உங்களுக்கு தெரியுமா...
இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!
இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.
இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.
முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.
போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது.
மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் டாக்டர் அல்மா பேக்கர். வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.
யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார்.
அன்றைய நாளில் 2250 ஸ்ரேர்லிங் பவுண்டு வரை பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது.
ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
யாழறிவன்...
Yalarivan Jackson Jackie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக