சனி, 18 அக்டோபர், 2014

ஈழநாடு தமிழர்களின் நாடு

ஈழநாடு தமிழர்களின் நாடு...

பகுதி-1

அனைவரும் இத் தொகுப்பின் அனைத்து பதிவுகளையும் படிக்கவும்...

வரலாற்றுச்சுருக்கம்...

குமரிகண்டத்தில் இருந்த ஓர் உள்நாடு ஈழம். ஈழம் என்னும் பெயர் குமரிகண்ட காலத்தில் வழக்கில் இருந்த பெயர். ஈழத்தின் தற்போதுள்ள மலைத் தொடர்கள் குமரிமலையின் பகுதிகளே. குமரிகண்ட காலத்தில் அதி உயரமாய் இருந்த தெய்ளீகமான மலை சிவனொளி மலை. சிவனொளி மலையிலேயே இறைவன் த~ணாமூர்த்தியாக எழுந்தருளி இருந்துநான்கு முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். ஈழம் சிவபூமி. சூரன் ஆட்சி நகர் வீரமகேந்திரம் குமரி மலையின் தென்னந்தம் ஈழநாட்டுப் பூர்வீகக் குடிகள் தமிழர். ஈழத் தமிழ் நாடு: முதன் முதல் மக்கள் இனம் தோன்றிய இடம் ஈழம்@ ஈழத்தின் கடவுட் கொள்கை சிவநெறி. அசுரர், இயக்கர், நாகர் என்னும் பெயர்கள் ஆரியர் வருகைக்குப்பின் வடமொழியில் அவர்களால் தமிழருக்கு இடப்பட்டு வழங்கிய பெயர். விசயன் கலிங்க நாட்டுத் தமிழன், குவேனி ஈழநாட்டு அரச கன்னிகை. விசயன் பேசிய மொழி தமிழ், சமயம் சிவநெறி. ஈழநாட்டு அரச பரம்பரை இரண்டுபிரிவானது. இவற்றில் அரச பரம்பரையாவது ஈழநாட்டு பூர்வீக அரச பரம்பரையும் கலிங்க நாட்டு அரச பரம்பரையும் (விசயன்) ஒன்றுபட்டுக் கலந்த பரம்பரையாகும். அடுத்தது விசயனோடு வந்த விசயன் கூட்டாளிகளும் (கலிங்க நாட்டுத் தமிழர்) ஈழ நாட்டுத் தமிழரும் ஒன்றுபட்டுக் கலந்த பரம்பரை. சிங்களம் என்ற சொல் புத்த பிக்குகளால் புனையப்பட்ட பெயர். சிங்களம் இனம், சிங்கள மொழிஎன வழக்கு ஏற்படலாயிற்று. சூரன் ஆதியோரும் மாதோட்ட மன்னர்களும் பூர்வீகத் தமிழ் மக்களின் அரச பரம்பரையினர். சூரன் ஆதியோரின் பெண்வழி மாதோட்ட மன்னர்பரம்பரையே. சிங்களவர் எனத் தற்போது உள்ள இனத்தவர்கள். ஈழநாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, கலிங்கநாட்டைச் சேர்ந்த தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களேயாவர். ஈழநாட்டில் இனப் பிரிவையும், மதப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் புத்த பிக்குகளே...

வரலாறு

ஈழநாடு தமிழர்களின் நாடு...

பூர்வகாலம்: குமரிநாடும் ஈழமும்.
நாம் வசிக்கும் நாடு இலங்கை. இதன் பழமையான ஒரே ஒரு பெயர் ஈழம் என்பதே. இந்நாட்டின் செழிப்பும் பலப்பல சீரும் நோக்கிப் பல நாட்டினராலும் காலத்துக்குக்காலம் பலப்பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்திக்கின்றன. அவை லங்கா, இலங்கை, மணி பல்லவம், இரத்தின துவீபம், நித்தில துவீபம், சேரன்றிப், சிலோன் முதலாயின.

இப் பெயர்கள் சில ஓரோர் காரணத்தைக் கருத்திற் கொண்டு. வேறு வேறு மொழி பேசும் வேற்று நாட்டார் தத்தம் மொழி இயல்புக்கமைய இட்டு வழங்கிய பெயர்களாகும். ஆதலின் இப் பெயர்களின் வழக்காட்சியையும் மொழி ஆக்கத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து நம் நாட்டின் பழமையை ஒருவாறு தெளிவாக அறிய முடியும்.

முன்னர் காட்டிய பெயர்களுள் ஈழம். லங்கா, இலங்கை என்ற பெயர்கள் பற்றிப் பின்னர் விரிவாக விளக்குவோம். அடுத்தது மணிபல்லவம் என்னும் பெயர் ஆகும். இப்பெயர் எழுந்த வகை பற்றி ஆராய்வோம். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் என்பவர் இப் பெயரை எடுத்தாண்டுள்ளார். இவர் சேரன் செங்குட்டுவன் காலத்தவர். இவர் காலம் கி.பி. 150 – 180 வரையிலான காலமாகும். இக்காலத்தில் ஆட்சி புரிந்த இலங்கை அரசன் 1ம் கசபாகு என்பவன். இவனே கண்ணகி வணக்கத்தை இலங்கையில் பரப்பியவன். சிலப்பதிகாரம் அதனை வலியுறுத்துகின்றது. எனவே மணிபல்லவம் என்னும் பெயர் சித்தலைச்சாத்தனார் எடுத்தாளுவதற்குப் பன்னெடுங் காலம் முன்னதாகவே வழக்கில் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் கடைச்சங்க காலத்து அப்பெயர் வழக்கு இருந்திருக்க வேண்டும். கௌதம புத்தர் காலத்திலேயே (கி. மு. 543) இவ் வழக்கு இருந்தமை புத்தர் வரலாற்றில் காணப்படுகின்றது. எனவே ஈழ நாட்டில் மணிபல்லவம் என்பது மிகமிகப் பழமையான பெயர் என்பது புலனாகும். விசயன் வருகைக்கு முற்பட்ட வழக்காகும்.

இனி இப் பெயர் எழுந்தமைக்கு என்ன காரணம் இருந்திருக்கலாம் என ஊகித்தறிவோம் மணிபல்லவம் என்னும் பெயர் மணி – பல்லவம் என்னும் இரு சொற்களால் ஆயது. மணி என்றால் அழகைக் குறிக்கலாம். அன்றி ஒன்பது வகையான நவரத்தினங்களையும் குறிக்கலாம். அன்றேல் மாணிக்க இரத்தினத்தைக் குறிக்கலாம். இலங்கை பண்டுதொட்டு இரத்தினக்கல் அகழ்ந்தெடுக்கும் ஓர்நாடு என்பதை உலகம் அறியும். அன்றி சிறந்த முத்துக்கும் பேர்போன நாடு. இவ்வுண்மையை இரத்தினதுவீபம். நித்திலதுவீபம், இரத்தினபுரி, முத்துச்சலாபம் என்ற பெயர் வழக்கே புலப்படுத்துகின்றது. ஆதலின் இரத்தினம் முத்து முதலான மேலான பொருட்கள் கிடைக்கும் ஓர் செழிப்புள்ள நாடு என்னும் கருத்தமைய மணிபல்லவம் எனப் பண்டைக் காலத்து தமிழ் மக்கள் தம்மொழியில் பெயர் சூட்டி அழைக்கலாயினர் என்பது போதரும்.

இனி இப் பெயர் தூய தமிழ் மொழியாய் இருத்தலினால் இந்நாட்டுப் பூர்வீக தமிழ் மக்களே இப் பெயரைத் தம் நாட்டிற்கு இட்டு வழங்கினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தமிழரே இலங்கையின் பூர்வ குடிகள் ஆனதினாலும் தமிழர் வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்து இலங்கையில் குடியேறினர் அல்லர் ஆனதினாலும் இலங்கையில் தமிழர் அல்லாத வேற்று மொழியாளர் வசித்தனர் என்பதற்கு வரலாறு இன்மையாலும். அதற்கு வேறு எந்தவிதமான சான்றுகள் இன்மையாலும், மணிபல்லவம் என்னும் தமிழ்த் தொடர் தமிழர் வழங்கிய வழக்கே என்பதும் அஃது மிகவும் காலவரையறைக்கப்பாற்பட்ட வழக்கு என்பதும் நாம்தெளிவாக அறியும் உண்மைகளாகும்.

அடுத்த பெயர்கள் இரத்தினதுவீபம், நித்திலதுவீபம் என்பன. இவை இத் தீவில் இரத்தினமும், முத்தும் மிகுதியாகக் கிடைத்த காரணத்தினால் வழக்கில் வரலாயின. இப் பெயர்களில் உள்ள இரத்தினம், நித்திலம், துவீபம் என்ற சொற்கள் வடமொழிச் சொற்களாகும். எனவே வடமொழியாளரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவை என்பது பெற்றாம். அவ்வாறானால் அப் பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பின்னர் அவர்களால் சூட்டப்பட்ட பெயராதல் வேண்டும். ஆதலின் அப் பெயர்கள் பிற்கால வழக்கென்பது வெளிப்படை. எனவே பன்னெடுங்காலம் முன்னதாகவே தமிழ் மக்களால் வழங்கப்பட்ட பெயர் மணிபல்லவம் என்பது தாமே போதரும் உண்மையாகும்.

இனி செரன்றிப் என்ற பெயரை எடுத்துக்கொள்வோம். இப் பெயர் அராபிய தேசத்து வணிகர்களால் இலங்கையைக் குறிப்பிட்ட பெயர்ஆகும். இங்கே சேரன் என்பது சேரநாட்டைக் குறிப்பதாகும். திவ்றிப் என்பது தீவு என்ற சொல்லின் திரிந்த உருவம். அஃதாவது வாய்ஒலி மாற்றமாகும். இனி அவ்வாறு அவர்கள் இலங்கையைக் குறிப்பிட்டமை பற்றி விளக்குவோம். இலங்கையை நோக்கி அரபிக் கடலின் ஊடாக வரும் அராபிய வணிகர் முதல் சந்திக்கும் நிலப்பகுதி சேரநாட்டுக் கரையோரமாகும். அப்பால் அதனைக் கடந்துசெல்ல வருவது இலங்கைத் தீவே. ஆகவே சேரநாட்டை அடுத்த தீவு என்னும் கருத்தை உடையராய் சேரன்றீவ் என அழைக்கலாயினர். அஃது சேரன்றீவ் சேரன்றிப் என வருதல் சகசமே. எனவே அரபு மொழியைத் தம் மொழியாகக் கொண்ட அராபிய வணிகரே சேரன்தீவு என்னும் தொடரைத் தம் மொழியியல்பின் கூறும் பொழுது ஏற்பட்ட வாய் ஒலி மாற்றமே சேரன்றிப் என்பது போதரும். வாயொலி மாற்றம் - உச்சரிப்பு வேறுபாடு. இப் பெயர் இலங்கையோடு வியாபாரத் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயரேயாகும். அராபியர் இலங்கைக்கு வந்த காலம் பந்துகாபயன் ஆட்சி காலமாகும். பந்துகாபயன் காலம் கி. மு. 437 – 367 ஆகும். பந்துகாபயன் வரலாற்றில் பரசமயிகள் ஐந்நூற்றுக்கு அதிகமானோருக்கு இவ்விடங்கொடுத்து உதவினான் எனக் கூறப்படுகிறது. அக்காலத்தில் புத்த மதம் இலங்கைக்கு வரவில்லை. புத்த மதம் இலங்கைக்கு வந்தது கி. மு. 304ல். பந்துகாபயன் காலத்தில் கிறீஸ்த சமயம் தோற்றவில்லை. எனவே பரசமயிகள் எனக்குறிப்பிடப்படுபவர் அராபியரே என்பது தேற்றம். பந்துகாபயன் காலத்தில் புத்த மதம் இலங்கைக்கு வருதற்கு முன்னர் இலங்கையில் நிலவிய சமயம் இந்து சமயமேயாகும். ஆதலின் இவர்களுடைய கடவுட் கொள்கைக்கு வேறான கொள்கை உடையவர்களான அராபியர்களைப் பரசமயிகள் எனக் குறிப்பிட்டனர். அன்றி அக்காலத்தில் முகம்மதுவின் கோட்பாடாகிய இஸ்லாம்; மதமும் தோற்றவில்லை. எனவே சேரன்றிப் என்னும் வழக்கு அராபியர் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட வழக்காதலின் அதுவும் பிற்பட்ட வழக்கேயாகும். சிலோன் என்பது மேலைத் தேயத்தவர்களால் வழங்கப்பட்ட பெயராகும். இஃது சுமார் 15ம் நூற்றாண்டுக்குப்பின் உள்ள வழக்கேயாகும்.

இனி இந்நாட்டின் பழமைக்கு வருவோம். இந்நாடு ஒருகாலத்தில் வடக்கே உள்ளதும், பரந்த நிலப்பரப்பை உடையதுமான இந்தியாவோடு ஒரே நாடாக ஒன்றிணைந்து இருந்ததாகும். இதனை இலங்கை - இந்தியா இயற்கை அமைப்பே இன்றும் நமக்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ளது ஒர் ஒடுங்கிய நீரிணை. நீரிணையாவது இரு பெரும் நீர்ப்பாகத்தை ஒன்றிணைப்பது: எனவே இந்நீரிணை தோன்றுவதற்கு முன் இரு நாடுகளும் ஒன்றுபட்டு ஒன்றாகவே இருந்தது என்பது எவரும் எளிதில் உணரக்கூடிய உண்மையாகும் ஆதலின் இவ்விரு நாடுகளும் ஒரு காலத்தில் ஒரு நாடாகவே இருந்தன என்பதை இன்றைக்கும் எவருக்கும் புலப்படுத்திக் காட்டும் ஒருபெரிய சான்று இப் பாக்கு நீரிணையேயாகும். இது சுமார் 30 மைல்களுக்குட்பட்ட அகலமுடையதும், ஆழமற்றதும், முருகைக் கற்பார்ச் செறிவுடையதுமாகும்.

இந்நீரிணை ஏற்பட்டு நாடு கடலானமைக்கும் அதனால் இந்தியாவும் இலங்கையும் வேறு வேறு நாடாகப் பிரிந்தமைக்கும் காரணம் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட கடற் பெருக்கேயாகும். இக்கடற்பெருக்கு கடல்கோள் பற்றி பின்னர் ஆங்காங்கு விபரிப்போம். இன்னும் இதனை வலியுறுத்திக் காட்டுவன இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பரந்து கிடக்கும் பலப்பல தீவுகளும், அவற்றின் இடையேயுள்ள பரவைக் கடல்களுமாகும்.

அவை யாழ்ப்பாணக்குடாநாட்டை அடுத்துள்ள ஏழு தீவுகளும், மன்னார்த்தீவு, இராமேஸ்வரத் தீவு, கச்சதீவு, மாலைதீவு, அந்தமான் தீவு முதலியனவாகும். இத்தீவுகள் இலங்கையும் இந்தியாவும் ஒன்றாய் இருந்து கடல்வாய்ப்பட்டதினால் ஏற்பட்ட சிதைவேயாகும் என்பதில் ஐயமே இல்லை. இந்தியாக் கரையில் இந்துமாக் கடலில் பலமுறை கடல்கோள்கள் நடைபெற்றன என்பதை பண்டைத் தமிழ் நூல்கள் பறைசாற்றுகின்றன. மேலை, கீழைத்தேய வரலாற்றாசிரியர்களும் அதனை ஒப்புக் கொள்வர்...

இனிதமிழ் நாட்டில் (இந்தியா) மூன்று சங்கங்கள், இருந்தனவன்றோ? அவை முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்பன. முதன் முதலாகத் தொடங்கப் பட்ட ஒரு சங்கம் தொடர்ந்து இருக்குமானால் சங்கங்கள் மூன்றாவதற்கில்லை. சங்கங்கள் மூன்றாகக் கூறப்படுவதினால் இடையிடையே இடையீடுபட்டு சங்கங்கள் மூன்றானமை கடல் கோள்களின் அழிவினால் ஏற்பட்ட மாற்றமேயாகும் என்பதில் ஐயமே இல்லை. எனவே கடல் கோள் காரணமாக இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்து தற்போதிருக்கும் நிலையில் ஒரு தனித் தீவாக மாறியது.

இலங்கை இந்தியாவோடு ஒன்றாய் இருந்த ஆதிகால வரலாற்றை அறிதற்குத் தெளிவான ஆதாரங்கள் கிடைத்தில. ஆனால் குமரிகண்ட ஆராய்ச்சி முடிபுகள் அதற்கோர் ஒப்பற்ற சான்றாகும். குமரிகண்ட முடிபுகள் பற்றிய ஈழநாட்டு வரலாறு பி;ன்னர் விபரிக்கப்படும்.

தமிழ் நாட்டைப்பற்றி (இந்தியா, இலங்கை) அறிதற்குரிய மிகப் பழைய வரலாற்று நூல்கள் கந்தபுராணம், இராமாயணம், பாரதம், சங்க நூல்கள் என்பனவே. இவை யாவும் இலங்கையும் இந்தியாவும் பிரிந்த பின்னர் உள்ள வரலாற்றையே கூறுகின்றன. என்றாலும் இவற்றின் மூலம் ஆதி வரலாற்று நிலையை ஒருவாறு அறிய முடியும்.

இவற்றுள் கந்தபுராண வரலாறே மிகமிகப் பழமையானது. அதனை எவரும் ஒப்புக்கொள்வர். இதன் உதவி கொண்டு சில உண்மைகளை அறிய முடியுமானால் அஃது இலங்கை இந்தியாவினின்றும் துண்டிக்கப்பட்ட பின்னர் உள்ள ஆதி வரலாறு என்றே கொள்ள வேண்டும். சூரன் ஆட்சிக்கால முடிவிலும் ஓர் பெரிய கடல் கோள் நடைபெற்றதாகக் கந்தபுராணம் கூறும். அக் கடல் கோளினால் முன்னிருந்த இலங்கையின் பெரும் பகுதி, சூரன் ஆட்சி நகர் வீருமகேந்திரம் உட்படகடல்வாய்ப்பட்டன. அக்காலத்திலேயே இராமேஸ்வரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயுள்ள பகுதி கூடுதலாகச் சிதைவுற்று இடையே சிறு கால்வாயாக மாறி இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. சூரன் வரலாற்றுக்கு வெகுகாலம் பிற்பட்டதே இராமர் வரலாறு ஆகும். எனவே இராமேஸ்வரம் என்னும்பெயரும் இராமர் காலத்திலோ பின்போ ஏற்பட்ட பிற்கால வழக்கேயாகும். அவ்விடத்தின் பழைய பெயர் அறிய வேண்டியதாகும்.

கந்தபுராண வரலாற்றின்படி சூரன் ஆட்சிக்காலத்தில் இராமேஸ்வரமும் இந்தியாவும் ஒன்றாய் இருந்ததாக அறிகிறோம். வீரவாகு தேவர் சூரனிடம் தூதாக வீரமகேந்திரம் சென்ற போது இராமேஸ்வரத்தின் வடகோடி கந்தமாதனத்தில் இருந்தே கடலைத் தாவி இலங்கைக்குச் சென்றதாக அறிகிறோம். எனவே கந்தமாதனம் வரையும் வீரவாகுதேவர் தரைமார்க்கமாகவே சென்றார் என்பது துணிபொருள். அன்றியும் பிற்பட்ட இராமர் காலத்தில் அணைகட்டிச் செல்லத்தக்கதான சிறுகால்வாயாக இருந்தமை இராமாயண வரலாற்றில் இருந்து அறிகிறோம். எனவே வீரவாகுதேவர் சென்ற காலத்தில் தரையாக இருந்து சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளினால் அத்தரைப் பகுதி சிறு கால்வாயாக மாறியது என்பதே தெளிவான உண்மை.

ஆதலின் எவ்வாற்றானும் இலங்கையும், இந்தியாவும் ஒருகாலத்தில் ஒன்றாய் ஒரே நாடாய் ஒரே தேசமாய் இருந்ததென்பதை மறுக்கமுடியாது. ஒன்றாய் இருந்த அக்காலத்தில் இலங்கையின் பூர்வ குடிகளும், இந்தியாவின் பூர்வ குடிகளும் ஒரே நாட்டு மக்களே என்பதில் ஐயமே இல்லை. அப்பொழுது ஒரே மொழி ஒரே கடவுட் கொள்கை. ஒரே பண்பாடு உடையவர்களாக இருந்திருப்பார்கள். அதற்குச் சான்றாக எத்தனையோ பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தியாவின் தென்பகுதியும், ஈழமும் இன்றும் ஒரே மொழி (தமிழ்) ஒரே கடவுட் கொள்கை (சைவம்) ஒரே பண்பாடு உடையதாக இருத்தலை அறிக. ஒரே பண்பாடு உடையதாக இருத்தலை மொகஞ்சதாரோ ஆராய்ச்சி முடிபும் வலியுறுத்துவதாகும். ஆரிய மொழி, சிங்களமொழி புத்தமதம், கிறீஸ்தவ மதம். இஸ்லாம் மதம் இவை இடைக்காலத்தே வந்து புகுந்தனவன்றோ? இவைபற்றிப் பின்னர் விபரிப்போம்.

அன்றியும் ஆரியர் இடைக்காலத்தே இந்தியாவினுட் புகுந்தமையினாலும், அவர்கள் இந்தியப் பூர்வ குடிகளோடு (தமிழர்) உறவாடிக் கலந்தமையினாலும், பல மொழித்தோற்றம் ஏற்பட்டுப் பல இன மக்களாக இந்தியாவில் வாழ்ந்த போதிலும், எல்லோரும் ஒரே கடவுட் கொள்கையும், பண்பாடும் உடையவர்களாக இற்றை வரைக்கும் இருந்துவருதலே. ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுமையும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்குப் போதிய சான்றாகும். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் கி; மு. 1600 – 2000 வரையிலென வரலாற்றாசிரியர் கருதுவர். அஃதாவது இற்றைக்கு 3588 – 3988 ஆண்டுகளுக்கு முன்னாகும்.

எனவே கி. மு. 1600 – 2000 க்கு முன் இலங்கையின் தென்கோடி அம்பாந்தோட்டை தொடக்கம் இமயமலை பரியந்தம் வாழந்த மக்களினம் தமிழர்களே என்பதில் யாதாமொரு ஐயப்பாடும் இல்லையே. இலங்கையில் சிங்கள மொழியும் புத்த மதமும் ஏற்படுவதற்கான காரண கருத்தாவாக இருந்தவன் தேவநம்பியதீசன் ஆவான். இவன் காலத்திலேயே புத்த மதம் இலங்கைக்கு வந்தது.

ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுமையும் தமிழினமே வாழ்ந்தார்கள் என்பதற்கு 1922ல் மொகஞ்சதாரோ, கரப்பா என்னும்சிந்துநதிப் பள்ளத்தாக்கில் புதையுண்ட நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தியபோது அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் இனமே என ஆய்வாளர்கள் முடிபு செய்துள்ளனர். அப்பகுதியின் நாகரீக மக்கள் கி. மு. 3300 – 2900 என்பர். அஃது இற்றைக்கு 5288 – 4888 ஆண்டுகள் முன்னாகும். எனவே துவாபரயுகத்தின் இறுதிக் காலம் ஆகும். எனவே துவாபரயுகத்தில் இந்தியா, ஈழத்தில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே. சமயம் இந்து சமயம்.

எனவே ஆரியர் வருகைக்குப்பல நூறு வருடங்களுக்கு முன்னாகவே தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்பது வெளிப்படை. இவ்வாறாயின் இத்தகைய தமிழினத்தின் முன்னோர் எத்தனை பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமாக வாழ்ந்திருக்க வேண்டும். உணர்மின்!

இன்னும் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாய் குமரி நாட்டின் ஒரு பகுதியாய் இருந்த காலத்திலேயே இக் கடல் கோள் நடைபெற்றிருக்கிறது. அப்போது குமரிக்கோடும் அதனின்றும் ஊற்றெடுத்துப் பாயும் பஃறுளியாறும் கடல் வாய்ப்பட்டுக் கடலானது என்பது பெற்றாம் அக்கடலின் தென்கரையில் உள்ளதே இலங்கை. வடகரையில் உள்ளதே இந்தியா. இதனால் ஒரே நாடாயிருந்த இந்தியாவும் இலங்கையும் இக்கடல் கோளினால் வேறு வேறு நாடாகப்பிரிக்கப்பட்டு இடையே கடல் புகுந்ததன்றோ? எனவே அக்கடலாகிய நீரிணையின் ஆழமான பகுதியே பஃறுளியாற்றுப் படுக்கையாக அமையலாம் அல்லவா? அந் நீரிணைப் பகுதியின் இரு கரைப் பகுதிகளும் குமரிமலையின் சாரலாக மக்கள் வாழ்ந்த நாடுகளாக இருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக இறையனார் களவியலுரையில் 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன எனக் கூறப்பட்டிருத்தலை உணர்க. ஏனைய உரையாசிரியர்களும் இக்கூற்றை ஆங்காங்கே வலியுறுத்தியுள்ளனர்.

குமரிக்கோடு கடல் வாய்ப்பட்ட தென்பதனை குமரிமுனை, குமரியங்கடல் என்னும் இன்றைய வழக்கில் இருந்து வரும் பெயர்களே சான்று பகருகின்றன. குமரிமுனையில் குமரித் தெய்வம் குடிகொண்டிருக்கின்றது. குமரியங்கடல் ஓர் புண்ணிய தீர்த்தமாக மிளிர்கின்றது. இதனால் குமரி மலை இருந்த காலத்தில் அம் மலைமீது குமரிக்கோயில் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதும் மக்கள் அதனை வழிபட்டு அம்மலையினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாற்றிலே தீர்த்தமாடி வந்தனர் என்பதும் அறிய முடிகின்றதல்லவா? அவை கடல்வாய்ப்பட்ட பின்னர் அக் கடலின் வடகரையும். இந்தியாவின் தென்கோடியும் ஆகிய அம்முனையில் குமரிக்கோயிலும் வழிபாடும் தீர்த்தமாடுதலும் நடைபெற்று வருகின்றதென்றே கொள்ள வேண்டும்.

இன்னும் அக்கடலின் (பாக்குநீரிணை) தென்கரையை நோக்குவோம். அஃது இலங்கையின் வட கரையாகும் இங்கே கீரிமலை எனப்படும் குன்றும் நன்னீருற்றுமுடைத்தாய் அறியாத பண்டைக்காலம் தொட்டுப் புண்ணிய தீர்த்தமாக இன்றும் விளங்கி வருகின்றது. இத் தீர்த்தத்தில் கீரிமுகம் உடைய ஒர் முனிவர் தீர்த்தமாடி அக் குன்றில் தவஞ் செய்து தமக்கிருந்த கீரிமுகம் மாறப் பெற்றார் என்பதும் அதனால் அக்குன்று அன்று தொட்டு கீரிமலை என அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகும்.

இன்னும் கி. பி 8ம் நூற்றாண்டிலே குதிரை முகம் உடைய மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ அரசன் மகளானவள் கீரிமலை நன்நீரூற்றில் தீர்த்தமாடித் தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றாள் என்றும் அதனால் மாவிட்டபுரம் எனப் பெயர்சூட்டி ஒரு முருகன் ஆலயத்தை அமைத்து ஆனி உத்திரத்தில் கொடியேற்றி ஆடி அமாவாசையில் தீர்த்தவிழா எடுப்பித்தாள் என்றும் வரலாறு கூறுகின்றது. இதனால் அத் தீர்த்தத்தின் மகிமை புலனாகிறது. எனவே கீரிமலை எனப்படும் இக் குன்று குமரி மலையின் ஒரு பகுதியென்றே கொள்ளக் கிடக்கின்றது.

இனி குமரிமலைச் சாரலும் பஃறுளியாற்றின் இரு கரைநாடுகளும் செழிப்புள்ள வளம் நிறைந்த மக்கள் நெருங்கிய இடங்களாக அமைய வேண்டும். குமரிக்கோடு கடல்வாய்ப்பட்டபோது 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என சிலப்பதிகாரமும் இறையனார் களவியலுரையும் கூறுகின்றன. 49 நாடுகளாவன: ஏழ் தெங்கு நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகாரை நாடு, ஏழ் குறும்பானை நாடு, குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடு என்பனவாம்...

தொடரும்... பகுதி-2 பார்க்கவும்...
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக