திங்கள், 20 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-11

படை எழுச்சிகளும் விளைவும்...
புத்த மதம் வந்து வலுப்பெற்ற பின்னர் சிங்களம் என்றொரு மொழியும் வழக்கில் வந்தபின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்கள் காலக்கிரமத்தில் வேறோர் தனி இனமாக மாறினர். அவர்களே சிங்களவர் என்போர்.

புத்த மதத்தை ஏற்காது தமது பாரம்பரியமான இந்து மதத்தையே தழுவியர்கள் இந்துக்கள் என்றும், தமிழர்கள் என்றும் வேறாகப் பிரித்துக் காணப்பட்டனர். எனவே ஈழம் முழுமையும் பரந்திருந்து வாழ்;ந்த தமிழர். தமிழர்என்றும், சிங்களவர் என்றும் இரு பிரிவாயினர். இனி புத்த மதத்தினர் ஆகிய சிங்களவர் மத்தியில் வாழ்ந்த இந்து சமயத் தமிழர்களும் காலப்போக்கில் சிங்களவராக மாறிவிட்டார்கள். அதனால் வட கீழ்ப் பகுதி தவிர்ந்த இலங்கையின் ஏனைய இடங்களில் வாழ்ந்தோர் அனைவரும் ஒரே சமுதாயம் ஆயினர் சிங்கள மொழியும், புத்த மதமும் ஈழநாட்டில் அனுரதபுரி தொடக்கம் தெற்கு, தென்மேற்கு நோக்கியே வளர்வதாயிற்று. வரலாறே சான்று. அங்ஙனம் அப்பகுதிகள் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் வடகீழ்ப்பகுதி தவிர்ந்த இடத்தில் வாழ்ந்;த மக்கள் அக்காலத்தில் நாகரீகத்தில், கலாச்சாரத்தில் உறுதியான நிலைப்பாடின்மையே. அதனால் பிக்குகள் தம் எண்ணப்படியே ஓர் புதிய மொழியையும் புத்த மதத்தையும், அவர்களிடையே நிலைக்கச் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அன்றியும் அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்றவாறு மக்கள் பின்பற்றுவாராயினர்.

வடகீழ்ப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கலை, கலாச்சாரம், மொழிப்பற்று, மதப்பற்று உடையவர்களாய் இருந்ததினால் புத்த பிக்குகளின் ஏமாற்றம் பலிக்கவில்லை. அன்றியும் தாய் நாடாகிய இந்தியாவின் உறவு வடக்குக் கிழக்குப் பகுதி மக்களுக்குத் தவிர்க்க முடியாததாக இன்றியமையாது வேண்டப்பட்டது. இதனாலும் இப்பகுதி மக்களின் மொழி, மதம், கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவை போற்றிப் பாதுகாக்கப்பட்டன. எனவே பூர்வகாலம் தொட்டு இன்றுவரையும் ஈழநாட்டின் வடகீழ்ப் பகுதிகளே ஒரே நிலையில் மாற்றம் இன்றித் தமிழும் மதமும் நிலவிவரும்பகுதிகளாகும்.

இவ்வாறு ஈழநாட்டு மக்கள் இரு வேறினமாகப் பிரிந்ததினாலும், ஆட்சி அதிகாரம் புத்த மதத்தினர் பால் இருந்ததினாலும் காலக்கிரமத்தில் போட்டிப் பூசல்கள் ஏற்படலாயின. பாரம்பரியமாகத் தமிழ் இந்து மதக் கோட்பாடே உள்ள இந்தியாவுக்கும், ஈழநாட்டில் பிறிதோர் மொழியும் பிறிதோர் மதமும் வளர்ச்சியடைவதும். தமிழ் மொழிக்கும், இந்து மதத்துக்கும் இடையூறு விளைவிப்பதும் சகிக்கமுடியாத வெறுப்பு உணர்ச்சியை உண்டாக்கியது. இலங்கையின் வட கீழ்ப்பகுதி மக்களுக்கு அதிகமான வெறுப்புணர்ச்சி யையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

அதனால் அடிக்கடி இந்தியப்படை எழுச்சிகளும், ஆட்சியும் நிகழ்வதாயிற்று. ஆனால் இந்தியப் படையெழுச்சிகளுக்கு அடிகோலி வைத்தவனும் சூரத்தீசன் என்னும் மன்னனே. இவ்வரசன் புத்த சமய கருமங்களில் ஈடுபட்டானே ஒழிய அரச கருமங்களில் கருத்தும் செயற்பாடும் இல்லாதவனாய் இருந்தான். அதனால் ஆங்காங்கு சிற்றரசுகள் தோன்றலாயின. இந்நிலைமையை மாற்றி தனது ஆட்சியை உறுதிப்படுத்த எண்ணினான். அதனால் இந்தியாவில் இருந்து சேரநாட்டுத் தமிழர் சேனன், கூத்திகன் இருவரையும் அழைத்து துரக சேனைக்குத் தளபதியாக வைத்திருந்தான். அவர்கள் இலங்கை அரசின் பலவீனத்தை அறிந்து சூரதீசனைக் கொன்று ஒருவர்பின் ஒருவராக 22 வருடம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தார்கள். இங்கே கூறப்பட்ட சேனன், கூத்திகன் இருவரும் சாதரண தமிழ் மக்கள் எனக் கருத முடியாது. இவர்கள் சேர அரசர் பரம்பரையில் உள்ளவர்கள் ஆதல் வேண்டும். அன்றேல் ஆளுமை ஆற்றல் எவ்வாறு உண்டாகும்? இவர்களது 22 வருட ஆட்சிப் பெறுபேறு யாதும் கூறாமை ஒர் இருட்டிப் பேயாகும். இவர்கள் இருவர் ஒரு அரசனைக் கொன்ற ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்றால் இவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்திருக்க வேண்டும். ஆதலின் மிகுதியும் தமிழர் ஆதிக்கம் அக்காலத்தில் இருந்ததென்பது புலனாகிறது. இத்தகைய ஆதரவே படை எழுச்சிகளுக்கு எல்லாம் சாதகமாக இருந்ததென்பது வெளிப்படை. படை எழுச்சிகள் யாவும் சிங்கள நாட்டையும். அரசையும், மதத்தையும், சிங்கள மக்களையுமே பாதித்ததென்பது வரலாறு கொண்டே அறியலாம்.

எனவே இந்தியப் படையெழுச்சிகளுக்கு இலங்கைவாழ் தமிழர்கள் சாதகமாக இருந்தார்கள் என்பதும், இந்தியப் படை எழுச்சியாளர்களும் இலங்கைவாழ் தமிழர்களுக்குச் சாதகமாகவே இருந்தார்கள் என்பதும் வரலாறு உணர்த்தும் உண்மை. இனி. இந்தியர்களின் ஒரு நோக்கம் இலங்கையில் குடியேறுவதுமாகும்.

சேனன், கூத்திகன் ஆட்சி, புத்தமதம் இலங்கைக்கு வந்து 70 வருடங்களின் பின்னரே கி. மு. 237 தொடக்கம் ஆரம்பிக்கிறது. இவர்களது ஆட்சி முடிவில் 10 வருடம் நீங்கலாக 1ம் படையெழுச்சி நடைபெறுகிறது. இப்படையெழுச்சிக்கு மூலகாரணம் சேனன். கூத்திகன் ஆட்சி முடிபே. அசேலன் சேனன், கூத்திகனைக்கொன்று அரசைக் கைப்பற்றுகிறான். பின்னர் மலையாளத் தமிழர் (சேர நாட்டினர்) எல்லாளன் என்னும் சோழ அரச குமாரனைத் தலைமையாகக் கொண்டு பெரும்படை திரட்டி அசேலனைக்கொன்று அரசைக் கைப்பற்றினர். எல்லாளன் கி. மு. 205 தொடக்கம் 161 வரை 44 வருடம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். எனவே கி. மு. 237 தொடக்கம் கி. மு. 161 வரை 76 வருடங்களில் 10 வருடம் கழிய மிகுதி 66 வருடம் இந்தியத் தமிழர் ஆட்சி நடைபெற்றிருப்பதை அறியலாம். இந்த 66 வருடம் இந்தியத் தமிழர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து தமிழர்கள் இலங்கையில் குடியேறாமல் இருக்க முடியுமா? அவர்கள் ஆட்சி நகர் அனுராதபுரமே ஆதலின் அனுராதபுரத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் இந்தியத் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்றே கருத வேண்டும். இராசரட்டை முழுமையும் இலங்கை இந்தியத் தமிழர் ஆதிக்கமே வேரூன்றி இருந்தது. இதனை உறுதிப்படுத்துகிறது சிங்கள மக்களின் வரலாறு. என்ன? சிங்கள மக்களின் ஆட்சியும், வாழ்க்கையும் அனுராதபுரத்தை விடுத்து தெற்கு, தென்மேற்கு நோக்கித் தமக்குப் பாதுகாப்புக் கருதி மலை சூழ்ந்த பகுதிகளுக்கு நகர ஆரம்பித்தனர் அன்றோ?

எனவே அனுராதபுரத்திலும் சுற்று வட்டாரங்களிலும் ஏன்? இராசரட்டை முழுமையும் அன்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் பரம்பரையினர் இன்று எங்கே? எல்லாளன் ஆட்சிக்குப்பின் கி. மு. 161 முதல் கி. பி 726 வரை அனுராதபுரி ஆட்சி நிலவியுள்ளது. இக் காலத்தில் வடகீழ்ப் பகுதி தவிர்ந்த இராசரட்டைப் பகுதியில் வாழ்ந்த இலங்கை இந்தியத் தமிழர்கள் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த சமயிகளாக மாறி ஏனைய புத்த சமய மக்களோடு ஒன்றி இணைந்து சிங்களப் பெயர் பெற்றனர் என்றேகருத வேண்டும். அன்றேல் அவர்கள்நிலை என்ன? குடி பெயர்ந்தமைக்கு வரலாறு இல்லை.

புத்த மதம் இலங்கையில் உதயமானது கி. மு. 307 ஆகும். விசயன் பரம்பரையினரின் ஆட்சி பிணக்கின்றி நடைபெற்ற காலம் சூரதீசன் ஆட்சிமுடிபு கி. மு. 237 வரையில் ஆகும். இக்கால இடைவெளி 70 ஆண்டுகள். புத்த மதம் வருவதற்கு முன் விசயன் ஆட்சி கி. மு. 543 தொடக்கம் புத்த மதம் இலங்கையில் உதயமாகிய கி.மு 307 வரை உள்ள காலம் 236 ஆண்டுகளும் தமிழ் நாட்டு மொழியாகவும், சிவ நெறியே மக்களாலும், அரச பரம்பரையினராலும் கைக்கொள்ளப்பட்டு வந்த மதமாகவும் இருந்தது. இதற்குச் சான்று தேவையில்லை. அப்போது சிங்களம் என்று ஒரு மொழியோ, பெயரோ பிறக்கவேயில்லை. உலக அகராதியில் கி. மு. 307க்கு முன் அப்படியொரு சொல்லே இல்லை. அப் பெயரில் ஒரு இனமும் கிடையாது.

இனி, சூரத்தீசன் ஆட்சி முடிபு கி. மு. 237க்குப் பின் இடையே ஒர்பத்தாண்டு இடைவெளி போக கி. மு. 161வரை 66 ஆண்டுகள் இந்தியத் தமிழ் மன்னர் ஆட்சியே நடைபெற்றிருந்தது. எனவே விசயன் ஆட்சி கி. மு. 543 தொடக்கம் தமிழ் மன்னர் ஆட்சி முடிபு கி. மு. 161 வரையுள்ள 382 ஆண்டுகள் இலங்கையின் ஒரே மொழி தமிழே@ சமயம் சிவ நெறியே.

கி. மு. 307க்குப்பின் புத்த மதம் வந்தபின்னர் துட்டகைமுனு காலம் கி;. மு. 137 வரையுள்ள காலம் சிங்களம் என்னும் ஒர் பெயரும், மொழியும் கருக் கொண்டு வளர்ந்த காலமாகக் கொள்ளலாம். சுமார் 25 ஆண்டு காலம். எனவே துட்டகைமுனு காலம் வரையிலும் தமிழே நாட்டு மொழியாக நிலவியதாகும். இக் காலத்தில் புத்த மதத்தைக் கைக் கொண்டவர்களும் இந்து மதத்தையும் கைவிட்டிருக்க முடியாது. எனவே விசயன் தொடக்கம் துட்டகைமுனு வரை தமிழ் மொழியும். சிவநெறியுமே மேலோங்கி இருந்ததென்பது வெளிப்படை. வரலாற்றுக் கண்ணுள்ளோர் யாவரும் இதனை நன்குணர்வர்.

இனி உறுகுணைப் பகுதியின் சிற்றரசனாய் இருந்த கவந்தீசன் மகன் துட்டகைமுனு என்பான் படைதிரட்டிப் போர் தொடுத்து, எல்லாளனது 44 ஆவது ஆட்சியாண்டில் கி. மு. 161ல் அரசைக் கைப்பற்றினான்.

புத்த மதம் வேரூன்றித் தழைக்கவும், சிங்களம் என்றொரு மொழி சீருற்று வளர்ந்து ஈழநாட்டை மாற்றியமைக்கவும், சிங்களவர் என ஒரு இனம் வலுவடையவும், அவர்கள் ஆட்சி உறுதி பெறவும் செய்த மாபெருந் தலைவன் துட்டகைமுனுவேயாவான். தற்கால இலங்கைக்கு அவனே மூல கருத்தாவெனக் கூறலாம். அவனது துணிவையும், ஆற்றலையும் எவரும் வாயாரப் போற்றியே புழக வேண்டும். “தோன்றிப் புகழொடு தோன்றுக” என்னும் வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாகப் போற்றப்படத்தக்கவன்,

ஆனால் ஈழநாட்டின் (இலங்கையின்) சீர்கேட்டுக்கும், அழிவுக்கும் ஏதுவாக பிரிவினையாகிய ஒரு பெரும் மதிலை எழுப்பி நாட்டைக் கூறுபோட்டமைக்கும் துட்டகைமுனுவே மூலகருத்தா எனக் கூறவேண்டும். இனி, இப்பிரிவினை நீங்கி வேறுபாட்டுணர்ச்சியற்று இலங்காதேவியின் மக்கள் நாமெல்லாம் ஓர் இனம் எனும் பான்மையில் சகோதரத்துவமாக தமிழும், சிங்களமும் எல்லோர் நாவிலும் பயில, அதனால் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ. இலங்கை சீரும்செழிப்பும் உற்று மறுமலர்ச்சி அடையச் செய்வதே இன்றுள்ள அரசியல் பெரியாரின் முதற் கடமையாகும்.

அடுத்தது தமிழரின் இரண்டாவது படை எழுச்சியாகும். இப்படை எழுச்சி வாலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் ஆட்சிக்கு வந்த 5ம் மாதம் கி. மு. 103ல் நடைபெற்றது. இப்படை எழுச்சி துட்டகைமுனுவுக்கு 34 ஆண்டுகளின்பின் நடைபெற்றது. இப்படை எழுச்சியை நடத்தியவர்கள் இந்தியத் தமிழர்எழுவர். அவர்கள் புலகத்தன், பாகியன், பனையமாறன், பிலியமாறன், தாட்டியனோடு இன்னும் இருவர் என வரலாறு கூறும். இவர்கள்சோழ நாட்டினின்றும் படை திரட்டி வந்தார்கள் என்றே வரலாறு கூறுகின்றது. எனவே இவர்கள் எழுவரும் சோழ நாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பது துணிபு. சாதாரண குடியான பிரசை படை திரட்டுதலும், பிறிதோர் நாட்டு அரசை எதிர்த்தலும், நாடு பிடித்தலும், ஆட்சி புரிதலும் நிகழக்கூடியதா?

இவர்கள் ஒருவரின் பின் ஒருவராக கி. மு. 103ல் தொடக்கம் கி. மு. 89 வரை 14 ஆண்டுகள் ஈழநாடு முழுமையும் ஆட்சி புரிந்தனர். எனவே எல்லாளன் ஆட்சிக்குப் பின் (161 – 103) சுமார் 58 வருட இடைவெளிக்குப்பின் தமிழர் ஆட்சி மறுபடியும் நிலவுகிறது.

ஆகவே கி. மு. 237 தொடக்கம் கி. மு. 89 வரையுள்ள காலப்பகுதியில் 80 ஆண்டுகள் இந்தியத் தமிழர் ஆட்சியும், 68 ஆண்டுகள் சிங்கள அரசர் ஆட்சியும் நடைபெற்றிருப்பதை அறிக எனவே இக்காலப்பகுதியில் 68 வருடகாலமே அதுவும் இடையிடையே புத்த மதமும், சிங்கள மொழியும் தவழ்ந்து வளர்ந்த குழவிப்பருவமாகும். இக்காலப்பகுதியிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது. ஏன்?

இக்காலப்பகுதியில் ஆட்சி புரிந்த இந்தியத் தமிழர்களின் அரசதானி அனுராதபுரமேயன்றோ? அப் பகுதியில் அவ்வரசர்களும் மக்கள் ஆதரவு இருந்தேயாக வேண்டும். இக்காலப்பகுதியில் சிங்களமும், புத்தமும் தவிழ் நடைபோட்டுக் கொண்டிருந்த காலம். அதனால் தமிழும், சிவநெறியும் வலுப்பெற்றிருந்த காலமேயாகும்.

அன்றியும் இவ்வுண்மையை வாலகம்பாகு வரலாற்றில் வெள்ளிடைமலையெனக் காணமுடிகிறது. இங்குள்ள தமிழர்கள் அனைவரும் காலப்போக்கில் புத்த சமயிகளாய் சிங்கள மொழியைப் பயின்று சிங்களவர்களாய் மாறினர் என்பதே துணி பொருள். வாலகம்பாகு நாட்டைவிட்டு ஒடிக் காட்டில் வசித்த காலத்து அவனையும் அவனைச் சேந்தவர்களையும் பாதுகாத்து உயிர்உதவி செய்தவன் தனசிவன் என்னும் ஓர் தமிழனே. அன்றியும் வாலகம்பாகுவின் மனைவி சோமாதேவியும் தமிழர் கைப்பட்டு அடைக்கலம் புகுந்தாள். அதலின் அனுராதபுரச் சூழலில் எங்கே பார்த்தாலும் தமிழர்களாகவே பேசப்படுகிறார்கள். அன்றோ?..

இனி மூன்றாவது படை.... எழுச்சிக்கு வருவாம். இஃது வசபாவின் மகன் வங்கநாசிகன் ஆட்சிக்காலத்தில் கி. பி. 113ல் நடைபெற்றது. இப் படை எழுச்சியின் நோக்கு நாடாளும் கருத்தன்று. இவர்கள் அரசதானியில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு 12000 சிங்களவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர் என வரலாறு கூறுகின்றது. இவர்கள் சோழ அரசராவர். வரலாற்றில் சோழியர் என்றே பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. இக் காலம் இந்திய வரலாற்றில் கடைச்சங்க காலப் பிற்பகுதியாகும். இந்திய தமிழ் நாட்டு அரசர்களின் படையெழுச்சிகள் யாவும் புத்தமதம், சிங்களம் என்ற வேறுபாட்டினின்றும் ஏற்பட்ட போட்டிப் பூசலால் உண்டான பகைமையை அடிப்படைக் காரணமாகக் கொண்டவை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. 12000 சிங்களவரைச் சிறைப்பிடித்தவர்கள் ஒரு தமிழனையேனும் சிறைப்பிடியாமை சி;ந்திக்க வேண்டியது. இப்படையெழுச்சி நடைபெற்ற காலம் கி. பி 113ல் நடைபெற்றது. இரண்டாவது படையெழுச்சிக்கும் இதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி 216 ஆண்டுகளாகும். இக்காலப்பகுதியில் புத்தமதமும், சிங்களமும், வளர்ச்சி அடைந்து நடந்தோடித் திரியும் பருவத்தை அடைந்ததெனக் கூறலாம். எனவே இக்காலப்பகுதியில் புத்த மதக் கொள்கையைப் பின்பற்றிய சிங்களம் என்னும் கலப்பு மொழி பேசிய மக்கட் கூட்டம் அதிகரித்திருந்தமை புலனாகிறது. இதனை எதிர்க்கும் நோக்குடனேயே இப்படையெழுச்சி நடைபெற்றதாக வேண்டும் என்பது புலப்படுகின்றது. அன்றேல் 12000 சிங்களவரைச் சிறைப்பிடிக்க வேண்டிய காரணம் வேறொன்றும் இல்லை இக்காலத்தில்; கண்ணகிக்குக் கோயில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன் சேரநாட்டை ஆட்சிபுரிகின்றான். இலங்கை வாழ் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும்ஒரே இனம். ஒரே மொழி, ஒரே மதக்கோட்பாடுடையவர்கள். அதனால் இனம், மொழி, மதப் பாதுகாப்புக் கருதியே இந்தியப் படையெழுச்சிகள் நிகழலாயின என்பது உள்நோக்கில் நன்கு புலப்படுவதாகும். இதனாலன்னறோ இலங்கை வாழ்தமிழர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இடையே ஒரு போதும் பிணக்கு ஏற்பட்டதே கிடையாது சிங்கள வரலாறே சான்று.

இனி, வங்கநாசிகன் மகன் 1ம் கசபாகு அரசனானதும் பழிக்குப்பழி வாங்க எண்ணினான். அதனால் சோழ நாட்டின் மீது படை கூட்டிச் சென்று சிங்களவரைச் சிறை மீட்டதோடு 12000 தமிழரை சிறைப்பிடித்து வந்தான் என சிங்கள வரலாறு கூறுகின்றது. ஆனால் இந்திய வரலாற்றில் இவ்விடயம் பேசப்படவில்லை. இது நிகழ்ந்தது கி. பி. 113க்குப் பி;ன்னாகும் இவன் கி. பி 113 தொடக்கம் 135 வரை ஆட்சி புரிந்தான். கி. பி 2ம் நூற்றாண்டு தொடக்கம் சுமார் 7ம், 8ம் நூற்றாண்டுவரை சோழர் நலிவுற்றிருந்த காலமாகும். அக்கால இடைவெளியில் தொடக்க காலம் மிகவும் கீழ் நிலை அடைந்திருந்த காலமாகும். இக்காலத்தில் சோழர்கள் குறுநில மன்னராய் ஆங்காங்கு சிற்றரசராய் இருந்தனர். அதனால் கசபாகுவின் படையெழுச்சி வெற்றியீட்ட வாய்ப்புக் கிடைத்தது. ஆதலின் அந்நிகழ்ச்சி உண்மையானதே.

இக் கசபாகு மன்னன் காலத்திலேயே இவனால் கண்ணகி வணக்கம் ஈழநாட்டில் பரப்பப்பட்டது. இது இவன் ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்பட்டிருக்கலாம். இதனைப் பின்வரும் இந்திய வரலாறு தெளிவுபடுத்துகின்றது.

கண்ணகிக்கு இமயத்துக் கல்லெடுத்து கங்கையில் நீராடிக் கோயில் எழுப்பி விழாக் கொண்டாடிய பெரு மன்னன் சேரன் செங்குட்டுவனாவான். இவன் காலம் இந்திய வரலாற்றின் படி கி. பி. 180 வரையிலாகும். இக்காலப்பகுதி சோழ அரசு நலிவுற்றிருந்த காலமாகும். அஃதாவது கடைச்சங்கம். 3ம் நூற்றாண்டில் முடிவெய்திய காலம்தொடக்கம் சோழன் விசயாலயன் ஆட்சி தொடங்கிய காலம்வரை (கி.பி 846) யுமாகும். இக்காலப்பகுதியில் சோழர் அரசு சீர்குலைந்தது சி;ற்றரசுகள் தோன்றின பல்லவர் ஆட்சி உதயமானது. ஆதலின் கசபாகு மன்னன் படை கூட்டிச் சென்று சிங்களவரைச் சிறைமீட்டதும். தமிழரைச் சிறைப்பிடித்து மீண்டதும் நிகழக்கூடியதே.

எனவே இக்காலப்பகுதியில் சேர நாட்டைச் சேரன் செங்குட்டுவனும், பாண்டிநாட்டை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் இவன் தம்பி வெற்றிவேற் செழியனும் சோழ நாட்டைப் பெருங்கிள்ளி (மரவண்கிள்ளி) யும் ஆட்சி புரிந்து வந்தனர். இதனைக் கண்ணகி வரலாறு கொண்டும் மகாவமிச வரலாறு கொண்டும் அறியலாம். எனவே கசபாகு சோழநாட்டின்மீது படை எடுத்த போது ஆட்சி புரிந்த சோழன் பெருங்கிள்ளி ஆதல்வேண்டும்.

இனி கசபாகுவினால் சிறைப்பிடிக்கப்பட்ட 12000 சோழியத் தமிழர்களும், அழுத்தூர்க் கோறளை, அரிஸ்பற்று என்னும் இடங்களில் குடியேற்றப்பட்டனர்என இலங்கை வரலாறே கூறுகின்றது. அப்படியானால் அவ்விடங்களில் இன்று தமிழர்கள் வசிக்கின்றார்களா? 12000 தமிழர் பரம்பரை என்னவாயிற்று? அத் தமிழர் பரம்பரையினர் காலக்கிரமத்தில் சிங்கள மக்களோடு உறவாடிக் கலந்து ஒன்றுபட்டும், புத்த சமயத்தைக் கைக்கொண்டும், சிங்கள மொழியைப் பேசியும் இன்று சிங்கள இனம் ஆயினர் அன்றோ? 12000 தமிழர்கள் பரம்பரை இற்றைக்கு சுமார் 1800 வருடங்களாக எத்தனை ஆயிரம் மக்களாகப் பெருகியிருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். இப் பன்னீராயிரம் தமிழர்களும் அந்நாடுகளை விட்டுக் குடிபெயர்ந்தமைக்கு வரலாறே கிடையாது. இனிக் கசபாகு இத்தகைய செயற்கரும் செயல்செய்த வெற்றி கொண்டாடும் முகமாவே பெரகரா விழாக் கொண்டாடப்பட்டுள்ளதென வரலாறு கூறுதலினால் அவ்விழா இன்றுநடைபெற்று வருவதால் அது உண்மையே. எனவே சிங்களத் தோற்றமும் சிங்களப் பரம்பலும் எவ்வாறு ஏற்பட்டதென உய்த்துணர்மின்!

அடுத்தது நாலாவது படையெழுச்சியாகும். இது நிகழ்ந்தது கி. பி. 436ல் ஆகும். மித்தசேனன் அல்லது கறல் சோரன் ஆட்சிக் காலத்தில் தமிழர் சேனா சமுத்திரமாய்த் திரண்டு அனுராதபுரத்தை அடைந்து அரசனைக் கொன்று 25 வருட காலம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தனர் என மகாவமிசம் கூறுகின்றது. இக் கூற்றின்படி “சேனாசமுத்திரமாய்த்திரண்டு” எனக் கூறுவதால் ஈழநாட்டுத் தமிழர்களும் சேர்ந்து சிங்க அரசை வீழ்த்தினர் என்றே கோடல்வேண்டும். இப்படை எழுச்சியின் தலைவர்கள் இந்தியத் தமிழர் அறுவராவார்கள். அவர்கள் பாண்டு அவன் மகன் பாரிந்தன், தம்பி குட பாரிந்தன், திரிகரன், தாட்டியன், பித்தியன் என்போராவர் இவ்வறுவரும் இந்திய அரசபரம்பரையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் முறையே 5, 9, 11 ஆண்டுகள் ஆட்சிபுரியலாயினர். ஆட்சிக் காலம் கி.பி. 436 – 461 ஆகும்.

கி.பி 436ல் குளக்கோட்டன் என்னும் இந்திய அரசகுமாரன் ஒருவன் இலங்கைக்கு வந்தான் என்றும், அவன் மனுநீதி கண்ட சோழன் மகன் என்றும், அப்பொழுது பண்டு என்பவன் அனுராதபுரத்தில் இருந்து அரசு செய்தான் என்றும், யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்கூற்றில் வேறுபாடு காணப்படினும் பெரிதும் ஒப்புமை இருத்தலையும் காணக்கூடியதாய் இருக்கிறது. என்னை? கி.பி. 436ல் பண்டு என்பான் அனுராதபுரத்தில் இருந்து அரசு செய்தமையை மகாவமிசம் கூறுகின்றது. இவனே மேற்படி படையெழுச்சியின் தலைவர்களின் முதல்வன் (தலைவன்) ஆவான். வைபவமாலையாரும் பண்டு என்பவனைக் கூறுகின்றார். எனவே குளக்கோட்டன் என்னும் பெயருடையான் ஒருவன் வந்தான் என்பதும் அவன் மனுநீதிகண்ட சோழன் மகன் என்பதும் அதாரமற்ற வரலாற்றுக்கு முரண்பாடான கூற்றாகும். ஏன்? மனுநீதிகண்ட சோழன் சோழர் பரம்பரையின் முன்னோன். அவன் காலத்துக்கும் கி.பி 436 பாண்டு காலத்துக்கும் இடைவெளி பல ஆயிரம் ஆண்டுகளாகும். அன்றியும் கி.பி 436ல் இந்திய வரலாற்றில் மனுநீதி கண்ட சோழன் என்ற நாமாவளி கிடையாது. ஆதலின் அஃது செவிவழிச் செய்தியே அன்றி உண்மை வரலாறாகாது. அவன் மனுநீதி கண்ட சோழன் பரம்பரையினன் என்பதே உண்மையாகும். மகனல்லன்.

இனி, கி. பி436ல் பாண்டு என்பவன் தானே ஆட்சி புரிகிறான். அப்படியானால் குளக்கோட்டன் என்ற பெயர் வரலாறு என்னே? என ஆசங்கை உண்டாகிறதல்லவா. ஆம்.

குளக்கோட்டன் என்னும் பெயர் இவன் இயற்பெயர் அன்று, அஃதோர் காரணப்பெயர். குளம் தொட்டுக் கோட்டம் அமைத்தவன் குளக்கோட்டன் எனப்பட்டான். கோட்டம் - அணை, கந்தளாய்க் குளத்தைக்கட்டுவித்துக் கோணேசர் ஆலயத் திருப்பணி நிர்வாகம் செய்தமையால் ஏற்பட்ட பெயராகும் அது. எனவே அதை யார் செய்திருக்கலாம் என்பது கேள்வி? அப்பொழுது அனுராதபுரத்தில் இருந்து இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்த பாண்டு மன்னனேயாவன் என்பது வெளிப்படை.

இலங்கையில் ஒர் அரசன் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும்போது பிறிதொரு அரசகுமாரன் வந்து அவன் அனுமதி, ஆதரவு இன்றிக் குளம் கட்டினான் என்றலும், கோணேசர் ஆலயத் திருப்பணி, பூசை ஒழுங்குகள் செய்தான் என்றலும், இந்தியாவினின்று மக்களை வரவழைத்துக் குடியேற்றினான் என்றலும் முரண்பாடான, பொருத்தமில் கூற்றாகும். அப்பொழுது அரசனாய் இருந்த பாண்டுவும், அவன் மக்களுமே அக் காரியங்களைச் செய்தார்கள் என்பதே வரலாற்றுண்மையாகும். பாண்டுவே குளக்கோட்டன் எனப்பட்டான்.

இனி, இக்காலம் கி. பி 436 இந்திய வரலாற்றில் சேர, சோழ பாண்டியர் வலி குன்றிய காலம். களப்பிரர் ஆட்சி முடிவும் பல்லவர் ஆட்சியின் ஆரம்ப காலமுமாகும். இதனால் மனுநீதிகண்ட சோழன் என்பதும் அவன் மகன் குளக்கோட்டன் என்பதும் ஒர் ஆதாரம் அற்ற செவிவழிச் செய்தியேயாகும். மனுநீதிகண்ட சோழன் பரம்பரையினன் என்பதே உண்மையாகும்.

பண்டு முதலியோர் தாய்நாட்டில் தம்வலி குன்றிய காலமாதலின் தமது செந்தப் படையோடு ஈழநாட்டுத் தமிழர் உதவியையும் பெற்றே சேனா சமுத்திரமாகப் படை யெடுத்தனர் என்பதும் பொருத்தமானதே. பண்டு முதலியோர் இவர்கள் யார் என இலங்கை வரலாறு சுட்டிக் கூறாமையினால் இவர்கள் சேர, சோழ, பாண்டியர் பரம்பரையில் ஒன்றைச் சார்ந்தவர்களாதல் வேண்டும். பாண்டு என்னும் பெயரே சிங்கள வரலாற்றில் பண்டு எனக் குறிப்பிடப்பட்டதென்றே கொள்ள வேண்டும். அவன் பெயர் பாண்டுவேயாகும். இனி இவர்கள் வரலாற்றை நோக்கும் போது இவர்கள் சோழர் பரம்பரையினர் என்றே கொள்ளக்கிடக்கின்றது.

இனி, 5ம் படைஎழுச்சிக்கு வருவோம். இது 1ம் சேனன் அல்லது சீலமேகசேனன் காலத்தில் நடைபெற்றது. இவனது ஆட்சிக்காலம் கி.பி 846 – 866 ஆகும். இவன் தமிழருக்கு அஞ்சிப் பொலநறுவையை அரசதானியாக்கினான் என மகாவமிசம் கூறுகின்றது. இலங்கை அக்காலத்தில் இராசரட்டை, உறுகுணை, மாயரட்டை என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இராசரட்டை. அனுராதபுரம், நீர்கொழும்பு, பொலநறுவையை உள்ளடக்கிய வடபகுதி முழுமையும் ஆகும். “இவ்வரசன் தமிழருக்கஞ்சிப் பொலநறுவையை அரசதானி ஆக்கினான்” எனவே இராசரட்டைப் பகுதி முழுமையும் பெரும்பான்மையாகத் தமிழர் வசித்தமையும், அவர்கள் வலுப்பெற்று ஆதிக்கத்தோடு இருந்தமையும் தெளிவாகிறது. இதனாலேயே அரசன் பொலநறுவையை நாடினான் என்பது தோற்றம்.

இவ்வரசன் காலத்தில் படையெடுத்தவன் சீமாறன் அல்லது சீவல்லபன் என்னும் பாண்டிய அரசனாவான். இவன் ஈழநாட்டுபோந்து ‘மகாபலகம’ என்னும் இடத்தில் ஒர் கோட்டையைக் கட்டி அரண் செய்தான். அப்போது ஈழத் தமிழர்கள் அனைவரும் அவன் பக்கம் சேர்ந்து கொண்டனர். பாண்டியன் சிங்கள மன்னனோடு போர் தொடுத்து வெற்றியீட்டி ஈழநாட்டைத் தனக்குத் திறைசெலுத்துமாறு செய்தான். என மகாவமிசமே கூறுகின்றது. இப்பாண்டியன் ஈழநாட்டை வெற்றி கொண்ட செய்தி சின்னநமனூர் செப்பேடுகளாலும் அறியக்கிடக்கின்றது. எனவே 1ம் சேனன்ஆட்சியாண்டு 20 வருடமும் ஈழநாடு பாண்டி நாட்டுக்குத் திறை நாடாக இருந்திருக்கின்றது. இவனை அடுத்து அரசுக்கு வந்தவன் 2ம் சேனன் என்பவன் இவன் 1ம் சேனனின் தம்பியும், காசியப்பன் என்பவனின் மகனும் ஆவான். இவன் காலத்தில் மேற்கூறிய சீவல்லபனின் மகன் தனது தந்தையோடு போர் செய்தான் என்றும் அப்போரில் தனக்குதவுமாறு 2ம் சேனன் படை பாண்டிநாடு சென்று சீவல்லபனைக்கொன்று மகனுக்குப் பட்டம் சூட்டி மீண்டான் என்றும் அங்கிருந்து பொருட்களைச் சூறையாடி வந்தான் என்றும் மகாவம்சம் கூறுகின்றது.

இக்கூற்றுக்கு வேறு யாதொரு ஆதாரமும் இல்லை. பொருத்தமான கூற்றாகவும் இல்லை. ஏன்? பாண்டியன் வரலாற்றின்படி சீவல்லபனுக்கு 2ம் வரகுணவர்மன், பராந்தக பாண்டியன் இருவர் மக்களே இருந்தனர். சீவல்லபனுக்குப் பின் முறைப்படி அரசேற்று ஆட்சி புரிந்தவன் 2ம் வரகுணவர்மன். இவனுக்குப்பின் இவன் தம்பி பராந்தகபாண்டியன் அரசன் ஆகிறான். 2ம் வரகுணபாண்டியன் ஓர் ஆற்றல் படைத்த பேரரசன். இவன் சோழர், கங்கர், பல்லவன் என்பவர்களோடு போர் தொடுத்து பல முறை வெற்றி மாலை சூடியவன். இவனைப்பற்றிச் சின்னமனூர்ச் செப்பேடு கூறுகின்றது.

“குரைகழற் காலரசிறஞ்சக்
குவலயத் தலம் தனதாக்கின
வரைபுரையும் மணி நெடுந்தோள்
மன்னர் கோன் வரகுண வர்மன்”

எனப் புகழ்ந்துரைக்கின்றது. அன்றியும் சீவல்லபன் வரலாற்றில் “சீவல்லபன் தனது தந்தையிடம் இருந்து பெற்ற அரசை அஞ்சாமற் காத்துத் தன் மகன் வரகுணவர்மனுக்கு அளித்தான்” எனக் கூறப்படுகிறது. ஆதலின் மேற்கூறிய மகாவமிசக் கூற்று வெறும் புனைந்துரைப் புகழுரையேயன்றி உண்மையன்று.

இனிச் சீவல்லபன் வரலாற்றில் மாயபாண்டியன் என்றொருவன் தனக்கு அரசில் உரிமையுண்டெனக் கூறி சீவல்லபனோடு முரண்பட்டிருந்தான் என்றும் 2ம் சேனன் அரசுக்கு வந்ததும் பழிக்குப்பழி சாதிக்க எண்ணிய சேனன் மாயாவாண்டியனைத் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு பாண்டிநாட்டின் மேற் படையெடுத்தான் என்றும் சீவல்லபன் அவர்கள் இருவரையும் போரில் புறங்கட்டி ஒடச் செய்து நாட்டைவிட்டோடச் செய்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியையே மகாவமிசம் திரித்துப் புனைந்து புகழ்ந்து கூறியது என்பதே உண்மையாகும்....

இனிவருவது 6வது படையெழுச்சியாகும்... இப் படைஎழுச்சி 3ம் உதயன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது. இவன் ஆட்சிக்காலம் கி.பி. 964 – 972ல் முடிசூடிய பராந்தகச் சோழனே படையெடுத்தான். பராந்தகச் சோழனுக்கும், பராந்தகப் பாண்டியன் மகன் இராசசிம்ம பாண்டியனுக்கும் இடையில்போர் மூண்டது. அப்போரினால் நாட்டை இழந்த இராசசிம்ம பாண்டியன் இலங்கையை அடைந்து அப்பொழுது இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த 9ம் தப்புனாவின் பால் உதவி நாடி அங்கேயே வசித்து வந்தான். அப்பொழுது சிங்களப் பிரதானிகளுக்கிடையே கலகம் மூண்டதால் பாண்டியன் தனது எண்ணம் பலிக்காதெனக் கண்டு தான் கொண்டுவந்த மணிமுடி முதலாம் பொருட்களைத் தப்புனாவிப்பால் அடைக்கலமாக வைத்து விட்டு தனது தாயின் நாடாகிய சேரநாட்டுக்குப் போனான். இதனைக் கேள்வியுற்ற 1ம் பராந்தகச் சோழன், பாண்டியன் விட்டுப்போன மணிமுடி முதலாம் பொருட்களைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருந்த 3ம் உதயனுக்குத் தூதனுப்பினான். இலங்கை அரசன் அதனை அசட்டை செய்தான்.

அதனால் சீற்றங்கொண்ட பராந்தகச்சோழன் படையை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். சோழன் படை அனுராதபுரத்தைச் சுற்றி வளைத்து நகரைக் கைப்பற்றிக் கொண்டது. உதயன் உறுகுணைக்குச் சென்று படைதிரட்டி வந்து எதிர்த்ததினால் அவ்வெதிர்ப்புக்கு முன் நிற்கமுடியாமல் சோழன் படை அனுராதபுரத்தை விட்டு நாடு திரும்பியது என மகாவமிசம் கூறும்.

இதனை இந்திய வரலாறு அனுராதபுரத்தைச் சோழன் படை கைப்பற்றியதும் இலங்கை அரசனாகிய உதயன் பாண்டியன் விட்டுப்போன பொருட்களையும் கொண்டு உறுகுணைக்கு ஓடி ஒளித்தான் என்றும் உறுகுணை மலைநாடு ஆதலின் சோழன்படை அண்டிச் செல்ல முடியாமையால் நாடுதிரும்பின் எனக் கூறுகின்றது.

இங்கே இவ்விரு கூற்றையும் ஒப்புநோக்கும் போது மகாவமிசக் கூற்றுப் பொருத்தம் அற்றதாகக் காணப்படுகின்றது ஏன்? தலைநகரைச் சுற்றி வளைத்துக் கைப்பற்றிக் கொண்ட சோழர்படை தாம் தேடிவந்த பொருட்களையே தேடிக் கைப்பற்றி இருப்பார்கள். போரின் நோக்கம் அப்பொருட்களைக் கைப்பற்றுதலே. 2ம் முறை உதயன் படைதிரட்டி எதிர்த்தான் என்பதால் முதற்போரில் உதயன் நகரைவிட்டு உறுகுணைக்கு ஓடினான் என்பதும், அப்பொழுது பாண்டியன் விட்டுப்போன பொருட்களையும் உடன் கொண்டு சென்றான் என்பதும். அதனாலேயே சோழர் படை அப் பொருட்களை அபகரிக்க முடியாமல் போனதென்பதுமே உண்மையாகும். அன்றேல் 2ம் முறை படைதிரட்டி எதிர்க்க வேண்டிய நிலைமை ஏற்படாது. 1ம் எதிர்ப்பில்உதயன் தோல்வியே கண்டான் என்பது உண்மை. இனி முதலாவது எதிர்ப்பில் உதயன் எதிர்த்துப் போரிட்டதாக வரலாறு இன்மையின் அவன் நகரை விட்டு ஒடினான் என்பதே உண்மையாகும். ஆகவே இந்திய வரலாறே உண்மையானது என்பதை மகாவமிசக் கூற்றே வலியுறுத்துகின்றது.

அடுத்த படைஎழுச்சி ஏழாவது படை எழுச்சியாகும். இது 5ம் மிகுந்தனின் ஆட்சிக்காலத்தில் கி. பி. 1001 – 1037 கால இடைவெளியில் நடைபெற்றது. இவனது அரசதானி அனுராதபுரமும் கப்புக்கல்நுவரையுமாகும். இவனது ஆட்சியில் 10ஆவது ஆண்டு இவனது படையாட்களாய் இருந்த தமிழர்கள் கலகம் விளைத்ததினால் அதனை அடக்க முடியாதவனாய் அஞ்சி உறுகுணைக் கோடி அங்கிருந்து அரசு செய்தான் என்பது இலங்கை வரலாறு. இந்நிலையை அறிந்த சோழ அரசன் 1ம் இராசராசன் என்பவன் ஒரு பெருஞ் சேனையை இலங்கைக்கு கி. பி. 991ல் அனுப்பி வைத்தான். சோழர்படை யாதொரு தடையுமின்றி வடபகுதி முழுவதையும் கைப்பற்றி பொலநறுவையை அரசதானியாக்கி இராசராசனின் ஆணையின் கீழ் ஓர் அரசுப் பிரதி அதிபதி ஒருவனையும் நியமித்தது. எனவே இராசராசன் படைக்கு அஞ்சி மிகுந்தன் உறுகுணைக் கோடி அங்கிருந்து ஆட்சி புரிந்தான். இராசராசன் பொலநறுவையை அரசதானியாக்கி சன்னாதபுரம் எனப் பெயர் சூட்டி அரசுப் பிரிதிநிதிமூலம் உறுகுணை தவிர்ந்த இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். இலங்கை முழுமையும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. இந்திய வரலாற்றின்படி 1017ல் ஆகும்.

அப்பொழுது உறுகுணையில் இருந்த 5ம் மிகுந்தன் சோழரை நாட்டை விட்டு அகற்றும் உபாயங்களையும் ஆயத்தங்களையும் சிந்தித்துச் செயலாற்றிக் கெண்டேயி ருந்தான். இப்படி 25 ஆண்டுகள் கழிந்தன. ஈற்றில் 5ம் மிகுந்தனின் எண்ணம் செயற்படத் தொடங்கும் நேரம் 26வது வருடம். இந்திய வரலாற்றின் படி கி. பி. 1017ல் 1ம் இராசேந்திரசோழன் ஒர் சிரேஷ்ட தளபதியின் கீழ் ஒர் பெரும் படையை ஈழநாட்டுக்கு அனுப்பி வைத்தான். இராசேந்திர சோழன் படைகள் உறுகுணைக்குச் சென்று 5ம் மிகுந்தனையும் மனைவியையும் சிறைப்பிடித்து அவர்களது இராச கிரீடங்களையும் 3ம் இராசசிம்ம பாண்டியன் விட்டுப்போன மணிமுடி, முத்தாரம் முதலிய பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு சோழநாட்டுக்கு மீண்டது. இலங்கை அரசன் 5ம் மிகுந்து 12 வருடம் சோழநாட்டிலேயே இருந்து உயிர் துறந்தான். எனவே கி. பி 1017 தொடக்கம் ஈழநாடு முழுமையும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. இதற்குமுன் இராசசோழன் காலத்தில் இந்திய வரலாற்றின்படி கி. பி 981முதல் 1017வரை உறுகுணை தவிர்ந்த ஈழநாடு முழுமையும் சோழர் ஆட்சிக்குட்பட்டு மும்முடிச் சோழமண்டலம் என ஈழநாடு அழைக்கப்படுவதாயிற்று. உறுகுணை தவிர்ந்த ஈழநாடு முழுமையும் 981 – 1017 வரை 25 ஆண்டு இராசராச சோழன் ஆட்சி.

இராசராசனது மெய்க் கீர்த்தியில் “முரட்டொழிற் சிங்களர் ஈழ மண்டலமும், திண்டிறல் வெற்றித் தண்டாற் கொண்ட தேசுகொள்கோ இராசகேசரிவர்மரான் உடையார் ஸ்ரீ இராசராசர் தேவர்க்கு” எனக் கூறப்பட்டுள்ளது. அன்றியும் கொழும்பிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள கருங்கற் பாறை ஒன்றில் “சோழமண்டலத்துச் ~த்திரியசிகாமணி வளநாட்டு வேளாநாட்டுச் சிறுகூற்ற நல்லூர்க் கிழவன் தாழிக்குமரன், ஈழமான மும்முடிச் சோழமண்டலத்து மாதோட்டமான இராராசபுரத்து எடுப்பித்த இராசராசேஸ்வரத்து மகாதேவர்களுக்குச் சந்திராதித்தவல் நிற்க” எனக் கூறும் ஒர்கல்வெட்டும் காணப்படுகின்றது. இக் கல்வெட்டு 1ம் இராசராச சோழனின் ஈழநாட்டு ஆட்சியை அங்கைநெல்லியென தெளிவுபடுத்துகின்றதன்றோ? இதனால் இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் ஈழம் மும்முடிச் சோழ மண்டலம் எனவும் மாதோட்டம் இராசஇராசபுரம் எனவும் வழங்கப்பட்டிருத்தல் காண்க.

ஈழநாட்டின் சோழ அரசரது அரசதானியாய் இருந்த பொலநறுவையில் சிவாலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அக்கோயிலுக்கு “வானவன் மாதேவீச்சரம்” எனப் பெயர்ரிடப்பட்டது. இராசராச சோழனின் தாயார் “வானவன் மாதேவி” எனப்படுவர். எனவே தாயாரை நினைவு கூருதல் காரணமாக இராசராசசோழன் அக் கோயிலைக் கட்டுவித்து தாயாரின் பெயரையே அக்கோயிலின் திருப்பெயராக வைத்தான் என்பது பெறப்படும். சோழர்கள் பொலநறுவைக்கு சனநாதபுரம் எனப் பெயர் சூட்டி ஆட்சிபுரியலாயினர்.

இனி 5ம் மிகுந்தன் சிறைப்பட்டதன் பி;ன்னர் கி.பி. 1017க்குப்பின் இந்திய வரலாற்றி;ன்படி 1060ல் இலங்கை வரலாற்றின்படி கி.பி 1080 வரையும் இலங்கை முழுமையும் 1ம் இராசசேந்திர சோழனின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எனவே கி. பி. 991 தொடக்கம் கி.பி 1060 வரையும் 69 வருடம் இந்திய அரசர்களின் பொலநறுவை ஆட்சி நடைபெற்றதாகும்.

இக்காலச் சிங்களவர் உறுகுணையைப் புகலிடமாகக்கொண்டு காலத்துக்குக் காலம் சோழரின் பொலநறுவை ஆட்சியை எதிர்க்கலாயினர் 5ம் மிகுந்தனின் மகன் காசியப்பன் என்பவன் 12ஆவது வயதில் இறந்துவிட்டான் என இலங்கை வரலாறு கூறுகின்றது. ஆனால் 5ம் மிகுந்தன் இறந்ததும் அவன் மகன் காசியப்பனை மக்கள் தம் அரசனாக ஏற்று வி;க்கிரமவாகு என்னும் பட்டப் பெயருடன் கி. பி. 1029ல் அவனுக்கு முடிசூட்டினார்கள் என்றும், சோழர்களுக்கு எதிராக உறுகுணைப் பகுதியைக் கைப்பற்றி 1041 வரை 12 வருடம் உறுகுணையில் இருந்து ஆட்சி செய்தான் என்றும் இலங்கை வரலாறே கூறுகின்றது. இதனை ஒப்புநோக்கும்போது 5ம் மிகுந்தன் இறந்ததும் கைக்குழந்தையாய் இருந்த காசியப்பனுக்கு முடிசூட்டி மக்கள் அரசைப் புரந்தார்கள் என்பது போதரும். தந்தை இறந்தது கி.பி. 1029ல். மகனுக்கு முடிசூட்டப்பட்டதும் அதேயாண்டாகும். 12வது வயதில் காசியப்பன் இறந்தான் என்றால் 1041ல் இறந்தான். அவனது ஆட்சிக்காலமும் முடிபும் அஃதே.

இஃது இவ்வாறிருக்க 5ம் மிகுந்தனின் ஆட்சி முடிந்தபின் அவன் மந்திரியாய் இருந்த கித்தி என்பவன் அரசுக்கு வந்தான். இவன் அரசெய்திய 8ஆவது நாளில் மகாலன கித்தி என்பவன் அவனைக்கொன்று தான் ஆட்சி செய்தான். இவன் ஆட்சி எய்திய 3வது வருடத்தில் சோழரால் தோற்கடிக்கப்பட்டு உயிர் துறந்தான். இவன் ஆட்சிக்காலம் 1044 – 1047 ஆகும். 5ம் மிகுந்தனின் மனக் காசியப்பனின் ஆட்சி முடிபாகிய 1041 தொடக்கம் மகாலனகித்தியின்ஆட்சி ஆரம்பமான 1044 வரை சோழர் ஆட்சியே தனித்து இருந்தது. சோழர் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக மகாலனகித்தி இருந்த காரணத்தினாலேயே அவன் சோழரால் கொலையுண்டான்.

இதன்பின்னர் விக்கிரமபாண்டியன் என்பானொருவன் களுத்துறையை அரசதானியாக்கி இவனும் சோழர் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக அரசாளத் தொடங்கினான். இவனை அயோத்தியினின்றும் வந்தவனான சக்தபாலன் என்பானொருவன் கொன்று தான் ஆட்சி புரியத் தொடங்கினான். முன்கூறப்பட்ட விக்கிரமபாண்டியன் என்பான் சோழன் இராசாதிஇராசனால் தோற்கடிக்கப்பட்டு தனது பாண்டிநாட்டை இழந்து ஈழநாட்டை அடைந்து ஆட்சி செய்யத் தொடங்கினான் என இராசாதிஇராசன் மெய்க் கீர்த்தி உணர்த்துகின்றது.

ஆனால் மகாவம்சம் மகாலனகித்தியின் மகன் விக்கிரமபாண்டு என்பவன் தந்தை சோழரால் இறந்த பின்னர் கி.பி. 1044 – 1047 வரை உறுகுணை நாட்டை ஆட்சி புரிந்தான் எனக் கூறும். இராசாதி இராசன் மெய்க்கீர்த்தியையும் மகாவமிசக் கூற்றையும் ஒப்புநோக்கும்போது வி;க்கிரம பாண்டியனும். விக்கிரம பாண்டுவும் ஒருவனே என்பதும் அவன் ஓர் பாண்டியமன்னனுக்கும் இலங்கை அரசன் மகளுக்கும் பிறந்தவனாதல் வேண்டும் என்பதும் தந்தைவழிப் பாண்டி நாட்டை இழந்தமையால் தாய்வழி நாடி மகாலனகித்தி இறந்ததும் இலங்கை ஆட்சியை நாடினான் என்பதும் ஊகித்தறிய வேண்டிய உண்மையாகும்.

பத்துப் பதினோராம் நூற்றாண்டில் பாண்டியரும் சேரரும் வலி குன்றி இருந்த காலம். இக்காலம் சோழர் வலுப்பெற்றிருந்த காலம். இதனால் பாண்டியரும் சேரரும் இலங்கை அரசர்களும் நட்பு முறையினராய் இருந்தது மன்றி மணவினைத் தொடர்பும் உடையவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு பகைவர்களாய் இருந்தவர்கள் சோழர்களே. அப்பொழுது அவர்கள் தமது நாட்டை ஆட்சி புரிய முயன்று வந்தனர். இதுவரலாறு கூறும் உண்மை.

இனி, வி;க்கிரமபாண்டியனை அயோத்தி அரசிளங் குமாரன் சக்தபாலன் என்பவன் கொன்றான் என மகாவம்சம் கூறுகின்றது இராசாதி இராசன் கல்வெட்டு, கன்னியா குப்தத்தைச் சேர்ந்த வீரசலாமேகன் கொன்று ஆட்சிபுரியலாயினான் எனக் கூறுகின்றது.

வி;க்கிரம பாண்டியனுக்குப்பின் பறக்கு என்னும் பெயரையுடைய பாண்டிய அரசிளங்குமாரன் இரண்டு வருடம் ஆட்சி புரிந்தான். இவன் சோழரால் கொலையுண்டான். இவனுக்குப்பின் பறக்குவின் மந்திரி லோகேஸ்வரன் என்பவன் 1059ல் கதிர்காமத்தை அரசதானியாக்கி ஆட்சி புரிந்தான். இவனை 5ம் மிகுந்துவின் பௌத்திரன் கீர்த்தி என்பவன் கொன்று விசயபாகு என்னும் பட்டப் பெயரோடு கதிர்காமத்திலிருந்து ஆட்சி புரிந்தான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1065 – 1120 ஆகும்.

விசயபாகு கதிர்காமத்திலிருந்து ஆட்சி புரியும் தருணம் காசியப்பன் என்றொருவன் உறுகுணைக்குத் தானே தலைவன் எனக் கூறி ஆட்சி செய்யத் தொடங்கினான். இதனை அறிந்த சோழர் உறுகுணைக்குப் படையெடுத்துச் சென்றனர். அங்கே எதிர்பார் இன்மையால் சோழர்படை கதிர்காமத்தை நோக்கிச் சென்றது. எனவே காசியப்பன் சோழர் படைக்கு அஞ்சி உறுகுணையைவிட்டு ஓடி ஒளித்தான் என்பது பெறப்படும். விசயபாகுவும் சோழர் படைக்கு அஞ்சிக் கதிர்காமத்தை விட்டு உறுகுணைக்கு ஓடினான். அப்பொழுது உறுகுணையில் வைத்து காசியப்பனை விசயபாகு கொன்றான். சில நாள் உறுகுணையில் இருந்தே விசயபாகு ஆட்சி புரிந்தான். உறுகுணையில் சோழர் படை எதிர்ப்பில் விசயபாகு வெற்றி கண்டான். ஆனால் பொலநறுவையில் சோழர் ஆட்சியைக் கைப்பற்றமுடியாதவனாய் இருந்தான்.

இந்நிலையில் விசயபாகு அரமனா நாட்டரசன் அனுரதவின் உதவியை நாடினான். அவ்வுதவி (அந்தஉதவி) கிடைக்கவே சிங்களச் சமூகமும் பொலநறுவை ஆட்சியை எதிர்த்து சோழரை எதிர்க்கும் நோக்கோடு வரி கொடாது மறுத்தனர். அப்பொழுது சோழருக்கும் சிங்களவருக்கும் இடையே பெரும் போர் மூண்டது. அதனால் சோழர் படை இராசரட்டையில் சிங்களவரை எல்லாம் மழுங்கடித்து அவர்களைப் புறங்காட்டி ஒடச் செய்தனர். அதன் பின் சோழர்படை உறுகுணை நோக்கிச் சென்று விசயபாகு வோடு சமர் தொடுத்தனர். விசயபாகு இப்போரில் சோழரைப் புறங்கண்டு வெற்றியீட்டினான்.

இவ்வெற்றியினால் உந்தப்பட்ட விசயபாகு அனுராதபுரத்தைச் சுற்றி வளைத்துச் சோழரை எதிர்த்தான். இப்போரில் விசயபாகு தோற்றுப் புறங்காட்டி ஓடினான். பின்னர் வாதகிரி மலையைப் புகலிடமாகக் கொண்டு 3 மாத காலமாகச் சோழரை எதிர்த்துப் போராடி அனுராதபுரத்தைக்கைப்பற்றினான்.

இதன் பின்னர் விசயபாகு பொலநறுவையை நோக்கிச் சென்றான். அங்கே சோழரை எதிர்த்து ஒன்றரை மாதகாலம் போராடிப் பொலநறுவையைக் கைப்பற்றினான். இது நிகழ்ந்தது இலங்கை வரலாற்றின்படி கி. பி 1080ல் ஆகும். இந்திய வரலாற்றின்படி விசயபாகுவின் ஆட்சிக் காலம் கி.பி. 1065 – 1120 வரையாகும்.

சோழரின் பொலநறுவை ஆட்சி தொடங்கி முடியும் வரையும் உள்ள காலப்பகுதி கி.பி. 991 – 1060 ஆகும். இந்திய வரலாற்றின்படியும் இலங்கை வரலாற்றின்படியும் கி.பி 1011 – 1080 வரையுள்ள காலமாகும். இக்காலப் பகுதிகளில் இலங்கை முழுமையும் சோழர் ஆட்சியில் இருந்தகாலம். இலங்கை வரலாற்றின்படி 1037 – 1065 ஆகும். இந்திய வரலாற்றின்படி 1017 – 1045 ஆகும். 28 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் இலங்கை வரலாற்றின்படி 1011 தொடக்கம் 1080 வரை சோழர் ஆட்சி நடைபெற்றது. பொலநறுவை சனநாதபுரம் என்னும் பெயரோடு அரசதானியாக விளங்கியது. அக்காலத்தில் 5ம் மிகுந்தனுக்குப்பின் விசயபாகு வரையில் உள்ளோர் அனைவரும் கலகக்காரராகச் சோழரை எதிர்த்து அரசைக் கைப்பற்ற முயன்றார்கள். எனவே சோழர் ஆட்சி 69 வருட காலம் நடைபெற்றதாகும்...

தொடரும்... பகுதி-12 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக