தமிழர்களுக்கு மானக்கேடான தீபாவளிப் பண்டிகை...!!!
தமிழர்களுக்கு மானக்கேடானதுமான பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும். தமிழனைஆரியன் அடக்கி யாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் கடவுளின் கொலைகாரத்தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டியதே இக்கட்டுரை)
தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும். நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன் ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன் ஆகையால் தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான். ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதை தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா? கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமியல்ல. சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமாகும்.
ஏசுநாதர்
ஏசுநாதர் கிறிஸ்துவ மதத்தை உண்டாக்கியவர். இவரைப் பற்றிய கதை என்ன சொல்லுகிறது? இவர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். இறுதியில் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்.
முகமது நபி
இதுபோல் முகமது நபியும் பல தியாகங்களுக்கு உள்ளானார். எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானார் என்பதுதான் அவரைப்பற்றிய கதை.
கொலைகாரன்
ஆனால், விழா கொண்டாடப்படுகின்ற கிருஷ்ணனைப் பற்றிய கதை என்ன சொல்கிறது? குழந்தைப் பருவத்தில் பூதனை சகடாசூரன் திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்றான்.
கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்.
கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயைப் பிளந்து கொன்றான்.
மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்!
மாட்டுருக் கொண்டு வந்த அரிஷ்டனின் கொம்பைப் பிடுங்கிக் கொன்றான்!
குதிரையுருக்கொண்டு வந்த கேசியைக் கொன்றான்.
வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்.
கம்சன் வீட்டு வண்ணானைக் கொன்றான்.
கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்.
மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்.
சுபலன் கோசனை ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்!
தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளிச் கொன்றான்!
பஞ்சகன் என்பவனை கடலில் சென்று கொன்றான்!
சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்!
முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்!
நரகாசுரனைக் கொன்றான்
வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணனையும் கொன்றான்.
சாளுவனைக் கொன்றான்! சிசுபாலனைக் கொன்றான்!
துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!
இவ்வளவுதான் படு கொலைகள் என்று கருதாதீர்கள்! இன்னும் பலவுண்டு! இங்கு எழுத இடமில்லை.
இப்பேர்ப்பட்ட கொலை காரனைத்தான் சிலர் போற்றுகிறார்கள் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவன் நாண நன்னயஞ் செய்து விடல்" என்ற உயர் கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைகாரக் கிருஷ்ணன் கதையை புகுத்தி விட்டார்கள் தமிழகத்தில் புகுந்த அன்னியர்.
ஒழுக்கமற்றவன்
கிருஷ்ணன் கொலைகாரன் மட்டுமா? இல்லை! கற்பிற்கு அணிகலன் (?) நல்லொழுக்கத்தின் சிகரம் (?) எப்படியெனில்
குளித்துக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் தூக்கிக் கொண்டு போய் மரத்தின்மேல் ஏறிக் கொண்டான்; நிர்வாணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்து கண் குளிரப் பார்த்தான்!
ராதை, ருக்மணி, சத்தியபாமை சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, லட்சுமணை, நப்பின்னை சோபை பிரமை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான். பிறகு சில்லறையாக நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டுவந்த 16,000 பெண்களையும் மணந்து கொண்டான். இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக்கன்னிகைகளையும் மணந்து கொண்டான். இவர்களைத்தவிர பல்லாயிரக்கணக்கான கோபி காஸ்திரீகளுடன் லீலைகள் புரிந்தான்.
கொலையும் விபசாரமும் மட்டுமல்ல! கொலை செய்யவும் தூண்டினான். கீதையின் மூலமாக! கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம் அப்படியானால் அக்கிரகாரத்தார் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா?
கடவுள் தன்மைக்குப் பொருந்துமா?
உண்மையான கடவுள் தனக்கு எதிரியான அசுரனைப் படைப்பானேன்? அதன் பிறகு அவனைக் கொல்வதற்காக அவதாரமெடுப்பானேன்? இது கடவுள் தன்மைக்கு அவரின் சர்வவல்லமைக்கு தயாபர குணத்துக்குச் சிறிதாவது பொருந்துமா? பிறமதக்காரர்களும் மதமற்ற பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும் பேரறிஞர்களும் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்வார்களா? காரித்துப்ப மாட்டார்களா? கடவுள் என்றால் கடவுள் அவதாரம் என்றால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்? ஒருவனுக்கு இரண்டு மனைவிகளே இருக்கக் கூடாது என்று சட்டமிருக்கும் போது கண்டவளையெல்லாம் தன் மனைவியாக்கிக் கொண்டவனை மானமுள்ள பெண்கள் கும்பிடலாமா? அவன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாலாமா?
சிந்திக்கவும்
ஆத்திரப்படாமல் சிறிது பொறுமையாக ஆலோசித்துப் பாருங்கள். பக்தர்களே ஆபாசக் கடவுள்கள் இம்மாதிரிக் கடவுள்களைக் கண்டு வெட்கப் படத்தானே லட்சக்கணக்கான மக்கள் பிறர் தங்களைத் தழுவியிருக்கிறார்கள். ஆகவே மானமுள்ள பகுத்தறிவுள்ள தமிழர்கள் கொலைகாரக் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?
சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே!
தீபாவளி என்றொரு சமணப் பண்டிகை...!!!
இன்று நாம் தீபாவளி என்றுச் சொன்னாலே அது ஒரு இந்துப் பண்டிகையாகத் தான் அறியப்படும். அப்பண்டிகையை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிருசுனர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை சிறப்பிப்பதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய நாளை சிறப்பிக்க தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இன்னும் பல காரணம் கூறுகின்றனர்...ஆயினும் கிருசுனர் நரகாசுரனை கொன்றதை சிறப்பிக்கவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்பதே பலரின் நம்பிக்கை.
ஆனால் நம்மில் பலர் அறியாத விடயம் என்னவென்றால் இந்து மக்கள் மட்டுமே கொண்டாடும் ஒரு பண்டிகை அல்ல தீபாவளி...மாறாக சமணர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே தீபாவளி ஆகும். ஆம்...சமணர்களும் தீபாவளியினைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்கள் அத்திருவிழாவை கொண்டாடுவதற்கு வேறு காரணங்கள் வைத்து இருக்கின்றனர். அக்காரணத்தை தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
கி.மு ஆறாம் நூற்றாண்டு...!!!
சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் அவர்கள் பாவாபுரி நகரத்திலே அங்கு கூடி இருந்த மக்களுக்கு அறஉரை செய்துக் கொண்டு இருக்கின்றார். அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கூட்டமும் மெய் மறந்து அவரின் அருகேயே அமர்ந்து இருக்கின்றனர். இரவு முழுவதும் அவரின் உரை தொடர்கின்றது. மக்களும் அவரவர் தம் இல்லங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றனர். உரை முடிந்த உடன் அவ்விடத்திலேயே உறங்கியும் விடுகின்றனர். வர்த்தமான மகாவீரரும் தான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்தவாறே வீடு பேற்றினை அடைந்து விடுகின்றார் (சாதாரண வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் மரணம் அடைந்து விடுகின்றார் அல்லது முக்தி அடைந்து விடுகின்றார்). காலையில் விழித்து எழுந்து மக்கள் மகாவீரர் வீடு பேற்றினை எய்தியதைக் கண்ட உடன் அவர்களின் அரசனுக்குத் தெரிவிக்க, அவ்வரசன் மேலும் சில அரசர்களை அழைத்து ஆலோசனை நடத்தி இறுதியில் உலகிற்கே ஒளிவிளக்காய் திகழ்ந்த மகாவீரரை மக்கள் அனைவரும் நினைவுக் கொண்டு வழிபடுமாறு அவர் வீடு பெற்ற நாளில் (முக்தி அடைந்த நாளில்) மக்கள் அனைவரின் வீட்டிலும் விளக்கினை ஏற்றி வைத்து ஒரு சிறப்பான விழாவாக கொண்டாட வேண்டும் என்ற முடிவினைக் கொண்டு வருகின்றான். அன்று முதல் மக்கள் அனைவரும் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்த அந்த நாளில் வீடுகளில் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர். வரிசையாக தீபங்களை வைப்பதால் 'தீப ஆவலி' அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்றுப் பொருள் பட 'தீபாவளி' என்று அந்தத்தினம் பெயர் பெற ஆரம்பித்தது. மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்தப்படியால் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது. நிற்க.
இதுவே சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்குரிய காரணம் ஆகும்.
இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால் இரு வேறு சமயத்தினர் தீபாவளி என்னும் ஒரே பண்டிகையை வெவ்வேறுக் காரணத்திற்காக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சாரார் இறைவன் அசுரனை அழித்ததை நினைவில் கொள்வதற்காக கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மற்றொரு சாரார் எங்களின் இறுதி தீர்த்தங்கரர் அந்த தினத்தில் வீடு பேற்றினை அடைந்தார் அதனை நினைவில் கொள்ளும் வண்ணம் தான் நாங்கள் கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மேலும் இவ்விருசமயங்களுக்குள்ளே மாபெரும் சண்டைகள் வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றன. அந்நிலையில் தீபாவளி உண்மையிலேயே யாருடைய பண்டிகை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.
மகாவீரரைக் குறித்து நமக்குச் சான்றுகள் கி.மு காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் கி.மு வில் கிருசுனர் என்று ஒரு கடவுள் இருந்ததற்கோ அல்லது அசுரர்கள் என்றச் சாரார் இருந்தமைக்கோ எவ்வித சான்றுகளும் இதுவரைக் கிட்டப்பெற வில்லை. எனவே காலத்தில் சமணர்களின் கதை முந்தியதாக இருக்கின்றது. அப்படி இருக்க இந்து சமயத்தில் புதிதாய் தீபாவளியைக் கொண்டாட வேண்டியத் தேவை யாது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள். அவரின் கூற்றுப்படி
"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!!!" (புத்தகம்: சமணமும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி)
மேலே உள்ள அவரின் கூற்றின் படி இந்து சமயத்தில் சேர்ந்த சமண மக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தம் இந்து சமயத்திற்கு வந்தமையால் அது தீபாவளி என்ற சமணப் பண்டிகையை தத்து எடுத்துக் கொண்டு வெவ்வேறு புராணக் கதைகளை அப்பண்டிகைக்கு கற்பித்துக் கொண்டது என்கின்ற கருத்து வருகின்றது. அக்கருத்து சற்று பொருந்தவும் செய்கின்றது. அதாவது,
சமணர்கள் மகாவீரரை வணங்குகின்றனர். மகாவீரர் இறந்த நாளை தீபாவளியாக அவர்கள் கொண்டாடுகின்றனர். இந்துமக்களுக்கு சமணர்கள் எதிரிகளாக இருந்தால் மகாவீரரும் எதிரியாகத் தான் இருப்பார். எதிரியினை அசுரனாக சித்தரிப்பது என்றுமே நிகழும் ஒன்று தான். எனவே இந்துக்கள் மகாவீரர் இறந்த நிகழ்வை 'கிருசுனர் அசுரனை வென்றார்...அதாவது அந்த தினம் அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான்" என்றுக் கூறி கொண்டாடுகின்றார்கள் என்றும் சிலர் கருதுகின்றனர். அதாவது சமணர்களை பொறுத்தவரையில் அந்த தினத்தில் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்து இருக்கின்றார்...இந்துக்களைப் பொறுத்த வர அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான். பொருத்தமாகத் தோணுகின்றது தானே.
ஆனால் நாம் இங்கே சிந்தித்துப்பார்க்க வேண்டியது என்னவென்றால் அக்காலத்தில் பல விடயங்கள் நல்ல எண்ணங்களுடனேயே செய்யப்பட்டு இருக்கின்றன. அத்தகைய விடயங்கள் பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் உண்மையிலேயே மகாவீரர் இறந்ததைத் தான் அசுரன் இறந்தான் என்று வைணவச் சமயம் கூறுகின்றதா அல்லது அதில் வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டித் தான் இருக்கின்றது.
ஆனால் தீபாவளி என்பது சமணப் பண்டிகை என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை...
சில கருத்துகள்...
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?
##########
தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று..
****
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.
மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை
########
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
#######
அகராதிக் குறிப்பில்
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன்
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர்
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள்)
ஆக்கம்:-யாழறிவன்... Yalarivan Jackson Jackie...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக