இருபெரும் கோபுர வாயில்கள்.....!
தஞ்சை கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் கோயில் கருவறையின் நேர் கிழக்கே அமைந்திருந்த "கேரளாந்தகன்" வாயில், "ராச(ஜ) ராச(ஜ)ன்" வாயில் ஆகிய இரு பெரும் கோபுர வாயில்கள் தான் தமிழ்நாட்டிலேயே பெரிய கோபுரங்களாக அப்போது திகழ்ந்தன, இதை மையமாய் வைத்து தான் இதற்கு பின்னர் கட்டப்பட்ட கோயில்களில் 13 நிலைகள் வரை கோபுரங்கள் உயர்ந்தது.
இந்த இரு வாயில்களையும் கடந்து நாம் உள்ளே சென்றதும் விண்ணை முட்டி நிற்கும் விமானத்தின் உயரமும் அகலமும் பல பகுதிகளாலான பாறைகளை, இணைத்தது தெரியாமல் ஒரே கல்லை போன்று இணைத்து விமானத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கும் அந்த 80 டன் எடையுடைய பாறையும் நம் கண்ணில் பட்டதும் கோயிலை சுற்றி இருக்கும் மற்ற விசயங்கள் நம் கண்களுக்கு சாதராணமாக தோற்றமளிக்கும், இதனால் சுற்றி இருக்கும் நிறைய விடயங்களை தவறவிடுவோம், அது நம்முடைய தவறல்ல அந்த விமானத்தின் பிரம்மாண்டம் அப்படி!.
அப்படி நாம் தவறவிடுவதில் முக்கியமானவை திருமதிலை சுற்றி தெற்கு, மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் இருக்கும் மற்ற மூன்று வாயில்கள், அதிலும் முக்கியமானவை கோயில் திருமதிலின் வடமேற்கே இருக்கும் "அணுக்கன் வாயில்".
அப்படி என்ன சிறப்பு இந்த வாயிலுக்கு? இந்த திருவாயிலின் வழியே தான் மாமன்னர் ராச ராசன் இறைவனை வழிபட வந்திருப்பார் என்பதற்கு சில ஆதாரங்கள் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அய்யா அவர்களால் முன்வைக்கப்படுகின்றது.
திருமதிலில் இணைத்துள்ள நான்கு வாயில்களில் இந்த அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப் பெற்றிருக்கிறது என்பதை அங்கு காணப்படும் மற்ற வாயிகளை வைத்தும், அணுக்கம் வாயிலின் எச்சங்களை வைத்தும் நாம் உணர முடிகிறது. நம் வீடுகளில் மரத்தில் செய்வதைப் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவ்வாயில் நிலைக் கல் அமைந்துள்ளது.
இந்த வாயிலின் இருபக்கமும் சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரண கலசம் ஆகிய சிற்பங்களும் இடம் பெற்றுருப்பதையும் காணமுடிகின்றது.
இந்த நிலைக்காலுக்கு மேலாக மதில் சுவரில் இரண்டு வரிசைகளில் துவாரங்களை காணலாம், அவற்றுக்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் கூடிய தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன. மேலே காணப்படும் இந்த துவாரங்களில் மரச் சட்டங்களைச் சொருகி மரப் பலகைகளாலும், செம்பு தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்தி கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது.
அதெப்படி அவ்வளவு உறுதியாக இவை இதற்கு தான் பயன் பட்டவை என்று எப்படி கூற முடியும் என்று கேட்பவர்கள், இவ்வகை அமைப்பை அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சை பெருங்கோயிலின் ப்ரசு(ஸ்)கோ ஓவியங்களிலேயே இது போன்ற அமைப்பை காணலாம், அதே போன்று தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத் தான் இருந்தன என்பதை ராசராசன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் பதிகம் பாடும் காட்சியிலும் காண முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் ராசராச சோழனின் அரண்மனை, இவ்வாயிலுக்கு அருகே இன்றைக்கு உள்ள சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பதை வீடு கட்ட ஒருவர் நிலத்தை தோண்டும்போது கிடைத்த தூண்களும், அதில் உள்ள கல்வெட்டுகளை வைத்தும் தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "சுந்தர பாண்டியன்" படை எடுப்பின் போது தஞ்சை அழிக்கப்பட்டது என்பது கல்வெட்டுகளின் மூலம் உறுதியாகின்றது, அப்போது இங்கிருந்த அரண்மனையும் அழிவுற்றிருக்கலாம் .
மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது. இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் (சண்டிகேஸ்வரர் சன்னதி அருகில்) மட்டுமே அட்ட மங்கலச் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதும் நாம் இங்கு கவனிக்க வேண்டியவை.
செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளையடிப்புகளின் போது சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன் ராசராசன் மெய்க் காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகிறது.
நன்றிகள். யாழறிவன்... Yalarivan Jackson
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக