ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-3

இனி ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தை ஒருவாறு சுட்டியுணர்வாம். இவராற் பாடப்பட்டவன் பசும்பொற் பாண்டியன். இவன் வாழ்ந்த காலம் கி. மு. 180 – 125 என்று வரலாற்றாசிரியர் கூறுவர். எனவே புலவர் வாழ்ந்த காலம் அதுவாகும். இக்காலத்தில் ஈழநாட்டை (இலங்கை) ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசன் எல்லாளன் ஆவான். இப்பொழுது இலங்கையில் புத்த மதம் வந்து 164 ஆண்டுகளேயாகும். விஜயன் வந்தது புலவர் காலத்துக்கு முன் 363வது ஆண்டாகும். இக்காலமே அநாகரிகமான இயக்கர் நாகர் வாழ்ந்த காலம்@ உணர்மின். இன்னும் இலங்கை தூய தமிழ்மொழி நாடே என்பதனை தமிழை தென் தமிழ் எனக்கூறும் பண்டைய வழக்கே வலியுறுத்துவதாகும். என்னை? தென் தமிழ் எனக் கூறுவதனால் தமிழின் உற்பத்தியிடம், தென்பகுதி என்பது பெற்றுக் கொள்ளப்படும். தமிழ்தெற்கே பிறந்து வட திசை நோக்கி வளர்ந்து பரந்தது என்பதே உலகறிந்த உண்மை. இதற்குச் சான்றாக தற்கால இந்தியாவிலும் தென்பகுதியே சிறந்த தென் தமிழ்நாடாக அமைகிறது. இதற்கு ஆதாரமாக 3 தமிழ்ச் சங்கங்களும் இருந்த இடங்களே சான்று பகருகின்றன. முதலாவது சங்கம் அக்கால இந்தியாவில் தென்கோடியில் தென்மதுரை என்ற இடத்திலும், பின்னர் ஏற்பட்ட கடல்கோள் காரணமாக அழிவுற்றதும் எஞ்சிய இந்தியாவில் தென்கோடி கபாடபுரம் என்ற இடத்திலும் பின்னர் அடுத்த கடல்கோளினால் அப்பகுதியில் சிதைவுற மூன்றாவது சங்கம் தென் பகுதியில் மதுரை என்ற இடத்திலும் நிறுவப்பட்டன என வரலாறு கூறுகின்றது எனவே தமிழின் உற்பத்தியிடம் தென்பகுதியேயாம் என்பது தெளிவு.

அவ்வாறானால் இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாய் இருந்த காலத்தில் இலங்கையே தென் தமிழ் நாடாகும். ஆதலின் தமிழின் உற்பத்தி இடம், செந்தமிழ் செழிப்புற்றிருந்த இடம் இலங்கையே என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இன்று. ஆதலின் இலங்கை அன்றும், இன்றும், என்றும் தமிழ் நாடே அன்றி வேற்று மொழி எதற்கும் உரிய பிறப்பிடம் அன்று. இன்னும் இவ்வுண்மையை எந்த மொழிக்கும் இல்லாத, தமிழ் மொழிக்கே தனிச் சிறப்பாகவுள்ள “ழ’கர ஒலியைத் தன்னகத்தே கொண்ட ஈழம் என்ற அதன் பெயரே அங்கைநெல்லி என எளிதில் யாவரையும் உணர வைக்கின்றது. அன்றியும் இலங்கையில் வேறு மொழிகளோ, வேற்று மொழியாளர்களோ வாழ்ந்தார்கள் என்பதற்கும். வேற்று நாட்டில் இருந்து இங்கு வந்து குடியமர்ந்தார்கள் என்பதற்கும் விஜயன் வருகைக்கு முன் வரலாறே கிடையாது.

தலைச் சங்கம் இருந்த தென்மதுரை இலங்கைக்கு மிக மிக அண்மையில் இருந்திருக்க வேண்டும். தென் மதுரை கடல்வாய்ப்பட்ட பின்னர் பாண்டிதன் மணற்றி என்ற இடத்தில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. வான்மீகி இராமாயணத்திலும் கூறப்படுகின்றது. தென்மதுரை அழிவுற்ற பின்னர் கபாடபுரம் அமைக்கப்படுவதற்கு முன்னர்சில காலம் மணற்றியைத் தலைநகராகக் கொண்டிருக்கும் காலம். மணற்றி என்பது அந்நாட்டின் இயற்பெயர் ஈழநாட்டில் வடகோடியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாடும் பண்டைக்காலத்தில் மணற்றி என்றே அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வருவதற்கு முன்னர் அக் குடாநாட்டின் பழைய பெயர்களுள் மணற்றியும் ஒன்றாகும். எனவே அழிவுற்ற தென்மதுரை யாழ்ப்பாணம் ஆகிய மணற்றிக்கு மிக மிக அண்மையில் இந்தியாவின் தென் கோடியில் இருந்த தென்பதனை இயற்கையும் சுட்டி உணர்த்துகிறது.

இலங்கை கடலால் பிரிக்கப்படாமல் இருக்குமாயின் இன்று பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவோ, அன்றிச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போல் இந்தியாவுக்குட்பட்ட ஓர் தமிழ்; நாடாகவே அமைந்திருக்கும். ஆதலின் இலங்கையில் வாழ்ந்த பூர்வ மக்கள் தூயசெந்தமிழ் பேசிய பழங்குடி மக்களே என்பது எவ்வாற்றானும் மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையின் எப்பாகத்திலாயினும் பண்டுதொட்டு வேற்றுமொழி பேசிய பகுதி இருந்ததேயில்லை. சிங்கள மொழி பேசும் ஓர் பகுதி இருக்கிறதே எனில் அம்மொழி இங்கு வாழ்ந்த மக்கள் பேசிய தமிழ் மொழியும், பிக்குகள் பேசியும், பயிற்றியும் வந்த பாலி மொழியும் கலந்து ஏற்பட்ட ஒர் கலப்பு மொழியாகும். இம் மொழியின் ஆரம்ப காலம் கி. மு. 304க்குப் பின்னாகும்.

இனிவடமொழியை நோக்குவோம். அஃது இன்றும் வடக்கே இருந்து தெற்கு நோக்கி வளர்ந்து செல்வதைக் காணலாம். அஃது தமிழ் நாட்டில் தமிழ் வழக்கில் இன்றும் வடமொழி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தொல்காப்பியனார், “வடசொற் கிழவி, வடவொழுத்தொரீஇ” எனக் கூறியிருப்பதை அறிக. வடமொழி எனக் கூறும்போது சமஸ்கிருதத்தின் குடும்ப மொழிகள் அத்தனையும் அடங்கும், இவ்வுண்மைகளை ஒப்புநோக்கி ஆராயும் போது தமிழின் பிறப்பிடம் தமிழன் பிறப்பிடம் இலங்கையும், இந்தியாவும் ஒன்றாய் இருந்த காலத்துத் தென்பகுதியிலும் தென்பகுதி என்றே கொள்ளக் கிடக்கின்றது.

எனவே, அப்பகுதி எதுவாயிருக்கலாம் என அறிவாம். குமரிநாடு கடல்வாய்ப்பட்டபோது அஃதாவது ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல்கொண்ட காலத்து 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்பது வரலாறு. அப்போது கடல்வாய்ப்படாது எஞ்சியிருந்த நாடே இலங்கையாகும். (ஈழம்) எனவே அதுவே 50 ஆவது நாடெனக் கூறலாம். எனவே 49 நாடுகளுக்கும் தெற்கே பண்டைக் காலத்து ஒரு நாடாய் இருந்து பின்னர் பிரிந்த இலங்கையே ஈழம் (தமிழினி) தமிழனின் பிறப்பிடம் எனக் கூறல் தகும்.

இனி ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எழுதிய எனதுகுரு வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்கள் அந்நூலின் முகவுரையில் “தமிழ் மொழி முற்காலத்து எங்கும் சென்றுபரவி வழங்கியது” என்றும், “தொல்காப்பியர் காலத்துக்கு முன்னேயே எல்லைக்குட்பட்டு வழங்கியது” என்றும் மு. இராகரவயங்கார் கூற்றை எடுத்துக் காட்டினார்கள். இது சிந்தனைக்குரியது.

இன்னும் அம் முகவுரையின் ஆரம்பத்தில் “ஈழ நாடெனும் இலங்கைத் தீவு எனினும் ஒக்கும்” என அவர்கள் கூறியிருப்பது இலங்கைத் தீவின் பழைய பெயர் ஈழ நாடே என்பது அவர்கள் கருத்தாகும். அன்றியும் இலங்கையில் உள்ள புலவர்கள் வரலாறு எழுதிய அவர்கள் இலங்கைப் புலவர் சரித்திரம் எனப் பெயர் சூட்டாது ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எனப் பெயர் சுட்டியிருப்பதே இலங்கையின் முன்னுள்ள பழமையான ஒரேயொரு பெயர் ஈழமே என்பது அவர்கள் கருத்து என்பதனை நன்கு ஐயத்துக்கிடமின்றித் தெளிவாக வலியுறுத்துவதாகும்.

எனவே மக்களின் ஆதிப் பிறப்பிடம் இலங்கையே (ஈழம்) என்பதும் உலகில் தோன்றிய ஆதி மொழி தமிழே என்பதும், மக்கள் வாழ்க்கைக்கும் நாகரீகத்துக்கும் அடியெடுத்து வைத்தவர்கள் தமிழரே என்பதும் நாம் அறியக் கூடிய உண்மையாகும்.

ஆதிமக்கள் இலங்கையிலே தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது கொரல் பாதிரியாரது கருத்துமாகும். அவர் சாகவத் தீவில் காணப்பட்ட பழைய நூல் ஒன்றில் ‘இலங்கையில் ஆதி மக்கள் தோன்றிச் சாவக முதிலிய நாடுகளிற் குடியேறிப் பெருகினார்கள்’ எனக் கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது கந்தபுராண வரலாற்றை ஒப்புநோக்குமின்! சூரன் ஆட்சிக்காலத்தில் அவனது தலைநகர், தற்போதும் உள்ள முருகன் பாசறையாகிய கதிர்காமத்திற்குத் தெற்கே சில மைல் தூரத்தில் இருந்ததாகவும், அஃது சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல்கோளினால் கடல்வாய்ப்பட்டது என்றும் கூறும். அதுவே வீரமகேந்திரம் எனப்படுவது இதனால் சூரனது ஆட்சி நகர் இலங்கையின் தென்கோடியில் குமரிமலை அந்தத்தில் இருந்தமை புலப்படுகின்றதன்றோ? சூரன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒப்புநோக்கும்போது இலங்கையும், மக்கள் வாழ்க்கையிலும் நாகரீகத்திலும் கடவுட் கொள்கை (சிவநெறி) யிலும் சிறந்து விளங்கியமை புலப்படுகின்றது. சூரன் ஆட்சிக்காலம் 3 சங்கங்களும் தோன்றுவதற்கு முன் உள்ள காலம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் தென்பகுதியே சிறப்புற்று விளங்கியிருக்கின்றது. ஆகவே பண்டைக்காலத் தமிழ் மக்களின் குடிப்பரம்பல், அவர்கள் பேசிய தமிழ் மொழி, நகரீகம் ஆகியன காலப்போக்கில் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வளர்ந்ததெனவே உணர முடிகின்றது.

எனவே நாம் உணரக்கூடிய உண்மை வரலாறு: இலங்கை(ஈழம்) இந்திய நிலப்பரப்போடு ஒரு காலத்தில் இணைந்து ஒரேநாடாய் இருந்தது என்பதும், இலங்கையே ஆதி மக்களின் பிறப்பிடம் என்பதும். அவர்கள் பேசிய மொழி தமிழே என்பதும், வரலாற்றுக்கெட்டிய வலையில் தமிழரின் ஆதித் தலைவன் சூரன் அதியோரே என்பதும் ஆகும்.

வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்களும் தாம்எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் ஓரிடத்தில் “இவ்வீழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்கும் உறைவிடமாய் உள்ளதென்பது எவராலும் ஒப்புக் கொள்ளப்படக் தக்கதேயாகும்” எனக் கூறியுள்ளார்.

இனிக் குமரி என்ற சொல் வாயிலாக அறியக்கூடிய வரலாற்றுண்மைகளை அறிவாம். குமரி என்னும் வழக்கு தொல்காப்பியம் முதலாம் இலக்கண நூல்களிலும், சங்ககால இலக்கியங்களிலும், பிற நூல்களிலும், உலக வழக்கிலும் பரக்கக் காணலாம். ஆனால் அஃது யாறு என்பாரும் கோடு (மலை) என்பாரும், கடல் என்பாரும், நாடு என்பாருமாய் பல படக் கூறுவராயினர் அஃது எவ்வாறு இருப்பினும், குமரி என்ற வழக்கும் அது சுட்டி அறிவிக்கும் இடமும் உண்மை என்பது உறுதியாகும். எனவே அப்பல திறப்பட்ட கூற்றில் யாதோ ஒன்றை அப் பெயர் சுட்டுமானால் ஏனையவற்றையும் அப் பெயரால் அழைத்தல் சாலுவதாகும் குமரி என்பது மலையே. அம் மலை செறிந்த இடம் குமரிநாடு எனப்படும். அம் மலையினின்று பாயும் ஆற்றை குமரியாறு என்றலும். குமரி மலையை மோதும் கடலைக் குமரியங்கடல் என்றலும் சகசமே. அதனால் ஒரு முரண்பாடும் இல்லையே.

சிலப்பதிகாரம் “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்றே கூறுகின்றது. சிவதருமோத்திரத்தில் குமரி மலையே மகேந்திர மலை எனக் கூறப்பட்டுள்ளது. ஆதலின் குமரி என்பது மலை குறித்ததென்பது உறுதியாகிறது.

தொல்காப்பியர் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி” எனக் கூறப்படுகிறது. இங்கே குமரி எனச்சுட்டிய இடம் இந்தியாவின் தென்கோடி முனையே யாகும். எனவே சிலப்பதிகாரம், சிவதருமோத்தரம், தொல்காப்பியம் இவற்றின் கூற்றை ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து, அழிவெய்திய 49 நாடுகளும், இலங்கையும் சேர இந்தியாவோடு இலங்கை ஒன்றாயிருந்த காலத்து குமரி நாடெனப் பெயர்கொண்ட பெருநாடு ஒன்று இந்துமாக் கடலுள் இருந்ததென்பதே உண்மையாகும்.

குமரி நாடு இந்துமாக் கடலுள் பரந்து இருந்ததென்பதையும், அது கடற் பெருக்கினால் கடல் வாய்ப்பட்டு சிதைந்து பல தீவுகளாகவும் இடையிடையே சிறு கடல்களாகவும் உரு மாறினதென்பதையும் அதனால் இந்தியாவினின்றும் இலங்கை துண்டிக்கப்பட்டதென்பதையும் வரலாற்றாசிரியர்கள் யாவரும் ஒப்புக் கொள்வர்.

ஆகவே குமரி நாட்டின் பெரும்பகுதி அழிந்து குமரிக்கோடும் கடல்வாய்ப்பட்ட பின்னர் எஞ்சிய பரந்த நிலப் பரப்பையுடைய இந்தியாவின் தென்கோடி முனையை ஞாபகார்த்தமாகப் பின்னுள்ளோர் குமரி எனக் கூறிவரலாயினர் என்பது போதரும். குமரி மலையின் அதி உயர்ந்த பகுதியே ஈழ நாட்டை ஊடறுத்துத் தெற்கு நோக்கிச் சென்ற சிவதருமோத்தரம் குறிப்பிடும் மகேந்திர மலையேயாகும். இம் மகேந்திர மலையின் தென்கோடியில் ஈழநாட்டின் தென்னந்தத்தில் இருந்த சூரனது அரசதானி மகேந்திரபுரி என அழைக்கப்பட்டமையும் அதனாலன்றோ?

ஆதலின் குமரிநாடு இருந்த காலத்தில் அக் குமரிநாட்டில் இருந்த ஓர் உள்நாடே ஈழம் என்னும் பெயரோடு இருந்ததாக வேண்டும். சிவதருமோத்திரக் கூற்றே அதனை வலியுறுத்துகின்றது. குமரிநாடு கடல்வாய்ப்பட்ட போது ஈழம் தனித் தீவாக மாறியது. ஆகவே ஈழநாட்டின் மேல்ஓங்கிநின்ற மலையடுக்குகள் குமரி மலையின் பகுதிகளே என்பது தெளிவு. குமரி மலை பல மலை அடுக்குகளைக் கொண்டதெனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. சிவதருமோத்தரம் மிகவும் தெளிவாக மகேந்திரமலையின் அடிவாரத்தே பொன்மயமான இலங்கை உள்ளது” எனக் கூறுகின்றது.

கடற் பெருக்கினால் குமரி நாடு அழிவெய்திய ஞான்று அந்நாட்டின் தாழ்வான பகுதிகளே கடலாதல் நேரிடும். எனவே ஈழநாட்டில் உள்ள சிவனொளி மலை ஆதியாம் மலைகளே குமரிமலையின் அதி உயர்ந்த பகுதி என்பது புலனாகிறது.

ஓர் குமரிக் கோட்டினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாற்றின் படுக்கையே தற்போதிருக்கும் பாக்கு நீரிணையின் ஆழமான நடுப்பகுதியாக அமையலாம். அப்பஃறுளியாற்றின் இரு கரை மருங்கும் இருந்த செழிப்புற்ற நாடுகளே கடலுள் அமிழ்ந்திய 49 நாடுகளாகும். ஈழத்தின் வடகோடி பாக்குநீரிணையின் கரையோரமாக இருப்பதே கீரிமலை என அழைக்கப்படும் குன்றும் நன்னீருற்றும் கொண்ட புண்ணிய தலமாகும். இதன் பழமைக்கு காலவரையறை இன்று. எனவே பாக்குநீரிணையின் நடுப்பகுதி குமரியாற்றின் நடுப்பகுதியாக அக்கடலின் வட கரையில் பிரசித்தி பெற்ற பொதியமலைச்சாரலும், திருக்குற்றாலமும், அக்கடலின் தென்கரையில் பிரசித்தி பெற்ற பழமையான கீரிமலைக் குன்றும் சிவனாயலமும் இன்றும் காட்சியளிப்பது காண்போம். ஆதலின் இளங்கோவடிகளால் சுட்டப்பட்ட குமரிக்கோடு பண்டைக்காலத்தில் கடல்கோட்படுவதற்கு முன் தெய்வீகம் நிறைந்த ஒர் இடமாக இருந்திருக்க வேண்டும். அழிவெய்திய குமரிக்கோட்டில் குமரித்தெய்வம் குடிகொண்டு அருள்பாலித்திருக்க வேண்டும். குமரிக்கோடு கடலுள் அமிழ்ந்தியபின் அம் முனைப் பகுதியில் குமரி அம்பாள் வழிபாடு நடைமுறையில் வரலாயிற்று என்பதே உண்மையாகும். அம் முனைப் பகுதியில் அம்பாள் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்றோ...

இனிக் குமரி என்னும் சொல் பற்றி ஆராய்வாம். குமரி என்பது தமிழ் மொழி. இதனைக் கற்றோரும் மற்றோரும் நன்கறிவர். இம் மொழி பெண்பாலரின் வாலைப் பருவத்தைக் குறிக்கும் ஒர் அழகிய சொல். கன்னி என்பதும் அப்பொருட்டே. குமரி என்பது தமிழ்மொழி. எனவே அப்பெயர் கொண்ட நாடும் பிறவும், தமிழ் நாடும் அதன் பகுதிகளுமாம் என்பது கூறவேண்டியதில்லை. இனி அப்பெயர் சூட்டி அழைத்த காரணத்தை அறிவாம்.

தமிழ் மக்களின் கடவுட் கொள்கை சிவ வழிபாடே. சிவ வழிபாடெனவே சக்தி வணக்கம், விநாயக வணக்கம், முருகன் வணக்கம் ஆகியவையும் சிவ வழிபாட்டுக் கோட்பாடே. அவற்றுள் சக்தி வழிபாடு, தத்தமது வாழ்க்கையில் தாம் வேண்டும் வாழ்க்கைப் பேறுகளைப் பெற்று நல்வாழ்வு பெறுதற்கு அநுகூலமானது. இதனால் சக்தி வழிபாடும் தமிழ் நாட்டில் பிரபல்யம் பெற்று விளங்கியது. அவ்வியல்பினை இன்றும் தமிழ் மக்களிடையே காணலாம். சக்தி வாழிபாட்டில் சிறந்த நோன்புக் காலம் நவராத்திரி காலமாகும். பெரும்பான்மையும் பெண் மக்களே சத்தி வாழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

விநாயக, முருக வணக்கமும் மேற்போந்த சக்தி வழிபாடே போன்று இகபர சுகங்களை வேண்டியவாறு பெற்று நல்வாழ்வு பெறுதற்கு வேண்டப்படுவதாகும். சிவ வழிபாடு உலகப் பற்று நீங்கி வீடுபேறு மாத்திரம் கருதிய உயர் நிலையாளரிடத்தே கைக்கொள்ளப்படுவது இன்றும் என்றும் அவ்வாறே. நாயன்மார் நால்வர். சித்தர்கள், முனிவர்கள், பட்டினத்தார், தாயுமானவர் முதலிய ஞானவான்களின் வாழ்கையே சான்றாகும்.

ஆன்ம கோடிகளின் மாதாவாகிய சத்தி, சேய்க்குத் தாய் போன்று ஆன்ம கோடிகளுக்கெல்லாம் அவரவர் பக்குவம் அறிந்து போக போக்கியங்களை ஊட்டி வாழ்க்கையில் உலக இன்பங்களைத் துய்ப்பித்து பின் பசி தணிந்தவர்க்கு உணவில் வேட்கை செல்லாதவாறுபோல உலகப் பற்று நீங்கிப் பரிபக்குவ நிலையடைய அத்தருணத்தில் பரம பிதாவாகிய சிவனை சுட்டி உணர்த்திக் காட்டி சிவ வழியில் நிலைக்கச் செய்யும்.

“தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ்சத்தி
பின்னமில்லான் எங்கள் பிரான்”

ஆதலின் சக்தி வாழிபாடு எல்லோராலும் மிகுதியும் வேண்டப்பட்டது. தமிழ் மக்கள் பெரும்பாலும் தமது உலக வாழ்வில் இட்ட சித்திகளைப் பெறும் நோக்கமாகச் சத்தி வாழிபாட்டையும் முருகன், விநாயகன் வழிபாட்டையுமே மேற்கொண்டு வந்தனர். ஆதலின் குமரிக் கோட்டில் (உச்சி) பண்டைக்காலத்தில் சத்தி வழிபாடே பிரசித்தி பெற்றிருந்தது என்பது புலனாகும். ஆங்கு குமரி அம்மனுக்கு ஆலயம் இருந்திருக்க வேண்டும். அவ் வழக்கே இன்றும் குமரியில் அம்பாள் வணக்கம் இருந்து வருவதற்குக் காரணமாகும்.

சிவ வழிபாட்டில் இளமையும், அழகும் ததும்பக் காட்டும் அழகிய கருத்துப் பொதிந்த சொல் முருகன் என்பது. எனவே இறைவனை என்றும் இளையவனாகவும் அழகெல்லாம் ஒருங்கே திரண்டு முற்றிய ஒருவனாகவும் கருத்திற் கொண்டு முருக வழிபாட்டைக் கைக்கொள்வாராயினர். அவ்வாறே சத்தி வழிபாட்டில் பெண்மையின் கோலமும் பெண்மையின் ஒப்பிலா அழகும் ஒருங்கே அமையக் காட்டும்இளமைப் பருவச் செவ்வையை முற்ற உணர்த்தும் சொல்லே குமரி என்பது.

மக்கள் எவராயினும் இளமையும், அழகையும் விரும்புவாரன்றோ? அவை இரண்டையும் விரும்பாதார் யாரும் உளரோ? பண்டைத் தமிழ் மக்கள் கடவுள்மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையாலும், அன்பினாலும் தம்மை எல்லாம் காத்து அருள் செய்யும் கருணை வள்ளல் கடவுள் ஒருவரே என்ற அசையாத உணர்ச்சிப் பெருக்கினாலும் கடவுட் பெயர்களையே தமக்குப் பெயராகவும் வைத்து என்றும் கடவுள் ஞாபகத்தோடேயே வாழ்ந்தார்கள். அம்மரபில் உலகை ஈன்று அளிக்கும் உலக மாதாவாகிய சத்தியை என்றும் குன்றாத இளமையும் அழகும் பொலிந்து காட்டும் குமரி என்னும் சொல்லால் அழைத்து அப் பெயரையே தம்மை எல்லாம் தாங்கி உணவூட்டி அளித்து இகபர சுகங்களைத் தரும் பூமி தேவியாகிய தாய்க்கும் சூட்டி வழங்கி வரலாயினர் என்பது சாலவும் பொருத்தமானதே. பூமியைப் பெண்ணாகவே உருவகித்து வழங்கி வந்தமை, பண்டுதொட்டு தமிழரின் தொன்று தொட்ட மரபாகும். அதனால் பூமிதேவி என்றும். நிலமகள் என்றும் தாய்நாடு என்றும் கூறுவரன்றோ? அன்றி வேறு எக்காரணமும் கூற இடமின்றி ஏற்புடையதுமாகாது.

இனிச் சில வரலாற்றாசிரியர்கள் கருத்தினை இங்கு தருவோம். தற்போது இந்தியாவின் தென்பாலுள்ள இந்து மாக்கடலுள் இந்தியா, இலங்கை உட்பட ஓர் பெருந்தரைப்பாகம் இருந்ததென்றும், அதனை லெமூரியாக் கண்டம் (குமரிநாடு அல்லது குமரி கண்டம்) என்றும் அது கடல் கோளினால் கடல் வாய்ப்பட்டு மறைந்துவிட்டதென்றும்;, எஞ்சிய பகுதியே இந்தியாவும், இலங்கையும், ஏனைய தீவுகளுமாம் என்றும், அங்கேதான் மக்கள் குலங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக மக்கட் பெருங் குழுவினர் தோன்றியிருந்தார்கள் என்றும், அவர்கள்கறுப்பு அல்லது மங்கிய கறுப்பு நிறம் உள்ளவர்களாக இருந்தார்களென்றும் எச்.ஜீ. வெல்ஸ் என்னும் பேராசிரியர் கூறுவார்.

ஆதிமக்கள் இலங்கையிலேதான் தோன்றியிருக்க வேண்டும் என்பது கெரஸ் பாதிரியார் கருத்து என்பதனை முன்னர் காட்டியுள்ளாம். இனி ஏச். சி. உரோலின்சன் எழுதிய இந்தியர் பண்பாட்டு வரலாற்றுச் சுருக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகம் கி. மு. 1500க்கு முன் உச்சநிலை அடைந்திருந்ததென்றும், கி. மு. 1500க்குப் பின் அதன் நாகரீகம் வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்றும் அவ்விரு நாட்டு மக்களும் கொள்ளையர்களால் கொடூரமாய்க் கொல்லப்பட்டார்கள் என்றும், அவ்வாறு கொள்ளையடித்தோர் ஆரியராய் இருத்தல் வேண்டும் என்றும், அவ் விரு நாடுகளிலும் சிவ வழிபாடே இருந்ததென்றும், பெரிது அன்னை வணக்கமே கைக்கொள்ளப்பட்டு வந்ததென்றும், சிந்துநதியைச் சூழ்ந்த நாட்டைப் பேர்சியர் இந்தியா என்று அழைத்தனர் என்றும், அங்கு வாழ்ந்த மக்கள் இந்தியர், இந்துக்கள் என அழைக்கப்பட்டனர் என்றும் கூறியுள்ளார்.

இவர் கூற்றில் இருந்து பல உண்மைகள் சந்தேக விபரீதம் இன்றி வலியுறுத்தப்படுகின்றன. என்னை? இலங்கை உட்பட இந்தியா இமயமலை பரியந்தம் முழுமையும், தமிழ்ப் பழங்குடி மக்களே வாழ்ந்தார்கள் என்பதும், அங்கெல்லாம் ஒரே சிவ வழிபாடே இருந்ததென்பதும், அதிலும் சக்தி வணக்கமே மேலோங்கி இருந்ததென்பதும், ஆரியர்கள் கி. மு. 1500 – 1600 வரையில் இந்தியாவுட்குட் புகுந்தது உண்மையே என்பதும், அவர்கள் அங்கு வாழ்ந்த தமிழ்ப் பழங்குடி மக்களை கொள்ளையடித்தும், கொன்றும், அடாத்தாகக் கங்கைக் கரையோரப் பக்கங்களில் குடியேறினார்கள் என்பதும், அதனால் தமிழ் மக்கள் தெற்கு நோக்கிக் குடிபெயர்ந்தார்கள் என்பதும் உண்மையே.

வேதகாலமும் ஆரியர் வருகையோடு தொடங்கியதேயாகும். இனக் கால ஒப்பீட்டை நோக்குவோம். இன்று கலி 5088 நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கி. மு. 1500க்கு முன் தமிழர் நாகரீகம் உச்ச நிலை அடைந்தும், பின் வீழ்ச்சி நிலை அடைந்தும் வந்திருக்கிறது. எனவே கி. மு. 1500 என்றால் கலி 1600ஆகும். அஃதாவது இற்றைக்கு 3488 ஆண்டுகளுக்கு முன்னாகும். 5088 (1500 + 1988) இக்காலம் தென்னாட்டில் இடைச் சங்கம் நிகழ்ந்து கொண்டிருந்த காலமாகும். எனவே தலைச்சங்கம் இருந்த காலம் இலங்கை உடபட இமயமலை பரியந்தம் தமிழர் உச்சநிலையடைந்திருந்த காலம் என்பது எச். ஜீ. வெல்ஸ் என்னும் பேராசிரியர் கூற்றால் தெளிவாக அறியக் கிடக்கின்றது. எனவே வரலாற்றுக் கெட்டியவரையில் சூரன் ஆட்சிக்காலம் தொடக்கம் அஃதாவது துவாபரயுக இறுதி சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உள்ள கால இடைவெளியிலும் தமிழர் நாகரீகமே உச்சநிலை அடைந்திருந்த காலமாகும் என்பதும் தெளிவாகிறது. எனவே தமிழர் நாகரீகம் சீருற்றிருந்த உச்ச காலம் சூரன் ஆட்சிக் காலமும், தலைச்சங்க காலமும் (அகத்தியர் காலம்) இடைச்சங்க காலமும் ஆகும். சூரன் ஆட்சிக் காலம் எலியட் பண்டிதர் கூறும் இற்றைக்கு 11481 ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே குமரிக்குத் தெற்கே முன் ஒன்றாய் இருந்து பிரிந்த இலங்கை தமிழ் நாடே. அதைத் தமிழர்நாடு அல்ல எனக் கூற முடியுமா? முடியுமானால் அது எந்த மொழி வழங்கிய நாடு? கூறுமின்! ஆரியர் வருகை இமயம் வரை பரந்து வாழ்ந்த தமிழ் இனத்தைத் தெற்கு நோக்கி ஒதுங்கி வாழச் செய்தது அல்லவா? மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே குமரிநாடு அழிவுற்று 49 நாடுகளும் கடல்வாய்ப்பட்டு பிரிந்தனவன்றோ? இந்தியா என்னும் பெயரும் அந்நாட்டின் பூர்வீக நாமம் அன்றே. இதனை ஏச். சி. உரோலின்சன் கூற்றே வலியுறுத்துகிறதல்லவா? இனி சுவாமி விவேகானந்தரும், இந்தியா, இந்தியர், இந்துக்கள் என்னும் பெயர் பேர்சியரின் வழக்கத்தில் இருந்து வந்ததே எனக் கூறியுள்ளார்.

குமரி நாடு கடல் வாய்ப்பட்ட பின்னும் ஈழம் இந்தியா வோடிணைந்து ஒரே நாடாய் இருக்கும். ஆனால் ஈழத்தின் தென்அந்தமே குமரி முனையாக அமையும். குமுரிக் கோயிலும் அங்கேயே காண்போம். ஏன்? குமரி மலையின் முடிபு ஈழ நாட்டின் தென் அந்தமே. இதன் விளக்கம் முன் கூறப்பட்டது. வரலாற்று ஆசிரியர்கள் கருத்தும் இதுவே. அவர்கள் மகேந்திரம் என்று கூறப்படும் குமரி மலைத் தொடர் தற்கால இந்தியாவின் மேற்கு மலைத் தொடரின் தெற்கே இருந்து ஆரம்பித்து, தெற்கு, தென் கிழக்காக ஈழநாட்டை நடுவாக ஊடறுத்துச் சென்று பின் மேற்காகச் சென்று மடகாஸ்கார் தீவுவரை சென்றதாகக் கூறுவார்கள். இக் கூற்றுக்கு ஆதாரமாக சூரனது ஆட்சி நகர் வீரமகேந்திரம் ஈழத்தின் தென் அந்தத்திலேயே இருந்து கடல் வாய்ப்பட்டதாக வரலாhறு கூறுகின்றது. குமரி மலைமீது அவனது நகர் அமைந்திருந்தமையினாலேயே மகேந்திரம் எனப்பட்டது. ஈழம் இந்தியாவினின்று பிரிந்தமையினால் இந்தியாவின் தென்னந்தம் குமரிமுனை எனப்பட்டது.

ஆகவே குமரி நாடு, குமரி; கண்டம் எனப்படுவது கடல் வாய்ப்பட்ட 49 நாடுகளும் கடல்வாய்ப்பட்டாத ஈழமும், இந்தியாவும் அண்மையில் உள்ள ஏனைய தீவுகளும் அடங்கிய பாரிய நிலப்பரப்பைக் குறித்த பூர்வகாலப் பெயராகும் என்பது தெளிவு...

தொடரும்... பகுதி-4 பார்க்கவும்...
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக