ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-5

இன்னும் ஈழு என ஒருமொழி தமிழை விட வேறாகப்பட்டதாயின் அம்மொழியின் சொற்கள் யாவும் அது வழங்கிய நாட்டினின்றும் முற்றாக அழிந்தொழிதல் நிகழக்கூடாததொன்று. அதனால் அம்மொழிகளிற் சிலவேனும் தமிழிற் கலந்திருத்தல் வேண்டும். தமிழ் மொழியில் வடமொழியை தவிர வேறு மொழிச் சொற்கள் சங்க காலத்து இறுதிவரை கலந்திருந்ததாகக் கருதுவது முயற் கொம்பே. ஆனால் சில வேற்றுமொழிக் கலப்பு ஏற்பட்ட ஞான்று அவற்றைத் திசைமொழியென்று வேறு காட்டினர். அம் மொழிகளில் தானும் ஈழு மொழி என்றொரு மொழி பேசப்படவில்லை.

தமிழில் பிறமொழிக்கலப்பு ஏற்படாதவாறு சங்கத்தார் தமிழை வரையறுத்து வரம்பு செய்து வளர்த்தனர் அன்றோ? தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார் அக்காலத்து வடமொழி வருகையை அறிந்து முன் எச்சரிக்கையாக வடமொழி கலந்து மயங்கா வகையில் நூல் செய்தார் அன்றோ? அப்படியிருக்கத் தொல்காப்பியனார் முதலாந் தொல்லாசிரியர்கள் ஈழு மொழி பற்றி யாதும் கூறாதது என்னே? அஃது அப்படி ஒரு மொழி இருக்கவில்லை என்பதைத் தெட்டத் தெளிவாக அங்கை நெல்லியெனப் புலப்படுத்துகின்றது அன்றோ?

அன்றித் திருத்தமற்ற தமிழை ஈழு மொழியென முதலியார் கருதினார் என்றால் திருத்தமற்ற தமிழுக்கு ஈழு என்றொரு வழக்கு இருந்ததில்லை. திருந்திய தமிழைச் செந்தமிழ் என்றும், திருத்தமற்ற தமிழைக் கொடுந்தமிழ் என்றும் வழங்கினார்கள். ஆகவே ஈழு எனத் தமிழைவிட வேறு மொழி இருந்ததும் இல்லை. திருத்தமற்ற தமிழுக்கு ஈழு என ஒரு வழக்கு இருந்ததும் இல்லை. எனவே அவர் கூற்று எவ்வாற்றாலும் பொருத்தமற்றதும் உண்மைக்கு மாறானதும் ஆகும்.

அன்றி முதலியார் அவர்கள் எலு என்னும் சிங்கள வழக்கை வைத்துக்கொண்டு அதுதான் ஈழு ஈழம் ஆக வந்ததென்பது உண்மையறியாது கூறும் வெற்றுரை ஆவதன்றி மகனுக்குத் தந்தை பிறந்தான் என்பது போலாம்.

விசயன் நாடோடியாக வந்த காலத்தில் அவர்களை வரவேற்று வாழ உதவியவர்கள் ஈழநாட்டு மக்களே அது மாத்திரம் அன்று. பெண்கொடுத்து நாடாளும் உரிமை கொடுத்து தமது உறவினன் ஆக்கி ஒரே சுற்றமாக வாழ்ந்தார்கள் அன்றோ? அன்றேல் நாடோடியாக வந்த விசயனுக்கு ஈழ நாட்டு மக்களின் ஈழ நாட்டு அரச பரம்பரையினரின் ஆதரவு இல்லையானால் ஆளும் உரிமை எவ்வாறு கிடைக்கும்? போர் தொடுத்து ஈழ நாட்டு அரசை வெற்றி கொண்டு நாடாளும் உரிமை பெற்றானா? அல்லது விசயன் வந்த காலத்தில் (கி. மு. 548) ஈழ நாட்டில் தமிழ் பேசும் மக்கள் இருக்கவில்லையா? அவர்களுக்கென ஒர் அரசு இருக்கவில்லையா? அன்றி விசயன் வருகைக்குப் பின்தான் தமிழினம் ஈழத்தில் குடியேறினார்களா? எங்கே இருந்து வந்தார்கள்? இதற்கு ஒர் வரலாறு உண்டா? இயக்கர், நாகர் இருந்தார்கள் என விசயன் வரலாறு கூறுகின்றது அவர்கள் யார்? அவர்கள் தமிழரின் வேறானவர்களா? அப் படியானால் அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்கள் பரம்பரையினர் இப்போது எங்குற்றனரோ? விசயன் வந்த காலம் தமிழ் மக்கள் நாகரீகம் படைத்தவர்களாய் வாழ்ந்த காலம். இக்காலத்தில் தென்னிந்தியாவில் 3ஆவது தமிழ்ச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச் சங்கத்தில் தான் ஈழத்துப் பூதன் தேவனார் உறுப்பினராக இருந்தார். பசுபூட் பாண்டியனைப் பாடியுள்ளார். இவன் காலம் கி;. மு. 180 – 125 ஆகும். விசயன் வருகைக்கு 350ம் ஆண்டுவரை வாழ்ந்துள்ளார்கள். இக் காலத்தின் பின் எல்லாளன் ஆட்சி ஈழநாட்டில் நடைபெறுகிறது. எனவே இத்தனை சீரும் சிறப்பும், புலமையும், அரசும் எய்தியிருந்த தமிழர் 350 ஆண்டுகளுக்குமுன் காட்டுமிராண்டி வேடர்களாக வாழ்ந்தார்களா? அரசின்றி இருந்தார்களா? விசயன் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே காந்தக் கோட்டை கட்டி அரசேச்சிய ஈழத் தமிழர்கள் விசயன் வந்த காலத்தில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்தார்களா? சிந்தியங்கள்.

விசயனும் தமிழனே, இவன் கலிங்கநாட்டுத் தமிழன், இவன் சிங்கவாகு என்னும் கலிங்க அரசன் மகன். இவனது அட்டாதுட்டித்தனத்தால் தந்தையால் நாடுகடத்தப் பட்டவன். இவன்தமிழன் ஆனதினாலேயே ஈழநாட்டு மக்களோடு உறவினனாய் வாழும் வாய்ப்புக் கிடைத்தது. விசயனைப்பற்றிய விளக்க வரலாறு பி;ன்னர் விபரிக்கப்படும்.

ஆரியன் வருகையின் பின் ஈழநாட்டு பூர்வீகத் தமிழர்கள் இயக்கர்கள் என்றும், நாகர் என்றும் அவர்களால் அழைக்கப்பட்டனர். எனவே ஈழநாட்டின் பூர்வீக குடிகளுக்கு ஆரியர் சூட்டிய பெயரே இயக்கரும், நாகரும் என்பது.

இன்று, இலங்கை ஸ்ரீலங்கா என்ற பெயரே வழக்கத்தில் இருக்கின்றது. ஈழம் என்ற வழக்கு கி.பி. 12ம் நூற்றாண்டுக்குப்பின் வழக்கு ஒழிந்துவிட்டது. ஆதலின் இந்நாடு ஈழமா? அல்லது ஸ்ரீலங்காவா? இல்லாவிடில் இலங்கையா? அன்றி இவை வேறு வேறு நாடுகளா? அன்றி ஈழம் தான் லங்கா ஆனதா? இந்த வினாக்களுக்கு காய்தல், உவத்தல் இன்றி நடு நின்று ஆராய்ந்து உண்மை காண்போம்...

இலங்கை...
ஈழம் என்னும் இப்பெயரே ஆரியர் வருகையின் பின் வடமொழியாளர் தொடர்பு ஏற்பட்டதன் பின் அதாவது இராவணன் காலத்தில் கந்தபுராணம் பாடிய காலத்திலேயே “லங்கா” என உருப்பெற்றதாகும்.

முன்னரே “ழ”ஒலி தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு ஒலி எனக் கூறினாம். ஆரிய பாடையில் அவ்வொலிக்கு ஈடாக ல,ள ஒலிகளே உள்ளன. எனவே ஈழநாடு தொடர்பாக ஆரிய மொழியில் நூல் செய்வாரும் ஆரிய மொழியில் அந்நாட்டைச் சுட்டி உணர்த்து வோரும் “ழ” கர ஒலியைவிடுத்து தம் மொழி மரபின்படியே அமைக்க வேண்டும். “பழம்” என்ற சொல்லை ஆரிய மொழியினர் “பலம்” என்றே அழைப்பர். ஆதலின் ஈழம் என்ற சொல்லை வடமொழியாளர் ஈலம் என்றே கூறுவர். இதனைக் கற்று வல்ல வடமொழிப் புலமையோர் தம் மொழி மரபுக்கமைய ஈலம் என்றதைத் திருத்தி அமைக்கலாயினர். பெயர்ச் சொற்கள் வடமொழி மரபின்படி ஏற்றவாறு அம், அஹா என்ற உப சர்க்கங்களைப் பெற்று வரும். எனவே ஈலம் + அஹா ஸ்ரீ ஈலங்ஹா என வரும். வடமொழி மரபின்படி ‘ல’ மொழிக்கு முதலில் வரும். தமிழில் ஹ - காவாக வரும் ஆதலின் ‘ஈலங்கா’ விலுள்ள ஈ கெட ‘லங்கா’ என அமையும். தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தான தமிழ்ச் சொற்கள் வடமொழியில் வழங்கப்படும் போது வடமொழி உருவம் பெறும். அப்படியே வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலான வடமொழிச் சொற்கள் தமிழில் வழங்கப்படும் போது தமிழ் உருவம் பெறும். கஷ்டம் என்னும் சொல் தமிழ் மொழியில் வழங்கும்போது கட்டம் என உருப்பெறும். அப்படியே வேஷம் - வேடம் ஆகும்.

இனி வடமொழி உருவமாகிய லங்கா என்பது தமிழில் வந்து வழங்கும்போது தமிழ் இலக்கண மரபின்படி ‘இலங்கை’ என உருப் பெறும். ஈழம் என்ற சொல் லங்கா என எப்பொழுது வடமொழி உருவம் பெற்றிருக்கலாம் எனின் அஃது ஈழநாட்டை ஆரியர் வந்தகாலம் முதலாக எனக் கோடல் வேண்டும். அவ்வாறானால் அஃது இராவணன் ஆட்சிக்காலம் ஆதல் வேண்டும். அக்காலமே ஆரியர் ஈழநாட்டைப் பற்றிப் பேசவும், அறியவும், நூல் செய்வும் தொடங்கிய காலமாதல் வேண்டும். எனவே வால்மீகி இராமாயணகாரரே முதன் முதலாக ஈழம் பற்றிய வரலாற்றையுடைய இராமர் காதையைக் காப்பியமாகப் பாடியவர், ஆதலின வால்மீகி இராமாயண காலத்திலே முதன் முதல் ஈழம் என்ற சொல் லங்கா என உருப்பெற்றதாக வேண்டும். சுருங்கச்சொல்லின் ஈழம் என்ற தமிழ் மொழியின் வடமொழிக்குரிய மொழிபெயர்ப்பு லங்காவேயாகும். இராம, இராவண காலம் கி.மு 2300-1950 என்பது ஓர் ஐதீகம். வால்மீகியர் காலம் கி. மு. 3ம் நூற்றாண்டு. விசயன் இலங்கைக்கு வந்தது கி.மு. 543, 483, 445 என்பர். புத்த மதம் இலங்கைக்கு வந்தது. கி. மு. 307 ஆகும். ஆனால் லங்கா என்ற சொல் ஈழநாட்டிலும் பிற நாடுகளிலும் மிகுதியும் பரவலாக வழங்கத் தொடங்கியமை புத்த மதம் ஈழ நாட்டுக்கு வந்தபின்னரே ஆகும். அதன் பின்னரே ஈழம் என்ற சொல் அருகி அருகி மறையலாயிற்று.

இனி, இராமாயண காலத்துக்கு பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டது கந்தபுராண வரலாறு. வரலாறு முற்பட்டதாயினும் அது நூல் வடிவம் பெற்றது. ஆரியர் வருகைக்குப் பின்னரேயாகும். ஆதலின் கந்தபுராண வரலாற்றில் முது நூல் வடமொழி நூலே. அதனால் கந்த புராண நூல் எழுந்த காலத்திலும் ஈழம் என்ற சொல் வடமொழி உருவில் லங்கா எனவே மொழி பெயர்க்கப்பட்டது. எனவே இவ்விரு நூல்கள் வாயிலாகவே லங்கா என்ற பெயர் ஆட்சிக்கு வரலாயிற்று.

இவ்விரு நூல்களாலும் எடுத்துக் கூறப்படும் ஈழநாட்டின் புகழ் படைத்த ஆற்றல் மிக்க மாபெரும் தலைவர் இருவர். அவர்கள் சூரனும் இராவணனும் ஆவார். இவர்கள் யார்? ஈழ நாட்டின் பூர்வீக வல்லமை படைத்த தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர்கள். ஈழ நாட்டில் இருந்து பல நாடுகளை உள்ளடக்கி அரசு செய்த சக்கரவர்த்திகள். அவ்வாறிருந்தும் அவர்கள் வரலாறு வட மொழியில் முதன் முதல் யாக்கப்பட்டமையால் எத்துணையோ தமிழ்ச் சொற்கள் வடமொழி உருவம் பெற்று மறைந்துவிட்டன. ஏன் குமரி நாடு இருந்த காலந்தொட்டு ஈழம் என்றே சிறப்புடன் அழைக்கப்பட்டபெயர் இன்று லங்கா, இலங்கை என்றாகி மறைந்துவிடவில்லையா?

ஈழ நாட்டின் மாமன்னர் இருவரும் உலகிலேயே போற்றும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதை எவரும் அறிவர் அவ்விருவருக்கு ஒப்புக் கூறக்கூடிய மன்னர்கள் உலகில் முன்னும் இல்லை பின்னும் இல்லை என்றே கூறலாம். அன்றி அவ்விருவரும் ஆத்மீகத் துறையிலும் முதலிடம் பெற்றவர்கள். உண்மையான வீரம் என்றால் என்ன வீரச்செயல் என்ன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர்கள் வீர வாழ்க்கையே அவர்கள் தம்வாழ்வு ஈற்றில் அவ்விருவரும் இறைவனால் உண்மையான அடியார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் ஏன்? அவ்விரு மன்னரதும் பூதவுடல் இன்றும் மக்களால் விழாக் கொண்டாடி வணங்கப்படுகின்றதன்றோ? இவர்களுடைய புகழுக்கு மை பூசியவர்கள் ஆரியர்களே...

ஈழமும் விசயனும்...
வால்மீகி முனிவருக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விசயன் ஈழ நாட்டுக்கு வருகின்றான். கி. மு. 543ல் ஆகும். இவன் கலிங்க நாட்டு அரச குமாரன். கலிங்க நாடு தமிழ் நாடு. சிவ நெறியாகிய கடவுட் கொள்கையை உடையது. விசயன் ஆட்சி தொடங்கி 236 ஆண்டுகளின் பின்னரே கி. மு. 307ல் தேசவநம்பியதீசன் காலத்தில் அசோகன் மகன் மிகுந்து என்னும் புத்த பி;க்கு இலங்கைக்கு வருகின்றான். தீசன் வரவேற்று உபசரித்துப் புத்த சமயப் பிரவேசம் செய்கிறான். இப்போது நாம் சிந்திக்க வேண்டியன: விசயன் ஆட்சியில் விசயன் பரம்பரை தேவநம்பியதீசன் காலம் வரையும் 236, சுமார் 250 ஆண்டுகள் அவ் வரசபரம்பரையிரும் ஈழ நாட்டு மக்களும் கைக்கொண்டு ஒழுகிய மதம் யாது? பேசிய மொழி யாது? உணர்மின்! விசயன் வருகைக்கு முன் ஈழநாட்டில் சிவநெறிக் கொள்கையினை விட வேறு மதம் இருந்ததா? இல்லையே. ஆதலின் புத்தமதத்தை தேவநம்பியதீசன் கை;கொள்ளவதற்கு முன்னர் ஈழ நாட்டு மக்களும் விசய அரச பரம்பரையினரும் கைக்கொண்டொழுகிய மதம் சிவநெறிக் கோட்பாடே என்பது யாவருக்கும் எளிதிற் புலனாகும்.

இனி, மொழிக்கு வருவோம் விசயன் பரம்பரையினரும், ஈழநாட்டு அரசபரம்பரையினரும், ஈழநாட்டு மக்களும் பேசிய மொழியாதோ? சிங்களமா? அக் காலத்தில் பிக்குகள் வருவதற்கு முன்னர் சிங்களம் என்ற சொல் ஒன்று இருந்ததா? இருந்ததாயின் சான்று காட்டுக. அக்காலத்து அப்படி ஒரு சொல் உண்டாகவே இல்லை உலக அகராதியில் சிங்களம் என்றொரு சொல்லே இல்லை. சுமார் கிறீஸ்தசகாப்தத்துக்கு முன். ஆகவே புத்த பிக்குகள் நிலைப்பாடு உறுதி அடையும்;;; வரையும் ஈழ நாட்டில் வழங்கிய ஒரேயொரு மொழி தமிழேயாகும்.

இந்நாட்டின் ஈழம் என்ற பெயர் மறைந்து போகும் அளவுக்கு இலங்கை என்ற பெயர் வலியுறுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்கள் புத்தபிக்குகளேயாவர். ஈழநாட்டிற்கு ஆரியர் வருகையோ, அன்றிப் பிறமொழியாளர் வருகையோ விசயன் வருகையைத் தொடர்ந்தே ஆரம்பிக்கிறது. விசயனுக்கு முன் பிறமொழியாளரோ, வேறு மதத்தினரோ, வேறு நாட்டினரோ, ஈழநாட்டிற்கு வந்தனர் என்றோ? குடியமர்ந்தனர் என்றோ கூறுவதற்கு வரலாற்றுச் சான்று கிடையாது.

கலிங்க நாடு தமிழ் நாடு ஆனதினாலும் அஃது சிவநெறிக் கோட்பாடு உடைய நாடானதினாலும், விசயனும், அவனோடு வந்தவர்களும், ஈழநாட்டுத் தமிழர்களோடு ஊடாடி உறவாடிப் பெண்ணெடுத்துக்கலந்த வேற்றுமையின்றி ஒரே சுற்றமாகவே, ஒரே சமயிகளாகவே வாழ்ந்தார்கள் என்பது அவர்கள் வரலாறு கொண்டே உணரக் கிடக்கின்றது.

அவ்வாறிருக்க புத்த மதத்தை ஈழநாட்டுக்குக் கொண்டு வந்த பிக்குகளே ஈழத்தின் பூர்வீக நிலைமையை முற்றிலும் திரித்து மாற்றியமைத்துவிட்டார்கள். புத்த பிக்குகளால் லங்கா என்ற வழக்கு உலகில் வலியுறுத்தப்பட்டது. லங்கா என்ற வழக்கு உலகில் வலியுறுத்தப்பட்டது. லங்கா என்ற சொல்லையே இங்கு வாழ்ந்த தமிழர்கள் தம் மொழி மரபுக்கேற்ப இலங்கை என வழங்கிவரலாயினர். அதனால் இந்நாட்டிலேயே ஈழம் என்ற பெயர் வழக்கு ஒழியலாயிற்று.

புத்த பிக்குகள் இங்கு வந்து புத்த சமய போதனை செய்து மக்களோடு உறவாடி சொல்லாட்சி பெறுதற்கு குறைந்தது 25 ஆண்டுகளேனும் சென்றிருக்கலாம். புத்த சமயம் வந்தது கி. மு. 307ல். ஆகையால் சுமார் கி. மு. 250 வரையில் லங்கா என்ற சொல் இந்நாட்டு படித்த மக்கள் இடையிலும் வழக்கில் வந்திருக்கலாம். அதன் பின்னரே படிப்படியாக உலக வழக்கில் வந்திருக்க முடியும். ஆனால் இந்தியாவில் கடைச் சங்ககாலம் இறுதியாகவும் பிற்கால சேர, சோழ, பாண்டியர் காலத்திலும் சுமார் கி. பி 12ம் நூற்றாண்டு வரை ஈழம் என்ற சொல்லே ஆட்சியில் இருந்திருக்கிறது. ஈழத்துப் பூதந்தேவனாரும் கடைச் சங்க காலத்தவரே...

தொடரும்... பகுதி-6 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக