வெள்ளி, 24 அக்டோபர், 2014

இராவணன் நல்லவர்??? நீங்க என்ன சொல்றீங்க?

இராவணன் நல்லவர்???
நீங்க என்ன சொல்றீங்க...

நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தல் கடினமான வேலை.. அது ராமனாக இருந்தாலும் சரி ராவணனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பிறந்தனர் வாழ்ந்தனர்.. இறந்தனர்... அவ்வளவே!

01):- ஒரு நாட்டின் ராஜகுமாரியைத் தூக்கிக் கொண்டுவந்து சிறைபிடிக்கும் ஓர் அரசன் எங்ஙனம் அவன் நாட்டின் அழகிய பெண்களைப் பாதுகாப்பான்?

ராவணனின் மகள் சீதை என்று ஒரு கதை உண்டு..

ராவணனுக்கு அவன் சீதையைக் கொண்டுவந்தபோது அவள் ஒரு காட்டுவாசி அவ்வளவே. ராஜகுமாரி அல்ல. அது ராஜகுமாரியை கடத்தியது என்று சொல்லமுடியாது. பெண்களைக் கவர்வது தவறு என்று அந்த காலத்தில் கருதப் பட்டதாக தெரியவில்லை. சுக்ரீவனின் மனைவியை வாலி கவர்ந்தான், மன்னர்கள் தாங்கள் வெற்றிப்பெற்ற நாடுகளில் இருந்து பெண்களை கவர்ந்து வந்தனர். ராமன் தங்க மானைப் பிடிக்கலாம். ராவணன் சீதையைப் பிடிக்கக் கூடாதா? மானும் கடவுள் படைத்த உயிரினம் தானே? ராமன் ஏன் அசுவமேத யாகம் செய்தான்? யாகக்குதிரையை கட்டிய சிறுவர்களுடன் ஏன் போரிட்டான்.. கௌரவம் அய்யா கௌரவம்.. அவ்வளவுதான்..

02):-பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகளுக்கு மத்தியில் இராவணன் இலங்கையை எப்படி சொர்க்கபுரியாக ஆள முடியும்?

இலங்கையின் குடிமக்கள் பாதுகாப்பின்றி வாழவில்லை என்பது அபாண்டம். அனுமன் இலங்கைக்குள் நுழைய என்ன பாடுபட்டான் என்று தெரியுமல்லவா? ராவணன் பல தாரமுள்ளவனாக வாழவில்லை. அவன் குல வழக்கப்படியே வாழ்ந்தான்.. ஓரிரு முறை அவன் பிறபெண்களின் மேல் ஆசைப்பட்டிருக்கலாமே தவிர பெண்களுக்கு அவன் ஆட்சியில் பாதுகாப்பில்லை என்ற கருத்தை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவனது குலமாந்தர் உலகைச் சுதந்திரமாய் சுற்றி வந்தனர்.. ஆண்களின் பின் அடுப்படிகளில் மறைந்து வாழவில்லை.

03):-சொர்க்கமாக ஆண்ட இராவணனை ஏன் கருணையின்றி இராமன் கொல்லவேண்டும்? மன்னித்து அரசை அவனுக்கே கொடுக்கலாமே?!!

ராமன் ராவணன் மேல் போர்தொடுத்தது ஒரு கௌரவப் பிரச்சனை. அதில் யாரும் விட்டுக் கொடுத்திருக்க முடியாது.. யாராவது விட்டுக் கொடுத்தால்தானே இருவரும் உயிரோடு இருக்க.. போரில் தோல்வி யாருக்கும் இல்லை. யாரும் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. ராமன் ராவணனை கொன்றானா வென்றானா என்று வேண்டுமானால் பட்டிமன்றம் வைத்துக் கொள்ளலாம்.. ஒருவன் இறப்பதால் அவன் தோற்றான் என்று அர்த்தமில்லை.

04):- ஏன் முனிவர்கள் எல்லாம் இராவணனைப் பார்த்து நடுங்கி விஷ்ணுவிடம் அவதாரமெடுக்கச் செய்யவேண்டும்?

முனிவர்கள் நடுங்கி விஷ்ணுவிடம் முறையிட்டனரா? பிரம்மரிஷி வஷிஸ்டர் நடுங்கியதாக தெரியவில்லை. பரசுராமரும் நடுங்கியதாகத் தெரியவில்லை. ராமன் பிறக்க யாகம் செய்ய வந்தாரே ரிஷ்யசிருங்கர் அவரும் நடுங்கவில்லை.. திரிலோக சஞ்சாரி நாரதரும் நடுங்கவில்லை.. விஷ்வாமித்ரரும் யாகத்திற்கு தசரத ராமனிடம் உதவி கேட்டாரே தவிர விஷ்ணுவை அவதரிக்கச் சொன்னதாக தெரியவில்லை.. ராமனும் காடுகளில் பலப்பல முனிவர்களை கண்டு வணங்கி வாழ்த்து பெற்றதாக அறிகிறோம். இவர்களெல்லாம் ராவணனால் தொல்லை செய்யப்பட்டனரா?

05):- முனிவர்களும் தேவர்களும் வாழ முடியாத ஓர் நாட்டை எப்படி சொர்க்க புரியாக ஏற்றுக் கொள்ள முடியும் ?

மனிதர்கள் வாழ்ந்தாலே அது நாடு. முனிவர்கள் தேவர்கள் தேவையில்லை..

கேள்வி(06):-இராவணன் ஆரம்பித்து இன்று வரை அங்கே நிம்மதி இல்லை! ஆக ராவணன் ஆட்சி என்று நான் சொன்னதில் தவறேது இருக்கமுடியும்?

அது ராவணன் ஆரம்பித்த நிம்மதி சீர்குலைப்பு இல்லை. அனுமன் ஆரம்பித்தது.. இலங்கையை காத்த இலங்கிணியை கொன்றது அனுமன் தானே.. இலங்கையை அதன் பின் பலப்பல மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர்.

07):-வெறும் பேச்சினால், அனுமன் கோபத்தைக் கிளறிவிட்டு ஊரையே எரித்த ஓர் உத்தமன் ஆண்ட நாடு எவ்விதமய்யா சொர்க்கம்?

அசோகவனத்தை அழிக்கும் வானரத்தை அழிக்க நினைப்பது எப்படி கெட்ட செயலாகும்? அது ராவணன் தவறா என்றா சொல்கிறீர் விபீஷணன் தவறல்லவா? யார் வந்து நான் தூதனென்றால் தூதன் ஆகிவிடுவானா? தூதனைக் கொல்லாதே என்று விபீஷணன் சொல்லாவிட்டால் அனுமன் வாலில் தீவைத்திருப்பானா? ?

08):-ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா?

அனுமன் தூதுவன் என்று சொல்லிக் கொண்டான்.. ராமன் அரசன் அல்ல.. அரசபதவியை துறந்தவன்.. துறவிக்கு தூதன் ஏது? அயோத்தியின் அரசன் அப்போது செருப்பு.

09):-முக்காலமும் உணர்ந்த விஷ்ணு, பிற்காலத்தில் இராவணன் கொடியவன் என்று அறிந்திருப்பான்.. அப்படியிருந்தும் ஓர் அவதாரம் எடுத்து இராவணனைக் கொல்ல நேரிடுகையில் எதன் அடிப்படையில் இராவணன் நல்லவனாகிறான்?

விஷ்ணு முக்காலமும் அறிந்தவரென்கிறீர்,.ராவணன் என்று கெட்டவன் அறிந்திருக்கிறான்.. அதனால்தான் அவதாரம் எடுத்து வதைக்கிறான் என்றீர்.. எய்யும் அம்பை நோவானேன்.. ராவணனைப் படைத்த பிரம்மாவையே ஒழித்து விடலாமே.. இல்லை இல்லை சனகாதி முனிவர்களின் சாபத்திற்கு ஜெய விஜயர்களுக்கு வழங்கப்பட்ட வரம் என்கிறீரா அப்போது நல்லவர்களுக்கு இன்னல் விளைக்கும் வரம் தந்த விஷ்ணுதானே குற்றவாளி.. ராவணன் எப்படி குற்றவாளி...
18 வருடங்களாக தேவாசுர யுத்தம் நடந்தது. அதில் தேவர்கள் பக்கமாக தசரதர் போரிட்டார். சம்பாசுரன் என்ற அசுரனை எதிர்த்துப் போரிட்டபொழுது தேரின் அச்சாணி ஒடிந்து விழ தசரதனின் தேர் நிலைதடுமாறியது. தசரதனுக்கு தேரோட்டிய கைகேயி தன் கைவிரலை அச்சாணியாய் கொடுக்க போரில் தசரதன் வெற்றிபெற்றார். கைகேயியைப் பொற்றி இரண்டு வரம் தர முன் வர கைகேயி அதை நேரம் வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்கிறாள்.

10):-தேவர்கள் சம்பாசுரனுடன் போரிட்ட போது உதவிய தசரதர் இந்திரஜித்துடன் போரிட்ட போது எங்கே போனார்? ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்திலிருந்து விரட்டப்பட்ட தேவர்களை ஏன் அசுரர்கள் எதிர்த்துப் போரிட்டனர்?

இராவணன் நல்லவன் என்று தீர்மானிக்க வேண்டியது அசல் காவியம் எழுதிய வால்மீகிதானே தவிர நகலெடுத்த கம்பரும் பாரதிதாசனும் அல்லவே!

11):-ஒரு கதாசிரியன் எப்படி ஒரு பாத்திரத்தை இவன் நல்லவனா இல்லைக் கெட்டவனா என்று சொல்ல முடியும் அதை தரம் பிரிப்பது ரசிகன் அல்லவா? ஆமாம் வால்மீகியும் முனிவர்தானே அவருக்கு ராவணன் இழைத்த தொல்லை என்ன?

நல்லவன் என்று நீங்கள் சொல்லவேண்டுமானால் ஏன் இராவணனை அரக்கனாக சித்தரிக்கவேண்டும்?

ராவணனும் குபேரனும் அண்ணன் தம்பிகள் என்பதை அறிவீரா?(சக்களத்தி மக்கள்) ராவணன் பிராம்மணன். அசுரன் என்பது குணத்தாலேயன்றி பிறப்பினால் வருவதல்ல. மற்றபடி அரக்கர் என கோரைப்பற்களுடன் சிலரைக் காட்டுவது நாடக இலக்கணப்படியே தவிர வேறொன்றுமில்லை..

12):-விருப்பமின்றி தொடும் பெண்களினால் இராவணனுக்கு ஏற்பட்ட சாபம் அறிவீர்களா? அதனால்தான் சீதையைத் தொடவில்லை என்பது அறிவீர்களே! சாபத்தின் காரணம் யோசியுங்கள், இராவணன் நல்லவனா கெட்டவனா என்று??????

விருப்பமின்றித் தொடும் பெண்கள் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. அது வேறு கிளைக்கதை, பாரதிதாசனையும் கம்பனையும் ஒத்துக்கொள்ளாத இடத்தில் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்..

13):-ராவணன் மகள் சீதை என்ற கதை நானும் கேள்விப் பட்டதுண்டு.. முதலில் ராவணன் சீதையை ஏன் கவர வேண்டும்? மோகம் காரணமா? அல்லது பாசம் காரணமா? மகள் என்றால் இராமனிடமே வந்து இலங்கைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கலாமே? மோகம் என்றால்...........

சூர்ப்பனகையின் மூக்கறுந்த கோபம்.. கோபமாகவும் இருக்கலாமல்லவா? ஏன் மோகம் என்று கொள்ளவேண்டும்?.. தேவர்களை வென்று மூவுலகை ஆண்ட ராவணன் மிதிலையிலிருந்து சீதையை தூக்கி வரவில்லையே.. அவள் அழகைக் கேள்விப்பட்டு..

14):-இராமாயணத்தில் இராவணன் மோகத்தினால்தான் சீதையைக் கவர்ந்ததாக நான் படித்தேன்.. ஒரு வேளை நான் படித்ததில் தவறு இருக்குமோ?

இராவண இராம காலங்கள் யாருக்கும் தெரியாது.. இன்னும் சொல்லப்போனால் அப்படி இருந்ததாக சரித்திர குறிப்புகள் இல்லை. இருப்பினும் ஓர் அரசனுக்குரிய தகுதியை விட்டு நீங்கள் குறிப்பிட்ட காட்டுவாசியாகிய சீதையை இராவனன் கவர்வது என்ன நியாயம்? ராமன் பிடித்தது தங்க மான் தானே தவிர ஒரு பெண்ணல்லவே! (அதற்க்காக இராமனை தவறு செய்யாதவன் என்றும் சொல்லவில்லை.)

பெண்களைக் கவர்வது, பசுக்களை கவர்வது போன்றவை அரசர்கள் அன்று செய்துள்ளனர். ஏன் மகாபாரதத்தில் பீஷ்மர் அம்பா அம்பிகா அம்பாலிகா என் மூவரை தன் தம்பியருக்கு மணமுடிக்க கடத்தி வரவில்லையா? இது போல எத்தனையோ அரசர்கள் செய்துள்ளனர்.

15):-ஒரு கெளரவம் என்று இந்த இடத்தில் எப்படி பொருள் கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.. ஒரு கெளரவத்திற்க்காக நடந்த கடத்தலா இது?

இருக்கலாமல்லவா? ராமாயணத்தில் பல இடங்களில் கௌரவம் என்பது இழியோடி இருக்கிறது.. சீதையை ராவணன் கடத்தியதற்காக ராவணனிடம் தனியுத்தம் செய்யாமல் ஆயிரக்கனக்கில் வானரங்களையும் தானவர்களையும் கொன்று, சீதையை அக்கினிப் ப்ரீட்சை செய்து, அதன் பின் அயோத்தி வந்த பின்னும் தனியொருவன் ஏசல் கேட்டு ஒரு பிழையும் செய்யாதவளை கானகம் அனுப்பினான் என்றால் கௌரவம் என்பதை ராமன் எவ்வளவு உயிர்மூச்சாக கொண்டான் என்பதை தெளிவாக அறியலாம்.

16):-இராவணன் தன் குடியை ஒழுங்காக நடத்தியதற்கு தக்க ஆதாரமில்லை. அதாவது அதுவும் இராமாயணத்தில்தான் சொல்லியிருக்கவேண்டும்.. அப்படி ஒழுங்காக, குல வழக்கப்படி ஆளும் ஓர் அரசனைக் கொல்ல விஷ்ணு ஏன் இராமனாகப் பிறக்க வேண்டும்... இராமனாக பிறந்து அவன் சாதித்தது இராவணனை அழித்து போக மீதி யாரையாவது (பெரும் அசுரனை) கொன்றிருக்கிறானா?

கும்பகர்ணனைக் கொண்றது ராமனே. ஆயிரக்கணக்கில் அசுரர்கள் அழிந்ததும், வானவர்கள் அழிந்ததும் ராமனாலே.. வாலியும் ராவணன் செய்த அதே தவறை செய்தான்,, அவனை துவந்த யுத்தத்திற்கு சுக்ரீவனை அழைக்கச் சொன்ன ராமன் ராவணனை ஏன் துவந்த யுத்தத்திற்கு அழைக்கவில்லை?

17)ராமன் ராவணன் மேல் போர்தொடுத்தது கெளரவ பிரச்சனையா? அப்படியென்றால் மனைவியைக் காப்பற்ற இல்லையா?

ராமன் சீதையைக் கைவிட்டு கானகம் அனுப்பியது இதை நிரூபிக்கிறது

18):- தனி இரு மனிதர்களின் கெளரவப் பிரச்சனைக்காக போர் நடப்பது மனுதர்மமா? கெளரவத்திற்காக நாடும் நாடும் சண்டையிட்டுக் கொள்ளலாமா?

இது என் வார்த்தைகளில் இழையோடி வரும் கேள்வி.. ராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் பல அரசர்கள் நிம்மதியாக அரசாந்திருக்கிறர்கள், தசரதன், ஜனகன், கோசல நாடு, கேகய நாடு, அங்க நாடு என அனைத்து நாடுகளும் அமைதியாக இருந்திருக்கின்றன. ராவணன் வம்புச் சண்டைக்கு போகவில்லை, மனிதர்களை கொல்லவில்லை என்பது தெரிகிறதல்லவா?

ஒருவன் இறப்பதால் அவன் தோற்றான் என்று அர்த்தமில்லை...... அதுவே அவன் அரசனானால்................ அப்படியென்றால் இறந்துபோனவன் சேனையை தோற்ற சேனை யென்று அழைப்பீர்களா? இல்லை வேறு எப்படி அழைப்பீர்கள்?
ஒருவன் எப்பொழுது தன்னிலை மாறுகிறானோ அப்போதுதான் அவன் அடுத்தவனிடம் தோற்றவனாகிறான்.

ஆக முனிவர்கள் முறையிடாமல் எங்ஙனம் விஷ்ணு இராமாவதாரமெடுத்தார்? ஒருவேளை அப்படியில்லை என்றாலும் யார் சொல்லி ராமன் அவதாரமெடுத்தார் விஷ்ணு? தானாகவே தாம் நினைக்கும்போது எடுத்துக் கொண்டாரா? இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே இது சொல்லப் பட்டிருக்கிறது..

ராமாயாணத்தில் அல்ல பாகவதத்தில் சொல்லப்பட்டது. ராமாயணக் கதைப்படி தசரதனுக்கு ராமன் மகனாய் பிறந்தான்.

19):- ஒரு தலைவனோ அல்லது அரசனோ இல்லை பெரும் மனிதனோ ஒருவனை ஒரு விஷயத்திற்காக அனுப்பினால் அது தூது,,, அதுவே ஒரு சாதாரண மனிதன் (அதாவது துறவியாகிய ராமன்) அனுப்பினால் அப்படியென்றால் அதற்கு பெயரென்ன? அனுமன் எதன் அடிப்படையில் இலங்கை வந்தான்? தூதுவனாகவா? இல்லை வெறும் வானரமாகவா? தூதில்லை என்று யார் சொன்னது?

ராமன் அனுமனை அனுப்பியது சீதை எங்கிருக்கிறாள் என்று கண்டு வர.. ராவணனிடம் பேச்சு வார்த்தை நடத்த அல்ல. அது அனுமனாக உருவாக்கிக் கொண்ட சுயபதவி. ராமன் ராவணனிடம் தூதனுப்பியது அங்கதனை. போருக்கு முன்.

19)இற்கு பதில் "ராமன் அனுமனை அனுப்பியது சீதை எங்கிருக்கிறாள் என்று கண்டு வர.. ராவணனிடம் பேச்சு வார்த்தை நடத்த அல்ல"

அது முற்றிலும் உண்மையே .ஏனென்றால் ராமன் அனுமானிடம் சீதையின் அடையாளங்களை மட்டுமே கூறுகிறான்.அதுவும் எப்படி சொல்கிறான் தெரியுமா?

"வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக்கலைசார் அல்குல் தடங்
கடற்கு உவமை தக்கோய்!!
பாராழி பிடரில்தங்கும், பாந்தளும்
பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு
நான் உரைப்பதென்ன?"

அதாவது இராமன் அனுமனிடம் சொல்கிறார் "தக்கவனே! என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றவை! அல்குலோ தடங்கற்கு உவமை" என்று. இவற்றை அடையாளமாகக் கூறி அனுமனை சீதையை கண்டாறிந்து வா! என்று அனுப்புகிறான். அனுமன் அந்த அடையாளங்களை எப்படி கண்டு பிடிக்க இயலும்??. உண்மையில் இந்த பாடல் " சீதை நீ எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று கேட்கும் போது சீதையிடம் அனுமன் இராமன் இந்த அங்க அடையாளங்களை தனக்கு சொன்னதாக நடுங்கிக்கொண்டு சொல்கிறான் அதற்கு அடுத்த செய்யுள்களில், சீதை இராமன் மேல் அடங்காக்கோபம் கொள்வாள். இராமனை கேவலமாக ஏசுவாள்.

கேள்வி(01):-".....எங்ஙனம் அவன் நாட்டின் அழகிய பெண்களைப் பாதுகாப்பான்?"
கேள்வி(02):-"பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகளுக்கு மத்தியில் இராவணன் இலங்கையை எப்படி சொர்க்கபுரியாக ஆள முடியும்?"

இந்த இரண்டு கேள்வியும் ராமனிடம் கேட்கவேண்டியவை.சீதாவை, தன் மனைவியையே இப்படி மாற்றானிடம் வர்ணித்தவன் அழகிய பெண்களை எப்படி எப்படியெல்லாம் கையாள்வான் என்று ஒரு தரம் சிந்தயுங்கள்.அனுமான் சீதாவை கண்டுபிடிக்க ,அடையாளங்களை சரிபார்க்க, என்ன என்ன செய்திருப்பான் என்று சிந்தயுங்கள்.அப்ப பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகள் எந்த நாட்டில் என்பது தெரிய வரும் .

கேள்வி(08):-"ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா?."

அனுமான் தூதுவனே இல்லை என்பதை மேல் பாடல் மூலம் அறிந்திருப்பீர்கள்

அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம்.அது அழகியல் சார்ந்த விடயம் ஆனால் “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் என அனைத்தையும் ஒருசேர, இடம்-பொருள்-ஏவலுக்கேற்பப் பொருள் கொள்ளுமாறு அமைந்த பொதுச்சொல் அல்குல்” அப்படி அல்ல.அனுமான் தூதுவனாக மட்டும் இருந்திருந்தால் ,அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என மார்போடு நின்று இருப்பான் என்பது கவனிக்கத்தக்கது . உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட இப்படி வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்?.அப்படி என்றால் அனுமான் யார்?கட்டாயம் தூதுவன் அல்ல.

"இயல்வுறு செயல்வினாவா
யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித்
துவலை கண் மகளீர் மென்றூ
கயல்வுறு பரவை யல்கு
லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்
கயா உயிர்ப் பளித்த தம்மா!"

ராமாயணத்தில் இப்படி ஒரு பாடலும் வருகிறது .அதாவது வீரர்கள் மனசோர்வு பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்ப நீக்கத்தை உண்டாக்கிற்று ஒரு பொருள் அது எது? பெண்ணின் மறைவிடம் என்கிறது வெளிப்படையாக. எல்லாரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். ஆற்றை படகில் கடக்கிறார்கள். அப்போது துடுப்புகள் தண்ணீரை வாரி அடித்து பெண்களின் ஆடை நனைந்து அல்குல் தெரிந்ததாம்,அதைப் பார்த்து துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம் பிறந்ததாம்!

அப்படி என்றால் அனுமானுக்கு உற்சாகம் கொடுத்து தன காரியத்தை முடிக்க ராமன் இப்படி செய்தானோ யார் அறிவார்?

20):-அப்படியே ஒரு வானரமாக இருந்தாலும் அவனும் ஓர் உயிரல்லவா? அவனை கைதியாகவா நடத்துவது?

மானைக் கொன்ற ராமன் மானை உயிரியாக மதிக்கவில்லையே. சதி என்று அறிந்தே செய்தானல்லவா? இலங்கைக்கு நாசம் விளைவித்த ஒருவனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி செய்தான் ராவணன்

21);-எந்த தவறும் செய்யாத ஒரு வானரத்தை கைதியாக நடத்துவது இராவண குல தர்மமோ? அதிலும் வாலில் தீவைப்பது என்ன அநியாயம்?

நன்றாக கவனியுங்கள் வெறும் பேச்சினால் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.. ஆக அனுமன் தான் இலங்கையை எரித்தது என்று எனக்குத் தெளிவாகத் தெரியும் அதற்கு காரணம் யார்? தெளிவில்லாத அரசனின் பேச்சு... அனுமன் கேட்டது சீதையைப் பற்றிதான்.. சீதையை மீட்க வந்திருக்கும் ஓர் தூதுவன் என்று இன்றுவரை என்னால் சொல்லமுடியும்.. ஆக அவனை நல்லபடியாக பேசி அனுப்பாமல் இழிவு செய்வது இராவண குல தர்மமா?

தூதுவன் என்பவன் தூதிற்கான ஆதாரம் கொண்டுவர வேண்டும். நான் ஜார்ஜ்புஷ் -இன் தூதுவன் என்று சொன்னால் நீங்கள் எப்படி என்னை நடத்துவீர்கள்?

....... மானும் கடவுள் படைத்த உயிரினம் தானே? இது நீங்கள் கேட்ட கேள்வி... மானும் கடவுள் படைத்த உயிரனம்தான்... ஆனால் அனுமன் ஒரு மனிதனை உட்காருவதற்குகூட அருகதையில்லாதவனாய் நடத்துதல் ஓர் நல்ல அரசனுக்கு அழகா?

அதாவது அறிவுள்ளவர்கள் உயர்ஜாதி அறிவில்லாதோர் அற்பஜந்து அப்படித்தானே!.

22):-ராவணனைப் படைத்த பிரம்மாவையே ஒழித்து விடலாமே.... அழகிய கேள்விதான்.. பிறக்கும்போது யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை... இதற்காக இராவணன் குற்றமற்றவனானால், கம்சனும் நல்லவன்தான். துரியோதனனும் நல்லவந்தான். பின்லேடனும் நல்லவந்தான்/.... இன்னும்பல அசுரர்களும் குற்றமற்றவர்களாவர்களே!!! நண்பரே நன்றாக யோசியுங்கள்..
அதாவது வினை என்பது நல்லவன் கெட்டவன் என்பதை தீர்மானிக்கிறது.. ராவணன் பல வருடங்கள் புலனடக்கி தவம் செய்தவன். அப்படி பெண்ணாசை கொண்டவனாய் இருந்தால் ஊர்வசி மேனகா என் தன்வசம் ஆயிரக்கணக்கில் இருந்த அஸ்திரங்களைப் பயன்படுத்தி இந்திரன் அவன் தவத்தைக் கலைத்திருக்கலாமே!

ஒரு கதாசிரியர் தானே இவனுக்கு இந்த பாத்திரம் என்று சொல்லவேண்டும்? அப்படிக் கொண்டால் ஏன் யாவரும் இராவணனையே கெட்டவனாக சொல்லவேண்டும்.? ஏன் வால்மீகி இராவணனுக்கு சீதையைக் கவரும் சீப்பான உள்ளம் தரவேண்டும்? இராமனை ஏன் கற்புக்கரசனாக சித்தரிக்கவேண்டும்? (பிற்பாடு வேறு..)

அப்படியானால் ராவணன் நல்லவனா கெட்டவனா என்ற விவாதமே எதற்கு?

வால்மீகியை ராவணன் என்ன செய்தான் என்று கேட்கிறீர்கள். விடையறியாமல் முழிக்கிறேன். எனக்கும் தெரியாது. வால்மீகிக்கே வெளிச்சம்.

சீதையின் சுயம் வரத்தில் கலந்து கொண்ட எவருமே ராவண பயம் கொண்டவர்களாகத் தெரியவில்லை. இந்திரன் மகன் ஜெயந்தன் கூட அதில் கலந்து கொள்கிறான், அசுரர்களால் துரத்தப்பட்டு மறைந்து வாழும் ஜெயந்தன் எப்படி வெளிப்படையாக சுயம்வரத்தில் கலந்து கொள்கிறான்?

ராவணன் பிராமணன் என்பது நானும் அறிவேன்... பிறப்பினால் அசுரனில்லை ஆயினும் அரக்கன் என்பதை நீவிர் ஒத்துக் கொள்கிறீரா?... ஒத்துக் கொண்டது போல எழுதியிருக்கிறீர்கள்.

அசுரன் என்பது பண்புப் பெயர். அதைச் சூட்டி உள்ளார்களே தவிர நான் ஒத்துக் கொள்ளவில்லை.

அனுமன் இலங்கையை அடையும் போது சாதாரணமாகவா நுழைந்தான்.. எத்தனை இன்னல்கள் கடலில்? அத்தனையும் இராவணனுக்குச் சொந்தமில்லாதவையா? ஓர் நல்ல பிராமணன் (பிராமணன் ஆட்சி!!!!) உயிர்கொல்லும் ராட்சத பாம்பு போன்ற விஷமிகளை எதற்காக வைத்திருக்கவேண்டும்?
ஏன் ஆளுயரக் கோட்டை, முதலைகள் உலவும் அகன்ற அகழி கோட்டைகளைப் பற்றி படித்திருப்பீற்களே! நாட்டைக் காக்க அரண்கள் அமைப்பது அரசனின் மிக முக்கியக் கடமை அல்லவா?

நாட்டைக் காப்பாற்ற என்றால்..... முதன்முதலில் இலங்கைக்குச் செல்லவிருக்கும் அனுமனால் நாட்டுக்கு தீங்கு வந்துவிடும் என்று நினைத்துவிட்டதுகளோ இந்த ஜந்துகள்?

வரும் வெளியாரைத் தடு என்பது அவ்ர்களின் பணி.. இலங்கை மக்கள் இவற்றால் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

23):-ஒரு நாடும் நாடும் போரிடும்போது கூட ஓலையில் தகவல் அனுப்புவார்கள். அனுமன் தேமெ என பறக்கும்போது ஜந்துகளை ஏவிவிட்ட இராவனன் நல்லவனா?

ஆளில்லா விமானம் காஷ்மீர் பகுதியில் பறந்தால் சுட்டுத் தள்ளுவதில்லையா? ஒரு நாட்டினுள் நுழைய அனுமதி பெறவேண்டுமல்லவா?

24):-விருப்பமின்றித் தொடும் பெண்கள் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்று கூறுகிறீர்கள். பின் ஏன் இராவணன் சீதையைக் கடத்தி அவளிடம் அடிக்கடி சம்மதம் பெற அசோகவனம் வரவேண்டும்? ( கிளைக்கதைதான் என்றாலும் இது வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. )

அவன் சீதையின் சம்மதம் பெறுவதன் மூலம் ராமனின் கௌரவத்தை உடைக்க முடியும். மனைவியே நம்பிக்கை விட்டால்..!சூர்ப்பனகை மூக்கறுப்பிற்கு இது சரியான தண்டனை அல்லவா..!!

25):-தேவர்கள் நல்லவர்கள் என்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்களேயானால் ராவணனால் பல்லாண்டு காலம் தேவலோகத்திலிருந்து விரட்டப்பட்ட தேவர்களை ஏன் அசுரர்கள் எதிர்த்துப் போரிட்டனர்?

ராவணன் அசுரர்களின் தலைவன். இருந்தாலும் தசரதன் போரிட்ட அந்தப் போரில் ராவணன் கலந்து கொள்ளவில்லை. அப்படியெனில் ஒருவேளை அது ராவணன் தவத்தில் இருந்த காலத்தில் நடந்திருக்கலாம்..

26):-சீதையை நெருப்பில் தள்ளியது கெளரவமா? என்னங்க? கெளரவத்திற்காக ஒரு புள்ளத்தாச்சியை நெருப்பில் தள்ளியவன் ஆண்மகனா? நண்பரே!!

அது சீதை மேல் ராமன் கொண்ட சந்தேகமா இல்லை மக்கள் ராமனை அவதூறு சொல்லுவார்களே! இவ்வளவு பெரிய இழப்புகளுடன் போர் செய்து சீதையை சந்தேகத்துடன் விட்டு விட்டு சென்றால் ராமனின் கௌரவம் என்னாவது.. அதனல்தான் அயோத்தி அழைத்து வந்து பின்பு கைவிட்டான்.

27):-கெளரவம் பார்க்கும் இராமன் செருப்பு அமர்ந்த இடத்தில் ஆட்சி செய்யலாமா?

அது ராமனின் செருப்பு.. பின்பு செருக்கு.

28):-வாலியை மறைந்து நின்று எந்த ரத்த இழப்பும் இல்லாமல் கொன்ற இராமன், இராவணனையும் அவ்வாறே கொன்றிருக்கலாமே!!!
செல்வரே வாலி, இராவணனைவிட வலிமையானவன் என்று உங்களுக்குத் தெரியாதெனில் நீங்கள் மீண்டும் இராமாயணம் படிக்கவேண்டும்...

29):-சூர்பனகை என்ன தவறு செய்தாள்? இராமனைக் காதலித்தது ஒரு தவறா? ஓர் அரக்கி ஷத்திரியனைக் காதலிக்கக் கூடாதா? அல்லது இராம இலக்குவ, சீதைக்கு ஏதும் பிரச்சனை செய்தாளா? அப்படியென்றால் ஏன பீமன் ஓர் அரக்கியைக் கலியானம் செய்யவேண்டும் ( இடும்பி என்று நினைக்கிறேன் )?

ராமன் அதைத் தவறென்று சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. ராவணனும் சொல்லவில்லை..
சூர்பனைகையை இராமன் சமாதனம் செய்து அனுப்பியிருக்கலாமே! மூக்கை அறுப்பது கோழச் செயல்.. அதை விடுத்து, நீ அரக்கி, நான் அரசகுமாரன் என்று வீர வசனம் பேசி சாதியை வளர்க்கலாமா?

30):-ராமன் பத்தில் ஒரு அவதாரமென்று வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகிய யாவரு, சொல்லுகிறார்களே!! அது பொய்யா? அவதாரமெடுத்தால் தான் கடவுள் என்று மறந்து மனிதனாக மாறிவிடுவானோ? கிருஷ்ணன் விசயத்தில் இது பொருந்தவில்லை

பத்தில் ஒன்று என்று வால்மீகி சொல்லவில்லை.. கிரூஷ்ணனைப் பற்றி வால்மீகி சொல்லவில்லை.. காமெடியாய் பார்த்தால் பரிணாம வளர்ச்சியின் படி கிருஷ்ணன் ராமனை விட பல காலம் பிந்திப்பிறந்தவன். அறிவு வளர்ச்சி அதிகமாய்த்தானே இருக்கும்.

31):-கொடூரனைப் படைத்து மக்களைத் துன்புறுத்தி கொடூரனை அழித்து மக்களைக் காப்பாற்றி நான் கடவுள் என்று சொல்லிக்கொள்ள கடவுள் என்ன சாடிஸ்ட்டா?

எவ்விதத்தில் ஓட்டை? கடவுளுக்கு இப்படிச் செய்வதால்தான் மனிதர்கள் மத்தியில் புகழா? கடவுள் தீயவர்களை அழித்தார் என்பது கதைக்கு மட்டுமே பொருத்தமான வாதம் அல்ல. நல்லவர்களையும் கடவுள்தான் படைக்கிறார். கெட்டவர்களையும் கடவுள்தான் படைக்கிறார். தான் படைத்த படைப்பை தான் படைத்த படைப்பால் துன்புறுத்தி தான் படைத்த படைப்பை தானே அழித்து தான் படைத்தவர்களிடம் நான் நல்லவன் என்று நிரூபிக்க அவருக்கு அவசியம் என்ன? கடவுளை அறிந்தோர் யாருளர்.

பிறகு ஏன் ஒவ்வொருமுறையும் ஒரு அரக்கனோ அசுரனோ தலையெடுக்கும்போது விஷ்ணுவையோ சிவனையோ நாடுகிறார்கள்... நாட்டில் வீரமான அரசர்களே இல்லையா?
அரசர்கள் ராவணனைப் பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காப்பாற்றினால்தானே கடவுள்,,, அவர் சாடிஸ்ட் என்று நீங்கள் சொல்வது பொருந்தாது... ( நான் ஆன்மீகவாதியல்ல.. முழுவதுமாய் கடவுள் இருக்கு என்று சொல்ல... அதேசமயம் ஒரு கடவுள் என்ற உணர்வு கண்டிப்பாக இருக்கு என்று சொல்லுவேன் )

கடவுள் தீயவர்களை அழித்தார் என்பது கதைக்கு மட்டுமே பொருத்தமான வாதம் .

நல்லவர்களையும் கடவுள்தான் படைக்கிறார். கெட்டவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.

தான் படைத்த படைப்பை தான் படைத்த படைப்பால் துன்புறுத்தி
தான் படைத்த படைப்பை தானே அழித்து
தான் படைத்தவர்களிடம் நான் நல்லவன் என்று நிரூபிக்க அவருக்கு அவசியம் என்ன?

கடவுளை அறிந்தோர் யாருளர்.
இது கடவுளைப் பற்றிய மக்களின் எண்ணமே தவிர கடவுளின் உண்மையான உண்மை இல்லை...

துன்பப் படுவோர் இறைபக்தி உள்ளவரா இல்லாதவரா என்று கடவுள் பார்க்கவேண்டுமா?

தன்னைத் துதிப்பவனை மட்டுமே காக்கக் கூடியவர் கடவுள் அல்லவே..

இவையெல்லாம் கடவுளுக்கு நாம் கற்பனை செய்திருக்கும் வடிவமே தவிர கடவுளின் பண்பு நமக்கு விளங்காத விஷயமென்று எண்ணுகிறேன்.. கடவுளை விட்டு கதாபாத்திரங்களை மட்டும் அலசுவோம்

கேள்விகளின் முடிவாக!
எவ்வளவு வருடங்கள் ராவணன் அரசாண்டான் அவனால் எம் மனிதர்களும் எம் முனிவர்களும் பூமியில் எத்தனைக் காலம் துன்பம் அனுபவித்தார்கள் என்று அறிவது.. வால்மீகி சொல்லவில்லை. மற்றவர்களும் சொல்லவில்லை. இதைத் தெரிந்து கொள்ளாமல் ராவணன் நல்லவனா கெட்டவனா? ராவணனை அழிக்க விஷ்ணு ஏன் அவதாரம் எடுக்க வேண்டும் என எப்படி விவாதிப்பது?

ராவணன் உண்மையாய் இருந்தான் (அதுவும் சீதையைக் கடத்தி ராமனுடன் மோதிய ராவணன்) என்னிடம் ஆதாரமில்லை.

ஆனால் ராவணன் ஆட்சியில் அவன் நாட்டுப் பெண்கள் சுதந்திரமாய் உலவினர். ராவணன் சிறுவர்களுடன் போரிடவில்லை.. என ராவணனுக்குண்டான பல நல்ல குணங்கள் மட்டுமே படித்து கேட்டு அறிந்திருக்கிறேன்..

ராமாயண காலத்திற்கான காலம் என்ன? கி.மு 5000 என்கின்றன சில இணையதளங்கள்.. ஆனால் அதிலெல்லாம் உறுதியான ஆதாரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.

பாமபனில் உள்ள மணல்திட்டு ராமாயணப் பாலம் என்று பலர் சொல்லுகின்றனர்.. ஆனால் அங்குள்ள பாறைகளையோ மண்ணையோ யாரும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை.. இலங்கை என்பது இலங்கையே இல்லை.. கோதாவரி நதிக்கு மத்தியிலிருந்த ஒரு தீவு என்போரும் உள்ளனர்.

ராவணன் தேவர்களைத் துன்புறுத்தினான்.. முனிவர்களைத் துன்புறுத்தினான் என ராமாயணம் சொன்னாலும் அதற்கான ஆதாரங்களைத் தரவில்லை.. அதையெல்லாம்தான் என் பதில்கேள்விகளில் தந்திருக்கிறேன்..

ராவணன் சீதையைக் கடத்தியது மோகத்தால் அல்ல என்று சிந்திக்கும் பொழுது கதையின் பல கோணல்கள் சீராகின்றன. சீதை 6 மாதங்களுக்கு மேல் அவன் கைப்பிடியில் இருந்திருக்கிறாள்.. ராவணனுக்கு மோகம் என்ற ஒன்று அவள் மேலிருந்திருந்தால் நிம்மதியாய் உறங்கியிருக்க முடியாது.. என்னை மணந்துகொள் என்று சொல்லி இருக்க மாட்டான்.. தன் குலப் பெண்களுக்கு பணி செய்ய வைக்காது தனியே சிறைவைத்ததன் மூலம் அவன் சீதைக்கு மரியாதை அளித்தான் என்று புரிந்து கொள்ள முடியும்.. அவளின் மன உறுதியை குலைக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபடுகிறான்.. சீதையும் ஏறத்தாழ தன் மன உறுதியை இழந்து விடுகிறாள்.. அனுமனிடம் அவள் காலக்கெடு கொடுப்பதில் இதை அறியலாம். தன் தம்பி மகளான திரிசடையை சீதையுடன் தங்க வைத்ததன் மூலம் சீதைக்கு மதிப்பளிக்கிறான் ராவணன்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது ராம லட்சுமணர்கள் தன் தங்கையை அவமானப்படுத்தியதை பழிவாங்கும் பொருட்டே சீதையை கடத்தி இருக்கலாம்.. எல்லா சொந்தங்களையும் இழந்த பின்னும் சீதைக் கதையை முடித்து விடலாம்.. அப்புறம் போருக்குப் போகலாம் என்ற கெட்ட எண்ணம் அவனுக்கு எழவில்லை.. சீதையை ஆசையோடு தொடவேண்டாம்.. ஆத்திரத்தில் கொன்றிருக்கலாமே.. செய்யவில்லை ராவணன்.. ஏன் தெரியுமா? அவன் நல்லவன்

நம் கேள்வி பதில்களை ஆராயும் பட்சத்தில் ஒரே ஒரு கேள்வி நான் கேட்கிறேனே!!!
நான் கேட்ட கேள்விகளிலெல்லாம் நீங்கள் ராவணனை ஒரு நல்லவனாகவே காட்டுமாறு சுவாரசியமாகவும் திறமையாகவும் பதிலளித்தீர்கள்...... நான் கேட்டவை வால்மீகி (அதாவது கதை ஆசிரியர்) எழுதியவை மட்டுமே.......
ஆயிரம் தவறுகள் இருக்கட்டும்; அந்த நாட்டுக் கலாச்சாரமோ அல்லது அரசர்களின் மேலான செயலோ, மோகமோ கோபமோ அல்லது எதுவாகத்தான் இருக்கட்டும்.... ஒரு பெண்ணைக் அதுவும் கற்புக்கரசியை அதுவும் ஓர் உன்னத தலைவனின் (?) மனைவியை கடத்திக் கொண்டு வரும் ஒருவன் நல்லவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அப்படித்தானே?
இதற்காக இராமன் நல்லவனா கெட்டவனா அல்லது அவன் தவறு செய்தானே! மானை துரத்தினானே மங்கை மூக்கை அறுத்தானே என்று ஆயிரம் காரணம் சொல்லவேண்டாம்... ஏனெனில் நான் ராமனும் கெட்டவன் தான் என்று முன்னமே குறிப்பிட்டுள்ளேன்....
அப்படியிருந்தும் இராவணன் நல்லவன்தான் என்றூ நீங்கள் அடித்துக் கூறும் பட்சத்தில் நான் ஒத்துக்கொள்கிறேன்.. ஓர் கடத்தல்காரனை நல்லவனாக.... மனதால் அல்ல....
எனக்குத் தெரியும்,.,, விவாதத்தின் முடிவில் இராவணன் கெட்டவன் தான் என்று அறியும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் மனதார ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்.... இது மனித இயல்பு.... உங்கள் பார்வையில் இன்னும் நல்லவராகவே அவர் இருக்கிறார்.....

அதாவது ராவணன் சீதையைக் கடத்திய ஒரே ஒரு செயல்தான் தவறு...

யாழறிவன்.... Yalarivan Jackson Jackie

1 கருத்து:

  1. இந்த பதிவை படிக்கும்போது, இவர் உண்மையிலேயே ராமாயணம் படிக்கவில்லை என அறியமுடிகிறது.

    ஏனெனில், இவர் எங்கேயோ, யாரோ கூறிய தகவல்களின் அடைப்படையில் தான் கேள்விகள் கேட்டு பதில் கொடுத்துள்ளார்.

    மேலும், பல கருத்துக்கள் தவறானது. இராமாயணத்தில் இல்லாத நிறைய புதிய யூக கருத்துக்களை கையாண்டுள்ளார்.

    எனவே, ராமாயணம் படித்துவிட்டு பின் இப்படி கட்டுரை எழுதவும்.

    பதிலளிநீக்கு