆட்சி புரிந்து வரலாயினர். அவர்கள் பேரரசோடு இணைந்தும் எதிர்த்தும் ஆட்சிபுரிந்து வந்தனர். இராசரட்டைப் பகுதியில் மேலும் மேலும் தமிழர்களின் குடிப்பரம்பல் அதிகப்பட்டமைக்குக் காரணம் இந்தியப்படை எழுச்சிகளே. மகாவமிசகாலம் 847 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் இந்தியத் தமிழ் மன்னர்களே ஆட்சி செய்தார்கள். இந்திய மக்களின் குடியேற்றம் கி;. மு. 237க்கும். கி. மு. 84க்கும் இடைப்பட்ட 80 வருட காலமாகும். இன்று இவர்கள் பரம்பரையினர் அனுராதபுரம், புத்தளம், சிலாபம், நீர்கொழும்புச் சூழலில் குடியேறியவர்கள். இன்று சிங்களவர் புத்த சமயிகளாய் இருத்தல் வியப்பல்ல. பிற்பாடு இந்தியத் தமிழர்களின் குடியேற்ற காலம் கி. பி 9ம்நூற்றாண்டுக்கும் 16ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகும். இக்காலம் சிங்கை நகர் ஆட்சியின் பிற்பகுதியும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலமும் ஆகும்.

இனி, ஈழநாட்டுத் தமிழர்கள் வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பழைய வரலாற்று நூலாகிய பாரதத்திலும் ஈழநாட்டு நாகர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாரத காலம் கி. மு. 1500 என்பர். இக்காலத்தில் யாழ்ப்பாணம் என அழைக்கப்படுவது ஒரு காலத்தில் மணிபுரம் என அழைக்கப்பட்டது. இங்கே தீர்த்த யாத்திரை காரணமாக பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் என்பான் நகுலகிரிக்கு வந்தான் என்றும், அப்போது மணிபுரத்தில் ஓர் பூங்காவில் அந்நாட்டு அரசன் மகளாகிய சித்திராங்கதை என்பவளைக் கண்டான் என்றும், கண்டதும் அவள் மீது தணியாத காதல் கொண்டு அவளை மணம் முடித்தான் என்றும், இவர்கள் இருவருக்கும் சித்திராங்கதன் என்னும் ஓர் ஆண் மகன் பிறந்தான் என்றும், பின் சித்திராங்கதன் அரசனாய் இருக்கும் காலத்தில் தந்தையாகிய அருச்சுனன் திக்கு விசயமாக ஈழநாட்டுக்கு வந்தான் என்றும், அப்பொழுது சித்திராங்கதன் தந்தையென்று அறியாது போர் தொடுத்து அருச்சுனனை வென்றான் என்றும். சித்திராங்கனது கொடி சிங்கக்கொடியும், பனைக்கொடியும் என்றும் பாரதம் கூறும். ஈழநாட்டுத் தமிழர் சிவனெறிக் கொள்ளை உடையவர்கள் ஆதலின் சக்தியின் வாகனமாகிய சிங்கத்தைத் தமது கொடியாகக் கொண்டனர். பனை ஈழநாட்டின் இயற்கைத் தாவரம் ஆனதினாலும் வருடம் முழுமையும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உறையுள், எரிபொருள் கொடுத்து உதவுவதினாலும் அதனைக் கற்பகத்தருவெனவே அழைக்கலாயினர். ஆதலின் அதனையும் தமது கொடியுள் ஒன்றாகக் கொண்டனர்.

இனி, பாண்டவருள் ஒருவனும், அழகு, ஆற்றல் படைத்தவனும். கல்வி கேள்வி நிறைந்தவனும் ஆகிய அருச்சுனன் ஈழநாட்டு கன்னிகையைக் கண்டதும் மோகம் கொண்டு காதலித்து அவளைப் பிரிய மனம் இல்லாதவனாய் மணம் முடித்தான். இதனால் அக்கன்னிகை பேரழகும், நாகரீகமும், பண்பாடும் உடையவளாய் இருந்தாள் என்பது புலப்படும், பாரத வரலாறு முதன் முதல் வடமொழிக் காப்பியமாக வெளிவந்தால் பெயர்கள் வடமொழி மரபில் மாற்றம் பெற்றன.

இன்னும் இதற்கு முற்பட்ட வரலாறுகளாவன கந்தபுராண, இராமாயண வரலாறுகளில் பேசப்படும் சூரன், குபேரன், இராவணன் ஆதியோர் ஈழநாட்டின் பண்டைத் தமிழ் மன்னாதி மன்னர்களே. இவர்கள் மனைவியர் ஆகிய பதுமகோமளை, சித்திரரேகை, மண்டோதரி ஆகியோர் மாதோட்டத்தில் இருந்து அரசோச்சிய ஓவியத்திலும், கட்டிடக் கலையிலும் திறமைபடைத்த அரச பரம்பரையினர் ஆகிய நாகர் எனப்பட்ட பண்டைத் தமிழ் மன்னரின் அரச கன்னிகைகளேயாவர். இவ்வரச குலத்தினர் புட்பகவிமானம், ஆகாய ஊர்தி, காந்தக் கோட்டை ஆதியன அமைத்து புகழுடனும். பேராற்றலுடனும் வாழ்ந்தார்கள் என பண்டைப் பனுவல்கள் பறைசாற்றுகின்றன. அவையாவன: புறநானூறு, சிலப்பதிகாரம், பழமொழி, சிறுபாணாற்றுப்படை, கலிங்கத்துப்பரணி, சீன யாத்திரிகள், கியூன்திசங் எழுதிய நூல், அரபிக் கதைகள், மாந்தைப் பள்ளு என்பன.

இராமர் காலம் கி. மு. 2300 – 1950 என ஆய்வாளர் கூறுவர். எனவே இராவணன் காலம் அஃதே. இராவணனுக்குப் பின் வீடணன் ஆட்சி செய்ததாக இராமாயணம் கூறும். வீடணனுக்குப் பின்னர் ஈழநாட்டாட்சி ஆங்காங்கு சிற்றரசுகளாக ஒவ்வோர் பகுதியாக அரச பரம்பரையினர் ஆட்சி புரியலாயினர்.

பிற்காலத்தில் ஓர் நாக அரசன் வளைவணன் என்பவன் பேசப்படுகிறான். இவன் மனைவி வாசமயிலை என்பவள். இவர்களின் மகள் பீலிவளை என்பவள். இவளையே சோழ அரசன் நெடுங்கிள்ளி என்பவன் கண்டு காதலித்து மணந்தான். இதற்குப் பழைய சங்க இலக்கியங்கள் சான்று. இச்சோழ மன்னனுக்கும் பீலிவளைக்கும் மகனாகப் பிறந்தவனே தொண்டமான் இளந்திரையன் என்பவன். இத்தொண்டமான் இளந்திரையன் காலம் கி.; மு. 220 – 200 என ஆய்வாளர் கூறுவர். இக்காலம் கடைச்சங்கத்து இறுதிக்காலமாகும். எனவே தந்தை நெடுங்கிள்ளி காலம் கி;.மு மூன்றாம் நூற்றாண்டாகும்.

ஆகவே நாக அரசன் வளைவணன் காலமும் கி. மு. 3ம் நூற்றாண்டை அண்மியதேயாகும். இவ்வாறு மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஈழநாட்டை வளைவணன் ஆட்சிபுரிந்தது விசயன் வருகைக்கு சுமார் 200 ஆண்டுகள் பின்னாகும். இவன் ஆட்சி புரிந்த இடம் ஈழநாட்டின் வடபகுதியில் உள்ள முக்கிய தலைநகராய் இருந்த கதிரமலைப் பகுதியாகும். கதிரமலை தற்போது கந்தரோடை என வழங்கப்படுகின்றது.

இனி, கி. மு. 3ம் நூற்றாண்டிலே தீசன் என்னும் நாக அரசன் ஒருவன் கல்யாணியில் இருந்து அரசாண்டதாகவும் அப்போது ஓர் கடல்கோள் நடைபெற்றதாகவும் முதலியார் எழுதிய யாழ்ப்பாண வரலாறு கூறுகிறது. இத் தீசனும் அக்காலத்தில் ஈழநாட்டை ஆட்சிபுரிந்த குறுநில மன்னருள் ஒருவனாவான். எனவே வளைவணனும். சோழ நாட்டரசன் நெடுமுடிக்கிள்ளியும், தீசனும் ஆகிய மூவரும் ஏறக்குறைய சம காலத்தவர் என்பது தெளிவு. கல்யாணி என்பது கழனிப்பகுதியாகும்.

பீலிவளைக்கும் நெடுமுடிக் கிள்ளிக்கும் பிறந்த மகனை, சிறுவயதிலே தாயாகிய பீலிவளை என்பாள் பிள்ளைக்கு அடையாளமாகத் தொண்டைக்கொடி அணிந்து கப்பல் மார்க்கமாகத் தந்தையாகிய நெடுமுடிக்கிள்ளியிடம் அனுப்பி வைத்தாள். கடற்கொந்தளிப்பினால் கப்பல் கவிழ்ந்து பிள்ளை கடற் திரையால் கரையில் ஒதுக்கப்பட்டது. இது வரலாறு. இதனை அப் பிள்ளைக்கு இட்டு வழங்கிய பெயரே சான்றாகின்றது. என்னை? தொண்டைக் கொடி அணிந்தமையால் “தொண்டமான்” என்றும் சிறுபிள்ளை ஆனதால் “இளம்” என்றும், கடற் திரையால்கரை சேர்க்கப்பட்டதனால் ‘திரையன்’ என்றும் அழைக்கப்பட்டான் அல்லவா?

இதனால் ஓர் வரலாற்றுண்மை புலனாகிறது. வளைவணன் நெடுமுடிக்கிள்ளி, தீசன் ஆகியோர் காலத்தில் ஓர் கடற்பெருக்கு ஏற்பட்டதென முன்னர் கூறப்பட்டது. இக் கடற்பெருக்கு அப்பிள்ளை வந்துகொண்டிருந்த காலத்தில் நடைபெற்றதாக வேண்டும். அக் கடற் பெருக்கின் கொந்தளிப்பினால் கப்பல் கவிழ்ந்தது. கடற்றிரை எற்றிப் பிள்ளையை கரையில் ஒதுக்கியது என்பது உய்த்துணரக் கூடியவை.

இனி, இடையிடையே ஆட்சி செய்த அரசர் பெயர் வரிசை அறிய முடியாத இடைக்காலங்கள் பல உள. அவையாவன:

1. சூரன் ஆட்சிக்குப்பின்னர் மாலியவான் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.
2. வீடணன் ஆட்சிக்குப்பின்னர் சித்திராங்கதன் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.
3. சித்திராங்கதன் ஆட்சிக்குப்பின்னர் வளைவணன் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.
4. வளைவணன், தீசன் ஆட்சிக்குப் பின்னர் கலிங்க அரச குமாரன் உக்கிரமசிங்கன் ஆட்சி வரையுள்ள காலத்து அரசர்கள்.

சித்திராங்கதன் பாரத காலத்தவன். பாரத காலம் 1500 வரை என ஆய்வாளர் கூறுவர். வளைவணன் கி. மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். கி. மு. 3ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1200 ஆண்டுகளாகும். இக்காலத்தில் இயக்க நாக அரச பரம்பரையினர் ஆட்சி செய்தார்கள் என வரலாறு கூறுகின்றது. ஆனால் அவர்கள் பெயர் வரலாற்றில் அகப்படவில்லை. இக்கால இடைவெளியிலேயே விசயன் கலிங்க நாட்டில் இருந்து ஈழநாட்டிற்கு வருகிறான். அஃது கி. மு. 543 விசயன் வந்த ஆண்டே அவனது ஆட்சி ஆண்டாகவும் இலங்கை வரலாறு கூறுகின்றது. எவ்வாறாயினும் அவன் வருகையும், ஆட்சியும் ஒரேயாண்டில் நிகழ்ந்ததாகக் கூறுவதுபொருத்தம் அற்ற கூற்றாகும். இதுபற்றி முன்னர் விளக்கம் கூறப்பட்டது. எனவே அவன் வருகைக்கும், ஆட்சிக்கும் இடையே சில பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். விசயன் வந்த காலத்தில் ஈழநாட்டை ஆட்சி புரிந்த அரசர்களின் பெயர்களையும் அறிய முடியவில்லை. ஆனால் நாக பரம்பரையினரின் ஆட்சி நிலவிய தென்பதை மகாவமிச வரலாறே கூறுகின்றது. புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வந்தார் என்றும், இரண்டாவது வருகையில் மணிபல்லவத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இரு நாக அரசர்களின் பிணக்கைத் தீர்த்தார் என்றும்கூறுகின்றது. இவர்கள்விசயன் வருகைக்கு முன்னதாக ஆட்சி புரிந்தவர்கள் ஆவர். ஏன்? புத்தர் நிருவாணம் அடைந்தது கி. மு. 543. அதற்கு முன்னரே அவரது ஈழநாட்டு வருகை நடைபெற்றிருக்கிறது.

இனி இயக்கர், நாகர், அசுரர். இராக்கதர் என அழைக்கப்பட்ட சூரன் ஆதியோர் மங்கோலிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்தே வந்து ஈழநாட்டில் குடியேறினார்கள் என்றும் முதலியார் இராசநாயகம் அவர்கள் தாம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில் காட்டியுள்ளார்கள். அஃது எவ்வாற்றானும் பொருத்தமற்ற முரண்பாடான தப்பான கூற்றாகும். சிறிதும் ஆதாரமற்ற வரலாற்றுக்கு முரணான வெற்றுரையாகும். தமிழரின் தொன்மை பற்றியும் உலகின் முதன் முதல் தோன்றிய மக்கள் உற்பத்தியும் பற்றி ஆங்காங்கு விளக்கியுள்ளமை அறிக.

இவர் கூற்று உண்மையானால் குமரிக் கண்டத்தில் மக்கள் இனம் தோன்றவில்லையா? ஈழமும் இந்தியாவும் குமரிக்கண்டத்தில் சேராத வேறு நாடுகளா? அன்றி ஈழமும் இந்தியாவும் மக்கள் இனம் இல்லாத வெறும் மணற் பாறையாக இருந்ததா? தமிழ் என்னும் மொழி மங்கோலியரின் மொழியா? சிவ வழிபாடும். கற்பு மாண்பும் மங்கோலியரிடம் இருந்து புகுந்ததா? உணர்மின்!

இனி, கல்யாணியில் இருந்து அரசு செய்த தீசன் என்பவனும், கதிரமலையில் இருந்து ஆட்சி புரிந்த வளைவணனும் அவன் மகன் பீலிவளையும், அவளை மணந்த சோழின் நெடுங்கிள்ளியும், அனுராதபுரத்தில் இருந்து ஆட்சிபுரிந்த தேவநம்பியதீசனும், சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி மகன் தொண்டமான் இளந்திரையனும் ஆகிய இவர்கள் ஏறக்குறைய சமகாலத்தவர்களே. அஃதாவது 3ம் நூற்றாண்டின் முன், பின் பகுதியைச் சேர்ந்தவர்களேயாவர். தேவநம்பியதீசன் தம்பி மகாநாகன், அவன் மகன் யற்றாலதிசன் இருவரும் அக்காலப்பகுதியைச் சேர்ந்தவர்களே. யற்றாலதீசன் வரலாற்றில் ஒர்பெருங் கடற்பெருக்கு ஏற்பட்டதென்றும், அதனால் 979 கிராமங்களும். 470 குறிச்சிகளும் கடல்வாய்ப்பட்டதென்றும் மகாவமிசம் கூறுகின்றது. இக்கடற் பெருக்கின் போது தனர் நெடுங்கிள்ளி மகன் (தொண்டைமான் இளந்திரையன்) கப்பல் கவிழ்ந்து கரையில் ஒதுக்கப்பட்டான் ஆதல் வேண்டும். முன்னர் இதுபற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இக்காலம் இந்திய வரலாற்றில் கடைச்சங்கத்து இறுதிக்காலம் ஆகும்.

எனவே, ஈழநாட்டு மக்கள் விசயனுக்கு முன் வரலாற்றுக்கு எட்டிய காலம்வரையும். பின் கி. பி. 1505ல் ஆட்சி புரியத் தொடங்கிய தர்மபராக்கிரமவாகு காலம் வரையிலும் ஈழநாட்டில் அரசியல், கல்வி, சீர்திருத்தம். சிவநெறிக்கோட்பாடு, கலை கலாச்சாரம், நாகரீகம் உடையவர்களாய் தனித்துவமாகத் தலைசிறந்து உலகில் பேரும், புகழும்பெற்று வாழ்ந்தார்கள் என்பது வெள்ளிடை மலைபோல் தெளிவாக உணரக்கிடக்கின்றது.
முற்றிற்று.

நம்நாட்டின் உண்மை வரலாற்றை உள்ளவாறு எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்.

பகுதி-1,2,3,4,5,6,7,8,9/10,11,12
முற்றும்

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே”

ஆகவே ஈழநாடு தமிழர்களின் நாடு ஆகும்...

இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது...
போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தரமாட்டார்கள்...

அனைவருக்கும் நன்றி...

ஆக்கம்:-யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக