ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-7

ஈழமும் பழைய நூல்களும்...
இனித் தென்னாட்டு மக்களின் (இந்தியா, ஈழம்) மிகப் பழைய வரலாற்றினை அறிவதற்கு 3 பெரு நூல்கள் கிடைத்துள்ளன. அவை கந்தபுராணம், இராமாயணம், பாரதம் என்பன. இவற்றுள் கந்தபுராண வரலாறே இன்று நாம் அறியக்கூடிய வரலாற்றில் ஆதி வரலாற்றைக் கூறுவது. புராணம் என்றால் புனர் கதை எனக்கூறுவர் சிலர். அவர் அறியார். நாம் நம்பமுடியாதனவற்றைப் புனர் கதை எனக் கூறுதல் முறையன்று இராணவன் ஆகாயமாக்கமாக சீதையைக் கொண்டு சென்றான் என்பதை இன்று நாம் வானவூர்தியைக் கண்ணால் காண்பதற்கு முன் புனர்கதை என்றே எண்ணினோம். இப்பொழுது அதுவும் உண்மைதான் என நம்புகிறோம். ஆதலின் நம் அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டாதவற்றை புனர்கதை எனக்கூறி வாளாவிடுதல் மாபெரும் இழுக்காகும். புராணம் என்றால் பழைய வரலாறு என்பது பொருள். நாம் இப்பொழுதுகலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புராணம் என்ற பெயரால் சுட்டப் படும் நூல்கள் யாவும் சென்ற யுகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி வரலாறுகளையே கூறுவன. ஆனால் இன்று சில நூற்றாண்டு கடந்த வரலாறுகளையும் புராணம் என்னும் பெயரால் நூல் செய்வராயினர். உதாரணமாக, திருவாதவூரடிகள் புராணம், திருத்தொண்டர் புராணம் முதலியன. கந்தபுராண வரலாறு முழுமையும் துவாபரயுகத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளேயாகும். அன்றி அதற்கு முந்திய வரலாற்று நிகழ்ச்சிகளிற் சிலவும் அமையலாம்.

ஆனால் இம் மூன்று நூல்களின் வரலாறுகளும் முதன் முதலாக ஆரியர் வாயினின்றும் வடமொழி நூல்களாகவே வெளிவந்தன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் கந்தபுரண, இராமாயண வரலாறுகள் தமிழர் மத்தியில் கர்ணபரம்பரைக் கதையாகவும் செவிவழிக்கல்வியாகவும், கற்றோர் மத்தியில் உதாரண எடுத்துக் காட்டுக்களாகவும் இருந்து வந்தன. கந்தபுராணத்தில் சூரன், சிங்கன், தாரகன் ஆகிய முடியுடை மன்னர் மூவர் வரலாறு காணப்படுகின்றது. இவர்கள் மூவரும் ஒரு தாய் மக்கள். இவர்கள் நாடு தென்னாடாகிய ஈழ நாடாகும். சூரனது ஆட்சி நகர்தற்போது காணப்படும் ஈழநாட்டுக்குத் தெற்கே ஈழநாட்டின் ஒரு பகுதியாய் இந்துமாக் கடலுள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அதன் பெயர் வீரமகேந்திரம் என்பது, இது வடமொழியாளர் வழங்கிய பெயராகும். சிவதருமோத்தரத்தில் மகேந்திரம் எனப்படுவது குமரிமலையே, எனத்தொல்காப்பியம் எழுத்ததிகார முகவுரையில் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள். எனவே பரந்துபட்ட குமரிமலையின் தென்கோடியிலேயே சூரனது ஆட்சி நகர் அமைந்திருந்தது என்பது பெறப்படும். சிவதருமோத்தரக் கூற்றின்படி மகேந்திரமலையின் அடிவாரத்திலே கனக மயமான இலங்கை இருந்ததென அறிகின்றோம்.

எனவே மகேந்திரமலையைத் தன்னகத்தே கொண்டிருந்ததே ஈழம் என அறிக. சூரன் காலத்துக்கு முற்பட்ட வரலாறே சிவதருமோத்திரம் கூறுவது. ஆனால் சூரன் காலத்துக்கு முன் ஓர் பெருங் கடல் கோள் நடைபெற்று அதனால் மகேந்திர மலையின் பல பகுதிகள் கடலுள் அமிழ்ந்தி குமரிநாடு அழிந்துவிட அதன் அதி; உயர்ந்த பாகமாகிய வீரமகேந்திரம் உட்பட ஈழநாடே எஞ்சியிருந்ததாகும். இதனால் குமரிநாடு கடலுள் அமிழ்த்திய பெரிய கடல்கோள் சூரன் காலத்துக்கு முன் நிகழ்ந்ததென்பது துணிபு. அன்றியும் குமரிநாடு நாடாய் இருந்த காலத்து ஒன்றாய் இருந்த ஈழமும், இந்தியாவும் சூரன் ஆட்சி;காலத்தில் கடலால் பிரிக்கப்பட்டு வேறு வேறு நாடாயினமையே போதிய சான்றாகும். கந்தபுராணக் காலத்தில் இராமர் காலத்து அணை கட்டிச் சென்ற கடற் பகுதி காலால் நடந்து செல்லத்தக்க வகையில் இருந்ததன்றோ? ஏன் வீரவாகு தேவர் தூது சென்றபோது கந்தமாதனத்தில் இருந்தே கடலைத் தாண்டி வீரமகேந்திரம் சென்றார் எனக் கூறப்படுவதால் அறிக கந்தமாதனம் இராமர் அணை கட்டிச் சென்ற கடற்பகுதிக்கு அப்பால் தென்பாலுள்ளது.

எனவே குமரிநாடு கடலுள் அமிழ்ந்தியபின் உள்ள ஈழத்தின் ஆதிக் குடிகளே சூரன் ஆதியோர் என்பது துணிபாம் இக்குலத்தினர் அசுரர்என்றும், அவுணர் என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. அக்கூற்றில் ஓர் வியப்பும் இல்லை@ வடமொழியாளராகிய ஆரியர்தம்மின்வேறாக அவர்களைச் சுட்டி அறியவேண்டி ஓர் காரணத்தை அடிப்படையாக வைத்து பெயரிட்டு அழைக்கலாயினர். ஆரியர்கள் தம்மைச் சுரர்எனக் கூறுவர். ஆகவே இவர்கள் தம்மின் வேறானவர் என்னும் கருத்தமைய அண்மைப் பொருள் தரும். “அ”வைத் தம் பெயரின் முன் நிறுவி அசுரர் என வழங்கலாயினர். ஆதலின் அஃது உயர்வு, தாழ்வு கருதி இடப்பட்ட பெயரன்று. ஆனால் வடமொழி நூல்களில் அவர்களின் மொழி பற்றியோ, இனம் பற்றியோ குறிப்பிடப்படவில்லை.

இனி அவுணர் என்ற சொல்லுக்கு வருவோம். இஃது ஓர் தூய தமிழ்த் தொடர். அ – உணர் எனப் பிரியும் உணர் என்பது உணர்வு என்னும் சொல்லின் கடைக் குறை. உணர்வு என்றால் அறிவு உணர்ச்சி என்பது பொருள். ‘அ’ அண்மைப் பொருள்தரும். ஆகவே அவ்வுணர் என்னும் தொடர் அறிவில்லாதவர்கள், உணர்ச்சியில்லாதவர்கள் எனப்பொருள் தருவதாகும். இவ் வழக்கு தமிழ் மக்களிடையே வாழ்ந்த அறிவுடைப் பெரியோரால் அவர்களது இரக்கப் பண்பில்லாத கொடூரத் தன்மையை உணர்ந்து இவர்கள் அறிவில்லாதவர்கள், உணர்ச்சி இல்லாதவர்கள் என்னும் கருத்தமைய அவுணர் என அழைக்கப்பட்டார்கள் அன்றோ? இன்றும் இவ் வழக்கு சாதாரண மக்களிடையே வழக்கில் நிலவி வருவதைக் காணலாம்.

சூரன் ஆதியோர் அகில உலகையும் ஒரு குடைக்கீழ் தனியரசு செய்த பெரு மன்னர் என்பது கந்தபுராண வரலாற்றில் இருந்து அறிகிறோம். அவர்களை அக்காலத்தில் எதிர்க்கக் கூடிய வேறு மன்னர் யாரும் இருக்கவில்லை என்பதும் வரலாற்றால் அறியலாம். ஆகையினால் அன்றோ கடவுளே மனித உருவில் தோன்றி அவர்களை அடக்கி ஏனையோர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வாழ வகை செய்தாரன்றோ? உலகம் முழுமையும் தனியரசு செய்யும் பெருமன்னர் தோன்றுவது வியப்பன்று. 18ம் 20ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் பிரித்தானிய அரசு உலகில் எதிர்ப்பார் யாரும் இன்றி உலகின் பெரும்பகுதியை ஆட்சி புரிந்து உலகத்திலே தலைமை தாங்கியமை நிகழ்காலச் சான்றாகும் அன்றோ?

இனிச் சூரன் ஆதியோர் வரலாறு ஆரியர் வாயினின்றும் வடமொழியில் காப்பிய ரூபமாக வெளிவந்த காரணத்தால் அக்காலத்து மக்கள் பெயர், மன்னர் பெயர், இடப் பெயர், குலப்பெயர் முதலியன யாவும் வடமொழி உருவில் திரியலாயின. இன்னும் அம்மன்னர்கள் மக்களது விருப்பம், ஆசாரம், பண்பாடு கலைச்;சிறப்பு, உருவ அழகு ஆதியன உள்ளவாறு கூறூமலும். திரித்தும் மறைத்தும் கூறுவராயினர்.

இறைவனே மனித உருவில் அவர்கள் நேரில் முன்னின்று அறப்போர் செய்து ஈற்றில் அவர்களுக்குத் தம்மை யாரென்று உணரச் செய்து தாமே அவர்களை ஆட்கொண்டார் என்றால் அவர்கள் தம் பெருமைதான் என்னே? ஈழம் உட்பட தமிழ்நாடெங்கணும் அன்று தொட்டு இன்றும் சூரன்போர் விழாக் கொண்டாடப்பட்டு வருதல் அவர்களின் பெருமைக்கோர் எடுத்துக்காட்டன்றோ? அவர்களே ஆதிகாலத்து வீரத் தமிழர்கள் என்பதும். சிவநெறிக்கோட்பாடு உடையவர்கள் என்பதும், உண்மையான சமயிகள் என்பதும் நன்குபுலனாகிறதன்றோ? அவர்களே தமிழ் மூதாதைகள் என்பதற்கு அவ்விழா ஈழ நாட்டிலும் தமிழ் நாட்டிலுமே நடைபெற்று வருதலே தக்க சான்றாகும் அன்றே? தமிழர் வாழும் நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் எங்கேனும் இவ்விழா கொண்டாடப்படுகின்றதா? இல்லையே. ஆதலின் ஈழநாட்டின் உலகப்பெரு மன்னர்களாய் ஆட்சி புரிந்தவர்கள் அவர்களே யாவர். இன்றைய தமிழ்க்குடிகளின் சமய ஒழுக்கங்களிலும், வாழ்க்கை நெறிகளிலும் பண்டைய சங்க இலக்கியங்களிலும் சூரன் ஆதியோர் வரலாறு புலப்படுத்தப்பட்டும் கர்ணபரம்பரையாகப்பேசப்பட்டு வருகின்றதன்றோ?

இன்னும் உலக மக்களிடையே எங்கும் இல்லாத ஒரு செய்தற்கரிய தனிச்சிறப்பு வாய்ந்த வழக்கம் தமிழ்ப்பெருங் குடி மக்களிடையே நிலவி வந்திருக்கின்றது. அது தான் உடன்கட்டை ஏறும் வழக்கம் அஃதாவது கணவன் உயிர் நீத்த காலத்து அவனது உடல்வேகும் ஈமத்தியிலே மனைவியானவள் தனது கணவன் உடலைக் கட்டித் தழுவி உடன் எரிந்து ஈருயிரும் ஒன்றுகூடி வாழ்தலாகும்.

இவ்வழக்கத்தைச் சூரன் ஆதியோர் வரலாற்றில் காண்கிறோம். சூரன், சிங்கன், தாரகன் இறந்ததும் அவர்தம் அன்பிற் கனிந்த கற்பின் மயமாக வாழ்ந்த பதுமகோமளை, விபுதை, சௌரி ஆகிய மூவரும் உடன்கட்டையேறித் தத்தம் கணவரைக் கூடினர்.

ஆகவே சிறிதேனும் ஐயத்துக்கிடமின்றி நாம்தெளிவாக அறியக்கிடப்பது சூரன் முதலாம் முடியுடை மன்னர் மூவரும் அவர்தங் கிளையினரும் அவர்கள் காலத்து ஏனைய மக்களும் தொன்மை மிக்க தமிழ்ப் பெருங்குடிகள் என்பதே. ஆகவே அவர்கள் நாடு ஈழ மாதாவின் ஈழமே ஆதித் தமிழ்நாடு என்பதற்கு யாதேனும் ஐயப்பாடு உண்டா?

இதனால் ஈழநாட்டிற்கு உலகில் வேறெந்த நாட்டிற்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு என்னை? ஒரு காலத்தில் ஈழநாடு சூரன் ஆதியோரின் தாய் நாடாகவும், ஆட்சி நகரும். புறநகருமாய் இருந்து உலகம் முழுமைக்கும் தலைமைதாங்கி விளங்கியதாகும்

தமிழரும், திராவிடரும்...
இனி வடநாட்டார் தமிழரைத் திராவிடர் எனவும் அழைத்தனர். இவ்வழக்கு மிகப்பிற்பட்ட கால வழக்காகும். திராவிடர் திராவிடம் என்றசொல் வழக்கு தமிழ் மொழியிலோ அன்றிப் பண்டைத் தமிழ் நூல்களிலே இருந்ததில்லை. திராவிடம் என்ற சொல் செந்தமிழ்நாடு, கொடுந்தமிழ் நாடு இரண்டையும் உள்ளடக்கிய பெயராகும். ஆனால் இச் சொல் எவ்வாறு உருப்பெற்றது என்பதற்குப் பலரும் பலவாறு கூறுப. பேச்சு மொழியால் வேறுபட்ட மக்கள் ஒருவர்மொழியை ஒருவர் உச்சரிக்குமிடத்து உச்சரிப்பில் ஒலியில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தமிழ் என்ற சொல்லைத் தெளிவாக வடமொழியாளர் உச்சரிக்கமாட்டார்கள். இதுபற்றி முன்னர் பல இடங்களில் விளக்கியுள்ளேன். தமிழ் என்ற சொல்லை வடமொழியாளர் தமிளம் என்பர். தமிடம் எனவும் கூறுவர். அவ்வொலியே த்ரமிளம், த்ரமிடம் என வரலாயிற்று. அவ்வொலியை சீர்செய்வான் கருதிய வடமொழி வல்லுநர் வடமொழி மரபிற்கேற்ற திராவிடம் என அமைத்தனர் என்றே கொள்ளவேண்டும்.

ஆனால் ஓர் வியப்புக்குரிய விடயம்@ அஃது திராவிடம் என்னும் சொல்லே ‘தமிழ்’ என மருவி வரலாயிற்று என்பதே. திராவிடம் என்ற சொல் ஆரியர் வருகைக்குப் பின்னரே அவர்களால் வழங்கப்பட்டு வழக்கில் வந்த சொல்லாகும். தமிழ் என்னும் சொல்லோ வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடக்கம் தமிழர் இந்நாட்டில் உள்ள காலம் தொடக்கம் வழக்கில் இருக்கும் சொல்லாகும். அரியர்வருகைக்கு முன்னரே இந் நாட்டின் ஆதிக் குடிகளாக வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பது முன்னர் விளக்கப்பட்டது. ஆதலின் திராவிடம் என்ற சொல்லே மருவித் தமிழ் என வந்தது எனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருந்தாத தொன்றாகும். திராவிடம் என்றசொல் தமிழர்வாய்வழியாகத் தமிழ் என மருவுமா? சிந்தியுங்கள். திராவிடம் என்ற சொல்லைத் தமிழர் நன்கு சொல்லும் ஆற்றல் உடையார். ஆதலின் அஃது எப்படித் தமிழ் எனத் திரியும். தமிழ் என்னும் சொல் ஆரியர் வாயில் மாற்றம் அடைதல் இயல்பு இவ்வாறு கூறுவார் கூற்று மகனுக்குத் தந்தை பிறந்தான் என முறை பிறழக் கூறும் முரண்பட்ட கூற்றாகும்.

திராவிடம் என்ற சொல் வழக்கு ‘குமாரில்பட்டர்’ என்பவரால் எடுத்தாளப்பட்டு அவர் காலத்தில் இருந்தே வழக்கில் வரலாயிற்று எனக்கூறுவாரும் உளர். குமாரில் பட்டர் என்பவர் “மரத்தின் கீழ் துதிப்பவர்கள்” என்னும் கருத்தை உள்ளடக்கி ஆக்கிக்கொண்ட வடமொழி எனக்கூறுப. அவ்வாறு அமையினும் அமையலாம். அவ்வாறாயின் குமாரில்பட்டர் காலத்துக்குப் பின்னரே அச் சொல் வழக்கில் வந்தாக வேண்டும்.

அஃதாவது எவ்வாறாயினும் இன்று தமிழர்களையும், தமிழ் நாட்டையும் திராவிடர், திராவிடம் எனக் கூறுவது அகில உலக வழக்காக மாறிவிட்டதன்றோ? இது அண்மைக்கால நிகழ்ச்சி. சேய்மைக்கா நிகழ்ச்சிகள் உருமாறுதலும், வலியிழத்தலும் நூதனம் அன்று.

எனவே ஆதித் தமிழ்ப் பழங்குடி மக்களை ஆரியர்கள் பின்னாடி வந்து தமிழ்ப் பகுதிகளில் குடியேறியும், நூல்கள் யாத்தும் தமிழ் இடங்களுக்குத் தம் மொழியில் புனைபெயர் சூட்டியும் தமிழினத்தாருக்குக் காலத்துக்குக் காலம் தன் மனம் போனவாறு புனை பெயர்களைச் சூட்டியும் இழிவுபடுத்தினர். ஆதலின் வடமொழியாளரால் தமிழ் இனத்துக்கோ, தமிழ் மொழிக்கோ தமிழ் நாட்டுக்கோ சூட்டப்பட்ட பெயர்கள் யாவும் பிற்கால வழக்காகும்...

தொடரும்... பகுதி-8 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக