ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...
தொடர்ச்சி...

பகுதி-10

இனி விசயன் வருகையில் இருந்து மேற்போந்த உண்மைகளை அறிவாம்...
விசயன் கி. மு. 543ல் ஈழநாட்டிற்கு வந்தான். ஈழ நாட்டுப் பெண் குவேனியை மணம் முடித்தான். தம்பன்னா அல்லது தம்பான் என்னும் நகரை அமைத்தான். எங்கே? ஈழநாட்டின் வடபகுதியில் அஃது புத்தளத்துக்கு அணித்தாக எனவும் கற்கோவளத்துக்கு அணித்தாக எனவும் வரலாறு கூறும். விசயன் கலிங்கநாட்டுத் தமிழன். ஈழநாட்டுத் தமிழ் மக்களோடு மண உறவு கொண்டு உறவாடிக் கலந்து ஓர் இனம் ஒரே கிளையினராக வாழ்ந்தான். 35 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவன் பேசிய மொழி தமிழே. கைக்கொண்டு ஒழுகிய சமயம் இந்து சமயமே. சிங்கள வரலாற்றின்படி பாண்டிநாட்டுப் பெண்ணை இரண்டாவதாக மணந்தான். என்றாலும் பேசிய மொழி தமிழே. விசயன் காலத்தில் சிங்களம் என்ற ஒரு சொல்லே இல்லை.

புத்த மதம் இலங்கைக்கு வந்தது தேவநம்பியதீசன் காலத்தில் கி;. மு. 307ல் இவன் மூத்த சிவனின் மகன். மூத்த சிவன் விசயனின் தம்பி ஆகிய சமித்து என்பவனின் மகன் பரந்துவாசனின் மகள் உன்மாத சித்திரையின் மகன் பந்துகாபயனின் மகனாவான். தீசன் விசயனுக்கு சுமார்236 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தான்.

பந்துகாபயன் காலத்தில் அவன் பரமசமயிகள் 500க்கு அதிகமானோருக்கு இல்லிடம் கொடுத்து உதவினான் என வரலாறு கூறுகின்றது. அந்த 500 பேரும் முஸ்லீம்களாகவே இருக்க வேண்டும். அக்காலம் கிறீஸ்தவம் உதயமாகவில்லை. புத்த மதமும் இலங்கைக்கு வரவில்லை. அப்போது ஈழநாட்டுச் சமயம் சிவசமயமே. ஆதலின் முஸ்லீம்களே அக்கால வியாபாரிகள் ஆதலின் அவர்களே குடியேறியவர்கள் ஆதல் வேண்டும். சங்க இலக்கியங்கள் அவர்களை யவ்வனர் எனக் கூறும்.

அனுராதபுரியை முதன் முதல் அரசதானி ஆக்கியவன் பந்துகாபயன் என்பவனே. எனவே அவனுக்கு முன்னுள்ளோரின் ஆட்சி நகர்மன்னார், யாழ்ப்பாணப் பகுதியை அடுத்தே இருந்ததாகும். பந்து காபயன் ஆட்சித் தொடக்கத்துக்கு முன் 106 ஆண்டுகள் காலம் ஈழநாட்டின் ஆட்சி வடபகுதியிலேயே இருந்திருக்கின்றன.

புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியவன் அசோக மன்னன் ஆவான். அசோகனின் மகன் மிகுந்தனே புத்தபிக்குவாக இலங்கைக்கு வந்தவன். அசோகன் காலம் கி. மு. 272 – 232 ஆகும். 274 – 237, 264 – 226 என்றும் கூறுவர். இது எவ்வாறாய் இருப்பினும் கி;. மு. 272 – 232 என வைத்துக்கொள்ளலாம். அசோகன் அரசனானதும் மண்ணாசை மேற்கொண்டு பல போர்களை நடத்தி வெற்றியீட்டிய பின்னர் போரில் இறந்தவர்களை நினைத்து மனதில் இரக்கம் மேலிட்டவனாய் போரை வெறுத்து மனமாற்றங் கொண்டான். அப்பொழுதுதான் அன்பு வழியை அடிப்படையாகக்கொண்ட புத்தர் கோட்பாட்டில் ஆர்வங்கொண்டு அம் மதத்தைத் தழுவி நாடு முழுமையும் பரப்பினான். இது அசோகன் வரலாறு. அப்படியானால் அவன் ஆட்சி ஆண்டு 40ல் பின் உள்ள 20 ஆண்டுகளே அவன் புத்த மதம் தழுவிய, பரப்பிய காலம் எனக் கொள்ளலாம்.

எனவே அசோகன் கி. மு. 272ல் ஆட்சிக்கு வருகிறான். அவன் ஆட்சி பிற்பகுதி கி. மு. 250 வரையில் ஆகும். ஆனால் மகாவமிசம் கி.மு. 307ல் மிகுந்தன் இலங்கைக்கு வந்தான் எனக் கூறுகிறது. இக் கூற்று அசோகன் ஆட்சிக்கு முன்னரே மிகுந்தன் வந்தான் எனக் கொள்ளக் கிடக்கின்றது. இதற்கு மகாவமிசக் கூற்றே அன்றி வேறுஆதாரம் இல்லை. கி.மு 307 – கி மு 207 என இருக்குமானால் எவ்வாற்றானும் பொருந்துவதாகும்.

விசயன் இலங்கைக்கு வந்த காலம் கி. மு. 543. அவனது ஆட்சியாண்டின் ஆரம்பம் கி. மு. 543ஆகும். இதுவும் வரலாற்றுப் பொருத்தமற்ற கூற்றேயாகும். ஏன்? அகதியாய் வந்த விசயன் தான் வந்த ஆண்டிலேயே நகர்அமைத்து ஆட்சி தொடங்குகிறான் என்பது நிகழக் கூடியதா? ஆதலின் விசயன் ஆட்சிக்காலம் கி. மு. 543க்குப் பிற்பட்டதாக வேண்டும். கி.; மு. 443 ஆதல் பொருத்தமுடையதாகும். அவன் மணம் முடித்து உறவாடி அரசுரிமை பெற காலம் வேண்;டும் அல்லவா? விசயன் வருகை கி. மு. 483, 445 எனவும் கூறுவர். ஆதலின் கி. மு. 483 என்பது சாலவும் பொருத்தமுடைய கூற்றாகும்.

இனித் தேவநம்பியதீசனுக்கு முன் 17 ஆண்டுகள் ஆட்சியின்றி இருந்த காலமாகும் என மகாவமிசம் கூறும். இக் கூற்று விசயன் பரம்பரையினது ஆட்சி இன்மையையே குறிப்பதாகும். அஃதாவது பேரரசு இன்றி இருந்த காலம் எனக் கொள்ளலாம். எனவே ஆங்காங்கு நாக அரச பரம்பரையினரின் சிற்றரசுகள் இருந்தே ஆகவேண்டும்.

இனி விசயன் பரம்பரையினரின் ஆட்சி வரலாறு மகாவமிசம் என்றும் சுலு வமிசம் என்றும் இரு பகுதிகளாகக் கூறப்பட்டுள்ளது. மகாவமிச மன்னர்கள் விசயன் தொடக்கம் மகாசேனன் முடிய ஐம்பத்திருவர்ஆவர். அவர்களது ஆட்சிக்காலம் கி. மு. 543 – கி. பி 304 வரையுள்ள 847 ஆண்டுகளாகும். இக்காலத்தில் அரசின்றி இருந்த காலம் 17 ஆண்டுகள். இக்கால எல்லையுள் தமிழர்கள் ஆட்சியும் இடையிடையே நடைபெற்றுள்ளது. அஃது வருமாறு:

1. சேனன், கூத்திகன் இவர்கள் இருவரும் சேரநாட்டுத் தமிழர்கள். இவர்கள் சூரத்தீசன் காலத்தில் துரகவீரருக்குத் தலைவராய் இருந்து அரசைக் கைப்பற்றினர். 22 வருடம் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தனர். கி. மு. 237 – 215 வரை.

2. எல்லாளன். இவன் சோழநாட்டு அரசகுமாரன். கி. மு. 205 தொடக்கம் 161 வரையுள்ள 44 ஆண்டுகள் இலங்கை முழுமையையும் ஆட்சி புரிந்தான். இவன் புத்தபிக்குகளாலும் போற்றப்பட்டவன். நீதி தவறாது செங்கோலாட்சி புரிந்தான். இவனை வென்று ஆட்சி செய்தவன் துட்டகைமுனு என்பவன். எல்லாளனின் நீதி தவறாமையையும் மொழி, இன, மத வேறுபாடற்ற நடுநிலைமையையும் பாராட்டி அவனது உடலை சகல இராச மரியாதைகளோடும் அடக்கஞ் செய்துஅவ்விடத்தில் எல்லாளன் சமாதி ஒன்று கட்டுவித்தான். சமாதி களுக்கு முன்பாகப் போக்குவரத்துச் செய்பவர்கள் உரிய மரியாதையும் வணக்கமும் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பித்தான்.

3. சோழநாட்டுத் தமிழர் எழுவர். அவர்கள்: புலகத்தான், பாகியன், பனைய மாறன், பிலியமாறன். தாட்டியன் முதலியோர் இருவர் பெயர் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் ஒருவர் பின் ஒருவராய் கி. மு. 103 – 89 முடிய 14 ஆண்டுகள் இலங்கை முழுமையும் ஆட்சி புரிந்தனர். பெயர்குறிப்பிடாத இருவரும் புத்தரின் பாத்திரத்தைக் கையாடிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றனர் என வரலாறு கூறும்.

4. சுப்பன்: இவன் தத்தன் என்பவனின் மகன். இவன் இலங்கைத் தமிழன். கி. பி. 60 – 66 வரை 6 வருடம் ஆட்சி புரிந்தான்.

5. கி.பி. 113ல் சோழியர் படை இலங்கையின் வடமேற்குப் பகுதியில் இறங்கி (இது மாதோட்டமாக இருக்கலாம்) எதிர்பார் யாருமின்றி நாட்டைக் கொள்ளை அடித்து 12000 சிங்களவரையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இக்காலத்திலேதான் சிங்களவர் என்ற நாமம் பெறப்படுகின்றது.

எனவே மகாவமிச ஆட்சி 830ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. அதில் 86 ஆண்டுகள் தமிழர்கள் ஆட்சி நடைபெற்றுள்ளது. அரசின்றி இருந்த காலம் 17 ஆண்டுகள். ஆகவே மகாவமிச மன்னர் ஆட்சி 727 ஆண்டுகளே நடைபெற்றுள்ளது.

இனி மகாவமிச மன்னர்களின் வரலாற்றை ஆதாரமாகக்கொண்டு சில வரலாற்றுண்மைகளை அறிவாம். விசயனுக்குப்பின் அவனது பெருமகன் பந்துவாசன் ஆட்சி புரிந்தான். விசயன் அரசதானி தம்பன்னா, பந்துவாசன் மகன் அபயனது அரசதானி உபத்தீசனு வரை இதை முதல் அரசதானியாக்கியவன் விசயனின் முதன் மந்திரி உபத்தீசன் என்பவன். இவன் பந்துவாசன் வருவதற்று இடையில் விசயன் காலஞ்சென்றமையால் மாதோட்டத்தில் உபத்தீசநுவரையென தனது பெயரில் அரசதானியை அமைத்தான். இவன் கி. மு. 504 – 474 வரை ஆட்சி புரிந்தான். உபத் தீசன் ஆகிய இவன் ஈழநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த நாகர் குலத்தவன் ஆதல் வேண்டும்.

பந்துவாசன் மகள் உன்மாதசித்திரையின் மகனே பந்துகாபயன். இவன் தந்தை, பந்துவாசனின் மைத்துனன் திக்காமன் என்பவனின் மகன் திக்காமினி என்பவன். இவனே முதன் முதல் அனுராதபுரத்தை அரசதானி ஆக்கியவன். எனவே கி. மு. 543 தொடக்கம் பந்துகாபயன் ஆட்சி யெய்திய காலம் (கி. மு. 437) வரை 106 ஆண்டுகள் இலங்கையின் அரசதானி வட பகுதியிலேயே இருந்தது பின்னர் காலக்கிரமத்தில் இலங்கையின் அரசதானி தெற்கே நகரத் தொடங்கியது. இன்னும்விசயனின் பெறாமகன் பந்து வாசன் பரம்பரையில் வந்த அபயன், மூத்தசிவன், மகாசிவன், திரிகண்டசிவன், மகாநாதன், மகாநாமன். தீசன், உத்தியன், மகாசிவன், சூரத்தீசன், சிங்கவல்லி, ஈழநாகன், குலநாகன், குடநாகன், ஸ்ரீநாகன், அபயநாகன், இந்துவிசயன், மகாசேனன் என்னும் மகாவமிசமன்னர்களின் நாமாவளியே அவர்களும் ஈழநாட்டு அரச பரம்பரையினரும்ஒன்று பட்டு ஒரே கிளையினராய் வாழ்ந்தார்கள் என்பதை வலியுறுத்துவதாகும்.

புத்தமதம் தீசன் காலத்தில் வந்தபோதிலும் மகாவமிச மன்னரின் தமிழ் வழக்கும் இந்து சமயக் கோட்பாடும் மாறவில்லை என்பதே உண்மை. மகாவமிச காலம் தமிழும் இந்துமதமும் போற்றப்பட்டே வந்திருக்கிறது.

இன்னும் மகாநாகன் என்பவன் உறுகுணைப்பகுதிக்குச் சிற்றரசனாய் இருந்த காலத்தில் தான் புதிதாக அமைத்துக் கொண்ட நகருக்கு மாகமம் என்றே பெயரிட்டான் அன்றே: மாகமம் என்பது தமிழ் மொழி. மகாநாகனின் மகன் இயற்றால் தீசன் என்பவன் அரசனானபோது தான் அமைத்த நகருக்கு கழனியா எனப் பெயரிட்டான். கழனி தமிழ் மொழியன்றோ? அப்பகுதியை நீர்ப்பாய்ச்சும் ஆறும், களனியாறு என்றே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விடங்கள் தென்னிலங்கையிலேயே உள்ளன. இனித் தென்னிலங்கையின் தென்கோடியில் காலவரையறைக்கெட்டாத கந்தன் ஆலயம் உள்ளது. இது விசயன் வருகைக்குப் பின் வந்ததா? புத்த மதக் கோட்பாட்டில் முருக வணக்கம் உள்ளதா?

மகாநாகன் மூத்தசிவனின் மகன். தேவநம்பியதீசனின் உடன் பிறந்த தம்பி. இவன் மரபில் வந்தவனே துட்டகைமுனு. மகாநாகன் மகன் இயற்றால்தீசன் அவன் மக்கள் கோதாபயன், கழனிதீசன் என்போர். கோதாபயன் மகன் கவந்தீசன். கவந்தீசன் மக்களே துட்டகைமுனுவும், சதாதீசனும், துட்டகைமுனு காலம் கி. மு. 161 – 137 ஆகும். புத்த பிக்குகள் வந்த காலம் கி. மு. 307 ஆகும். புத்த பிக்குகள் வந்த காலம் கி. மு. 307 ஆகும். எனவே புத்த சமய வருகைக்கும், துட்டகைமுனு ஆட்சிக்கும் இடைப்பட்ட காலம் 146 ஆண்டுகளாகும். துட்டகைமுனு காலத்திலேயே சிங்களவர் என்ற வழக்கும். தமிழர், சிங்களவர் என்ற துவேஷ உணர்ச்சியும் ஏற்பட்டதை அறிகிறோம். அதற்குக் காரணகர்த்தா துட்டகைமுனுவே. எனவே புத்த மதம் வந்த சுமார் 100 ஆண்டுகளில் ஓர் புதுமொழி ஆக்கம் பெற்று வழக்கில் வருதல் கூடும். அது பேச்சிலும், எழுத்திலும் வலுவடைய இன்னும் காலம் வேண்டும். இலங்கையின் இனப் பிளவுக்கு மூல காரணம் புத்த மதமே.

வாலகம்பாகு மன்னன் காலத்தில் கி. மு. 103ல் தமிழர்படை எழுச்சி நடைபெற்றது. அப்போழுது அரசன் குடும்பத்தோடு தமிழருக்கு அஞ்சிக் காட்டில் ஒளித்தான் என்றும், அப்பொழுது தனசிவன் என்னும் தமிழ்ப் பிரபு அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்குப் பேருதவியாக இருந்தான் என்றும் மகாவமிச வரலாறே கூறுகின்றது. எனவே வாலகம்பாகு காலத்தில் கி. மு. 103ல் அனுராதபுரத்துச் சூழல் முழுமையும் தமிழர்களே பேசப்படுகிறார்கள். வாலகம்பாகுவுக்கு ஒருசிங்களவன் உதவி கிடைக்கவில்லையே. சிங்களச் சூழலில் புகலிடம் பெறவில்லையே? ஏன்? காரணம்; என்ன? அக்காலத்தில் புத்த மதம் வந்த பின் சிங்களம் என்ற பெயர் ஆக்கப்பட்டு அச் சொல் அரசர்களிடையேயும், பிக்குகளிடையேயும் நாம ரூபத்தில் இருந்ததென்றே கொள்ள வேண்டும். மக்கள் இடையே இனவேறுபாடு தோற்றாத காலம் என்றே கொள்ள வேண்டும். எனவே மக்கள் தமிழர்கள் ஆகவே வாழ்ந்தார்கள்@ தமிழ் மொழியையே பேசினார்கள். அதுவே வழக்கில் இருந்தது என்பது பெறப்படும்....

இனி, மாதகல் மயில்வாகனப்புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலைக் கூற்றின்படி விசயன் அரசனானதும் ஈழநாட்டின் நான்கு திக்குகளிலும் சைவ ஆலயங்களைப் புதிதாகக் கட்டுவித்தும் பழைய ஆலயங்களைப் புதுப்பித்தும் திருப்பணி வேலைகள் செய்வித்தான் என அறிகிறோம். அவன்செய்த திருப்பணி வேலைகள் வருமாறு:

குணதிசையில் அமைந்திருந்த பழமைவாய்ந்த திருக்கோணேஸ்வரத்தைப் புதுக்குவித்தான். குடபால் மாதோட்டத்தில் பழுதுற்றுக் கிடந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தைப் புதுக்குவித்தான். தென்பால் மாத்துறையில் சந்திரசேகரேஸ்வரன் கோயிலை எழுப்பினான். வடபால் கீரிமலையில் திருத்தம்பலேஸ்வரன் - திருத்தம்பலேஸ்வரி கோவில்களையும் கட்டுவித்தான். கதிரை ஆண்டவன் கோயில் இருந்த இடம் இன்று கோயிற்கடவை என வழங்கப்பட்டு வருகிறது. அதுவே மாருதப்புரவீகவல்லிக்குப் பின்னர் மாவிட்டபுரம் என்னும் பெயரைப் பெற்றது.

வடபால் அமைந்த கோயில்களுக்குப் பூசை செய்தவற்காக காசியில் இருந்து நீலகண்ட ஆசிரியன் மகன் வாமதேவாசிரியனையும், மனைவி விசாலாட்சி அம்மாளையும் அழைப்பித்துப் பூசைக்கு வைத்தான் என அவ் வரலாறு கூறும். இதனாலும் விசயன் சிவநெறிக் கோட்பாடுடையவன் என்பதும், தமிழன் என்பதும் புலப்படுகின்றதன்னறோ?

சிவநெறிக் கோட்பாடுடையவர்கள் தமிழர்கள். எக்காரியமும் ஆரம்பிக்கும் பொழுது தாம் வழிபடும் கடவுளை வணங்கியும், கடவுட் பணிகள் செய்தும் ஆரம்பிப்பது கடவுள் நம்பிக்கைக்குப் பாத்திரமான பாரம்பரிய மரபு. இனிப் புதியவனாய் வந்து அரசுரிமை பெற்ற விசயனுக்கு மக்களைத் தம்வசப்படுத்த வேண்டியது முக்கியமானது ஆதலினாலும் அவ்வாறு ஆலயத் திருப்பணியைச் செய்வித்தான் என்பது பொருத்தமானதே வேறோர் இனமோ, மதமோ அக்காலத்தில் இருந்தன என்பதற்கு ஓர் வரலாறோ வேறு எந்தவிதமான சான்றுகளோ யாதும் இல்லை. இருக்குமாயின் உரைமின்!

யாழ்ப்பாண வைபவமாலைக்குப் பின்னர் எழுதப்பட்ட யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் முதலியார் அவர்கள் கூற்றும் ஒருசில வேறுபாடுகளைத் தவிர ஒன்றாகவே அமைந்துள்ளன.

ஆனால் அரசைப் பெற்று, ஆலயத் திருப்பணிகள் செய்து அதன் பின்னர் விசயன் குவேனியை மணம் முடித்தான் என்ற முதலியார் கூற்று நடைமுறைக்கு எட்டுணையும் பொருத்தமற்றதாகும். அதற்குத் தகுந்த ஆதாரமும் இன்று.

அகதியாய் வந்த அரசிளங் குமரனாகிய விசயன் ஈழநாட்டு அரச பரம்பரையில் உள்ள அரச கன்னிகை குவேனியை மணம் முடித்து அதனால் அரசுரிமை பெற்று அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் செய்தான் என்பதே எவ்வாற்றானும் பொருத்தமுடைய வரலாறாகும். இதனால் விசயன் பரம்பரையில் வந்த பின்னுள்ள அரசர்களும் புத்த சமயம் வந்த பின்னரும் சிவ சமயக் கோட்பாடுகளைக்;;; கைவிட்டதில்லை. இன்றும் புத்த சமயிகளாய் இருக்கும் சிங்கள மக்களிடையே பிள்ளையார் வணக்கம், முருகவணக்கம், கண்ணகி வணக்கம் காணப்படுகின்றதன்றோ?

1ம் கசபாகு மன்னனின் வரலாறு அதனை உறுதிப்படுத்துகின்றது. இவன் துட்டகைமுனுவின் தம்பி சதாதீசன் மகனான லஜ்ஜீதீசன் பரம்பரையில் வந்தவன். கி. பி 113ல் ஆட்சிக்கு வந்தவன். 22 வருடம் ஆட்சி புரிந்தான். இவன் காலத்திலே இந்தியாவில் சேர நாட்டை ஆட்சி புரிந்தவன் சேரன் செங்குட்டுவன் ஆவான். இவன் காலத்திலேயே கண்ணகி வரலாறு நிகழ்ந்தது. கண்ணகியின் கற்பின் மகிமையை புலவர் சீத்தலைச் சாத்தனார் வாயிலாக அறிந்து கண்ணகிக்குக் கோயில் எடுக்கக் கருதினான். அதனால் வடநாட்டு கோயில் எடுக்கக் கருதினான். அதனால் வடநாட்டு ஆரிய நகரை வென்று இயமம் சென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையிலே நீராட்டி ஆலயம் எழுப்பி கண்ணகி சிலையைப் பிரதிட்டை செய்து விழாக் கொண்டாடினான்.

அப்போது 1ம் கசபாகுவும் சேரநாடு சென்று விழாவிற் கலந்து கொண்டான் எனச் சிலப்பதிகாரம் வரந்தரு காதையில் ‘கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தனும்’ எனக் கூறப்பட்டிருத்தலைக் கொண்டு அறியலாம். பின் கயவாகு தன்னாட்டில் கண்ணகிக்கு ஆங்காங்கு ஆலயம் எழுப்பி விழாவெடுத்த வரலாற்றை சிலப்பதிகாரம் உரைபெற கட்டுரை தெளிவாகக் கூறுகின்றது. அது வருமாறு:

“அது கேட்டு கடல்சூழிலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டம் முந்துறத் தாங்கு, அரந்தை கெடுத்து வரம் தரும் இவளென ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை எடுப்ப மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விழையள் நாடாயிற்று” என்பது, இலங்கையில் இன்று நிலவி வரும் கண்ணகி கோவில்கள் கயபாகு காலத்திலேயே அவன் விருப்பப்படி ஆரம்பிக்கப்பட்டு அன்று தொட்டு விழாக் கொண்டாடி வணங்கப்பட்டு வருகின்றன என்பது புலனாகும்.

சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் புத்தபிக்குகள் ஆனதினாலே விசயன் வரலாற்றில் அவன் செய்த ஆலயத் திருப்பணி வேலைகளைக்கூறாது மறைத்தும், குவேனியின் வரலாற்றை இழித்தும் கூறியதோடு கயவாகுவின் வரலாற்றில் அவன் சேரநாடு சென்று கண்ணகி விழாவிற் கலந்து கொண்டமையும் இலங்கையில் கண்ணகி வணக்கத்தை ஏற்படுத்தியமையையும் மூடிமறைக்கலாயினர். இப்போ நாம் அறியக்கூடிய வரலாற்றுண்மைகள் பின்வருவனவாகும்.

அவை விசயன் வருகைக்கு முன் ஈழநாட்டு அரச பரம்பரையினரே ஆட்சிபுரிந்தனர் என்பது விசயன் ஈழநாட்டு அரச பரம்பரையில் மணம் முடித்து அரசுரிமை பெற்று அட்சி செய்தான் என்பதும், விசயன் பரம்பரையும் ஈழநாட்டு அரச பரம்பரையும் கலந்த கிளையினரே இலங்கையின் பேரரசாக முறையே ஆட்சிபுரியலாயினர் என்பதும் ஈழநாட்டின் அரசபரம்பரையில் அவர்கள் கலப்பில்லாத ஏனையோர் சிற்றரசர்கள் ஆகவும், மந்திரிகள் ஆகவும் வேறு உயர் பதவி உடையவர்கள் ஆகவும் இருந்து ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள் என்பதுமாகும்....

தொடரும்...பகுதி-11 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக