ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-8

சூரன், சிங்கன், தாரகன்...!!!
இனி அம் முடியுடை மன்னர் மூவரினதும் வரலாற்றையும், பெயர்களையும், துருவி ஆராயுமிடத்துச் சில உண்மைகளை அறிய முடியும். இவர்கள் வரலாற்றிலும், பெயர்களிலும் வடமொழி உருவில் திரிபுகள் ஏற்பட்டிருப்பினும் அவற்றை நுணுகி ஆராயுமிடத்து உண்மைகள் வெளிப்படாமல் இல்லை.

தாரகன் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இஃது ஓர் தூய தமிழ்மொழி. தார், அகன் ஆகிய இரு சொற்களாலாகிய தொடர் இவை தமிழ்மொழி ஆதலின் அவர்கள் தமிழர்கள். தமிழ் மொழியாளர் என்பதற்கு யாதேனும் ஆட்சேபனை இல்லை. தார் – என்பது மாலை. அகன் - என்பது மார்பை உடையவன் என்பது பொருள் - எனவே மாலையுடைய மார்பையுடையவன் என்பது தாரகன் என்ற சொல்தரும் பொருள் ஆதலின் அக்காரணம் பற்றி ஏற்பட்ட பெயர் ஆகலாம். ஆனால் அம் மலை ஒருவருக்கு இயற்கையாகவோ அன்றிச் செயற்கையாகவோ அமையலாம். கழுத்தின் கீழாக மார்பில் தோள்வரையும் வளைந்து மாலை போன்று மூன்று வரிகள் அமைந்திருப்பது உத்ம ஆடவரின் சாமுத்திரிகா லட்சணம். அவ்வகையில் இயற்கையாக மாலை போன்று மூன்று வரிகள் விளக்கமுற்ற மார்பினனாய் இருந்திருக்கலாம். இதற்குச் சான்றாக “வரையகன் மார்பிடை வரிகள் மூன்றுள” என்றும் “செம்பொறி வாங்கிய மொய்ம்பில்” என்றும் புலவர் பெருமக்கள் புகழ்ந்து எடுத்துக் கூறியிருப்பது காண்க.

அன்றி எப்போதும் பூமாலை மார்பில் அணிந்து கொள்ளும் அவாவினனாய் மார்பில் அணிந்திருக்கும் வழக்கமுடையவன் ஆன காரணத்தால் அப்பெயர் ஏற்பட்டிருத்தலுங் கூடும். இனி சிங்கன் என்ற பெயர்கள் வடமொழி உருவில்காணப்படினும் தமிழ் மரபை ஒட்டிய பெயர்கள் இருந்திருக்க வேண்டும். சிங்கமுகன் என்ற பெயர் அரிமுகன் என்று இருந்திருக்கலாம். அரி – என்றால் சிங்கம். சிங்கம் - வடமொழி, அரி – தமிழ்மொழி. அரி என்ற சிங்கத்தைக்குறிக்கும் சொல் வடமொழியில்இல்லை. வடமொழியில் கரி (ஹரி) என்ற சொல் உண்டு. அச்சொல் சிங்கத்தைக் குறிக்காது. திருமாலையே குறிக்கும். ஆதலின் அரி என்ற சொல்லை வடமொழியாளர் சிங்கம் எனக் கொண்டு சிங்கமுகன் என்றனர். அத்தோடு அவர்கள் குலப் பெயராய அசுரர் என்ற சொல்லையும் சேர்த்துச் சிங்க முகாசுரன் என அழைக்கலாயினர். இது அவர்களது மொழி பெயர்ப்பாகும்.

சூர் என்னும் அடியாகச் சூரன் என்னும் பெயர் வரலாயிற்று. சூர் என்பது அச்சம். எனவே இயல்பாகவே எவரும் அஞ்சத்தகுந்த எவர்க்கும் அச்சத்தை விளைவிக்கும் இயல்புடையவன் என்னும் கருத்தில் அப் பெயர் அமைந்துள்ளது. ஆதலின் எவ்வாற்றானும் அவர்கள் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்பதும் அவர்கள் தமிழர்களே என்பதும் ஐயமின்றித் தெளிவாம்.

இனி ஈழநாடே இவர்கள் தாய் நாடென்பது கண்டாம். இவர்களது ஆட்சி முடிவில் ஒரு பெருங்கடல் கோள் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. ஆகவே சூரனது ஆட்சி நகர் வீரமகேந்திரமும், ஈழநாட்டில் வேறு சில பகுதிகளும் கடலுள் அமிழ்ந்தி மறைய ஏதுவானது. பின்னரும் அவர் கிளையினர் எஞ்சியிருந்தேயாக வேண்டும். இதனை சுதேசன் அவன் மகன் மாலியவான், குபேரன். இராவணன். விடணன் ஆகியோர் வரலாறு வலியுறுத்துவதாகும் சூரன் ஆட்சி;க்குப் பின்ஈழநாட்டைச் சுதேசன் ஆட்சி புரிந்தான். பின் மகன்மாலியவான் ஆட்சி செய்ததாக வரலாறு கொண்டு அறிகிறோம். இடையே வரலாற்றுக்குட்படாத மன்னர்களும் இருந்திருக்கலாம். மாலியாவன், மாலியவந்தன் எனவும் கூறப்படுவான். இவனை வெற்றி கொண்டு குபேரன் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தான். குபேரனை இராவணன் வென்றுஆட்சி புரியலாயினன். இவ்வாறுபுலோலி சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் கூறுவர்.

ஆதலின் சூரன் ஆட்சி முடிவடைந்து நாடு அழிவெய்திய பின்னர் அவர் கிளையினர் இனப் பெருக்கமுற்றோ. பொருள் வளம் பெற்றோ, கலையறிவு பெற்றோ அவர்கள் வாழ்க்கையும், நாகரீகமும் வளர்வதற்குச்சில பல நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றது போக இடையே ஒரு சில அரசர்களோ, சிற்றரசர்களோ வரலாற்றுக்கு அகப்படாமலும் ஆட்சி புரிந்திருக்கலாம்.

இவர்கள் பெயரையும் கவனத்துக்கு எடுப்போம். சுதேசன், மாலியவான், குபேரன், இராவணன் என்பன வடமொழிச் சொற்களா? தமிழ் மொழிச் சொற்களா? அன்றி இவை இரண்டும் அல்லாத வேற்றுமொழிச் சொற்களா? அறிமின்! இவை தமிழ்ச் சொற்களே என்பது சகசம். ஆதலின் தமிழ் மொழிப் பெயர்பூண்ட அவர்கள் தமிழரே யன்றி வேறு யார்?

பிற்காலத்தில் இவர்களையும், இவர்கள் கிளையினரையும் இயக்கர். நாகர் எனப்பெயர் சூட்டி அழைத்தார்கள். அல்லவா? இயக்கர், நாகர் என்ற இருசொற்களும் தமிழ் சொற்கள் அன்று. இவை வடமொழிச் சொற்களேயன்றோ? ஆதலின் ஆரியர்களால் சூட்டப்பட்டு வழங்கிய காரணக்குறியே அவை என்பதில் ஆட்சேபனை இன்று. ஆதலின் ஆரியர் வருகைக்குப்பின் தென்னாட்டுப் பூர்வீகத் தமிழர்களைப் பற்றி இருவகையான வழக்கு இருந்திருக்கிறது. ஒன்று அசுரர் என்பது. மற்றையது இயக்கர். நாகர் இராக்கதர், தாசர் என்பது. சூரன் ஆதியோரை அசுரன் என்றழைக்கின்றனர். இது முற்பட்ட வழக்கு. மாலியவான், குபேரன், இராவணன் ஆகியோரை இயக்கர் நாகர், இராக்கதர் என அழைத்தனர். தாசர் என்றது மிகப் பிற்பட்ட வழக்காகும். தமிழ்க்குடும்பங்களில் ஆரியருக்குப் பணி புரிந்தவர்களைத் தாசர் என அழைத்தனர். எனவே பெரிய கால இடைவெளிக்குப்பின் இம் முத்திறப் பெயர்களும் வௌவேறு காலகட்டங்களில் ஆரிய மக்களால் சூட்டப்பட்டு வழக்கில் வந்தனவாகும்.

ஆகவே இயக்கர், நாகர், இராக்கதர் என்னும் பெயர்கள் இராமாயண காலத்திலும், புத்த பிக்குகள் இலங்கைக்கு வந்த பின்னருமே வழக்கில் வலுவடைந்தனவாகும். புத்த பிக்குகள் இலங்கைக்கு வந்தபின் இலங்கையின் வரலாற்று ஆசிரியர்கள் பிக்குகளே.

இராமாயணம் முதன் முதல் காப்பிய உருவமாக வடமொழியில் பாடியவர் வான்மீகி முனிவர். இவரது காலம் கி. மு. 3ம் நூற்றாண்டு. புத்த மதமும் இலங்கைக்கு வந்த காலம் கி.மு. 307 ஆகும். இக்காலத்துக்கு முன் அப்பெயர்கள் வழக்கில் வந்திருக்குமானால் அவை வடநாட்டில் குடியமர்ந்த ஆரியர்கள் வழக்காதல் வேண்டும். எனவே ஆரியர் வருகைக்கு முன்இயக்கர், நாகர், இராக்கதர் என்ற வழக்கு இருக்கவே முடியாது.

எனவே இராமாயண காலத்தில் முதன்முதலாக ஆரிய மக்களால் ஈழநாட்டு மன்னன் இராவணனுக்கும் அவன் கிளையினருக்கும், மக்களுக்கும் இயக்கர், நாகர் என்ற பெயர்கள் சூட்டப்பட்டன என்பதே வலுவுடைத்து. அவ்வழக்கைப் பின்பற்றி இராமாயணநூல் செய்தாரும், பிற்காலம் இலங்கைப் பிக்குகளும் அப்பெயர்களை வழங்கலாயினர் என்பதே உண்மை. ஆதலின் இப் பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பிற்பட்ட வழக்காகும்.

இனிஅவர்களை அவ்வாறு அழைத்தமைக்குரிய காரணத்தை ஆராய்வாம். ஈழநாட்டுப் பழங்குடி மக்களில் ஒரு குழுவினர் மந்திர வித்தையிற் தேர்ந்தவர்களாயும் மாயவத்தையிற் தேர்ந்தவர்களாயும், மாயவித்தைகள் செய்வதில் வல்லுநராயும் வாழ்ந்தனர். அக் காரணம்பற்றி அவர்கள் இயக்கர் எனப்பட்டனர் இவர்கள் அதர்வண, சாம வேதம் கூறும் மந்திரவித்தைப் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள் என்பது இராவணன் வரலாற்றில் இருந்தே அறிய முடிகின்றது.

மற்றக் குழுவினர் பாம்புவழிபாடு உடையவர்களாய் இருந்தார்கள். இவ்விரு இயல்புகளும் இன்றும் தமிழ் மக்களிடையே பாரம்பரியமாக நிலவி வருதலை அறிவோம். பாம்பு வழிபாடு பற்றி அது காரணமாக அவர்கள் நாகர் என அழைக்கப்பட்டார்கள. இயக்கர் பேய் வழிபாட்டுக்காரர் என்றும், நாகர் பாம்பு வழிபாட்டுக்காரர் என்றும் அவர்கள் கருதினார்கள். பண்டைத் தமிழ்மக்கள் சிவநெறிக்கோட்பாடு உடையவர்கள். அதனால் மறைமந்திரப் பயிற்சியும், செபதவமும் உடையவராயும், சிவனது பூணாரம் பாம்பாதலினாலும், குண்டலினி சத்தியே பாம்பாக உருவகம் செய்தனர் ஆதலினாலும் அத்தகைய சிவ வணக்கம் உடையவராயும் இருந்தார்கள். அதனை வெளிநோக்கில் பேய் ஆட்டம் என்றும், பாம்பு வணக்கம் என்றும் ஆரியர் கருதினர்.

இனி வியாசரால் வகுக்கப்பட்ட வேதவழக்கு இராவணன் காலத்தில் இருந்ததா? அப்படியாயின் வடமொழிப் பயிற்சி அவர்களிடம் இருந்ததா? என ஆசங்கை எழலாம் அல்லவா? ஆம், அவர்கள் வடமொழி தெரிந்தவர்களும் அல்லர்: வடமொழி வேதம் பயின்றவர்களும் அல்லர். தமிழ் மொழியிலேயே கடவுட் கொள்கை நூல்கள் இருந்தன. குரு சிஷ்ய முறைக்கல்வி நிலவியது. அவை மறை என அழைக்கப்பட்டன. ஆனால் தமிழ் மறை வடமொழி வேதங்களின் மொழிபெயர்ப்பு என எண்ணுதல் தவறு. மறைகள் செவிவழிக் கல்வியாகவே குரு, மாணவ பரம்பரையாகவே போற்றப்பட்டு வந்தன. அதனாலேயே அதனை எழுதாமறை எனத் தமிழர் கூறிவரலாயினர். அவற்றின் கருத்துக்கள் பண்டைத் தமிழ் நூல்களுள் பரவியுள்ளன. வடமொழி வேதமும், தமிழ்மறையும் ஒன்றில் இருந்து ஒன்று மொழி மாறினவல்ல. இரண்டும் இறைவன் திருவாக்கே. வேதத்தில் இருந்துதான் தமிழ்மறை பிறந்ததென்பதை வேதம் என்ற சொல்லின் மூலமும், மறை என்ற சொல்லின் மூலமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருத்தலைக் கொண்டு அப்படியல்ல எனத் துணியலாம். வேதம் என்ற சொல்லின் மூலம் ‘வித்’ என்பது வித் என்னும் சொல் அடியாகவே வேதம் என்ற சொல் பிறந்தது. மறை என்னும் சொல் மறைவு என்னும் சொல்லடியாகப் பிறந்தது. சூரன் காலத்தில் மாய வித்தைகள், மந்திர வித்தைகள், செப தவம் இருந்தனவே. அக்காலத்தில் வகுத்தளிக்கப்பட்ட வேதங்கள் இருந்ததில்லை. முத்தமிழ் நூல்கள், யோக நூல்கள், மந்திர நூல்கள், தத்துவ நூல்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள் ஆதியன இருந்தனவே. தொல்காப்பியம் இதனைத் தெளிபடுத்துகின்றது. அன்றி அகத்தியர் செய்த நூல்கள் பல இருந்தனவாகவும் அறிகிறோம். எனவே இவற்றிற்கெல்லாம் முத்து நூல் ஆகிய மறைகள் இருந்தன என்பது உண்மையே.

“மன்னமாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்
உற்ற ஐம் முகங்களாற் பணித்தருளியும்”

எனக் கூறும் மாணிக்கவாசகப் பெருமான் வாக்கை அறிந்து தெளிக. ஐந்து முனிவர்களாவர்: அகத்தியர், காசிபர் கௌதமர், பரத்துவாசர், கௌசிகர் ஆவர். இனி.

“நந்தம் பாடியில் நான்மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்தருளியும்”

எனவும், “மகேந்திரமாமலை மகேந்திர கெற்பன்” என்றும் “மூவா நான்மறை முதல்வர்” எனவும் “மந்திரமாமலை மேயாய் போற்றி” எனவும் வரும் மாணிக்கவாசகர் பெருமான் அருள் வாக்கை அறிக.

மகேந்திரமலையாவது குமரி மலை என முன்னர் விளக்கினோம். எனவே இந்நிகழ்ச்சிகள் ஆரியர் வருகைக்கு முற்பட்;ட நிகழ்ச்சிகளாகும். வேதகாலத்துக்கு அப்பாற்பட்டது. எனவே குமரிநாடு கடல் கோட்படமுன் குமரிநாடு நிலைபெற்றிருந்த காலமாகும். ஆதலின் துவாபரயுக முற்பகுதியில் இவை நிகழ்ந்திருக்கலாம். ஆதலின் ஆகமத்தின் முற்பட்டனவாகிய மறைகளும், தமிழில், தமிழ் வழக்கில் இருந்தன என்பது உண்மையன்றோ?

ஆதலின் சூரன், மாலயவான், குபேரன், இராவணன் ஆகிய தொன்மை மிக்க தமிழ்ப் பெருங்குடி மக்கள் தமது கடவுட் கொள்கை நூலாகிய மறைவழி மந்திர சாமர்த்தியமும், பாம்பு வழிபாடும் உடையவர்களாய் வாழ்ந்துவந்தனர் என்பது இயல்பே, இன்னும் அவர்கள் ஒரே சிவவழிபாடு உடையவர்களாய் இருந்தமையும், அவர்களது தூய கடவுட் கொள்கையும் புலப்படுவதாகும். அவர்களைப் பின் வந்த ஆரியர்கள் ஏளனமாகப் பெயர் சூட்டி அழைத்தும் அவர்களுடைய திறமைகளையும், உயர்ந்த பண்புகளையும், குழிதோண்டிப் புதைத்தும், மிகமிகக் கீழான நிலையில் வைத்தும் விட்டார்கள்...

இனிக் குபேரன், மாலியவான், இராவணன், வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, மண்டோதரி ஆகிய இப் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்கள் அன்றோ. இவைகள் யாவும் காரணக் குறிகளாகவே அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

குபேரன் என்பது கு + பேரன் எனப் பிரியும். ‘கு’ என்றால் பூமி. பேரன் என்பது பூமிக்கு உரிமை உடையவன் என்ற பொருளில் வந்தது. எனவே உலகாளும் அரசரைக் குறித்த அக்கால அரச மரபுப் பெயராக அமையலாம். அன்றி இயற் பெயராதலும் கூடும். இந்த இடத்தில் “பூபாலன்” என்ற சொல்லை நோக்குக. அது திருமாலைக் குறிக்கும் பெயராகும். திருமால் காத்தற் கடவுள், உலகத்தைக் காப்பவன். குபேரன் ப+மிக்குப் பேரன் என்றால் திருமால் உலகுக்குப் பாலன் என்றும் கூறப்பட்டதல்லவா? ஒப்புமை அறிக. இங்கே நாம் குவேனியை நினைவு கூருதல் வேண்டும். இப் பெண்மணி பற்றிப் பின்னர் விபரிப்போம்.

இனி. இராவணன் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச் சொல் இரவு – வண்ணன் எனப் பிரியும். இதன் பொருள் இரவு வண்ணம் உடையவன் என்பது. எனவே கரிய நிறம் உடையவன் என்பது பொருள். இஃது இயற்பெயராதல் வேண்டும். அடுத்தவன் கும்பகர்ணன் என்பவன். இச்சொல் கும்பம் + கண்ணன் எனப் பிரியும். முதுகுப் புறத்தைக்கும்பம் எனக் கூறும் வழக்குண்டு. எனவே முதுகுப்புறம் மேலாகவும். கண்புறம் (முகம்) கீழாகவும் வைத்து நித்திரை செய்பவன் என்பது பொருள். அக் குறிகாரணக் குறியே. கும்பகர்ணனை நித்திரைப் பிரியன் என்றே அவன் வரலாறு கூறுகின்றது. அதிகம் நித்திரை செய்யும் சுபாவம் உடையவர்கள் நித்திரைப் பிரியர்கள். இவர்கள் முகங் குப்புறப்படுத்தே நித்திரை செய்தல் இயல்பல்லவா?

இனி வீடணனுக்கு வருவாம். இப்பெயர் வீடு + அணன் எனப் பிரியும் . எனவே வீட்டை அணவு பவன் என்பது பொருள். அஃதாவது வீடுபேற்றை வீட்டு நெறியை அணுகுபவன் ஆகும். ஆகவே கடவுட் கொள்கையைக் கடைப்பிடித்து இந்நெறி தவறாது வாழ்பவன் என்பது பெறப்படும். அவன் அறம் பேணி வாழ்ந்து மறம் புறங்கண்ட உரவோன். அவன் வரலாறு அஃதே.

இனிச் சூர்ப்பனகை என்ற பெயரை நோக்குவோம். இப் பெயர் சூர் – பல் - நகை எனப் பிரியும். இங்கு சூர் அச்சத்தைக் குறிப்பதாகும். பல், பல்வரிசையைக்குறிக்கும். நகை என்பது பல்வரிசையினின்றெழும் ஒலிச் சாயலைக்குறிக்கும். எனவே அச்சந்தரும் சிரிப்பினை உடையவள் என்பது அப்பெயர் தரும்பொருள். அவள் வரலாறும் அஃதே. இன்றும் சிலருடைய சிரிப்பு அதனைப் பார்ப்பவருக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கும் அன்றோ?

இனி, இராவணன் மனைவி கற்பின் செல்வி மண்டோ தரியின் பெயரை நோக்குவோம். இப் பெயர் மண்டு – ஒது – அரி எனப் பிரியும். மற்று மண்டு – உதரி எனவும் பிரியும். இஃது வடமொழித் தொடர்பு ஆதலின் இராவணன் காலம் ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலம் ஆதலினாலும் மண்டோதரி மாதோட்ட நாக அரசர் பரம்பரையில் உள்ள அரச கன்னிகை ஆனதினாலும் அவர்கள் தமிழ்ப் பெருங் குடிகள் ஆனதினாலும் முன்னைய பொருளே உண்மையானதாகும். அதன் பொருள் நெருங்கி ஒலிக்கும் சிலம்புகளை உடையவள் என்பது. காலில் பெண்கள் சிலம்பணியும்வழக்கம் தமிழ் இனத்தாருக்கே உரிய ஓர் தனிப்பட்ட வழக்காகும்.

இவ்வாறான தனித் தமிழ்ச் சொற்கள் பல வடமொழியாளர் வாயிற்பட்டுப் பலபடத் திரிந்து தமிழ் உருவம் மாறி வழங்கி வரலாயின. அன்றியும் இராவணனுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்த இயக்க, நாக அரசர் பெயர்களையும் ஒப்புநோக்கி அறிக. அவை வாணன், அவன் மகன் வழைவணன், அவன் மனைவி வாசமயிலை, மகன் பீலிவளை, விசயன் மனைவி குவேனி என்பன. இவற்றின் விளக்கம் வரிவஞ்சிவிடுகின்றோம். இவையனைத்தும் தமிழ்ப் பெயர்களே.

ஆதலின் சூரன் ஆட்சிகாலம் தொடக்கம் மாலியவான், குபேரன் இராவணன் காலம், அடுத்துக் குவேனி காலம், இறுதியாக ஈழ நாட்டைத் தாயகமாகக்கொண்டு உலகம் முழுமையும் ஓர் காலம் ஆட்சி செலுத்தியும், பின் நலிவெய்தித் தமது தாய்நாட்டை மாத்திரம் ஆட்சி புரிந்தும் வரலாயினர்.

பின்விசயன் வருகிறான். ஈழநாட்டு அரச பரம்பரையினரோடு மண உறவு கொண்டு ஒரினமாக வாழ்கிறான். அரசுரிமை பெற்று அரசாட்சி புரிகிறான். ஏனைய ஈழநாட்டு அரச பரம்பரையினர் ஆங்காங்கு சிற்றரசர்களாக ஆட்சி புரிந்தார்கள். எனவே கலிங்கநாட்டுத் தமிழரசர் பரம்பரையும் ஈழநாட்டுத் தமிழ் அரசர் பரம்பரையும் கலந்த கிளையினரே பேரரசாக ஈழநாட்டை ஆட்சிபுரியலாயினர் என்பதே வரலாற்றுண்மையாகும்.

இனி, இராவணன் காலத்தில் வரலாற்றில் மறைந்து கிடக்கும் சில விடயங்களைத் தெளிவுபடுத்துவோம். முதன் முதலாக இராமாயணத்தைக் காப்பியமாகப்பாடியவர் வான்மீகி முனிவர். அவர் பாடிய அந்நூலில் இராவணன் தசக்கிரீவன் எனப்படுகின்றான். இதனால் வான்மீகி முனிவர்பத்துத்தலை என்பதை விடுத்து பத்து முடியென முடிமேல் ஏற்றித் தசக்கிரீவன் என்றார். அதன் உண்மையான வரலாறு பத்து முடிகளை உடையவன் என்பதே. ஈண்டு யாம் உய்த்துணர்ந்து ஆராய வேண்டியது இராவணனது பத்துத் தலைகளிலும் பத்து முடிகள் இருந்தனவா? அன்றிப் பத்து முடிமன்னருக்கு இராவணன் தலைமை பூண்டிருந்தானா? என்பதே. நடுநின்று ஆராய்ந்து உண்மை கண்டு தெளிவாம்.

ஒருவன் பத்துத் தலைகளை உடையவனாய் இருந்தான் என்றால் உலகில்மக்கள் வரலாற்றுக்கு முரண்பாடான நிகழக் கூடாத பொருத்தமற்ற வியப்புக் கிடமான கூற்றாகும். மக்கள் வரலாற்றில் இராவணன் ஒருவனே அன்றி உலகில் எந்நாட்டிலாவது, எக்காலத்திலாவது மனிதன் ஒரு தலையைவிடப் பத்துத் தலைகளை உடையவனாய் இருந்தான் எனப் பேசப்பட்டதும் உண்டா? இல்லையே. அதனால் அக் கூற்று ஒர் புனைந்துரையாவதன்றி வேறல்ல. ஆதலின் தசக்கிரீவன் என்ற பெயருக்குத் தலையாகப் பொருள்கொள்வது தவறானதும், முரண்பட்டதும் நிகழக்கூடாததுமாகும். வான்மீகியார் தலைமேல் ஏற்றிக் கூறாது முடிமேல் ஏற்றிக்கூறியது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. உண்மையறியாது. சிந்திக்காது சாதாரண மக்களிடையே ஏற்பட்ட வழக்கே பத்துத் தலை என்பது. எனவே தசக்கிரீவன் என்ற பெயர் காலப்போக்கில் சாதாரண மக்களிடையே பத்துத் தலைகளும் 20 கைகளும் உடைய ஒர் இராவணன் தோன்றினான். இனி இராவணனின் உண்மை வரலாற்றை அறிவாம்.

தசக்கிரிவம் - பத்து முடிகள், தசக்கீரீவன் - பத்து முடிகளை உடையவன். அஃதாவது தனது ஆணையின் கீழ் பத்து முடிமன்னர்களை அல்லது பத்து முடிமன்னர் நாடுகளை உடையவன் என்பதாம். இத்தகையோரை வடமொழி வழக்கில் சக்கரவர்த்தி எனக்கூறுவர். தமிழர் வழக்கில் சக்கரவர்த்தி எனக் கூறுவர். தமிழர் வழக்கில் மன்னாதி மன்னன் எனக்கூறுவர். ஒர் அரசன் பிறநாட்டு முடிமன்னரோடு போர் தொடுத்து வாகை சூடி அம்மன்னர் நாடுகளைத் தன் ஆணைக்கு உட்படுத்துதல் உண்டு. அப்படி எத்தனை மன்னர்களைத் தன் ஆணைக்கு உட்படுத்துகிறானோ அவன் அத்தனை முடியுடை மன்னன் எனப் பட்டப்பெயர் சூடுவான். இஃது தமிழ் மன்னர்மரபில் பண்டைக்காலத்தில் நடைபெற்ற வந்ததோர் வழக்குஅன்றியும் தன் ஆணைக்குள் அடங்கிய அரசர் எத்தனை பேரோ அத்தனை முடிகளைப் பொன்னாற் சமைத்து மார்பில் மாலையாக அணிந்து பட்டப் பெயர்தாங்குதலும் உண்டு.

எனவே இராவணன் பத்து முடி மன்னர்களைத் தன் ஆணைக்கு உட்படுத்தி தான் ஒப்பற்ற மன்னாதி மன்னன் ஆக ஆட்சி புரிந்த காரணத்தால் பத்து முடி இராவணன் ஆனான். அன்றிப் பத்து முடிகளின் பகுப்புஅமையச் செய்த ஒரே முடியினை இலச்சினையாக அணிந்திருத்தலும் சாலும். இவ்வுண்மையைப்பிற்காலத் தமிழ்நாட்டு அரசர் வரலாற்றில் காணலாம். பிற்காலச் சோழர்களில் 2ம் இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியில்,

“கங்கை கொண்ட சோழனைப் பொங்கிகல்
இரு முடிச் சோழன் என்றும் பெரு முரண்
தன் திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழனைத் தெம் முனையடுதிறல்”

என வரும் கல்வெட்டுப் பகுதியினால் தமிழ் மன்னரிடையே இவ்வழக்கு இருந்தமை புலனாகும்.

கங்கைகொண்ட சோழனாகிய 1ம் இராசேந்திர சோழன் பாண்டி நாட்டையும், ஈழநாட்டையும் வென்று தன்னானைக்குட்படுத்திய காரணத்தினால் இரு முடி மன்னருக்கு மன்னன் என்னும் கருத்தில் அவன் இருமுடிச் சோழன் என்னும் பட்டப்பெயர் பூண்டான். அன்றி அவனுக்கு இருதலைகளும் நான்கு கரங்களும் இருந்தனவா? இன்னும் இவன் தந்தை இராசராச சோழன், பாண்டிநாடு, சேரநாடு, ஈழநாடு மூன்றையும் வென்று தன்னாணை செலுத்திய காலத்தில் அவ்விருவரும் (தந்தையும், மகனும்) மும்முடிச் சோழர் எனப் பெயர் பூண்டனர். அக்காலத்தில் ஈழநாடு மும்முடிச் சோழ மண்டலம் எனவும் அழைக்கப்பட்டது.

இன்னும் 2ம் இராசேந்திரசோழன் ஆட்சிக் காலத்தில் மும்முடிச் சோழமண்டலம் எனப்பட்ட ஈழநாட்டை ஆட்சி புரிவதற்குத் தனதுதம்பி ஒருவனை அரச பிரதிநிதியாக அனுப்புகிறேன். அப்பொழுது அவனுக்கு மும்முடிச் சோழன் என்றே பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

எனவே உண்மை வரலாறு இப்பொழுது தெளிவாகிறது. இராவணன் பத்து முடிமன்னர்களை வென்று தனதாணைக்குட்படுத்தி ஆட்சிபுரிந்த காரணத்தால் பத்துத் தலை இராவணன் என்றும், தசக்கிரீவன் என்றும் பட்டப் பெயர் தாங்கி வீறுற்று, விழுப்பம் உற்று விளங்கினான் என்பதே தெளிவான உண்மையான சந்தேக விபரீதம் அற்ற வரலாறு ஆகும்.

இராவணன் சூரன் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்குப்பின் இடைச்சங்க காலத்தில் ஈழநாட்டை உலகில் ஒர்தனி நாயக நாடாக ஆட்சி செலுத்தி வந்தான் என அறியக்கிடக்கின்றது. இராவணன் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தாதவாறு அகத்தியர் அடக்கினார் என வரலாறு கூறுகின்றது. அகத்தியரே இராமருக்கு காட்சி கொடுத்து அருள் செய்தார் என்றும் வரலாறு கூறுகின்றது. இராமர் இராவணன் காலத்தில் ஈழம் ஒர் தனித் தீவாக கடலால் பிரி;க்கப்பட்டிருந்ததாகும். எனவே குமரி நாடு கடல்வாய்ப்பட்டதன் பின்னரும் கடல்கோள்கள் நடைபெற்ற பின் உள்ள காலம் இராம இராவண காலமாகும்.

இங்கு அரசன் சண்முகனார் கூற்று ஒப்புநோக்கற் பாலது. அஃதாவது, “அனுமான் முதலிய குரங்கு வீரர் தெற்குநோக்கி வரும்போது கபாடபுரத்தைக் கண்டு போயினர் என வான்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டிருத்தலால் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. தலைச்சங்கத்தில் என்றும், இராமன் இலங்கை வந்தது இடைச் சங்கத்தில் என்றும் என்பது. இதனால் இராம, இராவண யுத்தம் நடைபெற்ற காலம் இடைச்சங்க காலமே என்பது தெளிவு. ஆதலின் இராவணன் காலமும் இடைச்சங்ககால முற்பகுதி யாகலாம். இறையனார் களவியிலுரையின் படி இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் நிலைபெற்றது. கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் நிலைபெற்றது. ஆகவே கடைச்சங்கம் கி. மு. 1600 ஆண்டுகள் (1850 – 250 கி.பி) நிலைபெற்றதாகும். அதற்குமுன் 3700 ஆண்டுகள் இடைச்சங்கம் ஆதலின் கி. மு. 3700 + 1600 – 5300 ஆண்டுகளாகும். இதில் கடல் கோளினால் அழிவெய்தி நாடு நன்னிலையடைய சில நூற்றாண்டுகள் செல்லலாம்.

இடைச்சங்கம் ஆரம்பிப்பதற்கு முன் நடைபெற்றது ஓர் கடல்கோள். கடைச்சங்க ஆரம்பத்துக்கு முன் நடைபெற்றது ஒர் கடல் கோள். ஆதலின் 5300 ஆண்டுகளில் 300 ஆண்டுகளையும் அழிவு ஆக்கத்தில் கழிந்த காலமாகக் கொண்டால் கி. மு. 5000 ஆண்டுகள்வரையில் இராம, இராவண காலம் எனக் கொள்ளலாம். அஃது கலியுக முற்பகுதியாகும் வரலாற்றாசிரியர்கள் கி.மு 2300 – 1950 என்பது ஐதீகம் என்பர்.

இராவணன் சிவன் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வணங்கிய ஓர் சிவபக்தன். தூய சைவ சமயக் கோட்பாடுடையவன். சிவபூசை செய்து வணங்கும் இயல்புடையவன். மரகதமலயனைய அவனது திருமேனியில் வெண்ணீற்றுப் பூச்சு எப்போதும் ஒளிவீசிப் பிரகாசிக்கும். திருநீற்றுப் பூச்சு அவனுக்கொரு அழகு சின்னமாகும். இத்தகைய இராவணனுக்குப்பல ஆயிரம் வருடங்கள் பின்வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் அவனது சிவபக்தியையும் வீபூதிப் பூச்சையும் வியந்து “இராவணன் மேலது நீறு” எனப் பாராட்டினார் அன்றோ? இதனால் இராவணன் புகழ் தமிழ் நாட்டில் மங்கி மறையாது எல்லார் உள்ளத்தும் நிலவியது என்பது புலனாகிறது அன்றோ? அன்றியும் அவன் ஓர் யாழ் வல்லுநன் இசைப்பிரியன் வீரம் படைத்த திறலோன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன். ஆகா! இவன் தானா ஏழு மொழிபேசிய இயக்கன்? உணர்மின்!! குமரி மலையின் அடிவாரத்தில் உள்ளது ஈழம். அந்நாட்டுப் பூர்வீக அரசர்கள் சூரன், மாலியான். குபேரன், இராவணன், வீபீடணன் என்போர். மகேந்திரமலை உள்ள நாடு தமிழ் வழங்கும் நாடு. மகேந்திரமலை என்பது குமரிமலை. இதனைத் தொல்காப்பிய முகவுரை ஆசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே தமிழ் நாடாகிய ஈழநாட்டுத் தமிழ் மன்னர் வடமொழியாளரால் எலு பாஷையாளர் என்றும் இயக்கர், நாகர், அசுரர் என்றும் ஆரியரால் இருட்டிக்கப்பட்டனர். அன்றியும் அவர்கள் அவர்களை எவ்வளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ, அவர்கள் திறமையை மறைக்கமுடியுமோ அத்தனையும் செய்துள்ளார்கள். இதன் உண்மையறியா நம்மவர் சிலரும் அவர்கள் தமிழர் அல்லாத வேறோர் இனத்தினர் என்றும் தமிழ் மொழி அல்லாத எலுமொழி பேசினார்கள் என்றும் கருதும் அவர் அறியாமைக்கு நாம் இரங்காமல் இருக்கமுடியுமா? உணர்மின்! தெளிமின்!...

தொடரும்... பகுதி-9 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக