தமிழனும் உலக வரலாறும்...
பகுதி-9
கிருத்துவமும் இந்தியாவும் -
கி.பி 52...!!!
தூய தோமா இந்தியா வந்ததாக சொல்லப்படும் காலம்.
கிருத்துவின் கருத்துக்களைப் பரப்புவதற்காக கடல் கடந்து தமிழகத்தின் மேற்கு பகுதியை வந்தடைந்து, பின்னர் இந்திய தேசம் முழுவதும் தனது பணியை மேற்கொண்டு இறுதியில் தமிழகத்தில் மயிலையில் சிலரால் கி.பி 72 ஆம் ஆண்டில் கொல்லப்படுவதாக நீள்கிறது இவரது வரலாறு. இது தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுபவர்கள் கூறும் கூற்று.
இதனை மறுப்பவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
"ரோம மன்னன் ஆகசுடசு காலத்து நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன சரி...இந்தியாவின் வட பகுதியில் கொண்டாபோரசு என்ற அரசன் ஆண்டான். அதுவும் சரி. ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுவது எவ்வாறு சரியாகும். அசோகர் பௌத்தத்தை பரப்பினார் என்றால் அதற்கு சான்றாய் இந்தியா முழுவதும் பௌத்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அதைப் போலவே தோமாவும் கிருத்துவின் கருத்துக்களைப் பரப்ப வந்தார் என்றால் கிருத்துவின் கருத்துக்கள் இங்கே காணப்பட வேண்டுமே. அவ்வாறுக் காணப்பட்டால் தானே அவர் வந்தார்...சேவை செய்தார் என்றுக் கூற முடியும். அவ்வாறு சான்றுகள் இல்லாமல் எவ்வாறு தோமா இந்தியா வந்தார் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?" என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது.
நியாயமான கேள்விதான். தோமா இந்தியா வந்து இருந்தால் கிருத்துவின் கருத்துக்களும் அவருடனே வந்து இருக்க வேண்டுமே. இந்தியாவினில் பரவி இருக்க வேண்டுமே. அவ்வாறு இருந்தால் தானே தோமா இந்தியா வந்தார் என்றுக் கூற முடியும்.
எனவே இப்பொழுது நாம் இந்தியாவில் தோமா கொண்டு வந்த கிருத்துவின் கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை காண வேண்டி இருக்கின்றது.
முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தபடி சிலுவை கிருத்துவர்களின் சின்னம் அல்ல. மாறாக திருநீறே அவர்களின் சின்னம் என்று நாம் கண்டு இருந்தோம்.
இந்நிலையில் சில கேள்விகள் இயல்பாகவே எழலாம்...!
இந்துக்களும் திருநீற்றினை இடுகின்றார்கள்...அதே முறை தான் கிருத்துவத்திலும் இருக்கின்றது. ஏன் இந்த ஒற்றுமை? ஒரு வேளை இரண்டு மதங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? இல்லையெனில் எதேச்சையாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் உருவான இரு மதங்களில் ஒரே மாதிரியான பழக்கம் தற்செயலாக உருவாகி இருக்குமோ?
இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நமது இலக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.
கிருத்துக்கு முற்பட்ட காலத்து தமிழ் இலக்கியங்களிலும் சரி, சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று பெரும்பாலானோரால் நம்பப்படும் வேதங்களிலும் சரி திருநீற்றினைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. கிருத்துக்கு பிற்பட்ட தமிழ் இலக்கியங்களில் திருநீற்றினைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன ஆனால் கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் இது வரை திருநீரைக் குறிக்கும் செய்திகள் காணப்படவில்லை.
அதைப்போலவே சிவலிங்கத்துடன் நந்தி இணைந்து இருப்பது போல் உள்ள வழிப்பாட்டு முறையும் கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களிலும் சரி வேதங்களிலும் சரி காணப்படவில்லை. ஆனால் அத்தகைய வழிபாட்டு முறை விவிலியத்தில் குறிக்கப்பட்டு இருப்பதை நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.
சிவலிங்கம்/கல் வழிபாட்டு முறை கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களில் பல கிடைத்தாலும் நந்தி/கன்றுக்குட்டி உடன் இருப்பது போன்ற வழிபாட்டு முறை கிருத்துக்கு பிந்தைய கால இலக்கியங்களிலேயே காணப்படுகின்றது.
இங்கே தான் நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது. விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள வழிபாட்டு முறைகள் இன்று சைவ வைணவ சமயங்களில் பழக்கத்தில் உள்ளன. ஆனால் சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று கூறப்படும் வேதங்களிலோ அந்த வழிப்பாட்டு முறைகளைப் பற்றிய குறிப்புகளே இல்லை, மேலும் கிருத்துவுக்கு முற்பட்ட கால இலக்கியங்களில் அந்த பழக்க வழக்கங்கள் இந்தியாவினால் நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் இது வரை கிட்டவில்லை.
அப்படி இருக்கையில் விவிலியத்தில் காணப்படும் அந்த பழக்க வழக்கங்கள் எவ்வாறு இந்திய சமயங்களில் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் ஆராயும் பொழுது தான் அந்த இணைப்பு அவர்களின் கண்ணுக்கு புலப்படுகின்றது.
அந்த இணைப்பு தான் - தோமா!!!
ஆம். தோமா இந்தியாவுக்கு வந்தார் என்று கூறப்படும் காலத்திற்கு பின்னரே மேலே நாம் கண்ட வழிபாட்டு முறைகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலே நமக்கு கிடைக்க பெறுகின்றன. அவை சைவ இலக்கியங்களாக இருக்கட்டும் வைணவ இலக்கியங்களாக இருக்கட்டும் அனைத்தும் தோமாவின் காலத்திற்கு பின்னரே உருவானவைகளாகவே இருக்கின்றன.
எனவே தோமா கொண்டு வந்த கருத்துக்களின் படி தான் மேலே நாம் கண்ட வழிபாட்டு பழக்க வழக்கங்கள் இந்தியாவினுள் தோற்றம் பெற்றன என்று நாம் கருத முடிகின்றது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதாவது அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் சிவலிங்க/கல் வழிபாடு தெற்கில் இருந்து சிந்து சமவெளியை அடைந்து பின்னர் மேற்கே சென்று யூதர்களின் பழக்கமாகவும் மாறுகின்றது. பின்னர் அதேப் பழக்கம் கிருத்துவுக்கு பின்னால் தனது மாறுபட்ட நிலையில் தோமாவின் வாயிலாக இந்தியா வந்தடைகின்றது...!
அவ்வாறு வந்த கருத்துக்களும் பழக்க வழக்கங்களும் தான் சைவ வைணவ சமயங்களாக வளர்ந்தன என்றும் அவர்கள் கருதுகின்றனர். நிற்க.
வில்லங்கமான கூற்று தான்....இல்லையா!!! ஆனால் இந்தக் கூற்றினை முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை ஏனெனில் அனைத்து சைவ வைணவ இலக்கியங்களும் சரி அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் சரி எல்லோரும் தோமா இந்தியாவுக்கு வந்த காலத்திற்கு பின்னரே தான் தோன்றி இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் என வழங்கப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அனைவருமே தோமா மறைந்ததாக கூறப்படும் மயிலையை சுற்றி உள்ள இடத்தில இருந்தே தோன்றி உள்ளனர். மேலும் திருவள்ளுவரும் அதே காலத்தில் திருமயிலையில் தோன்றி இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் ஒற்றுமைகளாக இருக்கலாம் அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக இருக்கலாம். அதனை அறிந்துக் கொள்ள நாம் கிருத்துவ மதத்தின் கொள்கையையும் காண வேண்டும்...சைவ வைணவ மதங்களின் கொள்கைகளையும் காண வேண்டும்.
காண்போம்...!!!
மூவொரு கடவுள் கோட்பாடு...!!!
கிருத்துவ சமயத்தின் அடிப்படை தத்துவம். இதன்படி ஒரே கடவுள் மூன்று விதமான தன்மைகளில் தோன்றுகின்றார் என்று கிருத்துவம் கூறுகின்றது. இதனை சற்று விரிவாக பார்க்கலாம்.
கிருத்துவத்தின் படி ஒரே கடவுள் மூன்று வகையான நிலையில் இருக்கின்றார். அதாவது...
தந்தை நிலை - பரம பிதா.
பரிசுத்த ஆவி நிலை.
மகன் நிலை - இயேசு.
இதுவே கிருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.
மேலும் இறைவன் மனித வடிவில் மனிதர்களுக்காக வந்தார் என்ற அவதாரக் கோட்பாடும், பாவ மன்னிப்பு கோட்பாடும் கிருத்துவத்தின் மற்ற முக்கிய தத்துவங்களாகும். நிற்க.
இப்பொழுது நாம் கிருத்துவின் கருத்துக்கள் தான் சைவ வைணவ சமயங்களாக மாறி இருக்கின்றன என்று கூறினால் அச்சமயங்களில் கிருத்துவத்தின் அடிப்படை தத்துவங்களான மூவொருக் கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட வில்லை என்றால் சைவ வைணவ சமயங்கள் கிருத்துவ கருத்துக்களின் அடிப்படையில் எழுந்தவை என்ற கருத்து பொய்த்து விடும். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களின் கோட்பாடுகளை கண்டு விட வேண்டிய தேவை இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் மூவொரு கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் இருக்கின்றனவா...காண்போம்!!!
சைவ வைணவ சமயங்களைப் பற்றி நாம் அறிந்துக் கொள்வதற்கு முன்னர் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் சைவம் மற்றும் வைணவம் என்ற மதங்கள் இரண்டாக பிரிந்து இருக்கவில்லை. இரண்டும் இணைந்து சைவம் என்றே இருந்தன. பிற்காலத்தில் தான் வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து செல்கின்றது. இது வரலாறு.
சரி இப்பொழுது அந்த சமயங்களைப் பற்றி நாம் காண்போம்.
சைவம் - சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டது.
வைணவம் - பெருமாளை முழுமுதல் கடவுளாக கொண்டது.
இவ்விரு சமயங்களிலும் அவதாரக் கோட்பாடுகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
வைணவத்தில் பெருமாளின் அவதாரங்களாக பத்து அவதாரங்கள் குறிக்கப்பட்டு உள்ளன. அதிலும் மனித உரு எடுத்து வந்த அவதாரங்களும் இருக்கின்றன.
அதே போல் சைவத்திலும் முருகன் மனித உரு எடுத்து உலகிற்கு வந்ததாக அவதாரக் கதைகளும் உள்ளன.
ஆனால் மீண்டும் இந்த அவதாரக் கதைகளுக்கான சான்றுகள் வேதங்களிலோ அல்லது கிருத்துக்கு முற்பட்ட கால இலக்கியங்களிலோ காணப்படவில்லை. சில கதைகள் உதாரணமாக இராமாயணக் கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்டாலும் அதற்குரிய சான்றுகள் இது வரை கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் தனி ஒரு பதிவில் காண்போம்.நிற்க.
இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களில் மூவொருமை கடவுள் கோட்பாடு இருக்கின்றதா என்று நாம் காண்போம்.
நாம் ஏற்கனவே மேலே கண்டுள்ளோம் சைவம் என்பது சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும் வைணவம் என்பது திருமாலை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும். ஆனால் அந்த சமயங்கள் அவர்கள் இருவரை மட்டும் வணங்குவதோடு நிற்கவில்லை. அந்த சமயங்கள் அவர்களின் குடும்பத்தினை வழிபடுவதாகவும் இருக்கின்றன.
சைவ மதம் சிவனை வழிபடுவதோடு நில்லாமல் அம்மனையும் முருகன்/விநாயகரையும் சேர்த்து வழிபடும் ஒரு மதமாக இருக்கின்றது.
அதாவது,
தந்தை - சிவன்
தாய் - அம்மன்
பிள்ளை - முருகன்/பிள்ளையார்.
அதேப்போல் வைணவமும் பெருமாளின் குடும்பத்தினை வழிபடும் ஒரு சமயமாக இருக்கின்றது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிவன் வைணவத்திலும் வணங்கப்படுகின்றார்.
அதாவது வைணவத்தின் படி வணங்கப்படும் கடவுள்கள்,
சிவன்
திருமால்
பிரமன்.
இவர்களைத் தான் நாம் மும்மூர்த்திகள் என்று வழங்குகின்றோம். அதாவது சிவன் - அழிக்கும் கடவுள்.
திருமால் - காக்கும் கடவுள்.
பிரமன் - படைப்புக் கடவுள் என்றே நாம் அறிந்து இருக்கின்றோம்.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் படைப்புக் கடவுளாக கூறப்படும் பிரமன் - திருமாலின் மகனாக கூறப்பட்டுள்ளார்.
திருமால் கனவு காண்பதாகவும் அதிலிருந்து பிரமன் தோன்றியதாகவும் நமது புராணக் கதைகள் நீள்கின்றன. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக குறிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக தொப்புள் கொடி உறவு என்பது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள உறவு தான். அவ்வாறு இருக்க ஆணான பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு ஏன் தொப்புள் கொடி உறவாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.
மேலும் புராணக் கதைகளில் விஷ்ணு பல இடங்களில் பெண் உருவம் எடுப்பதாக கதைகள் வருகின்றன. மேலும் சிவனும் பெருமாளும் இணைந்து ஐயப்பன் தோன்றுவதாகவும் நமது கதைகள் இருக்கின்றன. அதாவது
தந்தை - சிவன்
தாய் - பெருமாள்
பிள்ளை - ஐயப்பன்.
ஆனால் இந்தக் கதைகள் அனைத்திலும் சிவன் ஆணாகவே குறிக்கப்பட்டு உள்ளார். பெருமாள் ஆணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஏன் இந்த வேறுபாடு என்றும் இந்தக் கதைகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமோ என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
மேலும் நாம் இதுவரை கண்ட விடயங்கள் அனைத்திலும் தந்தை தாய் மகன் ஆகிய மூன்று கடவுள்களை வழிபடும் பழக்கம் இருப்பதை கண்டு இருக்கின்றோம். இந்த பழக்கங்கள் கிருத்துவம் கூறும் மூவொருக் கடவுள் கோட்பாட்டினை ஒத்து இருப்பதையும் நாம் காணுகின்றோம். இந்நிலையில் கிருத்துவம் கூறும் கோட்பாடும் சைவ வைணவ சமயங்களில் காணப்படும் கோட்பாடுகளும் ஒன்றா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் முதலில் அம்மனையும் பெருமாளையும் பற்றி காண வேண்டி இருக்கின்றது.
காண்போம்...புராணங்கள் அழைக்கின்றன.
அம்மனும் பெருமாளும் -
"செல்வனின் தங்கை நன்றாக நடனமாடினான்.
செல்வன் அவன் தங்கையின் நடனத்தை மகிழ்ச்சியுடன் கண்டு கொண்டு இருந்தாள்."
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியான வாக்கியங்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.
காரணம்... அந்த வாக்கியங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான விகுதிகள் தவறாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
விகுதிகளா...அப்படி என்றால் என்ன? என்பவர்களுக்காக விகுதிகளை சற்று பார்த்து விடுவோம்.
விகுதி என்பது ஒரு சொல்லின் பொருளை தெளிவாக குறிக்க அச்சொல்லின் இறுதியில் சேர்க்கப்படும் ஒரு சொல். உதா - 'ன்' 'ள்' 'ஆர்'
தமிழ் இலக்கணத்தின் படி,
ஆண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ன்'. எடு: அவன், வந்தான்,நடந்தான்,முருகன்...
பெண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ள்'. எடு: அவள்,ஓடினாள்,ஆடினாள்...
ஆணுக்குரிய விகுதி பெண்ணுக்கு வாராது. அதேப் போல் பெண்ணுக்குரிய விகுதியும் ஆணுக்கு வாராது. எப்பொழுது இந்த விகுதிகள் மாறுகின்றனவோ அப்பொழுது அச்சொல் தவறான ஒன்றாக மாறுகின்றது. இந்நிலையில் தான் நாம் மேலே உள்ள வாக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.
செல்வனின் தங்கை, 'ன்' என்ற ஆண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றாள்.
செல்வனோ, 'ள்' என்ற பெண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றான்.
ஒரு ஆண் விகுதி பெண்ணுக்கும், பெண் விகுதி ஆணுக்கும் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இவை தமிழ் இலக்கண முறைப்படி தவறான வாக்கியங்களாகும்.
சரி இப்பொழுது நாம் இதன் அடிப்படையில் நம்முடைய கதைக்கு வருவோம்.
அம்மன் - பெண் தெய்வம். ஆனால் ஆண்களுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.
பெருமாள் - ஆண் தெய்வம். ஆனால் பெண்ணுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.
ஏன் இந்த வேறுபாடு? விகுதிகளை மாற்றிக் கூறுவது தவறென்று அறியாத சிலர் தெரியாது இந்த பெயர்களை இட்டு விட்டார்களா? அல்லது அவர்கள் இந்தப் பெயர்களை இட்டதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதனை நாம் இப்பொழுது ஆராய்ந்து பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சென்ற பதிவில் பார்த்த சில விடயங்களை மீண்டும் காண வேண்டி இருக்கின்றது.
சென்ற பதிவில் நாம் கண்டபடி,
சைவம் என்பது ---> சிவன், அம்மன், முருகன் பிள்ளையார் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.
வைணவம் என்பது ---> சிவன் , பெருமாள், பிரமன் ஐயப்பன் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.
இங்கே நாம் நோக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,
சிவனுக்கு அம்மன் மூலமாக இரு குழந்தைகள் இருக்கின்றனர். அதேப்போல் பெருமாளின் மூலமாகவும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் எவ்வளவு தான் புராணக் கதைகளில் தேடினாலும் பெருமாளுக்கு என்று தனியே குழந்தைகள் இருப்பதாக செய்திகள் இல்லை. சைவ வைணவ சமயங்களில் காணப்படும் பிள்ளைக் கடவுள்கள் அனைவரும் தந்தை சிவனாகவே காணப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் தான் நாம் கிருத்துவ தத்துவத்தையும் காண வேண்டி இருக்கின்றது. சென்ற பதிவில் கண்டவாறு கிருத்துவம் இறைவனை 'தந்தை நிலை', 'பரிசுத்த ஆவி நிலை' மற்றும் 'பிள்ளை நிலை' என்ற மூன்று நிலைகளில் வைத்தே கூறுகின்றது.
இப்பொழுது ஒரு கேள்வி.
மூன்று பேர்களைக் கொண்ட ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்த குடும்பத்தில் தந்தை இருக்கின்றார்...பிள்ளையும் இருக்கின்றார்...அப்படி என்றால் இடையில் விடப்பட்டு உள்ள அந்த இன்னொருவர் யார்?
அன்னை என்பதே விடையாக இருக்கும் தானே.
எனவே இதன் அடிப்படையில் 'தந்தை தாய் மகன்' என்பதே இயல்பான உறவு என்றுக் கொண்டு 'தூய ஆவி' என்பது ஒரு பெண் தான் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆனால் விவிலியத்தின்படி மரியாளுக்கு தூய ஆவியின் மூலம் குழந்தை உருவாவதால், ஒரு ஆணின் மூலமே ஒரு பெண்ணுக்கு குழந்தை உண்டாக முடியும் என்ற கருத்தின் படி தூய ஆவியை ஆணாக வேறு சிலர் கருதுகின்றனர்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வேறுபாடுகளே சைவ வைணவப் சமயங்களின் பிரிவின் அடிப்படைக் காரணமாகும்.
அதாவது தூய ஆவியை பெண்ணாக கருதி 'தந்தை - தாய் - பிள்ளை (சிவன் -அம்மன்-முருகன்/பிள்ளையார்)' என்ற உறவின் அடிப்படையில் சைவம் வளருகின்றது. அதற்கு மாறாக தூய ஆவியை ஆணாகக் கொண்டு 'தந்தை -தந்தை-பிள்ளை(சிவன்-பெருமாள்-பிரமன்/ஐயப்பன்)' என்ற உறவின் அடிப்படையில் வைணவம் வளருகின்றது.
இங்கே தூய ஆவி ஆணா இல்லை பெண்ணா என்று தெளிவாக கூற முடியாததால் அவ்விரு குணங்களுமே தூய ஆவிக்கு உண்டு என்றுக் கருதி,
அம்மன் - பெண் கடவுள் தான் ஆனால் ஆண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ன்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும்
பெருமாள் - ஆண் கடவுள் தான் ஆனால் பெண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ள்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் அம்மனும் பெருமாளும் வேறுவேறு அல்லர் என்பதை கூற நமது புராணக் கதைகளில் இருவரும் அண்ணன் தங்கையாக குறிக்கப்பட்டு உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.
மேலும் சைவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி அம்மன் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் என்று வழங்கப்படுகின்றது. அதேப்போல் வைணவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி பெருமாள் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அரிஅரன் என்று வழங்கப்படுகின்றது. இவ்விரண்டு வடிவத்திலும் வலப் பகுதி ஒன்றாகவே கூறப்பட்டு இருப்பதும் இடப்பகுதி மட்டும் மாற்றிக் கூறப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்க விடயங்களாகும்.
அதேப்போல் கிருத்துவத்தில் தூய ஆவி கடவுளின் ஆற்றல் என்று வழங்கப் பெறுவதும் இங்கே அம்மன் 'சக்தி' என்று வழங்கப் பெறுவதும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய ஒரு விடயமாகவும் உள்ளது.
சரி...பெருமாளையும் அம்மனையும் பற்றி சற்று கண்டாயிற்று. இப்பொழுது இன்னொரு கேள்விக்கு பதில் நாம் காண வேண்டி இருக்கின்றது.
கிருத்துவின் கருத்துக்கள் தான் நம் மண்ணிலும் வளர்ந்து உள்ளன என்றால் ஒரு குழந்தை வழிப்பாட்டு முறை தானே இங்கே இருக்க வேண்டும். கிருத்துவக் கொள்கைகள் படி இறைவனுக்கு ஒரு குழந்தை தானே. அனால் இங்கேயோ பிள்ளையார், முருகன், பிரமன் மற்றும் ஐயப்பன் என்று நால்வர் இருக்கின்றார்களே?... இதற்கு என்ன விளக்கம் என்று கேட்கின்றீர்களா....
நல்ல கேள்வி தான்...இதற்குரிய விடையையும் நாம் தேட வேண்டி இருக்கின்றது...தேடுவோம்...!!!
வினைத் தீர்க்கும் விநாயகர் நமக்காக முதலில் காத்துக் கொண்டு இருக்கின்றார்....
தொடரும்... பகுதி-10 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக