ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-4

இவ் வரலாற்றுண்மையை இன்னும் தெளிவாகச் சிந்தனை செய்துபார்ப்போம். இந்தியா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் இதுதானா அந்த நாட்டின் பெயர் என நாடினால் இல்லை என்று எளிதாகவிடை காண்போம். இச் சொல்லாட்சியைப்பண்டைத் தமிழ் நூல்களுள் யாண்டும் கண்டிலேம். இது பிற்கால வழக்கு இவ்வழக்குப்பற்றி முன்னர் கூறினோம். பரத கண்டமோ எனின் அஃது ஆரிய மொழி, எனவே அப் பெயர் ஆரியர் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட பெயராகும். ஆதலின் இப் பெயர்கள் வருவதற்கு முன்னர் அந்தநிலப்பரப்பைக் குறிக்கும் ஓர் பெயர் இருந்தேயாக வேண்டும். அதுவும் தமிழ் மொழியாதல் வேண்டும். ஏன் ஆரியர் வருகைக்கு முன் வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடங்கித் தமிழ் நாடாகவும், தமிழ் மொழி தோன்றி விழங்கிய நாடாகவும் இருந்த காரணத்தினால் தமிழ்ப் பெயராகவே அமைய வேண்டும். ஆனால் இந்நிலப்பரப்பைக் குறிக்கும் தமிழ்ப்பெயர் குமரியைவிட வேறொன்று இருந்ததாக அறிய முடியவில்லை. ஆனால் இந்தியாவை நாவலந் தீவெனக் கூறும் ஓர் வழக்குண்டு. அதைப் பற்றி ஆராய வேண்டும்.

ஆதலின் தமிழ் நிலம் முழுமையும் கடல் கோட்கு முன்னர் குறிக்கும் பெயர் குமரி நாடென்பதே. ஆனால் குமரி நாடெனப் பெயர் கொண்டிருந்த அக்காலத்தில் நாட்டின் உட்பகுதிகளைக் குறிக்கும் பெயர்கள் வழக்கில் இருந்ததுண்டு. அப் பெயர்கள் பல இன்றும் வழக்கில் இருக்கலாம். அவை எவையென ஆராய்ந்து காணவேண்டும். ஆனால் ஈழம் என்பது அத்தகைய, அஃதாவது குமரி நாடு இருந்த காலத்தில் அதன் ஒர் உள்நாட்டுப் பகுதியைக் குறிப்பிட்டு வழங்கிய ஓர் உள்நாட்டுப் பெயரேயாகும். இதனை சிவதருமோத்தரம் தெளிவாகக் சுட்டி உணர்த்துகின்றது. இதன் விளக்கம் முன்னர் கூறப்பட்டது.

குமரிநாடு அழிவெய்திய பின்னர் இந்தியா, இமய மலை பரியந்தம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆட்சிபண்ணப்பட்டு வந்தது ஏன்? கடல் கோட்கு முன்னரும் இந்தியா நிலப்பரப்பை அவர்களே ஆட்சி செய்திருக்க வேண்டும். பின்னர் ஆரியரின் நெருக்கடியால் அவர்களின் ஆட்சிப்பரப்பு தென்பகுதியாகச் சுருங்கியது வடபகுதியில் ஆரியர் குடியேறித் தமது ஆட்சியில் கொண்டுவந்தனர். சேர, சோழ. பாண்டியர் என்ற குடிப்பெயர், படைப்புக் காலந்தொட்டு வழங்கிய பழங்குடி மக்கள் என்றே உரையாசிரியர்கள் கூறுவார்கள். எனவே அப் பெயரின் தொன்மையும் பெயர்க் காரணமும் புலப்பட்டில எனக் கூறுவர். இதனாலும் தமிழரின் தொன்மை நன்கு புலனாவதோடு குமரி நாடு அழவெய்த முன்னரும் இம் முக்குடி மன்னர் ஆட்சி இருந்ததென்றே கொள்ள வேண்டும்.

சேர மன்னர்கள் கன்னியாகுமரி தொடக்கம் மேலைக் கடற்கரை ஒரமாகத் திபெத்துவரை ஆட்சி புரிந்தார்கள் என வரலாறு கூறுகின்றது. அதற்காதாரமாக சேர மன்னர்கள் இமய வரம்பன் என்றும், வான வரம்பன் என்றும் பட்டப் பெயர் பூண்டு இமயம், தீபெத்து வரை ஆட்சி புரிந்தமையை அப் பெயர்கள் தெளிவாக சுட்டி உணர்த்துகின்றன.

இனி, நாடு இந்தியா எனப் பெயர் எய்திய காலத்து அதன் தென்பாலுள்ள கடலும் இந்துமாக்கடல் என வழங்கப்படுதல் போல பண்டைக்காலத்துக் குமரி நாட்டின் தென்பாலுள்ள கடல் குமரிக்கடல் என சிலர் எல்லை கூறுதலும் உண்டு.

இனி குமரி என்ற சொல் தமிழ்மொழி தானா என்பதனைச் சந்தேக விபரீதமற தெளிவாக அறிவாம். மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகம் உச்ச நிலையடைந்து மக்கள் வாழ்ந்த காலம் கி.மு. 1600க்கு முன்னாகும். கி. மு. 1600 வரையிலேயே ஆரியர் என ஒரு வகுப்பார் கைபர் கணவாய் வழியாக இந்தியாவினுட் புகுந்து குடியேறினர் என்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிபு. ஆரியர் வருகைக்காலம் இலங்கையும் இந்தியாவும் இரு வேறு நாடுகளாகவே இருந்தன. எனவேஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டது குமரி நாடாதலின் குமரி என்னும் சொல் அந்நாட்டு மொழியினின்றும் தோன்றிய சொல்லேயாகும். அந்நாட்டு மொழி தமிழ் என்பதும், வாழ்ந்தோர் தமிழர்களென்பதும் முன்னரே விளக்கியுள்ளாம். ஆதலின் முன்னிருந்த நாட்டுக்கும், பின் வந்து குடியேறியவர்கள் பெயர் சூட்டினார்கள் என்பது பொருந்துவதன்று. சரி ஆரியர்களால் அழைக்கப்பட்ட பெயர்தான் குமரி என்றால் இவர்கள் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே பிரபல்யம் உற்றிருந்த ஒரு நாட்டுக்கு முன்னிருந்த பெயர்யாதோ? ஆதலின் அக் கூற்று எவ்வாற்றானும் பொருந்துவதன்று. அஃது தந்தைக்கு மகன் நாபகரணம் செய்தான் என்பது போலாம். ஆதலின் குமரி என்னும் சொல் தூய தமிழ் மொழியாகும்.

இனி, இமயமலை பரியந்தம் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்கும் குமரி என்ற சொல் தமிழர் வழக்கே என்பதற்கும் இந்தியா என்ற பெயரே சான்றாகும். இமயத்தில் இருந்து ஆறுகள் ஊற்றெத்துப் பாய்கின்றன. அவற்றுள் ஒன்று சிந்து நதி. சிந்து என்பது தூய தமிழ் மொழி. அச் சொல் ஆற்றையும் கடலையும் குறிக்கும் கருத்துடையது. எனவே சிந்து நதிப் பக்கம் வாழ்ந்த பண்டைக்காலத் தமிழ் மக்கள் அவ்வாற்றைச் சிந்து நதி எனப் பெயரிட்டு அழைக்கலாயினர் பிற்காலத்தில் அச்சிந்து என்ற தமி;ழ் மொழியை பாரசீகர் தமது உச்சரிப்பு முறையில் ஹிந்து என்று அழைக்கலாயினர். அதனால் அவ்வாற்றின் பக்கம் வாழ்ந்த மக்களை அவர்கள் ஹிந்துக்கள் என்றே அழைத்தனர் ஹிந்து என்னும் சொல் தமிழ் மொழி மரபின்படி இந்து என்றாகும். எனவே மக்கள் இந்துக்கள் என்றும், நாடு இந்தியா என்றும், சமயம் இந்து சமயம் என்றும், யாறு இந்து நதி என்றும், கடல் இந்து சமுத்திரம் என்றும் வழங்கி வரலாயிற்று என்பதே வரலாற்று உண்மையாகும். எனவே சிந்து என்னும்தமிழ் மொழி வாயிலாகவே பாரசீகர் மூலம் அப்பெயர்கள் வரலாயின என்பது கண்டாம்.

இவ்வாறானால் நாட்டுக்குரிய பழைய பெயர் என்னையோ? பாரசீகரால் சூடப்பட்ட பெயர் தானா? ஆரிய மொழியில் உள்ள பெயர்கள் யாவும் ஆரியர் வருகைக்குப் பின்னர் எற்பட்ட பெயராகும். எனவே இந்நாட்டிற்குரிய தமிழ்ப் பெயர் என்னையோ?

மக்களினம் உற்பத்தியான இடம், அவர்கள் வாழ்ந்த பூமி, பல்வேறு இடங்களுக்கும் சென்று பரவுவதற்கு ஊற்றிடமாய் இருந்த நாடு, இவை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டவை. ஆதலின் இந்தியாவைக் குறிக்கும் பழைய பெயர் குமரி என்றே எண்ணிக்கிடக்கின்றது. இதைவிட நாவலந்தீவு என்ற வழக்கும் இருந்திருக்கிறது. சேரன், சோழன், பாண்டியன் என்ற குடிப்பெயர்களும் குமரி நாட்டுக்கால வழக்கென்றே கருத வேண்டியிருக்கிறது.

ஆதலின் குமர நாடு இந்துமாக் கடலுள்பரந்த ஒரு நிலப்பரப்பை அடக்கிய ஒரு கண்டம் என்பதும் அக் குமரி கண்டத்தில் பல்லாயிரக்கணக்கான உள்நாடுகள் வேறு வேறு தனித் தனிப் பெயரால் அழைக்கப்பட்டிருந்தன என்பதும் அப் பெயர்களில் பெரும்பாலானவை இன்னும் வழக்கில் இருக்கலாம் என்பதும் உய்த்துணர்வார்க்குப் புலனாகும்.

இனி கர்ண பரம்பரைக் கதைகளைப் பொய்யெனத் தள்ளுதலும், கட்டுக் கதை என எள்ளுதலும் ஆகாது ஏன்? பண்டைக்காலத்தில் நூலாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வேறு கற்றமைந்த சான்றோர்கள், முனிவர்கள், அடியார்கள் ஆன்மீக நலன் கருதியே வாழ்க்கை முறைகளை வகுத்துக் காட்டியும், தாம் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியும் வாழ்ந்தார்கள். இதுவே மக்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என உணர்ந்தார்கள் உணர்த்தினார்கள். அவர்கள் ஞானம் நூற் குறிப்புகளாலும், உலக நோக்கினாலும். கேள்வியாலும், சிந்தித்துத் தெளிதலாலும் விருத்தியடைந்தது. அச்சுப் பொறி சுமார் 15ம் நூற்றாண்டிலேயே வந்ததாகும்.

எனவே அக் காலக் கல்விமுறை செவி வாயிலாகக் கற்றலே. குரு, சீடர் முறையிலும், அறிவுப் பெரியோர் வாய்மொழி மூலமும். பெற்றார், சுற்றத்தார் ஆகியோர் உபதேசமுறையிலும் அறிய வேண்டிய யாவற்றையும் கற்று வந்தார்கள். மிகவும் முக்கியமான பகுதிகள் ஏட்டுச் சுவடிகளில் பொறிக்கப்பட்டன. அச்சுவடிகளும் செல்லுக்கிரையாகி அழிந்து போதலும் சகசம். அன்றிக் காலத்துக்குக் காலம் கடற்பெருக்கினால் அழிந்தனவும் பல. பெரும்பாலும் வரலாறுகள் கேள்வி மூலமே போற்றப்பட்டு வந்தன. ஆதலின் கர்ணபரம்பரைக் கதைகளில் பெரும்பாலும் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆதலின் கர்ணபரம்பரைக் கதைகளைப் போற்றி ஆராய்ந்து உண்மை காணவேண்டும்.

குறும்பனை நாடு முதல் 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்பது வரலாறு. இதனைத் தென்னிந்திய வட இலங்கையின் இயற்கை அமைப்புப் புலப்படுத்துகின்றதன்றோ? இந்தியாவின் தென்பகுதியிலும் இலங்கையின் வடபகுதியிலும் இன்றும் இயற்கைத் தாவரம் பனையாகவே இருக்கிறது. அழிவுற்ற நாடுகளுள் குறும்பனை நாடும் ஒன்றல்லவா? பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் இன்றும் பனையே இயற்கைத் தாவரமாகச் செழித்து வளர்தலையறிக. இதனாலும் இந்தியாவும் ஈழமும் ஒன்றாயிருந்து பிரிந்த நாடுகளே என்பது தெளிவு.

அன்றியும் இரு நாட்டு மக்களினது உருஅமைப்பு, உடை, நடை, பாவனை, வாழ்க்கை முறைகள், கடவுட் கொள்கை யாவும் ஒன்றே. சிவ வழிபாடும், சக்தி வழிபாடும், விநாயகர் வழிபாடும், முருகன் வழிபாடும், திருமால் வழிபாடும் ஈழத்தின் தென்அந்தம் தீவாந்தர முனை தொடக்கம் இமயமலைப் பரியந்தம் வரலாற்றுக் கெட்டாத காலம் தொடக்கம் ஒரே தன்மையாகவே இருந்துவருதலை அறிவோம். ஈழ நாட்டிலே வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் சிவன், விநாயகன், முருகன், சக்தி, திருமால் வழிபாட்டுக்குரிய ஆலயங்களும் இன்றும் இருந்துவருகின்றனவன்றோ? இவ் வழிபாட்டு முறைகளில் புத்தம், கிறீஸ்தவம், இஸ்லாம் வருகையால் மக்களிடையே இடைக்காலத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதாயிற்று. அன்றி ஈழநாட்டுக் கடவுட் கொள்கை அன்றுபோல் இன்றும் நிலவி வருகின்றது.

ஈழநாட்டின் வடகோடியில் கீரிமலைத் தீர்த்தம் உள்ளது. அதன் பழமை அறிய முடியாதது. கீழைக் கரையில் கோணேஸ்வரம், வெருகல், வல்லிபுர ஆழ்வார் கோயில் முதலாக பல தலங்கள் உள்ளன. தென் கோடியில் கதிர்காம முருகன் ஆலயம் இன்றும் பிரபல்யமாக விளங்குகிறது அன்றி ஈழத்தின் தென்கோடியில் ஓர் பழமையான சிவனாலயமும், அம்பாள் ஆலயமும் மறைந்து மங்கிவிட்டன மேல் கரையில் திருக்கேதீச்சரம், முனீஸ்வரம் ஆகிய சிவாலயங்கள் காலத்தைக் கடந்து காட்சியளிக்கின்றன. மத்தியில் தற்காலம் எல்லா மதத்தினராலும் போற்றப்படும் சிவனொளிபாதமலை உள்ளது. இதுவும் கால எல்லைக்கு அப்பாற்பட்டது. இம் மலை குமரி மலைத் தொடரில் ஒரு கூறாவதுமன்றி குமரிமலைத் தொடரில் அதி உயர்ந்தபகுதியுமாக இருந்தாக வேண்டும். இதன் பழமையும், பெருமையும் அறியமுடிகின்றது. திருமூலர் ஈழநாட்டைச்சிவபூமி என்றே கூறுவர். அவர் கூற்றை இன்னும் சுட்டி உணர்த்துவது இந்தச் சிவனொளிபாதமலையே. இங்கேயே நான்கு முனிவர்களுக்கு சிவபெருமான் ஆகமப் பொருளை உபதேசித்திருக்க வேண்டும். விளக்கம் பின்னர் கூறப்படும்.

இனிச் சிவதருமோத்தரம் என்னும் உபாகமம் பொதிய மலைக்குத் தென்பால் மகேந்திரம் என்ற மலை இருந்த தென்றும், அதன் அடிவாரத்தில் பொன்மயமான இலங்கை இருந்ததொன்றும் கூறுகின்றது. மகேந்திரமலையின் அடிவாரத்தில் பொன்மயமான இலங்கை இருந்ததென்பதால் இலங்கையை ஊடறுத்து வானளாவி உயர்ந்து பரந்து பல அடுக்குகளை உடையதாக இருந்ததென்பது பெறப்படும். ஈழம் என்ற பெயர்க் காரணத்தைச் சிவதருமோத்திரம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது என்னை? ஈழம் என்ற சொல்லின் சிறப்புடைப் பொருள் பொன் என்பது சிவதருமோத்திரம் பொன்மயமான இலங்கை எனக் கூறுவதால் அக் காரணம் பற்றியே அந்நாட்டுக்குப் பண்டைக்கால மக்கள் ஈழம் என பெயர் சூட்டி அழைக்கலாயினர் என்பது பெறப்பட்டது.

சிவதருமோத்தரம் ஈழம் எனக் கூறாது இலங்கா எனக் கூறியிருப்பது ஏன் என்ற சந்தேகம் உண்டாகிறதன்றோ? ஆம், சிவதருமோத்தரம் ஈழம் என்ற சொல்லை லங்கா என்றே கூறவேண்டும். ஆதலின் லங்கா, ஈழத்தின் மொழி பெயர்ப்பேயன்றி வேறன்று. இதுபற்றிய விளக்கம் பின்னர் கூறப்படும்.

ஈழம் மலையடிவாரம் ஆதலின் பொன் மிகுதியாக இருந்த காரணத்தினாலே, அன்றிப் பொன் கொழிக்கும் வாய்ப்புள்ள நாடு என்ற காரணத்தினாலோ பொன் நாடு என்னும் பொருள் கருதி பண்டைத் தமிழர் ஈழம் எனப் பெயரிட்டு அழைக்கலாயினர் என்பதே வரலாற்று உண்மையாகும். ஆனால் இவ்ஈழம் என்ற பெயர் குமரி நாடிருந்த காலத்தில் வழக்கில் இருந்த பெயர் என்பதை நினைவில் உறுத்த வேண்டும். சிவதருமோத்தரச் செய்யுள் வருமாறு:-

“துங்கமலி பொதியத் தென்பால் தொடர்ந்த அடிவாரத்தில்
அங்கனக லங்கையு மேழ்வரைச் சாரலடித்தே” என்பது.

எனவே இதுவரை நாம் அறியக் கூடிய உண்மைகள் இவையாகும் குமரி நாட்டில் தமிழராகிய ஒரின மக்களே வாழ்ந்தார்கள் என்பதும், உலகில் மக்கள் கூட்டத்தின் ஆதிப்பிறப்பிடம் குமரி நாடே என்பதும், அவர்களே மக்கள் நாகரீகத்துக்கு முன்னோடிகளாய் இருந்தனர் என்பதும், சிவழிபாடே அவர்களின் கடவுட் கொள்கை என்பதும், கடல்கோள் காரணமாக குமரிநாடு அழிவுற்றுச் சிதைந்தது என்பதும், அப்பொழுது ஈழமும் இந்தியாவும் பிரிந்து வேறு வேறு நாடாயின என்பதும், ஆரியர் வருகையால் தமிழினம் சிதைந்து சிறுமை எய்தினர் என்பதும் அன்றி ஒரு பகுதியார் ஆரியரோடு கலப்புற்று ஆரியர் ஆயினர் என்பதும், தமிழ் இனம் தென் பகுதிக்குத் தள்ளப்பட்டனர் என்பதும் ஆரியர் வருகையால் பல இன, பல மொழிப் பாகுபாடுகள் ஏற்பட்டன என்பதும், ஈழம் என்னும் சொல் லங்கா என மொழிபெயர்க்கப்பட்ட தென்பதும், அவ் லங்கா தமிழ்மரபின்படி இலங்கை என உருத் திரிந்தது என்பதும் ஆகவே லங்கா, இலங்கை என்ற பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பின் ஏற்பட்ட பெயர் என்பதும் வரலாற்று ஆசிரியர் ஒப்புக்கொள்ளக் கூடிய சந்தேக விபரீதம் அற்ற மறுக்க முடியாத பேருண்மைகளாகும்.

இக் குமரிநாட்டைப் பூதத்துவ நூலார் “காண்டுவபூமி” எனவும், ஐரோப்பியர் “லெமூரியாக் கண்டம்’ என்றும் அழைப்பர். இக் குமரி நாடு தென் அமெரிக்காவில் இருந்து ஒளஸ்திரேலியா வரையும் விந்திய மலையில் இருந்து தென் கடல் வரையும் பரவியிருந்ததாக ஆய்வாளர் கூறுவர்...

ஈழமும் வரலாறும்...
ஈழத்துக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன என முன்னர் கூறினாம் அவற்றுள் ஈழம் என்ற பெயரும். மணிபல்லவம் என்ற பெயரும் தவிர்ந்த ஏனைய பெயர்கள் வடமொழியாளராலும், அராபியராலும். ஐரோப்பியராலும் வழங்கப்பட்ட பிற்பட்ட வழக்காகும்.

இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளில் ஆரியர் வருகைக்குப் பின்னரோ? அன்றி முன்னரோ தமிழர் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்து குடியேறினர் என்றோ? தமிழரை விட வேறுமொழியாளர் அங்கு வாழ்ந்தனர் என்றோ கூறுவதற்கு உண்மையான ஆராய்ச்சி முடிபோ, வரலாறோ வேறு எவ்வித ஆதாரமோ யாதும் இன்று. இதனை எவரும் களங்கமற ஒப்புக் கொள்வர்.

இனி ஈழம் என்ற சொல்லைப்பற்றி ஆராய்வாம். இச் சொல் ஒலிவடிவினாலும் பொருட் தன்னையிலும் ஓர் தனித்துவம் உடையதாகச் சிறந்துவிளங்குகின்றது. ஈழம் தூய தனித் தமிழ்ச் சொல். காலத்தால் மிக மிகப் பழமையுடைய சொல். குமரி நாடிருந்த காலத்தில் அந்நாட்டில் ஒர் உள்நாட்டைக் குறிக்கும் பெயராக இருந்ததாக வேண்டும். தமிழுக்குச் சிறப்பு ஒலியாக உள்ளதும், ஏனைய உலக மொழிகள் எவற்றிற்கும் இல்லாததுமாகிய “ழ”கர ஒலியைத் தன்னகத்தே கொண்டது. ஈழம் என்ற சொல் தரும் பொருள் பொன், கள் என்னும் இரு பொருள்களுமாகும். இப்பொருள் இரண்டையுமோ அன்றி மிகுதியும் சிறப்பும் நோக்கி ஒன்றையோ கருதி அதனை எவரும் எளிதில் உணரத்தக்கதாக ஈழம் எனப்பெயரிட்டு அழைக்கலாயினர். இச்சொல் இன்று திரிசொல்லாகி அரிதுணர் பொருளதுவாய், அகராதிச் சொல்லாய் கற்றோர் மாத்திரம் அறியத்தக்கவகையில் வழக்கு அருகி விட்டது. காரணம் வழக்கு வீழ்ந்தமையே, வழக்கு வீழ்ந்தமைக்குக் காரணம் “லங்கா” என உருமாறி லங்கா இலங்கையென வழங்கப்பட்டமையே.

இனி, ஈழம் சிவதருமோத்தரத்தில் கனகமயமான இலங்கை என்றும், அது மகேந்திரமலையின் அடிவாரத்தில் உள்ளது என்றும் கூறப்படுகின்றது. எனவே அம்மலை அடிவாரத்தில் பொன் மிகுதியாகக்காணப்பட்டது என்பது போதரும். பொன் ஈழநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாகப் பழைய விவிலிய நூல் கூறும். விவிலிய நூலில் “ஓவிர் தேசத்தில் இருந்து பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, தோகை கொண்டு வரப்பட்டன” எனக் குறிப்பிட்டிருக்கிறது. அக்காலத்தில் கடல் கடந்து வியாபாரம் செய்தவர்கள் அராபியர். இவர்கள் பழைய இலக்கியங்களில் யவ்வனர் என அழைக்கப்பட்டனர். ஒவிர் தேசம் என்பது மாதோட்டப்பகுதியைக் குறித்த பெயர் ஈழம் முழுமையையும் குறிப்பதாயிற்று. பண்டைக்காலத்தில் ஈழநாட்டின் சிறந்த பிரபல்யமான கடற்றுறைமுகம் மாதோட்டமே. இவ்விடம் சூரன் ஆட்சிக்காலம் தொடக்கம் நாகர் குலத் தமிழரின் வதிவிடமாய், ஆட்சி நகராய் பல்லாயிரம் ஆண்டு சீரும் சிறப்புமுற்று விளங்கியது. சூரன் மனைவி பதும கோமளையும் மாதோட்ட நாக அரசர் குலக் கன்னிகையே இராவணன் மனைவி மண்டோதரியும் மாதோட்ட அரசபரம்பரையைச் சேர்ந்த ஓர் அரச கன்னிகையே. எனவே சூரன்தொடக்கம் ஓர் சிறந்த அரசதானியாகவும் சிறந்த கடற்றுறைமுகமாகவும் விளங்கியதென்பது அங்கை நெல்லி. காந்தக் கோட்டையும் இங்கேயே அமைந்திருந்தது. இவ்வரச பரம்பரையினர் ஒவியக் கலையில் சிறந்த வல்லுனர்@ ஒவியக் கலையை வளர்த்தவர்கள் அதனாலேயே “ஓவிர்” தேசம் எனப்பட்டது. கால வரையறை இல்லாத திருக்கேதீச்சரம் என்னும் சிவாலயம் மாதோட்டத்திலேயே உள்ளது.

இன்னும் ஈழநாட்டிலுள்ள பொன்னாலை பொன்னாவெளி, பொன்னாலைக்கட்டுவன் என்னும் இடங்கள் பண்டைக்காலத்தில் பொன் அகழ்ந்தெடுத்த நாடுகளாகவும் இருக்கலாம். இவைகள் பழைய பெயர்களே.

இனி, ஈழம் என்பது “கள்” என்னும் பொருளையும் தரும் என்றாம். பண்டைக்காலத்தில் ஈழநாட்டில் “கள்” இறக்கும்தொழில் முக்கியமான தொழிலாகக் கொள்ளப்பட்டிருக்கிறது இன்றும் கள் இறக்கும் தொழில்விசேடமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்ட பண்டைத்தமிழ் மக்களை பிற்காலத்தில் சாணார் என நாமம் சூட்டி அழைக்கலாயினர். அவ்வாறு அழைக்கப்பட்ட காலம் இந்தியாவில் இருந்து மக்கள் இலங்கையின் யாழ்ப்பாண அரசு தோன்றிய காலத்தில் குடியேறியவர்களால் சுட்டி உணர்த்தப்பட்ட பெயராகும். சுமார் கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் எனக் கூறலாம். ஆனால் சாணார் எனப்பட்ட அவர்கள் இன்று அத்தொழில் செய்வதில்லை என்றாலும் அவர்கள் பரம்பரையினர் சாணார் எனவே அழைக்கப்படுவார்கள். இவர்களே ஈழநாட்டின் பூர்வ குடிகள். இவர்கள் ஈழவர் என்றும் அழைக்கப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அழைக்கப்படுவதே, அவர்கள் ஈழநாட்டின் பூர்வ குடிகள் என்பதைச் சந்தேக விபரீதம் இன்றி தெளிவாக உணர்த்துகின்றது. ஈழநாட்டில் பூர்வ நாட்டின் பூர்வ குடிகள் என்பதைச் சந்தேக விபரீதம் இன்றி தெளிவாக உணர்த்துகின்றது. ஈழநாட்டில் வடகீழ்ப் பகுதிகளில் கரையோரமாகக் காணப்படும் இயற்கைத் தாவரம் பனையே. பனையிலிருந்து பெறப்படுவதும், மக்களால் மிகுதியும் விரும்பப்படுவதும் அவர்கள், மனதைக் கவருவதும் ஆகிய ஒருபொருள் கள்ளே. எனவே கள் இயற்கையாக மிகுதியாகப்பெறப்படும் நாடு என்னும் கருத்திலும் ஈழம் என்னும் சொல்லை நினைவு கூரலாம். ஆகவே மக்களுக்குத் தேவையான சிறப்புடைப் பொருளான பொன்னையும். கள்ளையும் மிகுதியாகத் தரும் வளங்கொழிக்கும் நாடு பொன்னாடு எனக் கருதி ஈழம் என்ற பெயரைச் சூட்டி அழைத்து வரலாயினர் என்றே கொள்ளக் கிடக்கி;ன்றது.

இரு பொருட்களும் மக்கள் உள்ளத்தைக் கவரும் பொருட்களே. மனதைக் கவரும் பொருட்களில் ஆசையும் மதிப்பும் அதிகம் அல்லவா? அதனால் அப் பொருட்களைத் தன்னகத்தே கொண்ட ஈழம் என்ற சொல்லைப் பெயராக வைத்து மகிழ்;ந்தனர் என்பது மிகவும் சால்புடையதேயாகும். அன்றி வளம் செறிந்த செழிப்புள்ள நாட்டைப் பொருள் கொழிக்கும் பொன்னாடு என்று கூறுதலும் மரபன்றோ? எனவே ஈழம் என்ற பெயர் காரணமும் அதன் பழமையும் புலனாயிற்று.

ஆனால் சிவதருமோத்தரம் கனக இலங்கை எனக் கூறியிருப்பதினாலும், விவிலிய நூலில் ஈழத்திலிருந்து பொன் ஏற்றுமதியானது எனக் கூறியிருப்பதினாலும் கள் இறக்கும் தொழில் வடகீழ்ப் பகுதியில் மிகுதியும் நடைபெற்றிருப்பதனாலும், அத்தொழிலோர் குடும்பங்கள் ஈழத்தின் பூர்வ குடிகள் ஆனதினால் ஈழவர் என அழைக்கப்பட்டமையாலும் அவ்விருவகைப் பொருள் வளங்களையும் கருத்திற் கொண்டே ஈழம் எனப் பெயர் சூட்டி அழைக்கலாயினர் என்பதே கொள்ளற் பாலதாகும்.

இனி, ஈழம் என்ற சொல்லே மிகவும் பழைய வழக்கு என்பதை அது தமிழ்ச் சொல்லாய் இருக்கும் காரணத்தினாலும் தமிழரே ஆதிக் குடிகள் ஆனதினாலும் ஐயமின்றித் தெளிவாம். தமிழ்நாட்டுக்கு ஆரியர் வருகை மிக மிகப் பிற்பட்ட காலமாகும். ஆதலின் ஆரியர் வழக்கினால் ஏற்பட்ட ‘லங்கா’ என்ற பெயர் ஈழம் என்ற சொல்லின் வடமொழி உருவமே என்பது தெளிவு. லங்காவைப்போன்று ஏனைய வடமொழி உருவமே என்பது தெளிவு. லங்காவைப்போன்று ஏனைய வடமொழிப் பெயர்களும் பிற்பட்ட வழக்கே. சங்க கால வழக்கு ஈழம் என்பதே அன்றிப் பிற்காலம் கி. பி. 12ம் நூற்றாண்டு வரை பிற்காலச் சேர, சோழ, பாண்டியர் காலத்திலும் ஈழம் எனவே வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. இலங்கை என்ற வழக்கு உயர்ந்தோர் வழக்கில் இடம்பெறவில்லை 1ம் இராசேந்திர சோழன் சாசனத்தில் “பெருங்கடல் ஈழத்தரசர்தம் முடியும்” எனக் கூறப்படுகிறது. 1ம் இராசராசன் காலத்தில் அவனது சாசனத்தில் ‘முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும்” எனவே கூறப்பட்டுள்ளது. ஆதலின் ஈழம் என்பதே நாடு முழுவதையும் குறி;க்கும் பழமையான பெயர் என்பதை அறிக. இன்னும் பட்டினப்பாலையில் “ஈழத்துணவும் காழகத் தாக்கமும்” எனக் கூறியிருப்பதை உணர்க.

இனி ஈழம் என்பதற்கு யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய முதலியார் இராசநாயகம் அவர்கள் “இந்நாட்டின் பண்டைக்காலத்தில் ஈழு என்றொரு மொழி பேசப்பட்டு வந்ததென்றும் அதனால் இந்நாட்டுக்கு ஈழம் எனப் பெயர் வரலாயிற்று” எனக் கூறுவர்.

ஈழு என ஒரு வேற்றுமொழி இருந்தமைக்கு என்ன சான்று? நாட்டில் பேசிய தமிழ் மொழியை நாட்டின் பெயரால் ஈழு எனக் குறிப்பிடலாம் அல்லவா? ஈழ நாட்டு மொழி ஈழு என அந்நியரால் வழங்கியிருக்கலாம். அவ் வழக்கு எவ்வகையாலும் பொருத்தமானதல்லவா? ஈழநாட்டு மொழி ஈழு அது ஈலு என வழங்கப்பட்டதே உண்மை வரலாறு ஈழு என ஒரு மொழி தமிழின் வேறானதாயின் அம் மொழி பேசிய மக்களினம் யாரோ? அவ்வாறு வேறு இனம் இருந்தமைக்கு ஆதாரம் உண்டா? ஈழு என ஒரு வேறு பாஷை இருந்ததென்பதற்கு யாதாயினும் ஆதாரம் சான்று காட்டுவாரா? அம் மொழி பேசியவர்கள் தமிழரின் வேறானவர்களா? வேறானவர்களாயின் அக் குழுவினர் இன்றுயாரோ? தமிழர்கள் இந்நாட்டிற்கு எங்கிருந்து வந்தனரோ? ஆகவே தமிழரின், தமிழின் உற்பத்தியிடம் யாதோ? ஆதலின் முதலியார் கூற்று முயற்கொம்பாகும். உண்மையை வாசகர்கள் ஆராய்ந்து சிந்திக்க வேண்டுகின்றேன். ஈழநாட்டில் தமிழ்மொழி ஒன்றே தவிர வேற்றுமொழி ஒன்று இருந்த தென்பதற்கு வரலாற்;றுக் கெட்டிய காலம் தொடங்கி இன்றுவரை எவ்வித ஆதாரமும் இல்லை.

புத்த மதத்தோடு இங்கு வந்த புத்த பிக்குகள் ஈழநாட்டில் ஈழநாட்டு மக்களால் பேசப்பட்ட தமிழ் மொழியை நாட்டின் பெயரால் சுட்டி ஈலு மொழியெனக் கூறியிருக்கலாம். இது அவர்களுடைய வழக்கென்றே கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அழுத்தம் திருத்தமாக ஈழு என உச்சரிக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஈலு என வழங்கினார்கள். அஃது பின்னும் காலக்கிரமத்தில் எலு என்று உரு மாறலாயிற்று. எனவே அவர்கள் ஈலு என்றும் வழங்கிய பெயர் ஈழநாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியைக் குறித்தேயன்றி ஈழு என ஒரு மொழி பேசப்பட்டு அதனால் நாட்டுக்கு ஈழம் எனப் பெயர் வந்ததன்று. இதுவே உண்மை வரலாற்று நிகழ்ச்சியாகும். இன்னும் எலு என்னும் சொல்லாகிய பெயர் சிங்கள மொழியிலேயே காணக் கிடப்பதாலும் வேறு உலக மொழிகள் எதினாலும் அப்பெயர் கூறப்படாமையினாலும் மேற்போன்ற உண்மை இன்னும் தெளிவாகிறதன்றோ?

இனி. ஈழு என்னும் பெயருடைய ஒரு மொழியை அங்கு வாழ்ந்த இயக்கர், நாகர் பேசினார்கள் என முதலியார் இராசநாயகம் அவர்கள் கூறுவதற்கு என்ன சான்று? தாம் எழுதிய நூலில் ஆதாரம் காட்டியுள்ளாரா? இயக்கர், நாகர் யார்? அவர்கள் ஈழநாட்டின் பூர்வீக தமிழர் அன்றோ? அவர்கள் பேசிய மொழி தமிழே. ஈழு என்றொரு வேறான மொழி ஒன்று இருந்திருக்குமானால் இலங்கை இந்திய வரலாற்றில் அல்லது தமிழ்ப் பழைய சங்க இலக்கியங்களில் எங்கேனும் பேசப்பட்டது உண்டா? ஏன்இந்தியாவிலும் இயக்கர், நாகர் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மக்கள் குழுவினர்கள் வாழ்ந்தார்கள் அன்றோ? அப்படியானால் இந்தியாவிலும் ஈழு மொழி பேசப்பட்டிருக்க வேண்டுமே. சங்க காலத்தில் இருந்த கி.பி. 12ம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்றில் இலக்கிய இலக்கண நூல்களில் ஈழம் என்னும் மொழி தமிழ் என என்றுமே கூறப்படுகின்றது.

அன்றியும் ஈழு என்னும் சொல்லே முற்பட்ட வழக்காயிருந்து பின் அச் சொல்லே எலு என வழக்கில் வந்தது எனக் கூறும் முதலியார் கூற்றே ஈழு என்னும் சொல் தமிழ் என்பதனை வலியுறுத்துவதாகும். ஈழ என்னும் சொல் தமிழ் மொழியின் சிறப்பொலியாகிய “ழ’கர ஒலியைக் கொண்டுள்ளது. ஆதலின் ஈழு என்னும் சொல் தமிழ் மொழியில் உள்ள ஓர் சொல் என்பதனை மறுக்க முடியாது. எனவே ஈழு என முதலியார் குறிப்பிடும் மொழி தமிழ் மொழியே அன்றி வேறல்ல. ஆதலின் இயக்கர் நாகர் பேசிய மொழி தமிழ்மொழி என்பதற்கு யாதொரு ஐயப்பாடும் அன்று. ஆதலின் இயக்கரும் நாகரும் இலங்கையின் (ஈழம்) பூர்வீகத் தமிழர் என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் அன்று....

தொடரும்... பகுதி-5 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக